பகுதி - 913

முத்து நவ ரத்ந மணி பத்திநிறை..
பகுதி - 913

பதச் சேதம்

சொற் பொருள்

முத்து நவ ரத்ந மணி பத்திநிறை 
சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி 
தருஎன ஓதும்

 

சத்திஇடம்: இடது பாகத்திலே பத்தி நிறை: வரிசையாகப் பொருந்தியுள்ள; சக்தியோடு; மொய்த்த கிரி: கூடிநிற்கும் மலை—சிவன்; முத்தி தரு: முக்தியைத் தரும் விருட்சம் (தரு: மரம்);

முக்கண் இறைவர்க்கும்அருள் வைத்த 
முருககடவுள் முப்பது மூவர்க்கசுரர் 
அடி பேணி

 

முக்கண் இறைவர்க்கும்: சிவபெருமானுக்கும்; முப்பது மூவர்க்க: முப்பத்து மூன்று வகையான; சுரர்: தேவர்கள்;

பத்து முடி தத்தும் வகைஉற்ற 
கணை விட்ட அரி பற்குனனை 
வெற்றி பெறரதம் ஊரும்

 

பத்துமுடி: (இராவணனுடைய) பத்துத் தலை; பற்குனனை: பல்குணனை—அர்ஜுனனை;

பச்சை நிறம் உற்ற புயல்அச்சம் அற 
வைத்தபொருள் பத்தர் மனதுஉற்ற 
சிவம் அருள்வாயே

 

பச்சை நிறம் உற்ற புயல்: கருமேகத்தை ஒத்த திருமால்; அச்சமற: திருமாலுடைய அச்சம் கெட;

தித்திமிதி............தெனனான

 

 

திக்கு என மத்தளம்இடக்கை துடி தத்தகுகு........
என ஆடும்

 

 

அத்தனுடன் ஒத்த நடநிதிரி 
புவனத்தி நவ சித்திஅருள் சத்தி அருள் பாலா

 

அத்தனுடன்: தலைவனுடன்; நடநி: நடனம் புரிபவள்; நவசித்தி: புதுமையான சித்திகள்;

அற்ப இடை தற்பம் அதுமுற்று நிலை 
பெற்று வளர் அல் கனக பத்ம புரி
பெருமாளே.

 

அற்ப இடை: மெல்லிய இடை; தற்பம்: மெத்தை வீடு; அல்: மதில்;

முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும்... முத்தும் நவரத்தின மணிகளும் வரிசையாக நிறைந்திருக்கின்ற உமையம்மையைத் தனது இடது பாகத்திலே வைத்துள்ள மலைபோன்றவரும்; முக்தியை அளிக்கின்ற விருட்டசம் போன்றவரும என்றெல்லாம் சொல்லப்படுகின்ற,

முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள் முப்பது முவர்க்க சுரர் அடி பேணி... மூன்றாவது கண்ணை உடைய இறவருக்கும் அருளைத் தந்த முருகக் கடவுள், தன்னுடைய திருவடியை முப்பத்து மூன்று வகையான* தேவர்களம் போற்றி வணங்க;

(* ருத்திரர் 11; ஆதித்யர் 12; வசுக்கள் எட்டு; அஸ்வினி தேவர்கள் இருவர் என முப்பத்து மூன்று வகை.)

பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்...(இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பை எய்த ராமனும்; பாரதப் போரில் அர்ஜுனன் வெற்றிபெறும்படியாகத் தேரைச் செலுத்திய கண்ணனுமாக (வந்த),

பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே...கருநிறத்து மேகத்தை ஒத் பெருமானான திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்திலே கொண்டிருந்த) அச்சத்தைக் கெடுத்தருளியவனே!  பக்தர்கள் மனத்திலே விளங்குவதான மங்கலத்தை எனக்கும் அருள்வாயாக.

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்குவென மத்தளம் இடக்கைதுடி...தித்திமிதி முதலான ஓசைகளோடு மத்தளமும் இடக்கை என்ற மேளமும் உடுக்கையும் ஒலியெழுப்ப;

தத்ததகு செச்சரிகை செச்சரிகை யெனஆடும்... தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடுகின்ற, 

அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி அருள் புரிபாலா... தலைவனான சிவனுடன் ஒத்து நடனம் புரிபவளும்; மூன்று லோகங்களுக்கும் தலைவியும்; புதுமையான சித்திகளை அடியார்களுக்கு அருள்பவளுமான உமையம்மை ஈன்ற பாலனே!

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்ம புரி பெருமாளே....மெல்லிய இடையையுடைய மாதர்களுடைய மெத்தை வீடுகள் நிலைபெற்று, உயர்ந்த மதில்களோடு விளங்குவதும் பொற்றாமரைக் குளம் அமைந்ததுமான மதுரையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு….தெனான என்ற ஒலிகளோடு மத்தளமும் இடக்கை மேளமும் உடுக்கையும் தத்தகுகு தத்தகுகு என்றும் செச்சரிகை செச்சரிகை என்றும் முழங்க நடனமாடுகின்ற பெரியோனாகிய சிவனுடைய நடனத்துக்கு ஒப்ப நடமாடுபவளும்; மூன்று உலகங்களுக்கும் முதல்வியும்; அடியாருக்குப் புதுமையான சித்திகளை அருள்பவளுமான சக்திதேவி ஈன்ற பாலனே!  மெல்லிய இடையையுடைய மாதர்களுடைய மெத்தைவீடுகள் உயர்ந்த மதில்களோடு விளங்குவதும், பொற்றாமரைக் குளம் விளங்குவதுமான மதுரையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

முத்தும் நவமணிகளும் வரிசையாக விளங்குவளான உமாதேவியைத் தன் இடது பாகத்தில் வைத்திருப்பவரும் முக்தியாகிய கனியைத் தன் அடியாருக்கு அருளும் விருட்டசம் என்று சிறப்பாகச் சொல்லப்படுபவருமான சிவபெருமானுக்கு அருள் செய்து பிரணவத்தை உபதேசித்த முருகனே!  முப்பத்து மூன்று வகையான தேவர்களாலும் விரும்பிப் போற்றப்படுபவனே! ராமனாக வந்து ராவணனுடைய பத்துத் தலைகளையும் அரிந்தவரும்; கண்ணனாக வந்து, அர்ஜுனன் வெல்லுமாறு பாரதப் போரில் தேரைச் செலுத்தியவருமான திருமாலுக்கு, சூரனிடத்திலும் அவனுடைய தம்பியரான சிங்கமுகன், தாரகனிடத்திலும் இருந்த அச்சத்தைக் கெடுத்தவனே! பக்தர்களுடைய மனத்தில் நிலைபெற்றிருக்கின்ற மங்கலத்தை அடியேனுக்கும் அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com