பகுதி - 883

அமை உற்று அடைய பசி உற்றவருக்கு..
பகுதி - 883

பதச் சேதம்

சொற் பொருள்

அமை உற்று அடைய பசி உற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே

 

அமைவுற்று: மன அமைதியோடு; அடையப் பசியுற்றவருக்கு: முற்றப் பசியோடு வந்தவர்களுக்கு (அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று—என்று மாற்றிக்கொள்ள வேண்டும்);

அடையப் பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே

 

அடையப் பொருள்: வைத்துள்ள பொருள்; மதத்து: செருக்கால்; அயராதே: தளர்ச்சி அடையாமல்;

தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரைக் கொடு போகும்

 

தமர்: உறவினர்கள்; சமன்: யமன்;

சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ

 

சரிரத்தினை: சரீரத்தினை, உடலை;

இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே

 

மயிற்கு: மயிலுக்கு—உமைக்கு;

இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரை விட்டிடும் விக்ரம வேலா

 

இரணத்தினில்: போரில்; எற்றுவரை: மோதுபவரை;

சமயச் சிலுகு இட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும்

 

சிலுகு: குழப்பம், சேட்டை;

சடு பத்ம முக குக புக்கு கனம் தணியில் குமரப் பெருமாளே.

 

சடு பத்ம முக: ஷட் பத்ம முக—ஆறு தாமரைகளைப் போன்ற முகங்களை உடையவனே; தணியில்: திருத்தணியில்;

அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று அமுதைப் பகிர்தற்கு இசையாதே... முற்றவும் பசியோடு வந்தவர்களுக்கு மன நிறைவோடு அன்னத்தைப் பகிர்ந்து தருவதற்கு மனமில்லாமலும்;

அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து அருள்தப்பி மதத்து அயராதே...கையில் வைத்துள்ள பொருளை, இளமை(ச் செயல்களு)க்கு என்று கையிலே வைத்துக்கொண்டு; அருள் நெறியினின்றும் தவறிப்போய்; செருக்கடைந்து தளராமலும்;

தமர் சுற்றியழப் பறைகொட்டியிட சமன் நெட்டுயிரைக் கொடுபோகும்... உறவினர்கள் சுற்றிலும் நின்றபடிக் கதறவும்; பறைகள் முழங்கவும்; யமன் உயிரை நெடுந்தொலைவுக்குக் கவர்ந்து செல்லவும் (என்றே அமைந்திருக்கின்ற);

சரிரத்தினை நிற்குமெனக் கருதி தளர்வுற்று ஒழியக் கடவேனோ... இந்த உடல் நிலைபெற்று நிற்கும் என்று நினைத்துக்கொண்டு, (இந்த உடலுக்காகவே) நான் உழைத்துத் தளர்ந்து அழிவதுதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ? (அவ்வாறு ஆகாமல் காத்தருள வேண்டும்.)

இமயத்து மயிற்கு ஒரு பக்கமளித்தவருக்கு இசையப் புகல்வோனே... இமகிரியரசனுடைய மகளான உமைக்கு, இடது பாகத்தைத் தந்த சிவபெருமானுடைய உள்ளம் இசைவுறுமாறு உபதேசித்தவனே!

இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு இரையிட்டிடு விக்ரம வேலா... போர்க் களத்தில் வந்து மோதித் தாக்குபவர்களைக் கழுகுகளுக்கு இரையாக ஆக்குகின்ற வீரம் நிறைந்த வேலை ஏந்துபவனே!

சமயச் சிலுகிட்டவரைத் தவறி தவம் முற்ற அருள் புக நாடும்... சமயச் சேட்டைகளைச் செய்கின்ற சமயவாதிகளிடமிருந்து விலகி, என் தவம் முற்றுப்பெறுமாறு உன்னுடைய திருவருளுக்குள் புகுவதற்காக நான் நாடுகின்ற,

சடுபத்ம முகக் குக புக்க கனத் தணியிற் குமரப் பெருமாளே.... தாமரையை ஒத்த ஆறு முகங்களைக் கொண்ட குகனே! (வள்ளியை மணமுடித்த பிறகு) வந்தடைந்த பெருமை வாய்ந்த திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

இமகிரி ராஜனுடைய மகளான உமையம்மையை இடது பாகத்தில் வைத்திருக்கும் சிவனார் மனத்துக்கு இசையும்படியாக உபதேசித்து அருளியவனே!  போர்க்களத்தில் எதிர்த்து வந்து மோதுபவரைக் கழுகுகளுக்கு இரையாக்குகின்ற வீரம் நிறைந்த வேலை ஏந்துபவனே!  சமயச் சேட்டைகளைச் செய்து திரிகின்றவர்களுடைய கூட்டத்திலிருந்து நான் விலகுவதற்காகவும்; என் தவம் நிறைவுறுவதற்காகவும் நான் நாடுகின்றவையும்; ஆறு தாமரைகளைப் போன்றவையுமான திருமுகங்களை உடைய குகனே! வள்ளியை மணமுடித்த பிறகு நாடிவந்ததாகிய திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

பசியோடு வருபவர்களுக்கு ஒரு சிறிதளவேனும் அமுது படைக்க மனம் வராமலும்; சேர்த்து வைத்திருக்கிற எல்லாப் பொருளும் என் இளமைக்காகவே என்று வைத்துக்கொண்டும் ஆணவத்தால் தளராமலும்; உறவினர்கள் கதறியழ; பறைகள் முழங்க, நெடுந்தொலைவுக்கு யமன் இந்த உயிரை எடுத்துப் போவதற்காகவென்றே அமைந்திருக்கின்ற இந்த உடல் நிலைபெறும் என்று கருதிக்கொண்டு, இந்த உடலுக்காகவே பாடுபட்டு நான் தளர்வடைவதுதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதா? (அவ்வாறு தளர்வடையாமல் காத்தருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com