Enable Javscript for better performance
கடந்த வாரம் கேட்கப்பட்ட "கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையா? அதனால் நல்லாட்சி மலருமா?' என்ற கேள்- Dinamani

சுடச்சுட

  

  கடந்த வாரம் கேட்கப்பட்ட "கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையா? அதனால் நல்லாட்சி மலருமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By டாக்டர் வெங்கடாசலம்  |   Published on : 29th July 2016 01:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாசகர் அரங்கம்
  நெல்லிக்காய் மூட்டை
   கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையா? அதனால் நல்லாட்சி மலருமா என்றால் மலராது. தான் மக்கள் செல்வாக்கு மிக்கவன் என்ற அகந்தையில் ஆளுக்கொரு திசையில் தேர் இழுத்து நகர முடியாமல், "ஈகோ' பார்த்து செயல் இல்லாது செய்துவிடும் கூட்டணி ஆட்சிமுறை. நெல்லிக்காய் மூட்டைபோல், முடிச்சை அவிழ்த்தால் சிதறிப்போகும் இயல்புடைய மனங்களின் சொந்தக்காரர்கள் கூட்டணி ஆட்சியாளர்கள். ஆகவே, தனிக் கட்சி ஆட்சியே சிறந்தது.
   மோ. ஓம்குமார், ஒரத்தநடு.

  நாதி இல்லையோ?
   கூட்டணி ஆட்சி தேவை. ஆண்டவர்களுக்கும், ஆளுகிறவர்களுக்கும் நம்மைத் தவிர தமிழக மக்களுக்கு நாதியே இல்லை என்று நினைக்கிறார்கள் போலும். ஏழையாக இருந்தாலும் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால் தான் நல்லவர்கள் ஆட்சிக்கும் வர முடியும்.
   சாமி, நாகதாசம்பட்டி.

  நாற்காலியே குறிக்கோள்!
   கூட்டணி ஆட்சி தேவையில்லை. பல வகையான சமூகத்தைக் கொண்ட நம் நாட்டில் ஜாதியையும், தனிமனித வெறுப்பையும் கொண்டவர்கள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை கூட்டணியை மாற்றிக் கொண்டு கூடுபவர்களிடம் நாட்டைக் கொடுத்தால் எப்படி அனைத்து சமூகத்தினரின் மதத்தையும் வேண்டுகோளையும் காப்பாற்றுவார்கள்? ஆளும் நாற்காலியைக் குறியாக வைத்து ஆட்சி செய்ய நினைக்கும் இவர்களால் எப்படி நல்லாட்சி மலரும்?
   ஆ. துரைசாமி, ஈரோடு.

  நல்லாட்சி
   தேவை கூட்டணி ஆட்சி. தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெற்றதில்லை. இதுவரை நடைபெற்ற தனிக்கட்சி ஆட்சியும் சொல்லும்படி இல்லை. ஊழல், லஞ்சம் மலிந்துவிட்டது. தமிழ்நாட்டின் இப்போதைய நிலையைப் பார்க்கும்போது, இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆள வேண்டும் என்ற சதிதான் நடைபெறுகிறது. எனவே, கூட்டணி ஆட்சி தேவை. இதன் மூலம், வெளிப்படையான, ஊழலற்ற, நல்லாட்சி மலரும் என நம்புவோம்.
   எம். முத்தமிழன், உலகுடையாம்பட்டு.

  நன்மை
   கூட்டணி ஆட்சி அவசியமே. தனிக்கட்சி ஆட்சியை விட கூட்டணி ஆட்சியே பல நன்மைகளை மக்களுக்கு அளித்துள்ளது. உதாரணத்திற்கு, மத்தியில் கூட்டணி ஆட்சியில்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 100 நாள் வேலை உறுதித் திட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டன. அனைவரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒரு செயல் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி ஏற்பட்டால் தனிக்கட்சி ஆட்சியை விட சிறப்பாக இருக்கும்.
   என்.ஜெ. இராமன், சென்னை.

  பயமுறுத்தல்!
   கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. கூட்டணி கட்சிகளால் தமிழக மக்களுக்கு ஒருபோதும் நல்லாட்சியைத் தர முடியாது. கூட்டணிக்குத் தலைமை தாங்குபவர் நல்லவர்களாக இருந்தாலும் மக்கள் நலனுக்கான சுய முடிவை எடுக்க முடியாது. அவரது ஆட்சிக் காலம் முழுவதும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பயமுறுத்தலால் சரியாக தூங்கவே முடியாது.
   என்.எஸ். குழந்தைவேலு, சங்ககிரி.

  புகார்கள் குறையும்
   கூட்டணி ஆட்சி தேவைதான். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வந்தால் ஆட்சியில் புதிய முறை ஏற்படும். தவறுகள் நடைபெற வாய்ப்புகள் குறைவு. கூட்டணி ஆட்சியில் பொதுவாக மக்கள் நலத்திட்டங்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக அமையும். ஊழலும் லஞ்சமும் வேகத்தடைகளாக தடுத்து நிறுத்தப்படும். ஆட்சியின் கொள்கைகள் பொதுவாக அமையும், சர்வாதிகாரம் ஒழிக்கப்படும். அரசின்மீது புகார்கள் குறையும்.
   குமரிக்கிழார், திருவள்ளூர்.

  பலமான எதிர்க்கட்சி
   கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுத் தேவையில்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் மக்கள் எதிர்பார்ப்புக்கேற்ப ஆட்சி செய்யவில்லை. எனவே, அடிப்படைக் கொள்கையில் மாறுபட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய முடியாது. நல்லாட்சி மலர பலமான எதிர்க்கட்சி அமைந்தாலே போதுமானதாக இருக்கும்.
   ஜி. தண்டபாணி, சென்னை.

