Enable Javscript for better performance
பகுதி -379- Dinamani

சுடச்சுட

  

   

  பதச் சேதம்

  சொற் பொருள்

  குன்றும் குன்றும் செண்டும் கன்றும்படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர் இந்தும் சந்த(ம்) தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர் கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினை புரிபவர் விரகாலும்

   

  குன்றும் குன்றும்: குன்றுகூட குன்றும்படி (குறையும்படி); செண்டும்: பூச்செண்டும்; கன்றும்படி: வதங்கும்படி; ம்ருகமதம்: கஸ்தூரி; இந்து: சந்திரன்; சந்தம்: அழகு; தண்செம் கமலம்: குளிர்ந்த சிவந்த தாமரை; கொஞ்சும்: கொஞ்சலும்; கெஞ்சும்: கெஞ்சலும்; செஞ்சும்: செய்தும்; விரகாலும்: உபாயத்தாலும் (எனவே சூழ்ச்சியாலும்);

  கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர் எங்கு எங்கு எம் பங்கு என்று என்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர் கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும்

   

  கும்பும்: கும்பல் (கூடியிருப்பினும்); பம்பும்: வேடிக்கையும்; சொம்பும்: அழகும்; தெம்பும்: பலம், அந்த பலத்தாலே வரும் அகங்காரம்; கடியவர்: கடுமையானவர்கள்;

  என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இருமலர் அடி பரவிட மனதினில் நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழும் மகிமையின் நிலை உணர்வில் நின் அருள் பெற இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள் பெற விடை தரு விதம் மு(ன்)னம் அருள்வாயே

   

  கன்றும்: (உள்ளம்) வதங்கும், வாடும்; தெம்பும்: பலம், அதனாலே வரும் ஊக்கம்; விடைதரும் விதம்: அனுமதியளிக்கும்  விதம்;  

  எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர் நுங்கும் சிங்கம் வங்கம் தன் கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே

   

  எங்கும்: ஏங்கும் (குறுக்கல் விகாரம்); கஞ்சன்: கம்சன்; கொஞ்சன்: அற்பன்; அலகை: பேய்—இங்கே பூதனை; இரணிய வலன்: இரணியனாகிய வலியவன்; நுங்கும்: பருகும்; சிங்கம்: நரசிம்மம்; வங்கம்: தோணி (ஆதிசேடனாகிய தோணி); எகினன்: அன்ன வாகனன்—பிரமன்;

  ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட டுண் டுண் டுண் டுண் டிண் டிண் டிண் டிண் டிடி யென விழும் எழு படிகளும் அதிர்பட ஒண் சங்கம் சஞ் சஞ் சஞ் சஞ் சென்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே

   

  ஒன்று என்ற: சமானம் இல்லாத; என்றும் துன்றும்: எப்போதும் உயரும்; எழுபடிகள்: ஏழு உலகங்கள்; மதகரிமுகன்: யானைமுகம் கொண்டவனான தாரகாசுரன்; ஒண்சங்கம்: ஒளிபடைத்த சங்கு; மகபதி: இந்திரன் (மகம்: வேள்வி; வேள்விகளின் பதி என்பதால் மகபதி—இந்திரன்);

  உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலி பட நடம் இடு பரன் அருள் அறுமுக உண் கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர் தரும் எழில் புனை புய வீரா

   

  உண்கண்: (தேனை) உண்ணும் இடத்தில்; விரைபடு: நறுமணம் வீசும்; குரவு அலர்: குராமலர்கள்; அலர்தரும்: மலர்கின்ற;

  அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர் தமை இகழ் சமணர்கள் கழுவினில் அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும் படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர் வர விடு கவி புகல் தரு திறலோனே 

   

  அன்று என்று: (பிறமதங்கள் சரியான நெறி) அன்று என; ஒன்றும்கொண்டு: (தங்களுடைய நெறி) ஒன்றையே கொண்டு; அன்பின்று: அன்பில்லாமல்; அங்கம் சிந்தும்: (கழுவில் அவர்களுடைய) அங்கங்கள் சிந்தும்படியும்; பங்கம் துஞ்சும்: குறைபட்டு மாளும்படியும்; ஒரு தொகுதியின்: மொத்தமாக, வெள்ளமாக; நுரைநதி: நுரைத்து வரும் நதியான வைகை; என்பின் அரிவை: (எலும்பாகக் கிடந்த) அங்கம்பூம்பாவை; எதிர்வர: எதிரே எழுந்துவர; கவிபுகல் தரு திறலோனே: ஞானசம்பந்த(ராக வந்த முருகன்);

  அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர் தனில் விஜயவன் இரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய(ம்) நிறை வளம் உறு சிவகிரி மருவிய பெருமாளே.

