பகுதி - 911

கொலை கொண்ட போர்விழி..
பகுதி - 911

பதச் சேதம்

சொற் பொருள்

கொலை கொண்ட போர்விழி கோலோ 
வாளோ விடம் மிஞ்சு பாதகவேலோ 
சேலோ குழைகொண்டு உலாவியமீனோ மானோ 
எனும்மானார்

 

கொலைகொண்ட: கொலைத் தொழிலைக் கொண்டுள்ள; கோலோ: அம்போ; குழைகொண்டு: காதிலுள்ள குழை வரை நீண்டு; மானார்: பெண்கள்;

குயில் தங்கு மாமொழியாலே 
நேரே இழை தங்கு நூல்இடையாலே
மீது ஊர்  குளிர் கொங்கைமேருவினாலே 
நானாவிதமாகி

 

 

உலை கொண்ட மாமெழுகாயே 
மோகாய் அலை அம்புராசியின்ஊடே 
மூழ்கா டல்பஞ்ச பாதகமாய் ஆய்நோயால் 
அழிவேனோ

 

உலை: நெருப்பு உலை; மோகாய்: மோகமாய், மோகம் கொண்டு; அம்புராசி: கடல்; பஞ்ச பாதகமாய்: கொலை, பொய், களவு, கள்ளுண்ணல், குரு நிந்தனை என்னும் ஐந்தும் பஞ்சமகா பாதகங்கள்;

உறு தண்டம் பாசமொடுஆரா 
வாரா எனைஅண்டியே நமனார் 
தூதுஆனோர் உயிர்கொண்டு போய்விடுநாள்
 நீ மீ தாள் அருள்வாயே

 

தண்டம்: கால தண்டம்; பாசம்: பாசக் கயிறு; ஆரா வாரா: ஆரவாரித்து; மீ: மேன்மை வாய்ந்த;

அலை கொண்ட வாரிதிகோகோ 
கோகோ எனநின்று வாய் விடவே 
நீள்மா 
சூர் அணி அம்சராசனம் வேறாய்நீறாயிடவே தான்

 

வாரிதி: கடல்; மாசூர்: மாமரத்தின் வடிவமாக நின்ற சூரன்; சராசனம்: வில்; நீறாயிட: பொடிபட;

அவிர்கின்ற சோதியவார் ஆர் 
நீள் சீர் அனல்அம் கை வேல் 
விடும்வீரா தீரா அருமந்தரூபக ஏகா வேறு 
ஓர்வடிவாகி

 

அவிர்கின்ற: பிரகாசிக்கின்ற;

மலை கொண்டவேடுவர் கான் 
ஊடேபோய் குறமங்கையாளுடனேமால் 
ஆயே மயல்கொண்டு உலாய் அவள்தாள் மீதே 
வீழ் குமரேசா

 

கானூடே: காட்டின் வழியாக; உலாய்: உலாவி;

மதி மிஞ்சு போதகவேலா 
ஆளா மகிழ்சம்புவே தொழு 
பாதாநாதா மயிலம் தண் மாமலை வாழ்வேவானோர் 
பெருமாளே.

 

சம்புவே: சிவனே;

கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ குழை கொண்டு உலாவிய மீனோமானோ எனு(ம்மானார்... கொலையாகிய தன்மையைத் தன்னிடத்தே கொண்டவையும் போரிட வல்லவையுமான விழிகள் அம்போ, வாளோ; அல்லது விஷம் நிரம்பியதும் வஞ்சகமானதுமான வேலோ, சேல் மீனோ; அல்லது குழைகளை அணிந்த காதுகள் வரையில் நீண்டவையான மீனோ, மானோ என்று சொல்லத்தக்க பெண்களுடைய,

குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் குளிர் கொங்கை மேருவினாலே நானாவிதமாகி...குயிலின் குரலைப் போன்ற இனிய மொழிகளாலும்; நூலிழையைப் போன்ற மெலிந்த இடையாலும்; இடைக்கு மேலே அமைந்துள்ள மேருமலையைப் போன்ற மார்பகத்தாலும் பலவிதமாக மனம் கலங்கி;

உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா... கொல்லுலையில் விழுந்த மெழுகைப் போல உருகி; அலை வீசுவதான மோகக் கடலிலே விழுந்து மூழ்கி;

உடல் பஞ்ச பாதகமாய் (ய்நோயால் அழிவேனோ... என் உடல் பஞ்சமகா பாதகங்களுக்கும் ஆளாகி நோய்கொண்டு அழிவேனோ?

உறு தண்ட(ம்பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர் உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள்அருள்வாயே... (அவ்வாறு அழியாத வண்ணம்) கையிலே கால தண்டத்தையும் பாசக் கயிற்றையும் எடுத்துக்கொண்டு ஆரவாரத்துடன் என்னை நெருங்கி, என் உயிரை யமதூதர்கள் கொண்டுபோய்விடும் அந்த நாளில் உன்னுடைய மேலான திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

அலை கொண்ட வாரிதி கோகோ கோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர் அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே...அலைகள் புரள்கின்ற கடல், வாய்விட்டு ‘கோகோ’ என்று அலறவும்; பெரிய மாமரமாக நின்ற சூரன் தரித்திருந்த நீண்ட வில் பொடிப்பொடியாகப் போகவும்;

தான்அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா... பிரகாசிக்கின்ற ஒளியைத் தன்னிடத்தில் கொண்ட; சிறந்த, பெரிய, பெருமைவாய்ந்த நெருப்பின் வடிவமாக, கையிலேந்திய வேலை வீசிய வீரா! தீரா! அருமைவாய்ந்த அழகுள் உருவம் கொண்டவனே! ஒப்பற்றவனே!

வேறு ஓர் வடிவாகி மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே... வேடனாகிய வேறுபட்ட வேடத்தைத் தரித்து, வள்ளி மலையின் வேடர்கள் இருந்த காட்டுக்குள் சென்று, குறப்பெண்ணாணன வள்ளியின் மீது மயக்கம் கொண்டு,

மயல் கொண்டு உலாய் அவள் தாள் மீதே வீழ் குமரேசா... மையலோடு உலாவி அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்கிய குமரேசா!

மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா... அறிவு நிறைந்த ஞான வேலனே; ஆட்கொண்டவனே; மகிழ்பவரான சிவபெருமானே வணங்குகின்ற திருவடியை உடைய நாதனே!

மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே....  மயிலம் என்னும் குளிர்ந்த மலையில் வீற்றிருப்பவனே!  தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

அலை வீசுகின்ற கடல் கோகோகோ என்று கதற; அந்தக் கடலுக்குள்ளே மாமரத்தின் வடிவத்திலே நின்றிருந்த சூரன் தரித்திருந்த வில் தெறித்து விழுந்து தூளாக; பிரகாசிக்கின்ற ஜோதியைத் தன்னிடத்தே கொண்டிருக்கின்ற, சிறந்த, பெரிய, பெருமை வாய்ந்த நெருப்பு என்று சொல்லும்படியாக, திருக்கையிலே ஏந்தியிருக்கும் வேலை வீசிய வீரனே! தீரனே!  அரிய அழகை உருவத்தை உடையவனே! ஒப்பற்றவனே!  வேடனான வேற்று உருவத்தைத் தரித்து, மலையை இருப்பிடமாகக் கொண்ட வேடர்கள் வாழ்ந்திருந்த காட்டினிடையே சென்று, அங்கிருந்த குறமகளான வள்ளியின் மீது மோகம் கொண்டு உலாவி அவளுடைய பாதத்தில் மையலுடன் விழுந்து வணங்கிய குமரேசனே!  அறிவு நிறைந்த ஞான வேலனே!  உனக்கு ஆட்பட்ட சிவபெருமான் மகிழ்ந்து உன்னுடைய பாதத்தைத் தொழ நின்ற பாதனே! நாதனே!  மயிலம் என்னும் குளிர்ந்த மலைத் தலத்தில் வீற்றிருப்பவனே! தேவர்கள் பெருமாளே!

கொலைத் தன்மையைக் கொண்டவையும் போரிட வல்லவையுமான கண்கள் அம்புதானோ, வாள்தானோ; அல்லது விஷம் நிறைந்ததும் பாதகம் கொண்டதுமான வேலோ, சேல் மீனோ; அல்லது காதிலுள்ள குழைகளைத் தொடுமளவுக்கு நீண்டிருக்கின்ற மீனோ, மானோ என்று சொல்லத்தக்க மாதர்களுடைய குயில்போன் குரலால் எழுகின் இனிய மொழிகளாலும்; நூலின் இழைபோலத் தோன்றுகின்ற மெல்லிய இடையாலும்; அந்த இடையின் மேல் மேருமலையைப் போல அமைந்திருக்கின்ற மார்பகங்களாலும் பலவிதமாக நெஞ்சம் கலங்கி; நெருப்பு உலையிலே விழுந்த மெழுகைப் போல உருகி, அலை வீசுவதான மோகம் எனப்படும் கடலிலே விழுந்து முழுகி, என் உடல் பஞ்சமஹா பாதகங்களுக்கும் உள்ளாகி தீராத நோயாலே அழிவேனோ! கால தண்டத்தையும் பாசக் கயிற்றையும் ஏந்தியபடி, ஆரவாரித்து என்னை நெருங்குகின்ற யமதூதர்கள் என்னுடைய உயிரைக் கவர்ந்து போய்விடுகின்ற அந்த நாளிலே நீ உன்னுடைய மேன்மை பொருந்திய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com