  சோதித்துப் பார்க்கலாம்
   கூட்டணி ஆட்சியில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் விவாதத்திற்கு உள்படும். நின்று, நிதானித்து ஆட்சி இயந்திரம் செயல்பட வழி ஏற்படும். கொள்கை முரண்பாடுகளைப் பொருட்டாகக் கருதாமல், கூட்டணியை அமைத்துக் கொள்ளும்போது, அத்தகைய கட்சிகள் ஆட்சியிலும் இணைந்து செயல்படுவதில் பெரிதாகத் தவறேதும் விளையாது என்றே கூறலாம். இதை சோதித்துப் பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
   லதா அரங்கன், சென்னை.

  உடைந்த கண்ணாடி போல...
   ஜனநாயகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற முறையில் அமைவதுதான் சிறந்தது. இன்றுள்ள சிறிய கட்சிகள் கொள்கைரீதியாக இல்லாமல், சுயநல நோக்கோடும் தனிப்பட்ட கருத்துவேற்றுமையால் பிளவுபட்டு கட்சியைத் தொடங்குகின்றனர். உடைந்துபோன முகம் பார்க்கும் கண்ணாடியை ஒட்டவைத்து நம் முகத்தைப் பார்த்தால் எப்படித் தெரியுமோ, அதுபோல்தான் நாடும் இருக்கும்.
   டி.வி. சங்கரன், தருமபுரி.

  குடும்ப ஆட்சிக்கு முடிவு
   குறைந்தபட்ச திட்டத்தின் மூலம் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால்தான் நல்லாட்சி மலரும். அந்தக் கூட்டணியில் மக்களின் உழைப்பாளர்கள், ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காக தொடர்ச்சியாக போராடிவரும் கட்சிகள் உள்ள ஆட்சியில் மாற்றம் நிச்சயம் வரும். இதற்கு இளைஞர்கள் உந்துசக்தியாக இருந்து தற்போதுள்ள ஆளுகின்ற, ஆண்ட கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவதோடு, மன்னர் ஆட்சி வழியில் செல்லும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும்.
   பொ.ஆ. இராமசாமி, திருச்சி.

  குழப்பம் மிஞ்சும்
   கூட்டணி ஆட்சி தேவை இல்லை. அதனால், குழப்பம் மட்டுமே மிஞ்சும். சர்வாதிகாரப்போக்கு அனைத்து கட்சிகளிடமும் காணப்படுவதால் அதிகார பகிர்வால் கண்டிப்பாக நிறைய முட்டுக்கட்டைகள் உருவாகும். கூட்டணிக் கட்சிகளின் கொள்கைகளில் ஒற்றுமை இல்லை எனில் கூட்டணி சிதறும். அதனால், ஒரு கட்சி ஆட்சியின் அமர்வு சிறந்ததாக இருக்கும்.
   என். சிவசாமி, வேலூர்.

  குளறுபடி ஆட்சி
   கூட்டணி ஆட்சியால் நல்லதை செய்து நிலைநாட்ட முடியும் என்றால், அதற்கு கூட்டணியில் இருக்கும் இதர கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். அவரவர்கள் தனது சுயநலன்களை மட்டுமே விரும்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால், கூட்டணி ஆட்சி குளறுபடி ஆட்சியாக மாறும். இப்போதைய சூழலில் ஒவ்வொருவரின் சுயநலன்களால் கூட்டணி ஆட்சி, குழப்பம் தரும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
   சிவ. ராம்கோபால், மதுரை.

  பதவியில் நீடிக்க...
   கூட்டணி ஆட்சிதான் தற்கால நிலைமையில் சிறந்தது. வாஜ்பாய் தலைமையில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடந்ததை நாம் அறிவோம். கூட்டணி ஆட்சியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஆதரவை வாபஸ் பெற நேர்ந்தால் ஆட்சியே கவிழ்ந்துவிடும். எனவே, தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒற்றுமையுடன் செயல்படுவர்.
   மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

  பழிவாங்கும் படலம்
   இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே தனி நபரிடத்திலும் சரி, அரசியல் கட்சியிடத்திலும் சரி நீதி, நேர்மை என்பது மிக மிக அரிதாகிவிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தனிக்கட்சியிடம் நாட்டினுடைய பொறுப்பையோ, மாநிலத்தினுடைய பொறுப்பையோ கொடுத்துவிட்டால், அவர்கள் தான் நினைத்ததை, தங்கள் மனதில் பட்டதை மட்டும் செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழி வாங்கும் படலமும் ஆரம்பமாகிவிடும்.
   க. சுல்தான் ஸலாஹீத்தீன், காயல்பட்டினம்.

  ஒரே கட்சி ஆட்சி!
   கூட்டணி ஆட்சி தேவையில்லை. அதனால் நல்லாட்சி மலராது, குழப்பங்கள்தான் ஏற்படும். பல மாநிலங்களின் கூட்டணி ஆட்சியில், ஆட்சி கவிழ்வதும், உறுப்பினர்கள் அணி மாறுவதும், பின் புதிய ஆட்சி அமைப்பது போன்ற பல நிகழ்வுகளையும், கேலிக்கூத்தான அரசியல் ஆட்சி மாற்றத்தையும் நாம் பார்த்திருக்கிறோம். எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரே கட்சி ஆட்சி அமைந்தால் தான் நல்லாட்சி மலரும்.
   இரா. துரைமுருகன், தியாகதுருகம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai