Enable Javscript for better performance
கடந்த வாரம் கேட்கப்பட்ட "நூறு சதவீத வாக்குப் பதிவை எட்ட இயலாததற்குக் காரணம் மக்களா? அரசியல்வாதிகளா?'- Dinamani

சுடச்சுட

  

  கடந்த வாரம் கேட்கப்பட்ட "நூறு சதவீத வாக்குப் பதிவை எட்ட இயலாததற்குக் காரணம் மக்களா? அரசியல்வாதிகளா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By டாக்டர் வெங்கடாசலம்  |   Published on : 28th July 2016 01:44 PM  |   அ+அ அ-   |    |  

  வாசகர் அரங்கம்
  காண்பது அரிது!
   வாக்குரிமை என்பது சுதந்திர நாட்டில் மக்கள் பெற்றுள்ள உன்னதமான உரிமை. நேர்மையான அரசியல்வாதிகளை தற்போது காண்பது அரிது. வேட்பாளர்கள் நேர்மையானவர்களாக மாறாதவரையிலும், வாக்காளர்கள் வாக்குரிமையின் மகத்துவத்தை உணராத வரையிலும் வாக்குக்கு பணம் கொடுப்பதாலோ, இலவசங்களை வழங்குவதாலோ மட்டும் 100% எட்ட இயலாது.
   எம். ஜோசப் லாரன்ஸ், 
   சிக்கத்தம்பூர்பாளையம்.

  அரசியல், ஆட்சி, வளர்ச்சி
   வேலை தேடி இடம் பெயர்வது என்பது தவிர்க்க இயலாதது. அதில் விடுபட்டவர்களால் நூறு சதவீத வாக்குப் பதிவு என்பது சாத்தியமற்றது. "அரசியல் - ஆட்சி - வளர்ச்சி' என்பதைச் சாராத கல்வித் திட்டம். அதைப்பற்றிய விழிப்புணர்வை பள்ளிப் பாடத்திட்டங்களிலேயே சேர்த்துவிடலாம். அப்படி சேர்த்தால் வரும்காலங்களில் 100 சதவீத வாக்குப் பதிவு சாத்தியமாகலாம்.
   ந. தமிழ்க்காவலன், திருவாரூர்.

  ஊழல்வாதிகள்
   அரசியல்வாதிகள் என்றாலே ஊழல்வாதிகள், குற்றப்பின்னணி உடையவர்கள், சுயநலவாதிகள் என்ற எண்ணம் தமிழக மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டதால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு அதனால் என்ன பயன் என்று கருதத் தொடங்கிவிட்டதே 100 சதவீத வாக்கு எட்டாமல் போனதற்குக் காரணம்.
   செ. சுவாமிநாதன், டால்மியாபுரம்.

  இயலாத காரியம்!
   மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு செய்யவில்லை. அதனால், மக்கள் வாக்குப் பதிவுக்கு அக்கறை காட்டவில்லை. எந்த அரசு வந்தாலும் மக்களை முழு திருப்திப்படுத்த முடியவில்லை. வெற்றி அடைந்த மக்கள் பிரதிநிதிகளோ வெற்றிபெற்ற பிறகு மக்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. ஆகவே, நூறு சதவீத வாக்குப் பதிவு என்பது இயலாத காரியம்.
   மோசூர் பாலச்சந்திர நடராசன், சென்னை.

  அரசியல் முதலீடு
   அரசியல் இன்று பிழைப்பதற்கு ஒரு சிறந்த வழி என்றாகிவிட்டது. கணிசமான முதலீட்டில் அபரிமிதமான லாபத்தை ஈட்டித் தருகிற தொழில்களில் அரசியல் முதலிடம் வகிக்கிறது. அரசியலில் தூய்மையை விரும்புகிற அறிஞர்களும், சான்றோர்களும் இந்நிலை கண்டு வருந்திதான் வாக்குச் சாவடிக்கு செல்ல மறுத்து விடுகின்றனர். நூறு சதவீத வாக்குப் பதிவு நிகழாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
   ஐ. ரபீக், திருச்சி.

  மதிப்பதில்லை...
   அரசியல்வாதிகள் தான் காரணம். ஏனென்றால், மக்கள் நாம் இவர்களுக்கு வாக்களித்து பிரயோஜனம் இல்லை என்று நினைத்துவிட்டார்கள். மேலும், மக்கள் பிரதிநிதிகளோ எதற்கு எடுத்தாலும் லஞ்சம், ஊழலில் திளைக்கும் சூழ்நிலை. வாக்கு கேட்க வரும்போது அம்மா, தாயே என்று வருகிறார்கள். வெற்றி பெற்றபின் வாக்காளர்களை யாரும் மதிப்பதும் இல்லை, உபசரிப்பதும் இல்லை. இதுவே, வாக்குப் பதிவு குறைவுக்குக் காரணம்.
   ஆர். சங்கர் கணேஷ், இராஜபாளையம்.

