பதச் சேதம் | சொற் பொருள் |
உடலின் ஊடு போய் மீளும் உயிரின் ஊடு மாயாத உணர்வின் ஊடு வான் ஊடு முது தீ ஊடு
| |
உலவை ஊடு நீர் ஊடு புவியின் ஊடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான
| உலவை: காற்று; |
சுடரின் ஊடு நால் வேத முடியின் ஊடும் ஊடாடு(ம்) துரிய ஆகுல அதீத சிவ ரூபம்
| துரிய: (யோகியர்) தன்மயமாய் நிற்கும்; ஆகுல அதீத: துன்பங்களைக் கடந்த நிலையிலுள்ள; |
தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொட உபாயம் ஏதோ சொல் அருள்வாயே
| துரிசு: குற்றம்; |
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி
| வாரீச அடவி: தாமரைக் காட்டை; வரால் குவால்: வரால் மீன் கூட்டம் (குவால்: கூட்டம்); |
மதகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி மடையை மோதி ஆறு ஊடு தடமாக
| உழவர் ஆல அடாது ஓடி: உழவர்கள் தம்மை வருத்தாதபடி ஓடி; |
கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி
| கடல் புகா: கடலில் புகுந்து; மகா மீனை: பெரிய மீனை; வாவி: சுனை; |
கடவுள் நீல(ம்) மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே.
| கடவுள்: தெய்வ (மணமுள்ள); நீலம்: நீலோற்பலம்; |
உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு மாயாத உணர்வினூடு வானூடு முதுதீயூடு... உடலுக்கு உள்ளேயும்; அந்த உடலுக்குள் சென்று திரும்புகின்ற உயிருக்குள்ளேயும்; அழிவடையாத உணர்வுக்கு உள்ளேயும்; வானத்துக்குள்ளேயும்; முதிர்ந்த தீக்கு உள்ளேயும்;
உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத... காற்றுக்கு உள்ளேயும்; நீருக்கு உள்ளேயும்; மண்ணுக்கு உள்ளேயும்; சமய வாதங்களில் ஈடுபடுகின்ற யாரிடத்திலும் இல்லாததான,
தனிஞானச் சுடரினூடு நால்வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுல அதீத சிவரூபம்... இணையற்றதான ஞான ஒளிக்கு உள்ளேயும்; நான்கு வேதங்களின் உச்சிகளிலும் ஊடாடுகின்ற துரிய* நிலையில் இருப்பதும்; துன்பங்களைக் கடந்த நிலையில் இருப்பதுமான சிவரூபத்தை,
(* ஜாக்ரத் (விழிப்பு நிலை), ஸ்வப்ன (கனவு நிலை) ஸுஷுப்தி அல்லது சுழுத்தி (கனவற்ற ஆழ்துயில்) என்ற மூன்று நிலைகளையும் கடந்தது துரியம்.)
தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை தொடுமுபாயம் ஏதோசொல் அருள்வாயே... தீராத பேராசையும் குற்றமும் எப்போதும் நீங்காமல் நிற்கின்ற மூடனாகிய நான் அடைவதற்கு உரிய வழி எதுவென்று உபதேசித்தருள வேண்டும்.
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி... இதழ்கள் அவிழாத தாமரைக் காட்டை அழித்தும்; தன்னுடைய பகையான வரால் மீன்களின் கூட்டம் பின்வாங்குமாரும் போர்புரிந்து,
மதகு தாவி மீதோடி உழவரால அடாது ஓடி மடையை மோதி யாறூடு தடமாக... போகும் வழிகளில் இருக்கும் மதகுகளைத் தாவி; வயலில் உழுகின்ற உழவர்கள் தம்மை வருத்தாதபடி தப்பியோடி; வழியிலுள்ள மடைகளை மோதி உடைத்து; ஆற்றின் வழியே சென்று,
கடல்புகா மகாமீனை முடுகி வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு மலர்வாவி... கடலுக்குள் புகுந்து, அங்கிருக்கின்ற பெரிய மீனைத் துரத்தியடித்த வாளை மீன் வந்து விழுகின்றதான இந்தத் தாமரைக் குளத்தில்,
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே.... தெய்வீக மணம் கமழுகின்ற நீலோத்பல மலர் மலர்வது தவறாத திருத்தணிகையின் காவலனே! வீரா! கருணையில் மேருவைப்போல் உயர்ந்து நிற்பவனே! தேவர் பெருமாளே!
சுருக்க உரை
இதழ் பிரியாத தாமரைகளின் காட்டைப் போல இருக்கின்ற குளங்களில் வாழ்கின்ற மீன்கள் வரால் மீன்களைத் துரத்தி, மதகுகளைத் தாவி உழவர்களிடமிருந்து தப்பித்து, மடைகளை உடைத்துக்கொண்டு, ஆற்றின் போக்கிலே சென்று கடலுக்குள் புகுந்து, அங்குள்ள பெரிய மீன்களைத் துரத்தியடித்து, அதன்பிறகு மீண்டும் அதே தாமரைத் தடாகத்தில் வந்து விழக்கூடிய செழிப்பான திருத்தணிகையின் காவலனே! கருணை மேருவே! தேவர்கள் பெருமாளே!
உடலுக்குள்ளேயோ உயிருக்குள்ளேயோ; ஆகாயம், தீ, காற்று, நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களுக்குள்ளேயோ; சமயச் சண்டைகளை இடுவார்களிடத்திலேயோ காணக் கிடைக்காததும் ஒப்பற்றதுமான ஞான ஒளியின் உள்ளும்; வேதங்களின் முடிவிலும்; யோகியர் தன்வசமாக நிற்கின்ற உயர்ந்த நிலையிலும்; துன்பங்களைக் கடந்ததாய் உள்ள சிவரூபத்தை, மூடனாகிய அடியேன் அடைவதற்கான உபாயத்தை உபதேசித்து அருளவேண்டும்.