பகுதி - 891

தசை துறுந்து ஒக்கு கட்டு அளை..
பகுதி - 891

பதச் சேதம்

சொற் பொருள்

தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்ட(க)ம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் தலை உடம்பு எய்த்து எற்பு தளை நெக்கு இந்த்ரியம் மாறி

துறுந்து: நெருங்கி; சட்டம்: சட்டகம்—frame; எய்த்து: நெகிழ்ந்து; எற்புத் தளை: எலும்புக் கட்டுகள்; நெக்கு: தளர்ந்து; இந்திரியம்: ஐம்புலன்கள்;

தடி கொ(ண்)டு திக்கு தப்ப நடக்கும் தளர்வு உறும் சுத்த பித்த விருத்தன் தகை பெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று

 

விருத்தன்: வயோதிகன்; பல் கொத்துகள்: பல் வரிசைகள்; கழலா நின்று: கழன்று;

அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு அரிவையும் துத்து துத்து என கண்டு உமியா மற்றவரும்

 

அசலரும்: அயலாரும்; செச்செ: சே சே; சந்ததிகளும்: பிள்ளைகளும்; உமியா: உமிழ;

நிந்திக்க தக்க பிறப்பு இங்கு அலம் அலம் செச்சை சித்ர மணி தண்டை அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே

 

அலம் அலம்: போதும் போதும்; செச்சை: வெட்சிப் பூ; அரவிந்தத்தில்: பாத கமலத்தில்;

குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி

 

குசை: கடிவாளம்; பக்கரை: அங்கவடி (Stirrup); நத்தும்: விரும்பும்; குரகதம்: குதிரை; கதிர்: சூரிய, சந்திரர்; நேமி: (தேர்ச்) சக்கரம்;

குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா

 

ஒற்றைக் கணை: திருமாலைக் கணையாக்கியது; குரிசில்: தலைவன்; கச்சி: காஞ்சிபுரம்;

திசை முகன் தட்டு பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி

 

திசைமுகன்: பிரமன்; தட்டுப் பட்டு: தடைப்பட்டு; வற்கும்: வலிமையான; சிகரியும்: மலையும்—கிரெளஞ்சமும்; அலங்கத்து: கொத்தளத்தில் (Rampart);

சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை  கட்கம் சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே.

 

அதுங்க: நசுங்க; திகையிட்டு: திசையில் இட்டு, பிரமிப்படைந்து; கட்கம்: வாள்;

தசை துறுந்து ஒக்குக் கட்டு அளை சட்ட(க)ம் சரிய வெண் கொக்குக்கு ஒக்க நரைத்து... மாமிசத்தாலும் நெருக்கமான தோலாலும் அளந்து வைக்கப்பட்டுள்ள இந்த உடலாகிய கூடு தளர்ந்து போக; தலை மயிர் கொக்கைப் போல வெண்ணிறமாக நரைத்தும்;

அம் தலை உடம்பு எய்த்து எற்புத் தளை நெக்கி இந்த்ரிய(ம்) மாறி... அழகான தலையும் உடலும் இளைத்தும், எலும்புக் கட்டுகள் நெகிழ்ச்சியுற்றும்; ஐம்புலன்களும் (தத்தமக்கு உரிய) தொழில்களில் மாறுபாட்டை அடைந்தும்;

தடி கொ(ண்)டும் திக்குத் தப்ப நடக்கும் தளர்வு உறும் சுத்தப் பித்த விருத்தன் தகை பெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று... தடியை ஊன்றியபடி, திசைத் தடுமாற்றம் ஏற்பட்டு நடக்கும்படியாகத் தளர்ச்சி எய்தியும்; வரிசையாக இருந்த பற்கள் அத்தனையும் கொட்டிப் போகவும்;

அசலரும் செச்செ செச்செ எனச் சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு அரிவையும் துத்து துத்து எனக் கண்டு உமியா... அயலார்கள் ‘சே சே’ என்று இகழ; பிள்ளைகள் ‘சீ சீ’ வெறுக்க; உடனுறையும் பெண் (மனைவி) தூத்தூ என்று உமிழ்ந்து அவமதிக்க;    

மற்றவரு(ம்) நிந்திக்கத் தக்க பிறப்பு இங்கு அலம் அலம் செச்சைச் சித்ர மணித் தண்டை அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே... மற்றவர்கள் எல்லோரும் நிந்தனை செய்யத்தக்கதான இந்தப் பிறப்பு போதும் போதும்.  வெட்சிப் பூவைச் சூடியதும்; அழகிய ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தண்டையை அணிந்ததும் தாமரையைப் போன்றதுமான பாதங்களைப் பற்றிக் கொள்ளும் பேற்றை எனக்கு எப்போது அளிப்பாய்? (உடனே அளித்தருள வேண்டும்.)

குசை முடிந்து ஒக்கப் பக்கரை இட்டு எண் திசையினும் தத்தப் புத்தியை நத்தும் குரகதம் கட்டிக் கிட்டி நடத்தும் கதிர் நேமி குல ரதம் புக்கு... கடிவாளம் இடப்பட்டும் அங்கவடி பூட்டப்பட்டும் எட்டுத் திக்குகளிலும் தாவிச் செல்லக்கூடியவையும் ஞானத்தை விரும்புவதுமான (வேதங்களாகிய நான்கு) குதிரைகளை நெருங்கப் பூட்டி; சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட சிறந்த ரதத்தில் ஏறிக்கொண்டு,

ஒற்றைக் கணை இட்டு எண் திரிபுரம் சுட்டுக் கொட்டைப் பரப்பும் குரிசில் வந்திக்கக் கச்சியில் நிற்கும் கதிர் வேலா... (திருமாலாகிய) ஒற்றை அம்பை வில்லில் பொருத்தி, திரிபுரங்களைப் பொசுக்கித் தம் வெற்றியைப் பரப்பிய தலைவான சிவபெருமான் வணங்கிநிற்கும்படியாகக் காஞ்சீபுரத்தில் நிற்கின்ற கதிர்வேலா!

திசை முகன் தட்டுப் பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் திரை அலங்கத்துப் புக்கு உலவிச் சென்று எதிர் ஏறிச் சிரம் அதுங்க... பிரமன் தடைப்பட்டு நிற்கும்படியாகவும்; வலிமை வாய்ந்த கிரெளஞ்ச மலை வேலால் பிளக்கப்படும்படியாகவும்; தெளிந்த அலைகளைக் கொண்ட கடலையும் எல்லா மதில்களையும் தாண்டிச் சென்று அரக்கர்களை வென்று, அவர்களுடைய தலைகள் நசுங்கி நாசமடையும்படியாகவும்;

பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்திக் கறை கட்கம் சிதறி நின்று எட்டிப் பொட்டு எழ வெட்டும் பெருமாளே....அகன்ற கண்களில் திகைப்புப் படரும்படியாகவும் அசுரர்களுடைய மார்பில் வேலால் குத்தி, அவர்கள் கையில் பிடித்திருந்த வாள்கள் சிதறித் தெறித்துப் பொடியாகும்படி வெட்டி வீழ்த்திய பெருமாளே!

சுருக்க உரை

கடிவாளத்தை இட்டு, அங்கவடிகளைப் பொருத்தி, எட்டுத் திக்கிலும் தாவிச் செல்லக் கூடியவையும் ஞானத்தை விரும்புபவையுமான வேதங்களைக் குதிரைகளாகப் பூட்டி; சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட சிறந்த தேரில் ஏறி அமர்ந்து, திருமாலாகிய ஒற்றைக் கணையை வில்லிலே பொருத்தித் திரிபுரங்களைச் சுட்டுப் பொசுக்கித் தமது வெற்றியை எட்டுத் திக்குகளிலும் பரப்பிய சிவபெருமான் வணங்கி நிற்க, கச்சியில் நிற்கின்ற கதிர்வேலா!  பிரமனும் தடைப்பட்டு நிற்கும்படியாகவும்; வலிய கிரெளஞ்ச மலை வேலால் பிளக்கப்படும்படியாகவும்; தெளிந்த அலைகளைக் கொண்ட கடலையும் கோட்டை கொத்தளங்களையும் தாண்டிச் சென்று அரக்கர்களை வென்று அவர்களுடைய தலைகள் நசுங்கும்படியாகவும்; அரக்கர்களுடைய அகன்று விரிந்த கண்களிலே திகைப்புப் படரும்படியாகவும் அவர்களுடைய நெஞ்சில் வேலால் குத்தி, அவர்கள் கையில் பிடித்திருந்த வாள்கள் சிதறும்படியாகப் போரிட்டு அவர்களை வெட்டி வீழ்த்திய பெருமாளே!

மாமிசத்தாலும் நெருங்கிய தோலாலும் அளந்து வைக்கப்பட்டுள்ள இந்த உடலாகிய கூடு தளந்ரு போக; தலைமயிர் நரைத்து வெளுக்க; தலையும் உடலும் இளைத்துப் போக, எலும்புக் கட்டுகள் தளர்ச்சியடைய; ஐம்புலன்களும் தங்கள் தொழிலிலே மாற்றம் அடைய; தடியை ஊன்றியபடி, திசையை உணராமல் தடுமாறு நடந்து; பித்தம் கொண்ட கிழவனாகி; பல்வரிசை அத்தனையும் கொட்டிப் போய்; அயலார் சேசே என்று தூற்ற; பிள்ளைகள் சீ சீ என்று பரிகசிக்க; மனைவியும் தூ தூ தூ என்று உமிழ்ந்து அவமதிக்க; பிறர் எல்லோரும் நிந்திக்க, இப்படிப்பட்டதான இந்தப் பிறப்பு போதும் போதும்.  வெட்சி மலரைச் சூடியதும், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட தண்டையை அணிந்ததுமான உனது பாத கமலங்களைப் பற்றிக் கொள்ளும் பேற்றை அடியேனுக்கு உடனடியாக அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com