  தாய்நாட்டுப் பாசம் இல்லை
   மக்கள்தான் முதல் காரணம். அவர்களுக்கு தாய்நாட்டின் மேல் பாசமே இல்லை. படிக்காத கூலி வேலை செய்பவர்கள் வெளியூர்களிலிருந்து வந்து ஓட்டு போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், படித்த இளைஞர்கள் ஒட்டுப்போடவும் இல்லை, வெளியூர்களிலிருந்து வரவும் இல்லை. தவிர்க்க முடியாத காரணத்தினால் 100 சதவீத வாக்குப் பதிவு முடியவில்லை என்றாலும் 90 சதவீதமாவது பதிவாகியிருக்க வேண்டும். ஆனால், இல்லை.
   ஆர். கோடீஸ்வரி, பண்ருட்டி.

  மாற்றம் வேண்டுமெனில்...
   தற்போதைய தேர்தல் முறையில் அரசியல் கட்சிகள் ஜாதி, பணம், குற்றப் பின்னணி உடைவர்கள் போன்றவர்களை நிறுத்துகின்றன. உழைப்பு, நேர்மை, திறமை உள்ளவர்களை நிறுத்துவது இல்லை. இதனால், வெறுப்பு அடையும் வாக்காளர்கள் தமது வாக்கை பதிவு செய்ய விரும்புவது இல்லை. இதில் மாற்றம் வேண்டும் என்றால், விகிதாச்சார தேர்தல் முறையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் சரியில்லை என்றால் திரும்பி அழைத்துக்கொள்ள உரிமையும் கொடுத்தால் மட்டுமே 100 சதவீத வாக்குப் பதிவு 
   சாத்தியம்.
   பொ.ஆ. இராமசாமி, திருச்சி.

  செலவு செய்து...
   தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை எட்ட முடியாததற்குக் காரணம் மக்கள்தான். அரசியல்வாதிகள் வாக்களிக்க வருமாறு கையைக் குலுக்கி, அன்பளிப்பு வழங்கி மக்களை அழைக்கிறார்களே. அவர்களை எப்படிக் குறை கூற முடியும்? முதல்நிலை, இரண்டாம் நிலை அரசு அலுவலர்கள், வளமாக வாழ்பவர்கள் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. பிழைப்பிற்காக வெளியூர் சென்றவர்களால் செலவுசெய்து ஊருக்கு வந்து வாக்களிக்க இயலவில்லை. இந்தநிலை உள்ளவரை நூறு சதவீதத்தை எட்ட இயலாது.
   வை. தமிழ்க்குமரன், வேதாரண்யம்.

  மக்களே...
   மக்கள்தான் காரணம். ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? நமக்கு என்ன பிரயோஜனம் என்ற மனநிலையே நூறு சதவீத வாக்குப் பதிவு அடைய முடியாததற்கு காரணம் என்று கருதலாம்.
   எம். பார்த்தசாரதி, சென்னை.

  தேர்தல் நடவடிக்கை
   அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் கண்டு வெறுப்புறும் மக்கள் நோட்டாவைப் பயன்படுத்த முடியும். அதையும் மீறி குறைந்த வாக்குப் பதிவு எனில் அதற்குத் தேர்தல் நடவடிக்கைகளும் காரணமாக உள்ளன. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள், பணி நிமித்தமாக வெளிநாடுகளில் - தொலை தூரத்தில் இருப்போர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் போன்றோரையும் வாக்கு செலுத்தத் தக்க மாற்று ஏற்பாடுகள் பற்றியும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.
   செல்லூர் கண்ணன், திருநள்ளாறு.

  வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை
   நிச்சயம் மக்களே காரணம். வேட்பாளர்களைக் குறை கூறித் தேர்தலைப் புறக்கணிப்பதால்தான் நோட்டா அறிமுகப் படுத்தப்பட்டது. அதன் பின்னும் தொடரும் இந்த அவல நிலை மக்களின் அலட்சிம், சுயநலப்போக்கு, தேசப் பற்றின்மையையே காட்டுகிறது. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நம்மிடம் வந்து நிற்கும் ஜனநாயக சக்தியை பயன்படுத்த தவறும் மக்களே, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை.
   எஸ். காயத்ரி, சிதம்பரம்.

  ஆர்வமின்மை
   நூறு சதவிதம் என்பது சாத்தியமில்லை.என்றாலும், அதிகபட்ச பதிவு ஆகாததற்கு மக்கள் தான் காரணம். மக்களிடம் உள்ள அலட்சியமும், ஆர்வமின்மையும்தான். இதற்குத் தீர்வு, மக்களிடம் நம்பிக்கை வருமாறு அரசியல் மாற வேண்டும். அப்படி மாறினால் கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு சதவீதம் உயரும்.
   ஜெயந்தி சேகர், சென்னை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai