பகுதி - 923

வரி கலையின் நிகரான விழி..
பகுதி - 923

பதச் சேதம்

சொற் பொருள்

வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே

 

கலை: கலைமான்; விழிக்கடை: கடைக்கண்;

மதி குளறி உள்ள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே

 

மதி குளறி: அறிவு தடுமாறி; உதவி: கொடுத்து; மிடியாகி: வறுமையடைந்து; வயிற்றில் எரி மிக மூள: ஜாடராக்கினி—பசித் தீ;

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரோடு பகையாகி ஒருத்தர் தமை மிக நாடி அவரோடே

 

 

உணக்கை இடு படு பாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே

 

உணக்கையிடு: உண்ணக் கை இடு(ம்)--கையேந்தும்;

விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே

 

 

வெடித்து அமணர் கழு ஏற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே

 

ஒருத்தி கணவனும் மீள: மங்கையர்கரசியாருடைய கணவனான கூன் பாண்டியன் சமணர்களிடமிருந்து மீள;

செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே

 

 

திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திருத்தணிகை மலை மேவு பெருமாளே.

 

 

வரிக்கலையி னிகரான விழிக்கடையில் இளைஞோரை மயக்கியிடு மடவார்கள் மயலாலே....வரிகளைக் கொண்டிருக்கின்ற கலைமானைப் போன்ற கடைக்கண் பார்வையால் இளைஞர்களை மயக்குகின்ற பெண்களின்மீது ஏற்பட்ட மையலால்,

மதிக்குளறி யுளகாசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றிலெரி மிகமூள அதனாலே... அறிவிலே தடுமாற்றம் ஏற்பட்டு, கையிலுள்ள காசையெல்லாம் அவர்களுக்கே கொடுத்து, வறுமையை அடைந்து, வயிற்றிலே பசியாகிய தீ மூண்டு எழ, அதன் காரணத்தால்,

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிகநாடி ....ஒருவரோடு நட்புகொண்டும் ஒருவரோடு பகைகொண்டும் இன்னொருவரை மிகவும் விரும்பியும்,

அவரோடே உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட உயர்ச்சிபெறு குணசீலம் அருள்வாயே... அவர்களோடு சேர்ந்து உண்பதற்காகக் கையேந்துகிற பாவியான எனக்கு, உன்னுடைய கழல்களைப் போற்றிப் பாடுகின்ற நல்ல குணநலனைத் தந்தருள வேண்டும்.

விரித்து அருண கிரிநாதன் உரைத்த தமிழெனு மாலை மிகுத்தபல முடனோத மகிழ்வோனே... அருணகிரிநாதன் விரிவாகத் தமிழில் பாடியிருக்கிற திருப்புகழை உரக்கச் சொல்லும்போது மகிழ்பவனே!

வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்ததொரு தமிழ்பாடு புலவோனே... (அவமானத்தாலும பொறாமையாலும் மனம்) வெடித்த சமணர்கள் கழுவில் ஏறும்படியாகவும்; மங்கையர்க்கரசியாருடைய கணவனான கூன்பாண்டியன் சமணநெறியைவிட்டு மீளும்படியாகவும் தேவாரமாகிய தமிழ் மறையைப் பாடிய (திருஞானசம்பந்தராக அவதரித்த) புலவனே!

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது வடிவேலை திருக்கையினில் உடையோனே... செருக்கோடு போருக்கு எழுந்த சூரனுடைய குலத்தை வேரோடு சாய்க்கும்படியாகப் போரிட்ட கூரியவேலைக் கையில் ஏந்துபவனே!

திருக்குலவும் ஒருநீல மலர்ச்சுனையில் அழகான திருத்தணிகை மலைமேவு பெருமாளே.... அழகு குலவுவதும் ஒப்பற்ற நீலோற்பல மலர் மலர்கின்ற குளத்தை உடையதுமான திருத்தணிகை மலையின்மேல் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

அருணகிரி நாதன் விரிவாகப் பாடியுள்ள தமிழ்மாலையான திருப்புகழை உரக்க ஓதும்போது மகிழ்வடைபவனே!  சமணர்கள் அவமானத்தாலும் பொறாமையாலும் மனம் வெடிக்கும்படியாக அவர்களைக் கழுவேற்றி; மங்கையர்க்கரசியாரின் கணவனான கூன்பாண்டியன் சமண மதத்திலிருந்து மீளும்படித் தேவாரமாகிய தமிழ்மறையைப் பாடிய திருஞானசம்பந்தராக அவதரித்தவனே!  அழகு மிகுந்ததும், நீலோற்பல மலர்கள் மலர்வதுமான குளங்களை உடைய திருத்தணிகை மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மானைப் போன்று கடைக்கண்ணால் பார்க்கின்ற பெண்களிடத்திலே மோகம் கொண்டு கையிலுள்ள அத்தனை பணத்தையும் அவர்களிடத்தில் அளித்துவிட்டு வறுமை எய்தி; ஒருவரிடம் நட்பும் ஒருவரிடம் பகையும் ஒருவரிடத்திலே நாட்டமும் கொண்டு அவர்களோடு சேர்ந்து பசிக்காகக் கையேந்துகின்ற பாவியாகிய எனக்கு உன்னுடைய திருவடிகளைப் பாடும்படியான சிறந்த குணநலனைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com