வழிதவறச் செய்கிறது
"ஃபேஸ்-புக்' (முகநூல்) இன்றைய இளைஞர்களை வழிதவறச் செய்கிறது. காரணம் இன்றைய இளைஞர்கள் "முகநூல்' மூலம், அறியாத இடங்களில் அறிமுகமில்லாதவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள். நண்பர்களிடம் அதை வைத்து ஒருவித போட்டி உருவாகியுள்ளது. உன்னை எத்தனைபேர் விரும்புகிறார்கள், என்னை எத்தனைபேர் விரும்புகிறார்கள் என்று முடிவு செய்வதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகமானால் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
ம.செ.அ. பாமிலா, நாகர்கோவில்.
கேள்விக்கே இடமில்லை
"ஃபேஸ்-புக்' இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறதா என்ற கேள்விக்கே இடமில்லை. வழிதவறச் செய்கிறது என்பதே உண்மை. "ஃபேஸ்-புக்'கில் ஆழ்ந்து உலக சிந்தனையே இல்லாமல் கனவு லோகத்தில் சதா சஞ்சரித்துக்கொண்டு, பித்து பிடித்தாற்போல் நடமாடும் இளைஞர்களைக் கண்டு மனம் வெதும்பும் பெற்றோர்கள் அதிகரித்துவருகின்றனர்; அவர்களிடம் கேளுங்கள் இந்தக் கேள்வியை. இதைப் பயன்படுத்துவோரும் இதைச் சந்தைப்படுத்தி லாபம் சம்பாதிப்போரும் இதன் பலன்களைத்தான் பட்டியலிடுவார்கள். மனச்சாட்சி அற்றவர்களிடம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? மருந்து கசப்பதைப்போலத்தான் பெரியவர்களின் அறிவுரையும்; ஆனால் இளைய சமுதாயம் கேட்கும் மனநிலையில் இல்லை. வெகு காலத்துக்குப் பிறகே இதன் தீமைகளை அவர்கள் உணர்வார்கள் - பிறகு உணர்ந்து என்ன பயன்?
ஏ.டி. சுந்தரி, சிதம்பரம்.
சீரழிக்கிறது
கருத்துப் பரிமாற்றம் என்ற நிலையைத் தாண்டி, "எதையும்' பதிவு செய்யலாம் என்ற சூழலில் "ஃபேஸ்-புக்' கலாசாரம் இளைஞர்களைக் சீரழிக்கிறது என்பதுதான் உண்மை. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் அரங்கேறும் அவலங்கள் ஒட்டுமொத்தக் கருத்தை பிரதிபலிப்பதற்குப் பதிலாக தனிமனித வக்கிரங்களையும் புலம்பல்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளதால் எந்தவிதப் பொதுநலனும் விளைந்துவிடப் போவதில்லை.
வி. சந்திரமோகன், கோவை.
தவறாகத்தான்
"ஃபேஸ்-புக்' இன்றைய இளைஞர்களை வழிதவறச் செய்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய சாதனம் பெரும்பாலும் இளைஞர்களால் தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் வழி தவறாமல் இருக்க, அவர்கள் படிக்கும் காலத்தில் "ஃபேஸ்-புக்' ஆரம்பிப்பதைத் தடை செய்ய வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவது மிகமிகக் கடினம். ஆனால் அப்படிச் செய்தால்தான் அவர்கள் தங்களுடைய பாடபுத்தகத்தில் கவனம் செலுத்துவார்கள். பல இளைஞர்கள் "ஃபேஸ்-புக்'கிலேயே மூழ்கி தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எஸ். குமரவேல், அம்மையப்பன்.
நோக்கம் சிதைவு
வழிகாட்டுவதற்காகவும் வழிகாட்டியாகவும் "ஃபேஸ்-புக்' இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை முற்றிலும் சிதைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் அதில் காணப்படும் தகவல்கள், சுய புராணப் புகழ்ச்சிகளாகவும் கவனத்தை திசை திருப்பும் தகவல்களாகவும்தான் இருக்கின்றன. அத்துடன் பிடிக்காத நபர்களைப் பற்றி பழிவாங்கும் உள் எண்ணத்துடன் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ஒரு ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு உரித்தான தகவல்கள் "ஃபேஸ்-புக்'கில் குறைவதால் தவறான வழிகாட்டலில்தான் முடிகின்றன. இதுவும் கத்திபோன்றதுதான்; கத்தியைக் கொண்டு காயையும் நறுக்கலாம், கழுத்தையும் வெட்டலாம். காய் நறுக்க மட்டுமே பயன்படும்வரை கத்தி நல்லதுதான். பலர் பலன் பெறும் வகையில் மட்டுமே "ஃபேஸ்-புக்' பயன்படுத்தப்பட வேண்டும். இளமை வேகம் பொல்லாதது என்பதுடன் பயமறியாது என்பதால் வழிதவறத்தான் செய்கின்றன.
கலைநன்மணி மகிழ்நன், சென்னை.
தீமையே அதிகம்
முகநூல் சில நல்ல தகவல்களை அளித்தாலும் அதிகம் தீமைகளையே ஏற்படுத்துகின்றன. சுமார் 90% இளைஞர்கள் முகநூலை பிற இளம் யுவதிகளைக் கவர்வதற்காகவும் சுமார் 90% பெண்கள் ஆண்களைக் கவர்வதற்காகவும் பொய்களைச் சரமாரியாகக் கலந்து பயன்படுத்துகின்றனர். சுருங்கச் சொன்னால் முகநூலினால் பெரும்பாலும் தீமைகளே விளைகின்றன.
முஹம்மது யூசுஃப், சென்னை.
செலவு வைக்கிறது
"ஃபேஸ்-புக்' அதன் சிறப்பை அறிந்த இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது, பெருமைக்காக ஆரம்பித்துவிட்டு அதைப்பற்றி முழுமையாக அறியாமல் செயல்படுகிறவர்கள் வழிதவறிடவே காரணமாக இருக்கிறது. அத்துடன் செலவும் வைக்கிறது. அவசியம் இருந்தால் இதைப் பயன்படுத்தலாம். ஆனால் இதில் கவனம் சிதறினால் வழிதவறிடவே வாய்ப்புகள் அதிகம்.இதனைக் கையாள்பவர்களைப் பொருத்தே இதன் செயல்.
என். சண்முகம், திருவண்ணாமலை.
மிகவும் உபயோகம்
நேரடியாகக் கடிதம் எழுதுவதைவிட, தொலைபேசி - கைபேசிகள் மூலம் பேசுவதைவிட நண்பர்களுடன் தொடர்புகொள்ள முகநூல் மிகவும் உபயோகமானது. பழைய நினைவுகளை, பழைய புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் அந்த நினைவுகளை உயிரோட்டமாகக் காணவும் முகநூல் வழிகாட்டியாகத் திகழ்கிறது. இளைஞர்கள் பல்வேறு அரிய தகவல்களை எளிதாக நண்பர்கள் வட்டம் மூலமும் அறிஞர்கள் மூலமும் அறிய வழி செய்கிறது.
கோ. ராஜேஷ் கோபால், சென்னை.
அன்னம்போல
"ஃபேஸ்-புக்' பயன்படுத்துவதில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் நம் நாடு இருக்கிறது. இதைப் பயன்படுத்துவோர் பெரும்பாலும் 40 வயதுக்குள்பட்டவர்களே. ஏனைய தளங்களைப் போலவே நண்பர்களை இணைப்பது, வெட்டி அரட்டை அடிப்பது போன்றவை இருந்தாலும் ஆய்வு மாணவர்களுக்கு கடல் கடந்த நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களின் மாணவர்களின் தொடர்பால், துறைசார்ந்த விஷயங்களைப் பரிமாறப் பெரிதும் உதவுகிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த இலங்கைப் போராட்டத்தின்போது மாணவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள "ஃபேஸ்-புக்' நன்றாக உதவியது. அன்னப் பறவையைப் போல இதில் உள்ள நன்மைகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டால் இது மிகவும் பயன்தரும் வழிமுறையே.
கே. வெங்கடேஸ்வரன், திருச்சி.
அற்புதமானது
"ஃபேஸ்-புக்' என்னும் அமைப்பு மாணவர்கள் தங்களுடைய எண்ணத்தை வெளியிட, பிறருடன் தொடர்பு கொள்ள, உலகச் செய்திகளைத் தெரிந்துகொள்ள கிடைத்துள்ள அற்புதமான வாய்ப்பாகும். அரபு நாடுகளில் நடந்த "மல்லிகைப் புரட்சி' இந்த நூற்றாண்டின் மகத்தான மக்கள் எழுச்சியாகும். இது "ஃபேஸ்-புக்'கால் மட்டுமே சாத்தியமாயிற்று. இதை இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவேண்டும், தெளிவாகக் கருத்துகளைக் கூற வேண்டும். அப்படிச் செய்தால் இது மாணவர்களை நேராக வழிநடத்திச்செல்லும்.
ஞானமகன், ஆரப்பள்ளம்.
வழிகாட்டுகிறது
முகநூல் தகவல் பரிமாற்றத்துக்கான எளிதான, சிக்கனமான கருவி. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு இளைஞர்களின் ஆற்றலை ஒருங்கிணைக்க முடியும். வேலைச்சுமை, குடும்பச் சூழல் காரணமாகத் தொடர்புகொள்ள முடியாத உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்புகொண்டு தனிமையைப் போக்கி நிறைவினைப் பெறலாம். பொதுச் செய்திகளைப் பரவலாகவும் வெளிப்படையாகவும் தனிப்பட்ட செய்திகளைத் தேவையான அளவுடனும் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்திக்கொண்டால் முகநூல் நல்ல வழிகாட்டியாகத் திகழும்.
கு. இராஜாராமன், சீர்காழி.
"ஃபேஸ்-புக்'கின் தவறல்ல
"ஃபேஸ்-புக்' இன்றைய இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகிறது. ஆனால் இளைஞர்கள் சிலர் அதைத் தவறாகப் பயன்படுத்தி வழிதவறிச் செல்கிறார்கள். அது "ஃபேஸ்-புக்'கின் தவறு அன்று. அதைத் தவறாகப் பயன்படுத்துவோரின் தவறு. இளைஞர்கள் ஆறாவது அறிவான பகுத்தறிவைப் பயன்படுத்தி தீயதைத் தவிர்த்து, நல்லதைச் செய்யவேண்டும். இது பெரியோருக்கும் பொருந்தும்.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.
வழிதான் காட்டுகிறது
இன்றைய மாணவர்கள் விழிப்புணர்வோடும், உலகளாவிய சிந்தையோடும் இருக்கிறார்கள் என்றால் முகநூலும் ஒரு காரணம். அறிவுப்பூர்வமான நண்பர்கள் வட்டாரத்தை முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களில் இளைஞர்களை இணைக்க இத்தகைய வலைத்தளங்கள் பெரிதும் உதவுகின்றன. இதை அண்மையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தின்போது காண முடிந்தது. அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பது இருபுறமும் கூரான கத்திக்கு சமமானது. நாம் பயன்படுத்தும் விதத்திலேயே பலன் கிட்டும். எனவே முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறதே அன்றி, வழி தவறச் செய்வதில்லை.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
சமஅளவு
முகநூலில் மற்ற நவீன கண்டுபிடிப்புகளைப்போல நன்மையும் தீமையும் சமஅளவில் உள்ளன. வாலிபர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அந்த நவீன சாதனத்தையோ அதைக் கண்டுபிடித்தவரையோ குறை சொல்ல முடியாது.
கத்தியைக் கொண்டு பழத்தை வெட்டிச் சாப்பிடவும் முடியும். அடுத்தவனின் கையை அறுக்கவும் முடியும். அடுத்தவனின் கையை வெட்டினால் அது கத்தியின் தவறல்ல, மாறாக அதைத் தவறாகப் பயன்படுத்தியவனின் தவறே. இதைப்போன்றுதான் எல்லா நவீன க்கருவிகளும் லாபமும் நட்டமும் பயன்படுத்துபவரின் எண்ணம், குணாதிசயங்களைக் கொண்டு மாறுபடும்.
க. சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரி, காயல்பட்டினம்.
ஒரு சிலரே...
முகநூலைத் தவறாகக் கையாண்டு வருவது ஒரு சிலரே. பலர் அதை ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அப்படிப் பார்க்கும்போது, இன்றைய இளைஞர்களுக்கு முகநூல் வழிகாட்டுதலாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அ. கற்பூரபூபதி, சின்னமனூர்.