Enable Javscript for better performance
18-8-2010 இதழில் விவாத மேடை பகுதியில் வெளியான "அடக்கத்துடன் செயல்படுகிறது அரசு கேபிள் டி.வி. என்று ம- Dinamani

சுடச்சுட

  

  18-8-2010 இதழில் விவாத மேடை பகுதியில் வெளியான "அடக்கத்துடன் செயல்படுகிறது அரசு கேபிள் டி.வி. என்று முதல்வர் கூறுவதன் அர்த்தம் என்ன?'' என்ற கடிதத்துக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில...

  By மதி  |   Published on : 11th August 2016 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இதையெல்லாம் பெரிதுபடுத்தலாமா? 
  புயலாய்க் கிளம்பிய அரசு கேபிள் டி.வி. காற்றழுத்தத் தாழ்வுநிலை திசைமாறியதால், ஒரேயொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை மட்டும் பலிகொண்டு அடங்கிப்போனது. "அடக்கமாக்கப்பட்டுவிட்டது' என்பதை, மறைமுக வார்த்தைகளில் "அடக்கத்துடன் செயல்படுகிறது' என்று முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். இதையெல்லாம் பெரிதுபடுத்தலாமா? 
  எம். சம்பத், வேலாயுதம்பாளையம்.
  சரியான விடை 
  விவாதமேடை இடம்பெற்ற நாளில் (18-8-10) வந்த "அடடே' பகுதியில் மதியே கீழ்வருமாறு தந்துள்ளார். ""உண்மையைச் சொல்வதென்றால் வாரிசு கேபிள் டி.வி.க்கள் அடங்காமல் செயல்படுவதால், அரசு கேபிள் டி.வி. அடக்கமாகச் செயல்படுகிறது''-இது சரியான விடை. வாரிசு கேபிள் டி.வி.க்கள் வளர்ச்சி பெறவே அவற்றுக்கு ஆதரவாக அரசு கேபிள் டி.வி. அடக்கமாகச் செயல்படுகிறது. 
  ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.
  கேபிள் டி.வி.யை மட்டுமா? 
  அரசு கேபிள் டி.வி. அடக்கத்துடன் செயல்படுகிறது என்ற முதல்வரின் கூற்றுக்கு ஆகஸ்ட் 14, ஆகஸ்ட் 18 அன்று வந்த மதியின் கார்ட்டூன்கள் மணிமணியாய் அர்த்தம் கூறி, உள்ளங்கை நெல்லிக்கனி என விளக்கியுள்ளனவே! முதல்வர், மக்கள் நலனை என்று மனதில் கொண்டுள்ளார்? சதா சர்வகாலமும் தமது குடும்ப நலனையே, குறிக்கோளாய்க் கொண்டு ஆட்சிபுரியும் முதல்வர், கேபிள் டி.வி.யை மட்டுமா அடக்கம் பண்ணுவார்? இதே ரீதியில் ஆட்சியைத் தொடர்ந்தால்.. நாளடைவில் தமிழகமும் அடக்கத்துடன் செயல்படும். தமிழக மக்களும் முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். 
  சி. கஸ்ரத், சென்னை.
  "எதிர்ப்பவர்கள் அடக்கப்படுவார்கள்' 
  முதல்வரின் அகராதிப்படி - அடக்கத்துடன் செயல்படுகிறது - என்றால் - "எதிர்ப்பவர்கள் அடக்கப்படுவார்கள்' என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! 
  கோ. ராஜேஷ் கோபால், சென்னை.
  மீண்டும் உயிர்த்தெழும் 
  அடக்கத்துடன் செயல்படும் அரசு கேபிள் டி.வி. - இப்போது அரசியல் சூழ்நிலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தனக்கு இல்லை என்பதை உணர்ந்து கலாநிதிமாறன் குழு போர்க்கொடி தூக்கும்போது, இப்போது அடக்கத்துடன் செயல்படும் அரசு கேபிள் டி.வி.  மீண்டும் உயிர் பெறும். 
  தி. சேஷாத்ரி, ஆழ்வார்திருநகரி.
  அடங்கிப்போகும் 
  படுக்கையில் கிடக்கும் நோயாளி, நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதுபோல அரசு கேபிள் டி.வி. அடக்கத்துடன் செயல்பட்டு அடங்கிப்போகும். அடங்கியபின் அடக்கம் செய்யப்படும். மக்கள் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு முதல்வர் அடக்கத்துடன் கூறியுள்ளார். 
  ஐ. ஜெயராஜ், இராயப்பன்பட்டி.
  விதிமுறைகளில் அடக்கம் 
  தனியார் கேபிள் டி.வி.களின் மின்னல்வேக ஆற்றல் அளவிடற்கரியது. அரசு கேபிள் டி.வி.யோ அவற்றுடன் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாது. ஏனெனில், பல்வேறு விதிமுறைகளிலும் கட்டுப்பாடுகளிலும் அடங்கிச் செயல்பட வேண்டியிருக்கும். அந்த அடக்கமாக இருக்கலாம். 
  வலங்கொண்டான், சேலம்.
  அரசின் எண்ணம் 
  அரசு கேபிள் டி.வி. சுமங்கலி மற்றும் ராயல் கேபிளைவிட "அடக்கத்துடன்' செயல்படுகிறது. அரசு கேபிள் டி.வி. எக்காரணம் கொண்டும் இவ்விரண்டு கேபிளைவிட வளரக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம். எனவே, முதல்வர் கூற மறந்த வார்த்தைகள் தனது பேரன்களின் கேபிள் டி.வி.யைவிட அடக்கத்துடன் செயல்படுகிறது என்பதாகும். 
  செ. அசோக்குமார், திருமுதுகுன்றம்.

  கண்ணும்கருத்துமாக... 
  குடும்ப டி.வி. சேனல் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் கண்ணும்கருத்துமாக இருக்கிறார். பெயரளவுக்கு மட்டுமே அரசு கேபிள் டி.வி. இருக்க வேண்டும். தனியார் தொலைக்காட்சி கட்டணத்தை நெறிப்படுத்த வேண்டிய செயலைச் செய்யாமல் அடக்கமாகச் செயல்படுகிறது என்பதுதான் அர்த்தம். 
  இரா. இளங்கோவன், தஞ்சாவூர்.
  அடக்கமாக... 
  அரசு கேபிள் டி.வி.களை மிஞ்சும் அளவுக்கு இன்று தனியார் கேபிள் டி.வி.கள் வந்துவிட்டன. இனி, அரசு கேபிள் டி.வி.கள் ஆர்ப்பாட்டத்துடன் செயல்பட முடியாது,  அடக்கமாகத்தான் செயல்பட வேண்டும் என்பதையும், தனியார் கேபிள் டி.வி.களுக்குத்தான் இனி எல்லா உதவிகளும் அரசிடமிருந்து கிடைக்கும் என்பதையும் முதல்வர் அடக்கத்துடன் அழகாகக் கூறியிருக்கிறார். 
  எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
  வருவாய் திசைமாறிவிடுமோ! 
  எங்கே தங்களது டி.வி. நிறுவனங்களுக்கு வரும் விளம்பர வருவாய் திசைமாறி அரசு கேபிள் டி.வி.க்கு போய்விடுமோ என்ற அச்சத்தால் பரபரப்பாகச் செயல்படவில்லை என்று சூசகமாக உணர்த்தியிருக்கிறார் முதல்வர். 
  அ. அப்துல் காதர், விளாத்திகுளம்.
  "சிவலோக பதவி' 
  பரமபதம் புகுந்தார், சிவலோக பதவி அடைந்தார், தேவனுக்குள் ஐக்கியமானார் என  மதத்திற்கு மதம் செத்துப்போனவர்களைக் குறித்து வேறுபட்டுச் சொல்வதுண்டு. அதுபோல்தான், அடக்கத்துடன் செயல்படுகிறது அரசு கேபிள் டி.வி. என்று முதல்வர் கூறியதற்கு அர்த்தம். 
  ச. திருவேங்கடம், திருநெல்வேலி.
  ஒட்டியது உறவு 
  யார் மீதோ ஏற்பட்ட கோபத்தால், அவர்கள் நடத்தும் தொழிலை முடக்கவோ, மூடிவிடவோ அவசரமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் அரசு கேபிள் டி.வி. முதல்வர் முன்பு நான் நீ என்று சொன்னதால் உதடுகள் ஒட்டவில்லை. இப்போது நாம் என்று உச்சரிக்கிறார். உதடுகள் ஒட்டிக்கொண்டன. இதனால் அரசு கேபிள் டி.வி.யும் அடங்கிவிட்டது. 
  நா. முத்துலக்கையன், திண்டுக்கல்.
  மக்களுக்கு வேதனை 
  முதல்வரின் வாரிசு கேபிள் டி.வி.க்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைய அரசு கேபிள் டி.வி. அடக்கத்துடன் செயல்படவில்லை. அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. தனியார் கேபிள் டி.வி.க்கு சாதனை. அரசு கேபிள் டி.வி.க்குச் சோதனை. பொதுமக்களுக்கு வேதனை. 
  பொன். மூர்த்திகன், பரங்கிப்பேட்டை. 
  களப்பலி! 
  ""குடும்ப ஒற்றுமைக்காக களப்பலியான அரசு கேபிள் டி.வி.யை நட்டுகளை உருவியபின் ஆழக்குழி தோண்டி அடக்கம் செய்து விட்டோம்'' என்று கூறுகிறார் முதல்வர். 
  எஸ். கமலா, திருச்சி.
  முன்பின் முரண்! 
  ஒருபுறம் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் மறுபுறம் மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் முதல்வரின் கூற்றுப்படியே அரசு கேபிள் டி.வி.  அடக்கத்துடன் செயல்படுகிறது என்ற அவருடைய கூற்றையும் ஏற்றுக்கொள்ளலாம். 
  ஓ.என். இராமநாதன், மதுரை.
  ஏன் இந்த அடக்கம்? 
  தனியார் கேபிள் டி.வி.க்களின் வருமானம் சிறிதும் பாதிப்புக்கு உள்ளாகாமல் வழக்கமான முறையில் இந்த பொதுத்துறை நிறுவனமும் நலிவுற்று லாபகரமற்றதாக மாறிட அடக்கத்துடன் செயல்படுகிறது அரசு கேபிள் டி.வி. என்பதே முதல்வர் கூற்றின் பொருள். இந்த அடக்கம் தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும். 
  மதி, மயிலாடுதுறை.
  வாரிசுகளைப் பொருத்தது 
  அரசு கேபிள் டி.வி. இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் அடக்கம் செய்யப்படும் அல்லது புத்துயிர் பெறும் என்று அர்த்தம். இரண்டுமே வாரிசுகளை பொறுத்தது என்று அர்த்தம். 
  ஜி. சுப்பிரமணியம், பொள்ளாச்சி.
  சமரசத்தின் விளைவு! 
  குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில் குடும்ப டி.வி.யின் ஆதிக்கத்தை முறியடிக்கத் தொடங்கப்பட்டது அரசு கேபிள் டி.வி. பின்னர், சண்டை சமரசமாகிவிட்டதால் அரசு கேபிள் டி.வி. அடங்கிப்போய் இப்போது "அடக்கமாக'ச் செயல்படுவதாக அர்த்தம். 
  மு. நடராஜன், திருப்பூர்.
  ஒருசிலரின் லாபம் கருதி... 
  அவை அடக்கம், நாவடக்கம் போன்று அரசு கேபிள் டி.வி.யின், பயன் தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கிடைத்துவிடாதபடி இருக்கவும் மற்றும் ஒருசிலரின் தனிலாபம் கருதியும்   அடக்கி வைக்கப்பட்டுள்ளது அரசு கேபிள் டி.வி. 
  கே.ஆர். மாரிமுத்து, ஈரோடு.
  முதல்வரின் சிலேடை! 
  உயிர் நீத்தவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். கிடப்பில் போடப்பட்ட அரசு கேபிள் டி.வி.யும் அடக்கம் செய்யப்பட்டதைத்தான் முதல்வர் தனக்கேயுரிய பாணியில் அறிவித்திருக்கிறார்போலும். 
  செழியரசு, தஞ்சை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai