பகுதி - 905

இடம் அடு சுறவை முடுகிய..
பகுதி - 905

பதச் சேதம்

சொற் பொருள்

இடம் அடு சுறவைமுடுகிய மகரம் எறிகடல் இடை எழுதிங்களாலே

 

அடும்: வருத்தும்; சுறவை: சுறா மீனை; முடுகிய: துரத்துகிற; மகரம்: மகரமீன், முதலை;

இரு வினை மகளிர்மருவிய தெருவில் எரிஎன வரு சிறுதென்றலாலே

 

 

தட நடு உடைய கடி படுகொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே

 

தட நடுவுடைய: குளத்தின் நடுவிலே உள்ள; கடிபடு: மணம் கமழும்; சரம்: மலர்க்கணை (தாமரை, நீலோத்பலம்); அநங்கனாலே: மன்மதனாலே;

சரி வளை கழல மயல்கொளும் அரிவை தனிமலர் அணையில்நலங்கலாமோ

 

சரிவளை: வளையின் வகை; நலங்கலாமோ: நோகலாமோ;

வட குல சயில நெடுஉடல் அசுரர் மணி முடிசிதற எறிந்த வேலா

 

வடகுல சயில: வடக்கே உள்ள மேருமலை;

மற மகள் அமுத புளகிதகளப வளர் இளமுலையை மணந்தமார்பா

 

மறமகள்: வள்ளியுடைய; களப: சந்தனக் கலவை;

அடல் அணி விகடம்மரகத மயிலில் அழகுடன்அருணையில் நின்றகோவே

 

அடல்: வலிமை; அணி: அலங்காரம்; விகடம்: அழகு; அருணை: திருவண்ணாமலை;

அரு மறை விததிமுறை முறை பகரும் அரி அர பிரமர்கள்தம்பிரானே.

 

விததி: கூட்டம், தொகுதி; அரி அர: ஹரி, ஹர—திருமால், சிவன்;

இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே ... வருத்துகின்ற சுறாமீனை இருக்கும் இடத்திலிருந்தே விரட்டுவதான முதலைகள் வாழ்வதும்; அலைகளை வீசுவதுமான கடலில் எழுகின்ற சந்திரனாலும்;

இரு வினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே ... நல்வினை தீவினை இரண்டுக்கும் காரணர்களாக உள்ள மாதர்கள் வாழ்கின்ற தெருவிலே தீயைப்போல வீசுகின்ற சிறிய தென்றலாலும்;

தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறு கண் அநங்கனாலே ... குளத்தின் நடுவே இருப்பதும் நறுமணம் வீசுவதுமான (தாமரை, நீலோத்பலம் ஆகிய) மலர்க்கணைகளை செலுத்தும் கொடியவனான மன்மதனாலும்;

சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ ... சரியும் வளைகளும் கழன்று விழும்படியாக மையல் கொண்டிருக்கின்ற இந்தப் பெண் தனித்த மலரணையில் நோவதும் முறைதானோ? (அவ்வாறு நோவாத வண்ணம் ஆட்கொள்ள வேண்டும்.)

வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா ... வடதிசையிலுள்ள மேருமலையைப் போன்ற பெருத்த உடலைக் கொண்ட அரக்கர்களுடைய மணிமுடிகள் சிதறும்படியாக வேலை எறிந்தவனே!

மற மகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா ... வேடர் மகளும்; புளகிதம் உடையதும்; சந்தனக் கலவை பூசப்பெற்றதும் இளையதுமான மார்பகத்தை உடையவளுமான வள்ளியை மணந்த திருமார்பனே!

அடல் அணி விகடம் மரகத மயிலில் அழகுடன் அருணையில் நின்ற கோவே... வலிமையும் அலங்காரமும் அழகும் நிறைந்த பச்சை மயிலில் ஏறித் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அரசே!

அரு மறை விததி முறை முறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே. ... அருமறைகளின் தொகுதி திரும்பத் திரும்ப ஓதுகின்ற திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவருக்கும் தம்பிரானே!

சுருக்க உரை

வடக்கிலுள்ள மேருமலையைப் போன்ற உடலைக் கொண்ட அசுரர்களுடைய மணிமுடி சிதறிப் போகும்படி வேலை வீசியவனே! வேடர் மகளும்; அமுதமும் புளகிதமும் கொண்டதும்; சந்தனக் கலவை பூசப்பட்டதுமான மார்பை உடைய வள்ளியை மணந்தவனே! வலிமையும் அலங்காரமும் அழகும் பச்சை நிறமும் உடைய மயிலில் ஏறி, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தலைவனே! அரிய வேதங்களின் தொகுதி மீண்டும் மீண்டும் ஓதுவதான திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவருக்கும் தம்பிரானே!

இருந்த இடத்தில் இருந்தபடியே பெரிய சுறாமீன்களை விரட்டியடிக்கின்ற முதலைகள் வாழ்கின்ற கடலில் முளைக்கின்ற சந்திரனாலும்; நன்மைக்கும் தீமைக்கும் காரணர்களாக இருக்கின்ற மாதர்கள் வாழ்கின்ற தெருவில் தீயைப் போல வீசுகின்ற தென்றல் காற்றாலும்; குளத்தின் மத்தியிலுள்ளதும் நறுமணம் கமழ்வதுமான தாமரை, நீலோற்பலம் போன்ற மலர்க்கணைகளை வீசுகின்ற மன்மதனாலும் வருத்தம் உண்டாக்கப்பட்டு இந்தப் பெண் மையல்கொண்டு மலரணையில் தனியாக நோவது முறையா?  (அப்படி நோவாமல் ஆண்டுகொண்டு அருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com