   

  அண்டம் கண்டும்: அண்டங்களை உண்டாக்கியும்; பண்டு உண்டும்: (அந்த அண்டங்களை) முன்னொரு நாளில் உண்டும்; பொங்குஅமர்தனில்: பொங்கிவந்த போரில்; விஜயவன்: அர்ஜுனன்; இரதமை: இரதத்தை (இரதம்+அத்து+ஐ என வரவேண்டியது, இரதம்+ஐ என வந்தது—அத்துச் சாரியை கெட்டது); நடவிய: நடத்திய; துங்கன்: தூயவன்; வஞ்சன்: (தீயோருக்கு) வஞ்சன்; சங்கன்: பாஞ்சஜன்யமாகிய சங்கை உடையவன்; சங்கன் மைந்தன்: பிரமன்; தருமகன்: பிரமனுடைய மகனான நாரதர்; தழல்வரு: வேள்வித் தழலில் வந்த; தகர்: ஆடு; இவர்வல: இவர வல்ல, சவாரிசெய்ய வல்ல;  அங்கம்: அம் கம்—அழகிய நீர்; கஞ்சம்: தாமரை; சங்கம்: சங்கு; பொங்கும்: விளங்கும்; கயம்: குளம்;

  குன்றும் குன்றும் செண்டும் கன்றும் படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர்... மலையும் அளவிலே குன்றும்படியும்; மார்பிலணிந்துள்ள பூச்செண்டுகள் வாடும்படியும் பெரிய தனங்களிலே கஸ்தூரிச் சாந்தைப் பூசியவர்களும்;

  இந்தும் சந்த(ம்) தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர்... சந்திரனைப் போலவும்; அழகு தங்கிய, குளிர்ச்சியையுடைய செந்தாமரையைப் போலவும் சுடர்விடும் முகத்தையுடைய பெண்கள்;

  கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினை புரிபவர்... கொஞ்சுதலையும் கெஞ்சுதலையு செய்தும்; (இணங்குவதற்காக) வஞ்சகமாகச் சமாதனம் செய்து ஒப்பற்ற செயல்களைச் செய்யும் மாதர்களுடைய,

  விரகாலும் கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர்... தந்திரத்தாலும்; கும்பலாகக் கூடியிருப்பதும் வேடிக்கையும் அழகும் ஆணவமுமே குடிகொண்டிருப்பவர்களான கொடியவர்கள்,

  எங்கு எங்கு எம் பங்கு என்று என்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர்... எம்முடைய பங்கு ‘எங்கே எங்கே’ என்று கேட்டும்; (அந்தப் பங்கு) என்றும் தமக்கு உரிமையானது என்று நிலைநாட்டி, சுகமாகத் தழுவுபவர்கள்;

  கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர்... அற்பமான இன்பத்தைக் கொடுத்து என்னிடம் உள்ள அத்தை பொருட்களையும் சாமர்த்தியமாகக் கவர்ந்து கொள்பவர்கள்;

  மயலாலும் என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இருமலர் அடி பரவிட மனதினில் நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழு(ம்) மகிமையின் நிலை உணர்வில் நின் அருள் பெற... (இவர்களிடம் ஏற்பட்ட) மையலாலும்; எப்போதும் துன்பத்தால் மனம் கன்றி நிற்கின்ற நான், உன்னுடைய திருவடி மலர்களைப் போற்ற; (அச்செயலே) நன்று என்று மனத்திலே கொண்டு, எப்போதும் உன்னை நாடிவந்து உன்னைத் தொழுவதன் மகிமையின் நிலையை உணர்ந்து உன்னுடைய அருளைப் பெறவும்;

  இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள் பெற விடை தரு விதம் மு(ன்)னம் அருள்வாயே... இன்பமும்; நல்ல பண்பும்; உற்சாகமும்; உன் தொடர்பும் மிகும்படியான அருளைப் பெறவும் நீ அனுமதிப்பதான வழியை முன்னதாக உரைத்தருள வேண்டும்.

  எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி... (கவலையுற்று) ஏங்கிய வஞ்சனும் அற்பனுமான கம்சன் ஏவியதும்; அதிசயமான செயல்களைச் செய்வதுமான (பூதனையாகிய) பேயை வெற்றிகொண்டும்; கொன்றும் துண்டுதுண்டாக ஆக்கியும் நின்ற திருமால்;

  ஒரு முறை இரணிய வலன் உயிர் நுங்கும் சிங்கம் வங்கம் தன் கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே... முன்னொரு சமயத்தில் வலியவனாகிய இரணியனுடைய உயிரைப் பருகிய நரசிம்மன்; ஆதிசேஷனாகிய தோணியில் துயில்பவன்; அன்னத்தை வாகனமாகக் கொண்ட பிரமதேவனைப் பெற்றவனான கருமுகில் வண்ணனுடைய மருகனே!

  ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட... நிகரற்றதும் எப்போதும் வளர்ந்துகொண்டே இருந்ததுமான கிரெளஞ்ச மலை துகள்படும்படியும்; யானைமுகனான தாராகாசுரனுடைய உடல் நெரிபட்டு அழியவும்;

  டுண் டுண் டுண் டுண் டிண் டிண் டிண் டிண் டிடி யென விழும் எழு படிகளும் அதிர்பட ஒண் சங்கம் சஞ் சஞ் சஞ் சஞ் சென்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே... டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்டிடி என்ற ஒலியோடு விழ இருந்த ஏழு உலகங்களும் அதிர்ச்சியடைய; ஒளி மிகுந்த சங்கம் சஞ்சம் சஞ்சம் ஒன்று ஒலிக்க; இந்திரன் துதிக்கவ அசுர்களை அழித்தவனே!

  உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலி பட நடம் இடு பரன் அருள் அறுமுக... சிவன் ஈன்றவனான குருபரனே! நீயே தஞ்சம் தஞ்சம் என்று முனிவர்கள் பணிபவரும்; தொம்தம் தொம்தம் என்ற ஒலியோடு நடமாடுபவருமான சிவபெருமான் அருளியவனான ஆறுமுகனே!

  உண் கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர் தரும் எழில் புனை புய வீரா... மணம் கமழும் குராமலர்களில் தேனை உண்ணும் வண்டுகளோடு கூடிய (மாலையை அணிந்த) தோள்களை உடைய வீரனே!

  அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர் தமை இகழ் சமணர்கள் கழுவினில் அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும் படி... மற்ற சமயங்களெல்லாம் சரியான வழியன்று என்று சொல்லி; தங்களுடைய சமயம் ஒன்றே சரியென்று கொண்டு; அடியார்களை இகழ்ந்து பேசய சமணர்களுடைய அங்கங்கள் கழுவில் சிந்துமாறும்; குறைபட்டு மாறுமாறும் (செய்தும்);

  ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர் வர விடு கவி புகல் தரு திறலோனே... ஒன்றாகப் பெருகி நுரைத்து வந்த வைகையாற்றில் ஏடுகள் வெள்ளத்தை எதிர்த்து வர(ச் செய்தும்); எலும்பாகக் கிடந்த அங்கம்பூம்பாவை உயிர்பெற்று எதிரே வரும்படியாகக் கவிபாடிய திருஞானசம்பந்தராக அவதரித்து தேவாரத்தைப் பாடியருளிய திறலனே!

  அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர் தனில் விஜயவன் இரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல... அண்டங்களை உண்டாக்கியும்; முன்னொரு காலத்தில் அவற்றை உண்டும்; (சேனைகள்) பொங்கியெழுந்த போரிர் அர்ஜுனனுக்குத் தேர் நடத்திக் கொடுத்தும் செய்த பரிசுத்த மூர்த்தியும்; தீயோருக்கு வஞ்சனும்; பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தை ஏந்நிதயவனுமான திருமாலுக்குப் புதல்வரான பிரமனுடைய மகனான நாரத முனிவர் புரிந்த வேள்வியில் தோன்றி ஆட்டுக் கடாவின் மீது ஏறுகின்ற வல்லவனே!

  (ஒருசமயம் நாரதர் செய்த வேள்வியில் தோன்றிய முரட்டு ஆடு ஒன்றை முருகன் வாகனமாகக் கொண்டதை, ‘அவசியமுன் வேண்டிப் பலகாலும்’ என்ற திருமுருகன்பூண்டித் தலத்துக்கான பாடல்—281ம் தவணையில்—குறிப்பிட்டிருப்பதைக் காணவும்.)

  அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய(ம்) நிறை வளம் உறு சிவகிரி மருவிய பெருமாளே.... தாமரையையும் சங்கையும் தன் அங்கமாகக் கொண்டு பொலிகின்ற தடாகங்களும் வளமம் நிறைந்த சிவகிரி எனப்படும் பழனி மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

