பகுதி - 909

கொடாதவனையேபுகழ்ந்து..
பகுதி - 909

பதச் சேதம்

சொற் பொருள்

கொடாதவனையேபுகழ்ந்து குபேரன்எனவே 
மொழிந்து குலாவி அவமே திரிந்துபுவிமீதே

 

 

எடாத சுமையே சுமந்துஎ(ண்)ணாத 
கலியால்மெலிந்து எ(ல்)லாவறுமை தீர அன்று உன்அருள் பேணேன்

 

எடாத சுமை: தூக்க முடியாத சுமை—குடும்ப பாரம்;

சுடாத தனமானகொங்கைகளால்இதயமே 
மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில்ஒழுகாமல்

 

சுடாத தனம்: பசும்பொன் (தனம்: பொன்); சுகாதரம்: சுகாதாரம்—சுகமான வழி;

கெடாத தவமேமறைந்து கிலேசம்அதுவே 
மிகுந்து கிலாதஉடல் ஆவி நொந்துமடியா முன்

 

கிலேசம்: துக்கம்; கிலாத: ஆற்றல் இல்லாத;

தொடாய் மறலியே நீஎன்ற சொ(ல்)லாகி அதுநா 
வரும்
கொல் ல்ஏழு உலகம் ஈனும்அம்பை அருள் பாலா

 

மறலியே: யமனே;

நடாத சுழி மூல விந்துநள் ஆவி விளை 
ஞானநம்ப நபோ மணி சமானதுங்க வடிவேலா

 

நடாத சுழி: நட்டு வைக்காத சுழிமுனை (தசநாடிகளில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவே உள்ளது); நள்: நடுவே; நபோமணி: சூரியன்; துங்க: தூய;

படாத குளிர் சோலைஅண்டம் அளாவிஉயர்வாய் 
வளர்ந்து பசேல் எனவுமேதழைந்து தினமே தான்

 

படாத: வெயில் படாத;

விடாது மழை மாரிசிந்த அநேக மலர் 
வாவிபொங்கு விராலிமலைமீது கந்த பெருமாளே.

 

 

கொடாதவனையே புகழ்ந்து குபேரனெனவே மொழிந்து குலாவி யவமே திரிந்து புவிமீதே... எதுவும் கொடுக்காதவனையே புகழ்ந்து; அவனைக் குபேரன் என்று வாழ்த்தி; அவனோடு வீணாகத் திரிந்து இந்த உலகின்மீது,

எடாதசுமையே சுமந்து எணாதகலியால் மெலிந்து எலாவறுமை தீர அன்றுனருள்பேணேன்... தூக்க முடியாத குடும்ப பாரத்தைத் தூக்கி; நினைக்கவும் முடியாத கலியால் வாட்டமடைந்த எல்லாவிதமான வறுமைகளும் தீரும்படியாக, அந்த நாளிலேயே உன்னுடைய திருவருளை நாடாதவனாகத் திரிந்தேன்.

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல்... தீயில் சுட்டெடுக்காத பசும்பொன்னைப் போன்ற மார்புகளைக் கொண்ட பெண்களிடம் மனம் மயங்கி; சுகத்தைக் தருகின்ற வழியில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளாமல்,

கெடாத தவமே மறைந்து கிலேசமதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியாமுன்... கெடுதல் இல்லாத தவநெறி கெட்டுப் போக; துன்பமே மிகவும் பெருகி; வலிமை இல்லாத உடலில் (தங்கியுள்ள) உயிர் நொந்து இறந்துபோவதன் முன்,

தொடாய்மறலியே நி யென்ற சொல் ஆகியது உன் நா வருங்கொல் சொல் ஏழுலகம் ஈனும் அம்பை யருள்பாலா... ‘இவனுடைய உயிரைத் தொடாதே யமனே’ என்ற சொல் உன்னுடைய நாவிலிருந்து வெளிப்படுமோ என்பதை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்,  ஏழு உலகங்களையும் ஈன்றவளான உமாதேவியின் குமாரனே!

நடாதசுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோமணி சமான துங்க வடிவேலா... (யாராலும்) நட்டு வைக்கப்படாததான சுழிமுனை, மூலாதாரம் (முதலான ஆறு ஆதாரங்கள்); விந்து ஆகியவற்றுக்கு நடுவிலே உயிரோடு கலந்து இருக்கின்ற ஞான மூர்த்தியே! சூரியனை ஒத்த ஒளியையும் பரிசுத்தத்தையும் கொண்ட வடிவேலனே!

படாதகுளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேலெனவ மே தழைந்து தினமேதான்... வெயில் படாத குளிர்ந்த சோலைகள் ஆகாயம் அளாவ உயர்ந்து வளர்ந்து பச்சைப் பசேல் என்று தழைத்தும்;

விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு விராலிமலை மீது உகந்த பெருமாளே.... இடைவிடாமல் மழை பொழிகின்றபடியால் பல மலர்கள் நிறைந்திருக்கின்ற தடாகங்களால் சூழப்பட்டுள்ள விராலிமலையை உவப்போடு அடைந்து வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

யாராலும் நடப்படாத (இறைவனால் அமைக்கப்பட்ட) சுழுமுனை, ஆறு ஆதாரங்கள், விந்து ஆகியனவற்றிலன் நடுவிலே உள்ள ஆவியோடு கலந்து விளங்குகின்ற ஞான மூர்த்தியே! சூரியனைப் போன்ற ஒளியை உடைய பரிசுத்தமான கூரிய வேலனே!  வெயில் படாத சோலைகள் வானத்தையளாவி உயர்ந்து வளர்ந்து பச்சென்று தழைத்திருக்க; நாள்தோறும் விடாது மழை பொழிவதால் பல நீர்ப்பூக்கள் மலர்ந்திருக்கின்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற விராலிமலையை உவந்து வீற்றிருக்கின்ற பெருமாளே!

கொடுப்பது என்பதையே அறியாவனைப்போய்ப் புகழ்ந்து; அவனைக் குபேரன் என்று போற்றி; வீணாகத் திரிந்து இந்த பூமியிலே, தூக்க முடியாததாகிய குடும்பப் பாரத்தைத் தூக்கியலைந்து; கலிபுருஷனுடைய கொடுமையால் நான் வாட்டம் அடைந்து; அதனால் உண்டான என்னுடைய சகல துன்பங்களும் நீங்குமாறு நான் உன்னுடைய திருவருளை எப்போதோ நாடியிருக்கவேண்டும்; அவ்வாறு நாடாமல் வீணே காலங்கழித்தேன்.  பசிய பொன்னைப் போன்ற மார்பகங்களை உடைய பெண்களிடத்திலே மயக்கம் கொண்டு; சுகத்தைத் தரக்கூடிய வழியில் முறையோடு நடக்காமல்; கெடுதலில்லாத தவநெறியும் கெட்டுப்போய்; துக்கமே பெருகி; வலிமையற்ற உடலில் தங்கியுள்ள ஆவி நொந்து நான் இறப்பதற்கு முன்னாலே, ஏழு உலகங்களையும் ஈன்றவளான உமையின் குமாரனே, ‘யமனே! இவனுடைய உயிரைத் தொடாதே’ என்ற சொல் உன்னுடைய நாவினின்றும் பிறக்குமோ? (அவ்வாறு பிறக்கும் என்பதை) நீ சொல்லியருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com