பகுதி - 354

இந்தத் திருச்செந்தில் திருப்புகழ் பலவிதங்களில் பெயர்பெற்ற ஒன்று.  மனிதன் தன் கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் ‘என்ன சொத்து வைத்திருக்கிறாய்,

இந்தத் திருச்செந்தில் திருப்புகழ் பலவிதங்களில் பெயர்பெற்ற ஒன்று.  மனிதன் தன் கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் ‘என்ன சொத்து வைத்திருக்கிறாய், எத்தனை கடன் வைத்திருக்கிறாய்’ என்று மொய்த்துக் கொள்ளும் மக்களும் உடலை வருத்தும் பிணியும் தத்ரூபமாகச் சித்திரிக்கப்படுவது ஒருபுறம்.  இராமாயணக் காட்சிகளை ஆங்காங்கே சொல்லிக்கொண்டு வரும் குருநாதர், இந்தப் பாடலில் மிக அழகான இராமாயணக் காட்சியொன்றைத் தீட்டியிருக்கிறார்.  இராமனுடைய பால லீலைகளை வால்மீகியோ கம்பனோ பாடவில்லையென்றாலும்—குலசேகர ஆழ்வார் பாடியதைச் சேர்க்காமல்—அருணகிரிநாதர் இராமனை பாலருந்த அழைக்கும் கோசலையை இதில் காட்டுகிறார். 

இத்தனைத் துன்பங்களும் சேர்த்து உயிரை வருத்தி, உயிர் ஓய்ந்துபோகின்ற நேரத்தில் மயில்மீது இருந்தபடி காட்சிதந்தருள வேண்டும் என்பது பாடலின் மையக் கருத்து.  மூன்றாமடியிலிருந்து சந்தம் ஒன்றே என்றாலும் தொனி சட்டென மாறுகிறது. 

அடிக்கு ஒற்றுநீக்கி 43 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் எட்டாவது எழுத்து நெடில்; மற்ற அனைத்தும் குறில்.  ஒற்று சேர்த்து இரண்டாமெழுத்து மெல்லொற்று. 

தந்த தனன தனனா தனனதன

      தந்த தனன தனனா தனனதன

      தந்த தனன தனனா தனனதன             தனதான

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை

         தந்த மசைய முதுகே வளையஇதழ்

         தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி

      தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல்

         கிண்கி ணெனமு னுரையே குழறவிழி

         துஞ்சு குருடு படவே செவிடுபடு        செவியாகி

வந்த பிணியு மதிலை மிடையுமொரு

         பண்டி தனுமெ யுறுவே தனையுமிள

         மைந்த ருடமை கடனே தெனமுடுகு    துயர்மேவி

      மங்கை யழுது விழவே யமபடர்கள்

         நின்று சருவ மலமே யொழுகவுயிர் 

         மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை   வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக

         மைந்த வருக மகனே யினிவருக

         என்கண் வருக எனதா ருயிர்வருக      அபிராம

      இங்கு வருக அரசே வருகமுலை

         யுண்க வருக மலர்சூ டிடவருக

         என்று பரிவி னொடுகோ சலைபுகல     வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள

         வஞ்சி மருவு மழகா அமரர்சிறை

         சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய      அடுதீரா

      திங்க ளரவு நதிசூ டியபரமர்

         தந்தகுமர அலையே கரைபொருத

         செந்தி னகரி லினிதே மருவிவளர்      பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com