பகுதி - 893

கமரி மலர் குழல் சரிய...
பகுதி - 893

பதச் சேதம்

சொற் பொருள்

கமரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி கணைகள் என நுதல் புரள துகிலதை நெகிழ் மாதர்

 

கமரி: கமம் அரி—கமம்: நிறைய, நிறைந்திருக்கும், அரி: வண்டு;

கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல

 

 

திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள் இதழ் ஊறல்

 

புழுகு: புனுகு;

திரையில் அமுதென கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்

 

பல சுளை: பலாச் சுளை;

குமர குருபர..........குமர குருபர என தாளம்

 

 

குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி டமடடம......என குமுற திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட 

 

சலரி: சல்லரி—பறைவகை; கினரி: கின்னரி—யாழ் வகை;

அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதம் உற அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா

 

அயனும்: பிரமனும்; பரி: குதிரை; கரி: யானை;

அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய பெருமாளே.

 

 

கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர்...வண்டுகள் நிறைந்து மொய்க்கின்ற கூந்தல் அவிழ்ந்து சரிய; புளகிதம் கொண்டதும், பொன் மலையைப் போன்றதுமான மார்பு அசைய; போரிடுகின்ற விழிகள் அம்பாக மாற; நெற்றி புரள; ஆடையை நெகிழ்த்துகின்ற பெண்களின்,

கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல...கழுத்திலே கரிய மணியாலான மாலை புரள்வதனால் அதிலிருந்து ஒளி பரவ; காதில் இரண்டு குண்டலங்களும் அசைய; ஒளி வீசுகின்ற பொன் வளையல்கள் கலகல என ஒலிக்க; மயில்போல நடைபழகுபவர்கள்,

திமிரு மத புழுகு ஒழுக தெருவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள்... பூசியிருக்கிற புனுகு கரைந்து ஒழுகும்படியாக வீதியில் அலைய; விலைக்கு வைத்திருக்கும் மார்பு தெரிய; திலகமணிந்து, மயக்கத்தை ஊட்டி அழகிய முகத்துடன் திரிந்துகொண்டிருக்கின்ற பெண்களுடைய,

இதழ் ஊறல் திரையில் அமுதென கழைகள் பல சுளை எனவும் அவர் மயல் தழுவும் அசடனை திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்... இதழ்களில் ஊறும் எச்சிலைப் பாற்கடலில் எடுத்த அமுது என்றும்; கருப்பஞ்சாறு என்றும்; பலாச் சுளை இது என்றும் கருதிக்கொண்டு அவர்கள் மீது மோகம் கொண்டு தழுவுகின்ற அசடனாகிய என்னுடைய குற்றங்களும்; இழிந்த குணங்களும்; கொலைக்கு ஒப்பான துன்பங்களும் சிதறிப்போகும்படியாக அருள்புரிய வேண்டும்.

குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என குமுற... குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என்னும் சப்தத்துடனுடத போர்ப்பறையைப் போன்ற தாளத்துடனும் முரசங்கள் டமட டமடம டமட டமடம என்ற ஓசையோடு வெற்றி ஒலியை எழுப்ப,

திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதம் உற...திமிலைப் பறையும் சல்லரிப் பறையும் கின்னரி என்னும் யாழ் வகையுமான வாத்தியங்கள் முழங்க, முநிவர்களும் பிரமனும் மற்றவர்களும் தேன் நிறைந்த பூக்களைக் கொண்டு வணங்கி அவரவருக்கான பதவிகளைப் பெற,

அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா... அசுரர்களுடைய குதிரை, யானை, ரதங்கள் எல்லாமும் அழியும்படியாக வேலை எறிந்தவனே!

அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய பெருமாளே....எல்லா உலகங்களும் ஒன்றுசேர ஒளிபெறுமாறு திருப்பாதத்தை மயிலின் மீது வைத்து ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப்பெண்ணாகிய வள்ளியை அடைந்த பெருமாளே!

சுருக்க உரை

கும குருபர, குமர குருபர என்ற சப்தத்தோடு தாளங்களை எழுப்பி ஒலிக்கின்ற முரசங்கள் வெற்றி ஒலியை எழுப்பி டமட டமடம டமட டமடம என்று அதிர; திமிலைப் பறைகளும் சல்லரிகளும் கின்னரி யாழோடு முழங்க; தேவர்களும் முநிவர்களும் பிரமனும் மற்றவர்களும் தேன் ததும்புகின்ற மலர்களால் அர்ச்சித்துத் தத்தமக்குரிய பதவிகளைப் பெறும்படியாக அசுரர்களுடைய குதிரை, யானை, தேர்ப்படைகள் அழியும்படியாக வேலை வீசியவனே! உலகங்கள் எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் ஒளியால் நிறையும்படியாக திருப்பாதத்தை மயில் மீது வைத்து; ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப்பெண்ணான வள்ளியை அடைந்த பெருமாளே!

வண்டுகள் நிறைந்து மொய்க்கின்ற கூந்தல் சரிந்துவிழ; புளகிதம் கொண்ட தனங்கள் அசைய; கண்கள் அம்பைப் போன்று விளங்க; நெற்றி புரய; ஆடையை நெகிழ்த்துகின்ற விலைமாதர்கள் வீதியிலே மயில்போன்று நடந்து வர, அவர்களின் மீது மோகம்கொண்டு இது கடலைக் கடைந்து பெற்ற அமுது என்றும் கரும்பு என்றும் பலாச்சுளை என்றும் தழுவுகின்ற அசடனான என்னுடைய குற்றங்களும் இழிவான தன்மைகளும் துன்பங்களும் தீமைகளும் சிதறி விலகுமாறு அருள்புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com