  சுருக்க உரை

  கவலைகொண்டு ஏங்கியவனான கம்சனாகிய வஞ்சன், அற்பன் அனுப்பிய பூதனையாகிய பேயை வென்றும் கொன்றும் துண்டந்துண்டமாக ஆக்கியும் செய்த ஹரியும்; வலியவனான இரணியனுடைய உயிரை ஒருகாலத்தில் பருகிய நரசிம்மனும்; ஆதிசேடனைத் தோணியாகக் கொண்டு கடலில் உறங்குபவனும்; அன்னத்தை வாகனமாக உடைய பிரமனைப் பெற்றவனும்; கார்முகில் வண்ணனுமான விஷ்ணுவின் திருமருகனே!  என்றென்றும் வளர்ந்தபடி இருந்த கிரெளஞ்ச மலை தொளைபடுமாறும்; மதம்பொழியும் யானைமுகத்தைக் கொண்ட தாரகாசுரனுடைய உடல் நெரிபட்டு அழியுமாறும்; டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடி என்ற ஒலியோடு விழுகின்ற ஏழுலகங்களும் அதிர்ச்சியடையவும்; ஒளிதுலங்கும் சங்கங்கள் சஞ்சம் சஞ்சம் என்று முழங்கவும்; இந்திரன் துதிசெய்யவும் அசுரர்களை அழித்தவனே!  சிவகுமரனே! ‘எவ்வெப்போதும் நாங்கள் உனக்கு அடைக்கலம் அடைக்கலாம்’ என்று கூறிக்கொண்டு முனிபுங்கவகர்கள் பணிபவரும்; தொந்தம் தொந்தம் என்ற ஒலியோடு நடமாடுபவருமான நடராஜமூர்த்தி பெற்ற ஆறுமுகனே!  வண்டுகள் சூழ்ந்து தேனை உண்பதான குராமலர்களாலான மாலையை அணிந்த தோள்களை உடையவனே!  பிற சமயங்கள் முக்திக்கு வழிகாட்டுபவை அல்லவென்று தமது சமயமொன்றையே கொண்டு அன்பில்லாமல் சிவனடியார்களை இகழ்ந்த சமணர்களுடைய அங்கங்கள் கழுவிலே சிதறிவிழுந்து குறைபட்டு மாயுமாறும்; நுரைபொங்கிப் பெருத்த வெள்ளமாகப் பெருகிவந்த வைகையாற்றில் ஏடுகளை ஆற்றின் ஓட்டத்துக்கு எதிராக ஏறுமாறும்; எலும்பாகக் கிடந்த அங்கம்பூம்பாவை, பெண்ணாக எழுமாறும் தேவாரப் பாடல்களைப் பாடிய ஞானசம்பந்தராக வந்தவனே! 

  அண்டங்களைப் படைத்தும், முன்னொரு காலத்தில் அவற்றை உண்டும் அருள்பவரும்; போர்க்களத்தில் அர்ஜுனனுடைய தேரை நடத்திக் கொடுத்த தூயவரும்; தீயோருக்கு வஞ்சகம் செய்பவரும்; பாஞ்சஜன்யமாகிய சங்கத்தை ஏந்தியவருமான நாராயணருடைய மைந்தனான பிரமனுடைய மகனாகிய நாரதன் முன்னொரு காலத்தில் செய்த வேள்வியில் தோன்றிய முரட்டு ஆட்டை அடக்கி வாகனமாக ஏற வல்லவனே!  அழகிய நீரும் தாமரையும் சங்கும் நிறைந்த தடாகங்களால் சூழப்பட்டு வளம் நிறைந்ததான சிவகிரி எனப்படும் பழனி மலையில் எழுந்தருளியுள் பெருமாளே!

  மலைகளும் சிறியன என்று தோன்றுவனவும்; அணிந்துள்ள பூச்செண்டுகள் வாடும்படியான வெம்மையுடையனவுமான தனங்களில் கஸ்தூரிச் சாந்தைப் பூசிய; சந்திரனையும் தாமரையையும் போன்ற முகங்களைக் கொண்ட; கொஞ்சியும் கெஞ்சியும் மகிழ்ச்சியைத் தந்து, வஞ்சனையாக உடன்படச் செய்யும்படியான செயல்களைச் செய்பவர்களான பெண்களுடைய சூழ்ச்சியாலும்;

  கும்பலாகக் கூடுவதும்; வேடிக்கையும்; அழகும் அகங்காரமும் குடிகொண்டிருக்கும் கொடியவர்களாலும்; ‘எங்களுடைய பங்கு எங்கே, எங்கே’ என்று கேட்டபடி, அந்தப் பங்கு எப்போதும் தமக்கு உரிமையானது என்று சொன்னபடி சுகம்தரத் தழுவுபவர்களும்; அற்பமான சுகத்தைக் கொடுத்து என்னுடைய பொருள் யாவற்றையும் கவர்பவர்களுமான மாதர்கள்மேல் உண்டான மயக்கத்தாலும்

  எந்நாளும் உள்ளம் கன்றித் துன்பங்கொண்டு நிற்பவனான அடியேன் உன்னுடைய திருவடி மலர்களைத் துதி செய்வதே நலம் என்று உள்ளத்தில் கொண்டும்; உன்னை நாடிவந்து தொழுவதன் மகிமையை உணரும் நிலையை உனதருளால் பெற்றும்; இன்பமும் பண்பும் ஊக்கமும் உன்னுடைய சம்பந்தமும் மிகுமாறு உன்னருள் பெறுவதற்குமான வழிமுறையை முன்னதாக அருளவேண்டும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai