இந்த சுவாமிமலைத் திருப்புகழ் சீரான இடைவெளியில் வரும் நெடில் எழுத்துகளோடு ஒவ்வோரடியிலும் 2, 5, 9, 18-வது எழுத்துகளில் டகாரமும் (ட-வரிசைச் சொற்களும்) 8, 16, 24-வது எழுத்துகளில் மெல்லின ஒற்றும் கலந்து தடாம் தடாம் என்ற முழக்கத்தை எழுப்புவதைக் காணலாம். ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்று பாரதி பாடியதைப்போல, பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்துவைத்து, காலக்கெடு இம்மியும் பிசகாமல் யமதூதர்கள் குறித்து வைத்த நேரத்திலே தோன்றி கனவில் விளையாடி, கொடியவர் சேர்த்து வைத்த செல்வத்தைப்போல மிக நிச்சயமாக உயிர் பிரிகின்ற நிலையில்லாத சுகந்தான் இவ்வாழ்வு என்பதை உணர்ந்து, நான் காலையிலும் மாலையிலும் இனிய சொற்களால் உன் நாமத்தை ஓதும்படி அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். இதைத் தொடரப்போகும் பாடலில் இதே சந்த அமைப்பு இருந்தாலும், இப்பாடலில் டகரம் இருக்கும் இடங்களிலெல்லாம் ரகரம் பயின்று சந்த வேறுபாட்டைப் படைப்பதைப் பார்க்கப் போகிறோம். இனி இன்றைய பாடல்.
தனானதன தானந் தனானதன தானந்
தனானதன தானந் - தனதான
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ் - சமனாருங்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங் - கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங் - கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் - படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன் - பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேலங் - கெறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
சுவாசமது தானைம் - புலனோடுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் - பெருமாளே.
</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/250131448&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"> </p>