Enable Javscript for better performance
கடந்த வாரம் கேட்கப்பட்ட "கல்வி, விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்தால் வங்கிகள் மற்றும் நாட்ட- Dinamani

சுடச்சுட

  

  கடந்த வாரம் கேட்கப்பட்ட "கல்வி, விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்தால் வங்கிகள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By டாக்டர் வெங்கடாசலம்  |   Published on : 28th July 2016 01:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாசகர் அரங்கம்
  வளர்ச்சி தேக்கமுறும்!
   கல்வி, விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்வது ஆரோக்கியமான நடைமுறையல்ல. கடன் பெற்றோர் கடனைத் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடலாகாது. அதனால், பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற கடனுக்கான வட்டியை அரசு தள்ளுபடி செய்ய முனையலாம். முழுத்தொகையையும் அரசே ஏற்க முன்வந்தால் நிதிச்சுமை அதிகமாகி, வளர்ச்சி தேக்கமுறும்.
   செல்லூர் கண்ணன், 
   திருநள்ளாறு.

  எப்படி பாதிக்கும்?
   கல்விக் கடன், மொத்த வரவு செலவு கணக்கில் 1%, விவசாயக் கடன் 2%-த்திற்கும் குறைவே. இவற்றை முற்றிலும் தள்ளுபடி செய்தால் வங்கிகள், நாட்டின் வளர்ச்சி புள்ளிவிவரப்படி பாதிப்பு இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு வரி தள்ளுபடி செய்வதும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதும் 5%-த்திற்கும் மேல் இருக்கும். இதனை சட்டப்படி வசூல் செய்திடின் கல்வி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தால் வங்கிகள், நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு எப்படி ஏற்படும்?
   ஆ. கோவிந்தராஜ், புதுச்சேரி.

  கட்சிகள் அல்ல...
   வட்டியை மட்டும் தள்ளுபடி செய்து அசலை செலுத்துவதற்கான காலநீட்டிப்பு வழங்கலாம். கல்வி, விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்வதென்பது, கடனை வாங்கி செலுத்த வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உருவாகிவிட்டால் நஷ்டப்படப்போவது வங்கியும் நாடும்தான்; கட்சிகள் அல்ல.
   பா. சங்கர் குரு, கரும்பாலை.

  ஏமாளிகளா?
   கடன்களை தள்ளுபடி செய்தால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. வங்கிகளின் வாராக்கடன் ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், கடன் பெறுவதற்காக வங்கிகளுக்கும், கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் அலைந்து பார்த்துவிட்டு, பிறகு பெண்களின் தாலி, மூக்குத்தி போன்ற சிறு நகைகளை விற்று விவசாயம் செய்தவர்களும், படித்தவர்களும் என்ன ஏமாளிகளா?
   வை. தமிழ்க்குமரன், கருப்பம்புளம்.

  தூண்டுகோல்!
   "தள்ளுபடி' என்ற வார்த்தையே வளர்ச்சியை தள்ளுபடி செய்வதுதான். கல்வி, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வது, அதன்மூலம் தங்களுக்குச் சாதகமாக வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சிகள் குறியாக இருக்கின்றன. அதனால், எப்படியும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும். தங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றே கடன் வாங்குபவர்கள் நினைக்க இது ஒரு தூண்டுகோளாக அமைந்துவிடும்.
   எம். பார்த்தசாரதி, சென்னை.

  வேதனை!
   படித்து முடித்தபின் வேலைக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலையில் கல்வியை கடன் வாங்கி படிப்பது வேதனையான செயலாகும். அதேபோல், விவசாயிகளும் இயற்கையை நம்பி கடன் வாங்கி அது ஏமாற்றிவிடும் பொழுது, விவசாயி பெரும் கடனாளியாக ஆவதுடன், அதைத் திருப்பிச் செலுத்த இயலாமல் தற்கொலை செய்துகொள்கிறார். எனவே, கல்வி, விவசாயக் கடன்களை அரசே ஏற்றுக்கொண்டு, மேற்படி கடன்களை வங்கிகளுக்கு அரசே செலுத்துவது நல்லது.
   பழ. ராஜ்குமார், பூதலூர்.

  நியாயமும் தர்மமும்
   இதனால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். மக்கள் நலத் திட்டங்கள் பலவும் வங்கிகள் மூலமாகத்தான் செயல்படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து, வங்கியில் கல்வி, விவசாயக் கடன்களைப் பெற்றவர்கள் காலம் தாழ்த்தியாவது திரும்பச் செலுத்திவிடுவதுதான் நியாயமும், தர்மமும் ஆகும்.
   ஐ. ரபீக், திருச்சி.

  உயிர், உடல்...
   கல்வியும், விவசாயமும மனிதனின் அடிப்படையானத் தேவைகள். இவற்றை அடைய நாம் எத்தகைய இழப்பையும் செய்ய முன் வரலாம். மற்ற துறைகளில் புரட்சியை ஏற்படுத்தினால் கல்விப் புரட்சியும், பசுமைப் புரட்சியும் கொடிகட்டிப் பறக்கும். படிப்பிற்கு செலவிடுவது சேய்க்கு ஆகாரம் ஊட்டுவது போல. விவசாயத்திற்கு செலவிடுவது தாய்க்கு ஆகாரம் ஊட்டுவதுபோல. ஆகவே, இரு கடன்களையும் தள்ளுபடி செய்வது சரியே.
   வசந்தா சித்திரவேலு, கருப்பம்புலம்.

