சுடச்சுட

  
  திருப்புகழ்

   

   

  பதச் சேதம்

  சொற் பொருள்

  சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத

   

  சாந்தம் இல்: அடங்காத; மோக எரி: மோகம் என்னும் தீ; காந்தி: (காந்துதல்) வருத்துதல்; அவா: ஆசை; அனிலம்:  காற்று; அவியாத: தணியாத;

  சாம் கலை வாரிதியை நீந்த ஒணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல்

   

  சாம்: சாகும், அழியும்; கலை வாரிதியை: கலையாகிய கடலை;

  ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி

   

  முளரி: தாமரை மொட்டு; உருகா: உருகி;

  ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம் யான் தனி போய் விடுவது இயல்போ தான்

   

  இயல்போதான்: நீதியோ, தகுமோ;

  காந்தளில் ஆன கர மான் தரு கான மயில் காந்த விசாக சரவண வேளே

   

  மான்தரு கான மயில்: மான் பெற்றவளான வள்ளி; காந்த: மணாளனே;

  காண் தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆண்டகையே இபம் மின் மணவாளா

   

  காண்டகு: காணத் தகுந்த, அழகிய; இபம்: யானை (வளர்த்த); மின்: மின்னற்கொடி போன்றவரான தேவானை;

  வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே

   

  சேந்த: முருகனே; மயூர: மயில் வாகனனே;

  வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு(ம்) பெருமாளே.

   

   

  சாந்தமில் மோக எரி காந்தி அவாவனில மூண்டு அவியாத சமயவிரோத... தணியாத மோகம் என்னும் தீ மூண்டு வருத்த; ஆசையாகிய பெருங் காற்று வீச; எப்போதும் அடங்காததாகிய சமய விரோதம் என்னும்,

  சாங்கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாந்துணை யாவரென... அழியப்போகும் சாத்திரமாகிய கடலை நீந்தமுடியாமல் போய்; உலகத்தவரே (மனைவி, மக்கள், சுற்றத்தாரே) துணையாவார்கள் என்று நம்பிக்கொண்டு,

  மடவார் மேல் ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி ஏங்கிட... மார்புக் கச்சையை அணிந்துள்ள பெண்களுடைய தாமரை மொட்டைப் போன்றதும் சந்தனக் கலவையைப் பூசியதுமான மார்புகளில் தோய்ந்து, மனமுருகி, அறிவுத் தடுமாற்றம் ஏற்பட்டு,

  ஆருயிரை வாங்கிய காலன்வசம் யான்தனி போய்விடுவது இயல்போதான்... அடியேனுடைய உயிரைக் கவர்ந்து செல்கின்ற காலனிடத்தில் வசப்பட்டு, துணைக்கு ஒருவருமின்றித் தனியாக நான் யமலோகத்துக்குச் செல்வதுததான் இயல்போ? (தகுதியோ, முறையோ) – (அவ்வாறு யமன் வசப்படுவதைத் தவிர்த்தருள வேண்டும்.)

  காந்தளின் ஆனகர மான்தரு கானமயில் காந்த விசாக சரவணவேளே... காந்தள் மலரைப் போன்ற விரல்களை உடைய கரத்தவளும்; காட்டிலே மானின் இடத்திலேருந்து தோன்றியவளுமான வள்ளியம்மையயின் மணாளனே! விசாகனே! சரவணனே!

  காண்டகு தேவர்பதி யாண்டவனே சுருதி யாண்டகையே இபமின் மணவாளா... காண்பதற்கு இனிதான தேவலோகத்தை ஆண்டவனே!  வேதங்களாலே துதிக்கப்படுகின்ற மா வீரனே!  யானையால் வளர்க்கப்பட்ட தேவானையின் துணைவனே!

  வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே... வேந்தனே! என்றும் இளமையானவனே! குகனே! சேந்தனே! வடக்கே உள்ள திருவேங்கட மலையில் வீற்றிருப்பவனே!

  வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாது உதவு பெருமாளே.... அடியார் வேண்டிய போதெல்லாம் அவர்கள் வேண்டுகின்றனவற்றை எல்லாம் சுளிக்காமல் அவர்களுக்குத் தந்தருள்கின்ற பெருமாளே!

  சுருக்க உரை

  காந்தள் மலரைப் போன்ற விரல்களை உடையவளும்; மான் ஈன்றளுமான வள்ளியின் மணாளனே!  ஐராவதமாகிய யானை வளர்த்த தேவானையின் துணைவனே!  வேந்தனே! குமாரனே! குகனே! சேந்தனே!  வடக்கிலுள்ள திருவேங்கட மலையில் வீற்றிருப்பவனே!  அடியார் வேண்டுகின்ற போகங்களையெல்லாம் அவர்கள் வேண்டுகின்ற போதெல்லாம் சலிக்காமல் வழங்கியருள்கின்ற பெருமாளே!

  தணியாத மோகம் என்னும் தீ மூண்டு வருத்தவும்; அப்போது ஆசை என்னும் பெருங்காற்றும் வீசவும்; எப்போதும் தணியாததான சமயவாதங்களுக்கானதும் அழிந்து போவதுமான சாத்திரங்களின் கடலை நீந்திக் கடக்க முடியாமல்; மனைவி, மக்கள், சுற்றத்தார் என்று இவர்களே துணையாவார்கள் என கருதிக்கொண்டும்; பெண்களுடைய இளமையானதும் சந்தனம் பூசியதுமான மார்பகங்களில் மனம் உருகி, அறிவு தடுமாற்றம் அடைந்து, யமன் என் உயிரைக் கொண்டு செல்ல வரும்போது, நான் துணைக்கு எவரும் இல்லாமல் தவிப்பது முறையோ? (அடியேன் யமன்வசப்படாதபடி அருள வேண்டும்.)

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai