பகுதி - 353

உலகெங்கிலும் உள்ள அசுரர்கள் நடுக்கம்

பதச் சேதம்

சொற் பொருள்

அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு

 

அதலம், விதலம் முதல் அந்தத் தலங்கள்: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் ஆகிய ஏழு கீழ் உலகங்கள்; அமரர் அண்டத்து அகண்டம்: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம் ஆகிய ஏழு மேல் உலகங்கள்; அகில சலதி: அனைத்துக் கடல்களும்; விண்டு: மலை; அங்கி: அக்கினி; பாநு: சூரியன்;

அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம்

 

அமுதக் கதிர்கள்: குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன்; அந்தித்த: சந்தித்த, கலந்த; அரும் தத்துவங்கள்: 96 தத்துவங்கள்; சம்ப்ரதாயம்: (வழக்கம் என்பது பொதுப் பொருள்) குருபரம்பரையாக வந்த உபதேசம், ஆகவே பேருண்மை;

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன்

 

இருதய கமலம் முகிழம்: இதயத் தாமரையாகிய மொட்டு; கட்டவிழ்ந்து: இதழ் பிரிந்து, மலர்ந்து;

உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் உரிய அடிமை உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ

 

இயலின் இயல்: உழுவலன்பு எனப்படும் பல பிறவிகளாகத் தொடரும் அன்பு;

ததத .........................................

 

 

சகக …………………………………

என்று தாளம்

 

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு பரிய குடர் பழு எலும்பைப் பிடுங்க ரண துங்க காளி

 

பதலை, திமிலை, துடி, தம்பட்டம்: பறை, மேள வகைகள்; நிசிசரர்: அரக்கர்; பரிய: பெரிய, தடித்த; பழு எலும்பு: விலா எலும்பு; ரணதுங்க காளி: போர்வெல்லும் காளி;

பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டி தனில் பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே.

 

பவுரி: மண்டலக் கூத்து—வட்ட வட்டமாக வந்து ஆடும் கூத்து; கவரியிட: சாமரம வீச; இகலை: போரை; சிகண்டி: மயில்;

அதலம் விதலம் முதல் அந்தத் தலங்கள் என ... அதலம், விதலம் முதலான அந்தக் கீழ்லோகங்கள் ஏழு எனவும்;

அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என ... இந்த பூமியும்; தேவர்களுடைய மேல் உலகங்கள் ஏழு எனவும்;

அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என ... அனைத்துக் கடல்களும்; எட்டுத் திசைகளிலுமுள்ள மலைகள் எனவும்;

அங்கி பாநு அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என ... அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் ஆகிய அனைத்தும் சந்தித்த—ஒன்று கலந்த—மந்திரங்கள் எனவும்;

அறையும் மறை என அரும் தத்துவங்கள் என ... ஓதுகின்ற வேதங்கள் எனவும்; (96 வகையான) தத்துவங்கள் எனவும்;

அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் ... அணுவுக்குள் அணு எனவும்—எங்கும் எல்லாவற்றிலம் நிறைந்து நிற்பதான ஒரு பேருண்மை,

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில் ... (என் உள்ளத்திலே) உதிக்கவும், என் மனத்தை மூடியிருந்த அஞ்ஞானமாகிய இருள் ஒழிந்து, அக்கணமே,

இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் உதவ ... மொட்டு நிலையிலிருந்த இதயமாகிய தாமரை இதழ்கள் அவிழ்ந்து மலர; உணர்வாலே உணரப்படும் அனுபவத்தை நான் பெற்றிடும்படியாக முன்னர் நீ உதவியருளியதால்;

இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என ... (பல பிறப்புகளாகத் தொடரும்) தொடர்ச்சியான அன்பால், செம்மையான சொற்களால் ஆன பாடல்களாக;

மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் உரிய ... (இப்படிப்பட்ட) இனிமையான பாடல்களில் மனம் பற்று வைத்து, ‘திருப்புகழ்’ (என்னும் சந்தப் பாவால் பாடும்) உரிமை(யாகிய பேற்றைப்) பெற்ற,

அடிமை உனை அன்றிப் ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ ... அடிமையான நான் உன்னையல்லாது இவ்வுலகத்தையோ உலகவாழ்வையோ நம்பமாட்டேன்.

(‘உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்’—திருமுருகாற்றுப் படையின் இறுதியில் வரும் வெண்பாக்களில் ஒன்று.)

ததத ததததத தந்தத்த தந்ததத  திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி   தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி    சகக சககெணக தந்தத்த குங்கெணக     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி      தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம் ... என்ற தாளக்கட்டில், 

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக ... பதலை திமிலை முதலான மேளங்கள், உடுக்குகள், தம்பட்டங்கள் எல்லாமும் பேரோசையை எழுப்ப;

அகில நிசிசரர் நடுங்கக் கொடும் கழுகு பரிய குடர் பழு எலும்பைப் பிடுங்க ... உலகெங்கிலும் உள்ள அரக்கர்கள் நடுக்கம் அடைய; கொடிய கழுகுகள் (விழுந்த பிணங்களின்) தடித்த குடலையும் விலா எலும்புகளையும் பறித்து எடுக்க;

ரண துங்க காளி பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட ... வெற்றிக் காளி போர்க்களத்தில் வட்டமிட்டு நடனம் புரிய; நரிகள் ஊளையிட; பருந்துகள் தம் சிறகுகளான சாமரங்களை வீச;

இகலை வென்று சிகண்டி தனில் பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே. ... போரிலே வெற்றிபெற்று, மயில்மீது அமர்ந்து, பழனி மலைக்கு வந்து வீற்றிப்பவனே!  தேவர்கள் தலைவனே!

சுருக்க உரை

பலவிதங்களான தாளக்கட்டுகளோடு பதலை, திமிலை, உடுக்கை, தம்பட்டம் முதலான வாத்தியங்கள் முழங்க; உலகெங்கிலும் உள்ள அசுரர்கள் நடுக்கம் கொள்ள; விழுந்துகிடக்கும் பிணங்களின் தடித்த குடலையும் விலா எலும்புகளையும் கொடிய கழுகுகள் பறித்தெடுக்க; ரணதுங்க காளி போர்க்களத்தில் வட்டமிட்டு நடனமாட; நரிகள் ஊளையிட; பருந்துகள் தங்களுடைய சிறகுகளான சாமரங்களை வீச, போரிலே வென்று மயில்மீது அமர்ந்து பழனி மலையில் வந்து வீற்றிருப்பவனே!  தேவர்கள் தலைவனே!

கீழ் உலகங்கள்; மேல் உலகங்கள்; ஒளிவீசும் சூரிய சந்திர அக்கினியாகிய முச்சுடர்கள்; எட்டுத் திசைகளிலுமுள்ள மலைகள்; வேதங்கள்; அணுவுக்குள் இருக்கும் அணு—என்னுமாறு எங்கும் நிறைந்திருப்பதான பேருண்மை, முன்னர் நீ என்முன்னே தோன்றி உபதேசித்து அருளியதால், தோன்றவும்; அக்கணமே,

என் உள்ளத்தில் நிலவிய அஞ்ஞானமாகிய இருளானது அழிந்து, இனிய தமிழ்ப் பாக்களால் உன் திருப்புகழைப் பாடும் பேறுபெற்ற அடிமையாகிய நான் உன்னை மட்டுமே நம்புவேனேயல்லாமல், இந்த உலகையோ, உலக வாழ்வையோ நம்பேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com