Enable Javscript for better performance
\\\"ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?\\\' - Dinamani

சுடச்சுட

  

  "ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'

  By dn  |   Published on : 28th January 2015 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒப்பந்தம்

  ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்படக் கூடாது. ரயில்வே துறை நம் நாட்டின் பெருமைமிகு பெரிய துறை. அது தனியார்மயமாக்கப்பட்டால் பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் எல்லாம் மிகவும் உயரும். மேலும், நிரந்தரமான நல்ல ஊழியர்கள் கிடைக்கமாட்டார்கள். ஒப்பந்தத்தின் பேரில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தி எவ்வளவு காலம் வேலை வாங்க முடியும்? நாடு முழுக்க மக்களை இணைக்கும் ரயில்வே துறை அரசிடம் இருந்தால்தான் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அதனைத் தனியார் மயமாக்கக் கூடாது.

  எஸ்.வி. ராஜசேகர், சென்னை.

   

  கவனம்

  இது சரியான முடிவல்ல. தற்போது ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் இன்னும் சிரத்தையோடு பணியாற்றினால் நிர்வாகம் சீராக இயங்கும். ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறை, சிற்றுண்டிச் சாலை ஆகியவற்றை பராமரிப்பதில் ரயில்வே துறையே அதிக கவனம் செலுத்தினால், துறை மேன்மை அடைவதுடன், மக்களும் பயன் பெறுவார்கள். எனவே, அரசுக்கு வருமானம் ஈட்டித் தரும் துறையை தனியாருக்கு கொடுப்பது தவறு.

  தணிகை மணியன், சென்னை.

   

  கேள்விக்குறி

  தற்போது ரயில் பயணத்தில் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது. குடிநீர் வசதி, கழிப்பறை சுகாதாரம் போன்றவை கேள்விக்குறியாகவே மாறிவிட்டன. முன்பதிவு செய்த பெட்டிகளில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்வதும், பிடிபட்டால் பயணச்சீட்டு பரிசோதகரிடம் உடன்பாடும் செய்து கொள்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. ரயில் பெட்டிகளில் எப்போதும் எலி, முட்டைப் பூச்சி தொல்லைகள். எனவே, பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்பட வேண்டியது அவசியமே.

  மு.க. இப்ராஹிம், வேம்பார்.

   

  மாயை

  தனியார் துறையில் ஊழல் இல்லையென்று எண்ணுவது ஒரு மாயையாகும். சஹாரா போன்ற நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்தை ஏப்பம் விட்டதால் அவமானப்பட்டு நிற்பது கண்கூடு. அரசுப் பணத்தை எப்படியாவது பிடுங்க வேண்டுமென்ற போக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வரை பரவியுள்ளது. ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் பொதுத் துறை என்பது தனியார் துறை என்கிற சுயநல முதலைகளைவிட உயர்வானதாகும். எனவே, ரயில்வே துறை தனியார்மயமாக வேண்டாம்.

  டி. பஷீருத்தீன், பேரணாம்பட்டு.

   

  கொள்ளை

  ரயில்வே துறை அரசு நிர்வாகத்தில் இருப்பதால் பயணிகளுக்குக் குறைந்த கட்டணமும் பாதுகாப்பான பயணமும் உறுதியாகிறது. ரயில்வே அமைச்சகம் லாபம் ஈட்டும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களிலும் ஆம்னி பேருந்துகளிலும் நிகழும் கட்டணக் கொள்ளைகளை எண்ணிப்பார்க்க வேண்டும். ரயில்வே துறையை தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது.

  கு. இராசாராமன், சீர்காழி.

   

  வேறுபாடு

  நாற்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த ரயில்வேக்கும் இன்றுள்ள ரயில்வேக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ரயில்வே துறையில் விபத்துகளும், வருவாய் இழப்புகளும், பாதுகாப்புக் குறைபாடுகளும் அதிகரித்துள்ளன. அன்று பணியாளர்கள் அதிகமாகவும் அதிகாரிகள் குறைவாகவும் இருந்தார்கள். இன்று அதிகாரிகள் அதிக எண்ணிக்கையிலும் பணியாள்கள் குறைவான எண்ணிக்கையிலும் இருக்கின்றார்கள். அதனால் நிதி நிலைமையும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டுமானால், இந்தத் துறையைத் தனியார்மயமாக்குவது ஒன்றுதான் வழி.

  வி. நாகம்மை, சென்னை.

   

  பொறுப்பு

  ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியானது அல்ல. அரசுத் துறை மக்கள் சேவையை முன் நிறுத்தும். தனியார் துறை லாப நோக்கத்தையே முதன்மைபடுத்தும். எல்லா மாநிலங்களிலும் உள்ள பிற்பட்ட பகுதிகளுக்கு ரயில்வே சேவையை (லாபகரமாக இல்லாவிட்டாலும்) விரிவுபடுத்த வேண்டும். நாட்டுக்குச் சமச்சீரான முறையில் வளம் சேர்க்க ரயில்வே அரசுத் துறையாக இருப்பதே சிறந்தது. ரயில்வே ஊழியர்கள் நாட்டின் நலம் கருதி பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.

  என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா, இராஜபாளையம்.

   

  ஐயம்

  இன்று மக்களுக்கு மிகப் பெரிய சேவை செய்துவரும் துறை ரயில்வே துறை. அந்தத் துறையை தனியாருக்குக் கொடுத்தால் அரசுக்கு நஷ்டமே ஏற்படும். எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் குறைந்த கட்டணத்தில் இயங்கி அரசுக்கு லாபம் ஈட்டித் தரும் துறை அது. இதனைத் தனியார் மயமாக்கினால் போட்டி இல்லாத காரணத்தால், தற்போதுள்ள சேவைகளை தொடர்ந்து மக்களுக்கு அளிக்குமா என்பது ஐயமே. ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பும் பயனும் அளித்துவரும் துறையை அரசு நிர்வகிப்பதே சாலச் சிறந்தது. தொழில் துறையைத் தனியாருக்குக் கொடுக்கலாம். சேவைத் துறையை அரசே கையாள வேண்டும்.

  அ. கருப்பையா, பொன்னமராவதி.

   

  பாதுகாப்பு

  இப்போது ரயிலில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. கழிப்பறையை பார்க்கவே கண்கூசும் நிலை உள்ளது. டிக்கெட் வாங்கியவர்கள் டிக்கட் வாங்காதவர்களோடு நெருக்கியடித்து உட்கார்ந்தும் பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும், பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதுபோன்ற நிலைமாறிட வேண்டும். பொதுமக்கள் நிம்மதியாக ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட வேண்டும்.

  கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

   

  எவ்வாறு?

  எந்த ரயிலைப் பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பிறகு எவ்வாறு நஷ்டம் வரும்? லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது இந்தத் துறை லாபத்தில் இயங்கியது எவ்வாறு? நிர்வாகக் குளறுபடிகள் நிறைந்துள்ளதே நஷ்டத்திற்குக் காரணம். தனியார் துறை ஏற்றால் வணிக நோக்கே மேலோங்கும். மின் விசிறி கீழே அமர்வதற்குக் கட்டணம், குழாயில் தண்ணீர் பிடிக்கக் கட்டணம் என பலவகையில் மக்களுக்குத் துன்பம்தான் விளையும். எனவே, ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்கக்கூடாது.

  பூ.சி. இளங்கோவன், சிதம்பரம்.

   

  கட்டணம்

  ரயில்வே துறை தனியார்மயமானால், லாபமில்லாத பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்படும். மேலும், வசதிகளைப் பெருக்கி உள்ளோம் என்ற பெயரில் கட்டணங்கள் அதிகமாகும். ரயில்வே துறையில் குறிப்பிட்ட அளவு தனியார் பங்களிப்பு இருக்கலாமே தவிர, முற்றிலும் அத்துறை தனியார்மயமாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

  ச. கிறிஸ்து ஞான வள்ளுவர், வேம்பார்.

   

  அவலம்

  ரயில் நிற்கும்போதெல்லாம் உரிய பயணச் சீட்டு இல்லாமல் பலர் முன்பதிவு பெட்டியில் ஏறி விடுவார்கள். நடைபாதை, கழிப்பறைக்கு அருகில் உள்ள இடம், இருக்கைகளுக்கு இடையே உள்ள பகுதி என எல்லா இடங்களிலும் அமர்ந்து விடுவார்கள். அதிகாரி அவர்களை வெளியேற்ற இயலாமல், அவர்களிடம் முன்பதிவு கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டு விடுவார். இந்த அவல நிலை தனியார் நிர்வாகத்தில் இருக்காது. எனவே ரயில்வே துறை தனியார்மயமாவதே சிறந்தது.

  மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

   

  சலுகைகள்

  மூத்த குடிமக்களுக்குச் சலுகைக் கட்டணம், குழந்தைகளுக்கு இலவசப் பயணம், பயணத்தின்போது மலிவு விலையில் உணவு இப்படிப் பல சலுகைகள் அரசு செய்கிறது. இத்தனை சலுகைகளையும் தனியார் செய்வார்களா? ரயில்வே துறையில் இருக்கின்ற குறைபாடுகளைச் சரி செய்ய முயற்சி மேற்கொள்வதை விடுத்து தனியாருக்குத் தாரைவார்க்க எண்ணுவது அறிவுடைமை அல்ல.

  குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai