பகுதி - 889

கறுக்கும் அஞ்சன விழி இணை..
பகுதி - 889

பதச் சேதம்

சொற் பொருள்

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே

 

கறுக்கும்: கரிய, கருத்த; அஞ்சன: மை; அயில்கொடு: வேலைக் கொண்டு;

களம் கொழும் கலி வலை கொடு விசிறியே மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஓர் கவற்சி கொண்டிட மனை தனில் அழகொடு கொடு போகி

 

களம்: கழுத்து; களக் கொழும் கலி: கழுத்திலிருந்து எழுகின்ற ஒலி; கவற்சி: மனவருத்தம், கவலை;

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே

 

நறைத்த: மணம் தோய்ந்த; மிடறு: தொண்டை;

நடித்து எழும் குரல் குமு குமு குமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே

 

நன்கொடு: நன்றாக; மறுகிட: கலக்கம் அடைந்திட; நழுப்பு: மயங்கச் செய்கின்ற; நஞ்சன: நஞ்சைப் போன்ற;

நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என

 

உரத்த: வலிமையான; கஞ்சுகி: பாம்பு--ஆதிசேடன்;

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு நிண குழம்பொடு குருதிகள் சொரி தர அடுதீரா

 

நிவத்த: உயர்ந்த, உயர்வான; நிசிசரர்: அரக்கர்களுடைய;  உரமொடு: மார்புகளோடு; மலை புர தர: மலைக்கு ஒப்பாக; இரு: பெரிய; நிணக்குழம்பொடு: கொழுப்புக் குழம்புடன்;

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே

 

புழைக்கை: தொளையுடைய கை—துதிக்கை; தண் கட: குளிர்ச்சியான மதநீர்; கயமுக: கஜமுக—யானை முக;

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.

 

சமன்: யமன், யமனை; பரற்கு: சிவபெருமானுக்கு;

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே... கரிய மை தீட்டிய கண்களாகிய இரண்டு வேல்களைக் கொண்டு நெருக்கி, நெஞ்சம் அழியும்படியாக வீசுகின்ற சமயத்தில்; பழச்சுவையையும் அமுதத்தைய்ம் சிந்துகின்ற ஒப்பற்ற புன்னகையால்;

களம் கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஓர் கவற்சி கொண்டிட மனை தனில் அழகொடு கொடு போகி... கழுத்திலிருந்து எழுகின்ற வளமான ஒலி என்கின்ற வலையை வீசி, ‘வீட்டுக்கு வாருங்கள்’ என்று மனத்தை உருக்கும்படியாகவும், உள்ளே கவலை எழும்படியாகவும் வீட்டுக்கு அழகாக அழைத்துச் சென்று;

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும்... மணம் மிகுந்த பஞ்சணையின் மேலே மனமாரத் தழுவி, மார்போடு மார்பு பொருந்தவும்; நகம் அழுந்தவும்; இதழின் அமுதைப் பருகியும்;

மிடறூடே நடித்து எழும் குரல் குமு குமு குமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே... தொண்டையிலிருந்து நடனமாடியபடி வெளிப்படுகின்ற குரல், பறவைகளின் ஒலியைப் போல குமுகுமுகுமு என்று சப்திக்க; நன்றாக மனம் கலங்கிட; மயங்கச் செய்கின்ற பெண்களால் ஏற்படுகின்ற துன்பம் விலகும்படியாக அருள வேண்டும்.

நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என...நிரம்பியிருக்கினற கடலின் குளிர்ந்த அலைகள் பொங்கி, மொகு மொகு மொகு என்று ஒலிக்கவும்; ஆதிசேடனது முடி நெறுநெறு எனப் பொடிபடவும்; அண்டங்களின் உச்சி கிடுகிடுக்கவும்;

வரை போலும் நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிரக் கொடும் குவை மலை புரை தர இரு நிணக் குழம்பொடு குருதிகள் சொரி தர அடுதீரா... மலைபோல உயர்ந்திருக்கின்ற திண்மையான கழல்களை அணிந்திருக்கின்ற அரக்கர்களுடைய மார்புகளும் கொத்துக் கொத்தான தலைகளும் மிகுதியான மாமிசக் குழம்போடு ரத்தம் சொரியும்படியாக வெட்டித் தள்ளிய தீரனே!

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள சிவக் கொழுந்து அ(ன்)ன கணபதியுடன் வரும் இளையோனே... ஒளியும் கருமையும் கொண்ட கூந்தலையுடைய உமையம்மை அருளியவரும்; துதிக்கையையும் குளிர்ந்த மதப்பெருக்கையும் உடையவரும்; யானை முகத்தைக் கொண்டவரும்; சிவக்கொழுந்தைப் போன்றவருமான கணபதியோடு உலவுகின்ற இளையவனே!

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.... கோபத்தோடு எமனை உதைத்தவரான சிவபெருமானுடைய உள்ளம் அன்புகொள்கின்ற புதல்வனே!  நல்ல மாணிக்கங்கள் சிதறுகின்ற திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கினற சரவணப் பெருமாளே!

சுருக்க உரை

கடல் அலைகள் ‘மொகு மொகு மொகு’ என்று ஆரவாரிக்கவும்; ஆதிசேடனுடைய முடிகள் நெறுநெறு என்று பொடிபடும்படியும்; மலையைப் போல பெரிய கழல்களை அணிந்திருக்கும் அரக்கர்களுடைய மார்புகளும் தலைகளும் கொத்துக் கொத்தாகச் சிதறுபடும்படியும்; அவற்றிலிருந்து மாமிசக் குழம்போடு ரத்தம் பெருக்கெடுக்கும்படியும் வெட்டிச் சாய்த்த தீரனே! ஒளியும் கருமையும் கொண்ட கூந்தலையுடைய உமையம்மை ஈன்றவரும்; துதிக்கையையும் மதப்பெருக்கையும் உடையவரும்; யானை முகத்தவருமான கணபதிக்குத் தம்பியே! யமனை உதைத்தவராகிய சிவபெருமானுடைய உள்ளம் அன்புறும் மகனே!  நல்ல மணிகள் சிதறுகின்ற திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்ற சரவணப் பெருமாளே!

கரியதும் மைதீட்டியதும் வேல் போன்றதுமான கண்களைக் கொண்டு நெருக்கி, இனிய புன்னகையைச் சிந்தி வீட்டுக்கு அழைத்துச் சென்று மணம் மிகுந்த பஞ்சணையில் மார்போடு மார்பு பொருத்தியும் நகம் அழுந்தவும் கலவியாடும் பெண்களால் விளைகின்ற துன்பத்திலிருந்து விடுவித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com