  சிக்கல்
   கல்வி, விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்தால் வங்கிகள், நாட்டின் வளர்ச்சி கண்டிப்பாக பாதிக்கும். சீராகச் சென்று கொண்டிருக்கும் நாட்டில் திடீரென்று இவ்வளவு தொகைகளை தள்ளுபடி செய்தால் நமது நாட்டின் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படும். இந்த தள்ளுபடியால் பயன்பெறுபவர்களும் பொதுமக்களே. இதனால், பாதிக்கப்படுபவர்களும் பொதுமக்களே!
   ரா. கீதா, நாமக்கல்.

  எப்படியும் பாதிப்பே!
   கல்வி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதானால், தள்ளுபடி செய்யும் அரசே அந்தக் கடன்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படியானால், வங்கிகளின் வளர்ச்சி பாதிக்காது. ஆனால், அரசுக்குச் செலவு கூடுவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும். தள்ளுபடி செய்வதால், அரசு வேறு வழிகளில் வருமானத்தைப் பெருக்கவோ, புதிய வரிகளை விதிக்கவோ, இருக்கின்ற வரிகளை உயர்த்தவோ நேரிடும். இது யாரோ வாங்கியக் கடனை யாரோ செலுத்துவது போலாகாதா?
   ப. குருநாதன், மேல்நல்லாத்தூர்.

  ஏமாற்றும் சிந்தனை!
   கல்வி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தால், சிறுவயதினர் முதல் பெரியவர் வரை மல்லையாவைப் போன்று அரசை ஏமாற்றும் சிந்தனைதான் வரும். மேலும், இதைச் சமாளிக்க சேமிப்புக்கு வட்டி குறைப்பு, வரியை உயர்த்துவது என்று மக்களின் மீதே பாரம் சுமத்தப்படும். இதனால், மத்தியதர வர்க்கத்தினர் துன்பம் அடைய நேரிடும். 
   கிரிஜா ராகவன், கோயமுத்தூர்.

  வரி சுமை
   ஆட்சியாளர்கள், ஆட்சியைப் பிடிப்பதற்காக பிறர் பெற்ற கடனுக்கு பொதுமக்களை கடனாளியாக்குகிறார்கள். இதனால், சிலருடைய பிரச்னைகள் தீர்ந்து விடுகின்றன. இதனால் கடன் பெற்றவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். பின்பு வரி சுமைகளை பொதுமக்கள் மீது ஏற்றிவிட்டு, பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியாளர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுப்பர்.
   எம். சண்முகம், 
   கொங்கணாபுரம்.

  முதுகெலும்பு!
   கல்வி, விவசாயக் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்வதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் விவசாய மக்களின் விலை மதிப்பில்லா உயிரை தற்கொலையிலிருந்து காப்பதுடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்வதன் மூலம் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் அவதியுறும் மாணவ, மாணவிகளையும் காப்பாற்றலாம்.
   ஆர். கணேசன், கடகம் பூண்டி.

  எந்தவகையில் நியாயம்?
   அரசு பொதுத் துறை நிறுவனங்கள் நலிவடையும்போது அரசு அந்த நிறுவனத்தை கைதூக்கி விடுவதுபோல், நசிந்து வரும் இன்றைய விவசாயத் தொழிலைப் பாதுகாக்க விவசாயக் கடன்களை முற்றிலும் ரத்து செய்வது அவசியமே. தவிர, கல்வியைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இன்றைக்கு கல்வி கற்க அதிக பணம் செலவாகும் நிலையை ஏற்படுத்தியது அரசே. படித்தும் வேலையில்லாதவர்களிடம், கடனை வசூல் செய்ய நினைப்பது எந்தவகையில் நியாயம்?
   ஆ. இலட்சுமிபதி, சங்கராபுரம்.

  கலாசார பாதிப்பு!
   கடன்களைத் தள்ளுபடி செய்தால் வங்கிகள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் தனிநபர் கலாசாரமும் பாதிக்கப்படும். இந்த விஷயத்தில் அனைத்து வங்கிகளும் ஒரேமாதிரியான முறையை அமல்படுத்தாததால், சொத்துகளை விற்று கடனை அடைப்பவர்கள், கடனைச் செலுத்தாதவர்களின் கடனைத் தள்ளுபடி செய்வதைப் பார்க்கும்போது மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். இதனால் கலாசாரம் பாதிக்கப்படுகிறது.
   என். கிருஷ்ணமூர்த்தி, துளசேந்திரபுரம்.

  உழைப்பின் மேன்மை குறையும்
   கல்வி, விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்தால் வங்கிகளின் பரிவர்த்தனைகள் சூன்யமாகும். நாட்டின் வளர்ச்சி நலிவடையும். ஏற்கெனவே, பலவித மானியங்களினால் நாட்டின் வளர்ச்சிநிலை மந்தகதியில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டால் உழைப்பின் மேன்மை குறையும். நாடு சோம்பேறிகளின் கூடாரமாகிவிடும்.
   இ. சேசுதனசாமி, அகரக்கட்டு.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai