Enable Javscript for better performance
8-9-2010 இதழில் விவாதமேடை பகுதியில் வெளியான "சட்ட மேலவை தொகுதி வரையறை - அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக- Dinamani

சுடச்சுட

  

  8-9-2010 இதழில் விவாதமேடை பகுதியில் வெளியான "சட்ட மேலவை தொகுதி வரையறை - அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்க அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறிய யோசனை சரியா?' என்ற கடிதத்துக்கு வாசகர்களிடம் இருந்த வந்த கடிதங்களில் சில...  

  By மதி  |   Published on : 11th August 2016 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குழு அமைத்துச் செயல்பட்டால் 
  சட்ட மேலவை தொகுதி வரையறை - அனைத்துக் கட்சிக் குழு அமைக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கூறுவதற்குத் தார்மிக உரிமை உண்டு. மேலவை என்பதே சமூகத்தில் உள்ள அறிஞர் பெருமக்கள், துறை வல்லுநர்கள், சமூகப் பணியாளர்கள் போன்றவர்கள் சபையை அலங்கரிப்பதுடன், ஆட்சிக் கட்டிலில் உள்ளவர்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்பதுடன், ஆன்ற அறிவுரைகள் கூறி நெறிப்படுத்த அமைக்கப்பட்டதே மேலவை. அதை ஆளும் கட்சியும் பிரதான எதிர்கட்சித் தலைவரும் கலந்துபேசி ஒரு குழு அமைத்துச் செயல்படுத்துவதே ஜனநாயகத்தை மேம்படுத்தும். 
  ஹெச்.ஜன்னத், மடிப்பாக்கம்.
  வெற்றி பெறாது 
  சட்ட மேலவை தொகுதி வரையறை விவகாரம் மட்டுமல்ல, வேறு எந்த விவகாரமாயிருந்தாலும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அமைத்தால் அந்த விவகாரம் தோல்வியில்தான் முடியும். வெவ்வேறு லட்சியங்கள், கொள்கைகள், கருத்துகளைக் கொண்ட வெவ்வேறு கட்சிப் பிரதிநிதிகள் ஒன்றுகூடுவது சாத்தியம் என்றாலும், அந்த விவகாரம் ஒருபோதும் ஒருமித்த கருத்தோடு வெற்றிபெறாது. 
  ஆர்.வி.மயில்வாகனன், மதுரை.
  போகாத ஊருக்கு வழி 
  சட்ட மேலவைத் தொகுதி வரையறை - அனைத்துக் கட்சிக்குழு அமைப்பது கொள்கை அளவில் சரியாக இருக்கலாம். இது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம். குழு அமைப்பதிலும் அதிமுக-திமுக-வினரிடையே மோதல் உருவாக வாய்ப்பு உள்ளது. இதுபோகாத ஊருக்கு வழி தேடுவதாகவே அமையும். 
  ஜி.ஆர்.ராகவன், காகிதபுரம்.
  திமுக ஏற்குமா? 
  காவிரிப் பிரச்னைக்குத் தமிழக அரசு கூட்டும் கூட்டத்துக்கு அதிமுக செல்லவில்லை. சட்ட மேலவைத் தொகுதி வரையறை செய்ய அனைத்துக் கட்சிப் பிரிதிநிதிகள் குழு அமைக்க மட்டும் ஜெயலலிதா கூறுவதை திமுக ஏற்குமா? 
  எஸ். ஆறுமுகம், கழுகுமலை.
  கூச்சலும் குழப்பமும் 
  தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நாட்டு நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் தங்களது கட்சியின் நலன்தான் முக்கியம் என்று செயல்படுவதைப் பல்வேறு கால கட்டங்களில் காணமுடிகிறது. எனவே, சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறிய யோசனை சரியாக இருக்காது. வீண் குழப்பமும் கூச்சலும் ஏற்படத்தான் வழிவகுக்கும். 
  கே. சிங்காரம், வெண்ணந்தூர்.
  சரியான யோசனை 
  மேலான அறிஞர்கள் அவை என்பதுதான் மேலவையின் இலக்கணம். அதிலும் அரசியல் ஆதாயம் பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்படுகின்றன என்ற ஐயம் எழுவது ஆபத்து. அதைப் போக்கும் வகையில் தொகுதி வரையறைக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக்குழு அமைப்பது அவசியமே. இன்றைய கட்சியின் ஆட்சி சரிந்தாலும் மேலவைக்குச் சரிவு ஏற்படாமல் இருக்க இது ஒரு சரியான யோசனை. 
  செ. சத்தியசீலன், கிழவன் ஏரி.
  முட்டுக்கட்டை 
  சட்ட மேலவைத் தொகுதி வரையறை அனைத்துக் கட்சிக்குழு தேவையில்லை. இருந்தது மீண்டும் வருகிறது. முன்னர் உள்ள வாக்காளர் பட்டியல்படி அனைத்து ஆசிரியர்கள், அதேபோன்று அனைத்து ஊராட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைச் சேர்க்க ஆணையத்திடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. திமுக மேலவை வேண்டும் என்கிறது. அதிமுக வேண்டாம் என்கிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அடுத்த ஆண்டு வருவோம், மேலவையைக் கலைப்போம் என்கிறார். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பது ஜெயலலிதாவின் சூழ்ச்சியே! காலம் தாழ்த்தினால், சட்டப்பேரவைத் தேர்தல் வரும், மேலவைத் திட்டம் கிடப்பில் போடப்படும் என்பது அவரது எண்ணம். ஆகவே, அனைத்துக் கட்சிக்குழு முதன் முதலில் போடப்படும் முட்டுக் கட்டையே! 
  எஸ். முனியாண்டி, திண்டுக்கல்.
  தேவையற்ற குழப்பம் 
  சட்ட மேலவை தொகுதி வரையறை என்பது தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட உரிமையாக நியாயமான முறையில், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆராய்ந்து அமைய வேண்டும். இதில், அரசியல் கட்சிகளின் தலையீடு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். 
  மா. பாண்டியன், சென்னை.
  குட்டையைக் குழப்பவா? 
  தொகுதி வரையறை பற்றிய பணி அனைத்தும் தேர்தல் கமிஷனுடையது. இதில், கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்து, குட்டையைக் குழப்ப வேண்டியது தேவையில்லாதது. பிரதிநிதிகள் குழு ஒற்றுமையாக ஒரு கருத்தைச் சொல்லவா போகிறது? மாமியார் மருமகள் ஒற்றுமைதான். எனவே, ஜெயலலிதா கூறிய யோசனை சரியல்ல. 
  பி. சுந்தரம், வெண்ணந்தூர்.
  நடக்குமா? 
  ஜெயலலிதா கூறிய யோசனை சரியானதே. ராஜாஜி, லட்சுமணசாமி முதலியார், குன்றக்குடி அடிகளார், ம.பொ.சி., சிற்றரசு முதலிய மேதைகளும், கே.பி.சுந்தராம்பாள், டி.கே.சண்முகம் முதலிய கலைஞர்களும் வீற்றிருந்த சபை மேல்சபை. மொத்தம் 78 இடங்களில், எம்.எல்.ஏ.க்களால் 26 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதுவும், ஒரே குளத்தில் ஊறிய மட்டைகளாகத்தான் இருப்பார்கள். இதற்கு என்ன செய்வது? 
  நா. முத்துலக்கையன், திண்டுக்கல்.
  விவேகமான முடிவு எடுக்க 
  எதிர்கட்சித் தலைவரை நிழல் மந்திரி என்று கூறுவார்கள். ஜெயலலிதாவின் ஆலோசனை வரவேற்றக் கூடிய ஒன்றே. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துகளை அனுசரித்து, தொகுதி வரையறையில் நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும். தொகுதி வரையறை என்பது ஆளுங்கட்சி என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் பொதுவானது. பொதுவான கருத்துகளின் மீது முடிவுகள் எடுக்கும்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, விவேகமான முடிவுகளை எடுக்கவேண்டும். ஜெயலலிதா கூறிய கருத்துகள் சிறப்பானவை என்பதில் ஐயமில்லை. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளைக் கூட்டவேண்டும். எல்லோரின் கருத்துகளையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். இந்த விஷயம் ஒன்றிலாவது தமிழகம் ஒன்றுசேர்ந்து, ஒற்றுமையாக நல்ல முடிவுகளை எடுக்கவேண்டும். இப்படிப்பட்ட நாகரிக அரசியல் முடிவுகளை முதல்வர் கருணாநிதி வரவேற்க வேண்டும். 
  வெ. கோவிந்தசாமி, மீன்துள்ளி.
  ஜெ.கோருவது சரியே 
  தனது எதிர்கால அரசியல் ஆதாயத்துக்காகத்தான் திமுக மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட நிலையில், தொகுதி வரையறை என்பது ஒன்று ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கும்; அல்லது முக்கிய எதிர்க்கட்சிக்கு எதிராக அமையும்படி இருக்கும்; அப்படியும் இல்லையென்றால், வரும் தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி சேரத்துடிக்கும் அல்லது தனித்து நின்று திமுக வின் வாக்குகளை சிதறடிக்க நினைக்கும் பிற கட்சிகளுக்கு "செக்' வைக்கும் வகையிலும் அவற்றை திமுக வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள நிர்ப்பந்தப்படுத்தும் வகையிலும் அது அமைந்திருக்கும். எனவே, தொகுதி வரையறையை முடிவு செய்ய சர்வ கட்சிக்குழு அமைக்க வேண்டுமென ஜெ.கோருவது சரிதான். 
  ஆர். அருணாஸ்ரீ, 
  சின்ன காஞ்சிபுரம்.
  சாலச்சிறந்தது 
  சட்ட மேலவை அமைக்க அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு ஏற்படுத்தி, தக்க முடிவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்படக்கூடும். இருப்பினும் மக்களாட்சி முறை சிதைந்துவிடாது. சட்ட மேலவை இல்லாமலேயே இதுவரை மாநில அரசும் நிர்வாகமும் இயங்கவில்லையா? எனவே, யாவருக்கும் பொதுவாக பிரதிநிதிக்குழு ஏற்படுத்துவது சாலச் சிறந்ததே ஆகும். 
  எம். சோமசுந்தரம், காஞ்சிபுரம்.
  நியாயமாக நடைபெற... 
  அரசு, அரசு அதிகாரிகள் ஓர் அணி. எனவே, நியாயமாக நடைபெற அனைத்துக் கட்சிக்குழு அவசியமானதாகும். அரசு தனக்கு சாதகமாகவே அனைத்தையும் செய்ய விரும்பும். அரசால் பதவி, அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் அரசின் விருப்பத்திற்கிணங்க நடக்கவே செய்கிறார்கள். ஆகவே, நியாயமாகவும், நேர்மையாகவும் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக்குழு நியமனம் மிகமிக அவசியமானதாகும். 
  டி. சேகரன், மதுரை.
  தற்போதைய சூழ்நிலையில் 
  சட்டப்பேரவை மேலவை அமைக்கும்போது கண்டிப்பாக அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட வேண்டும். ஏனெனில், சட்ட மேலவை நீக்கப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போதைய சூழ்நிலையில் சட்ட மேலவை அமைக்கப்பட்டால், ஆளும் கட்சியாளர்களின் உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்யக்கூடிய சூழல் உருவாகும். மேலவையில் அனைத்துத் துறை அறிஞர்களும் இடம்பெற வேண்டும். புதிதாக மேலவை அமைக்கப்பட வேண்டியுள்ளதால், நிறைய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. மேலவை ஆளும் கட்சியினரின் மற்றொரு கூடாரம் ஆகிவிடக்கூடாது. எனவே, அனைத்துத்துறை மக்களும் இடம்பெற, உறுப்பினர்கள் தேர்வு மிக முக்கியம். அதற்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அமைத்து, எல்லைகளை வரையறை செய்து, உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான சட்ட மேலவையாக இருக்கும். இல்லையென்றால், ஆளும் கட்சியினரின் இன்னொரு செயற்குழுக் குழுவாக மாறிவிடும். 
  பி.கே. ஜீவன், கும்பகோணம்.
  அபத்தமானது 
  தேவையில்லாததற்கு சர்வ கட்சிக்குழு அமைக்கச் சொல்வதும், தேவை இருக்கும் சர்வக்கட்சிக் குழுவுக்கு ஏதேனும் காரணம் கூறி புறக்கணிப்பதும் அதிமுகவுக்கு வாடிக்கை.  மேலவையில் பிரதிநிதித்துவம் என்பது ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்று. அதன்படி, விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஒவ்வொரு தொகுதிக்கும் கிடைக்கும். இத்தகு சர்வ கட்சிக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அபத்தமானது. அனுபவமின்மையைப் பிரதிபலிப்பதாகும். 
  அ. சம்பத், திருவரங்கம். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai