Enable Javscript for better performance
கடந்த வாரம் கேட்கப்பட்ட "சட்டப் பேரவை உறுப்பினரைத் தேர்வு செய்ய வாக்காளர்கள் கவனிக்க வேண்டியது கட்சி- Dinamani

சுடச்சுட

  

  கடந்த வாரம் கேட்கப்பட்ட "சட்டப் பேரவை உறுப்பினரைத் தேர்வு செய்ய வாக்காளர்கள் கவனிக்க வேண்டியது கட்சியா? தனி மனிதத் தகுதியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By டாக்டர் வெங்கடாசலம்  |   Published on : 29th July 2016 01:15 PM  |   அ+அ அ-   |    |  


  வாசகர் அரங்கம்
   கட்டாயத்தில்...
   கட்சி சார்பாக யாரை நிறுத்தினாலும் சின்னத்தை மட்டும் பார்த்து வாக்களிக்கும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. நல்லது செய்ய நினைக்கும் வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டாலும், அவர் விருப்பத்திற்கு நல்லன செய்ய இயலாமல், கட்சிக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளாகிறார். எனவே, நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் வாக்காளர்கள் முடிந்த அளவு தனிமனிதத் தகுதி பார்த்து வேட்பாளரைத் தேர்வு செய்வதுதான் நல்லது.
   எஸ்.எஸ்.ஏ. காதர், காயல்பட்டினம்.

  எது நல்ல கொள்ளி?
   தனிமனித ஒழுக்கத்தை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் சுயேச்சை அல்லது கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர், ஆளும் அரசின் தயவில்லாமல் மக்கள் நலனுக்கான எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற இயலாது. எனவே, எரிகின்ற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று தீர்மானிக்கும் நிலைக்கு இன்றைய வாக்காளப் பெருமக்கள் தள்ளப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
   தனலட்சுமி ஈஸ்வரன், சென்னை.

  ஜனநாயகம் வலுப்பெற...
   சட்டப் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் வாக்காளர்களுக்கு உண்டு. இதில் கட்சியைப் பார்ப்பதை விடவும், தம் தொகுதியில் நிற்போரின் தகுதி, பின்னணியை ஆராய்ந்து வாக்களித்தல் சிறந்தது. கல்வி, சேவை, பொது நலம், குடும்பப் பின்னணி, குற்ற வழக்குகள் இல்லாதிருத்தல் உள்பட பல்வேறு தகுதிகளில் எவருக்கு முன்னுரிமை தரலாம் என்பதை ஓரளவிற்கேனும் எண்ணிப் பார்த்து வாக்களிப்பதே ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.
   வெ. பாண்டுரங்கன், திருநின்றவூர்.

  காலத்தின் கட்டாயம்
   கட்சி, மதம் பாகுபாடு இன்றி, மக்களுக்காக தம் தொகுதி சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உறுப்பினரை, வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
   ஜே. மகரூப், 
   குலசேகரன்பட்டினம்.

  ஒருசேர...
   சட்டப் பேரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேட்பாளர்கள் சார்ந்துள்ள கட்சியின் செயல்பாட்டையும் கவனிக்க வேண்டும், தனிமனிதத் தகுதியையும் கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் வேட்பாளர் தான் சார்ந்துள்ள கட்சியின் மக்கள் நலக் கொள்கைகளை நிறைவேற்றவும், வேட்பாளர் தனது சட்டப் பேரவை தொகுதியில் உள்ள மக்களின் தேவைகளை அரசிடம் கேட்டுப் பெறவும் வழி செய்வார்கள். ஆகையால், வேட்பாளர் சார்ந்துள்ள கட்சியும், தனிமனித தகுதியும் ஒருசேர கவனிக்கப்பட வேண்டும்.
   அ. அன்புராஜ், எருமல்.

  தகுதி...
   இரண்டும் தேவைதான். ஆயினும் தனிமனிதத் தகுதியென்பது மிக அவசியம். ஏனெனில், ஒரு கட்சித் தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பினும், ஒரு வேட்பாளர் நல்லவரென்று சொல்லப்பட்டால், அவரால் தவறுகள் நிகழாது. தவறு செய்யாதவொரு அரசியலாளர்தான் ஆட்சி பீடத்தில் அமரத் தகுதியுடையவராவார். அத்தகையோருக்கே வாக்களிக்க வேண்டும்.
   தி. ஆறுமுகம், திருநெல்வேலி.

  தீமை நமக்கும் நாட்டுக்கும்
   சட்டப் பேரவை உறுப்பினரைத் தேர்வு செய்ய வாக்காளர்கள் கவனிக்க வேண்டியது அவரின் தனிமனிதத் தகுதிகளான கல்வி, அறிவு, ஆற்றல், குணம், நேர்மை, எளிமை, தொண்டுள்ளம் போன்றவையே. கட்சியைக் கவனித்து வேட்பாளர் யாராயிருப்பினும் பரவாயில்லை, கட்சிதான் முக்கியம் என்று தேர்வு செய்தால் தீமை நமக்கும் நாட்டுக்கும்தான்.
   ஜி. தண்டபாணி, சென்னை.

  எவ்வளவு சதவீதம்?
   இன்றைய அரசியலில் தனிமனித ஒழுக்கம் என்பது, அவர் எவ்வளவு சதவீதம் குறைவாகத் தவறு செய்தார் என்பதுதான். கட்சி விசுவாசம் இன்று வெறும் பேச்சளவில் மட்டுமே. வெற்றி பெறுபவர் எப்படியும் ஐந்து வருடம் சம்பாதிக்கத்தான் போகிறார். 
   ஆ. புவனா, பள்ளிப்பாளையம்.

  நோட்டோவுக்கு...
   வாக்காளர்கள் தனிமனிதத் தகுதியை கவனிக்கத் துவங்கினால், நூறு சதவீத வாக்குகளும் நோட்டோவுக்குதான் போய்ச் சேரும். இருப்பதில், எது நாட்டுக்கு, தொகுதிக்கு நன்மையோ, குடும்ப அரசியல், பரம்பரை, ஆதிக்கம் உரிமை கொண்டாடாமல் உள்ள கட்சி எதுவோ -அதற்கு சிறுபான்மை, தொங்கு சட்டப் பேரவையாக இல்லாது, பெரும்பான்மையுடன் வாக்களிப்பது நாட்டுக்கு நல்லது.
   இ. ராஜுநரசிம்மன், 
   சென்னை.

  கட்சிகள்தான் பலம்
   தனிமனிதத் தகுதி என்பது கட்சி என்று வரும்போது காணாமல் போய்விடுகிறது. இதை கட்சி என்ற கடலில் கரைத்த பெருங்காயம் எனலாம். சரியான மனிதர், தவறான கட்சி என்று எல்லா கட்சியிலும் ஒருசிலர் இருப்பர். இங்கு கட்சிகள்தான் பலம். தனிமனிதத் தகுதி, தகுதியில்லாத ஒன்று. அவர்கள் அரசியலுக்குத் தற்சமயம் அவசியமில்லை.
   கீர்த்தி மோகன், கீழவாசல்.

  தகுதியை வளர்த்துக் கொண்ட...
   மக்கள் தனிமனிதத் தகுதியைத் தான் பார்ப்பார்கள் என்று கட்சித் தலைமையும் உணர்ந்திருக்கிறது. ஆதலால்தான் தலைமை, தொகுதியை முன்னேற்றாமல், தனது தகுதியை முன்னேற்றிக்கொண்ட முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்களை வேட்பாளர்களாக அறிவிப்பதில்லை.
   சரஸ்வதி செந்தில், 
   பொறையார்.

  கடந்தகால வரலாறு
   வேட்பாளர் தன் கட்சியின் வழிகாட்டுதலை மீறி எதுவும் செய்திட முடியாது. யாரும் செய்ததும் இல்லை. வாக்காளர்கள் வாக்களிக்கும் முன் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அதன் தலைமையின் கடந்தகால வரலாறு அதன் தன்மைகளை ஆராய்ந்து அந்த அடிப்படையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலன், இறையாண்மை, தொழில்கள் பாதுகாக்கப்படும் என்பதை அறிந்து தனது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும்.
   என்.ஜெ. இராமன், சென்னை.

  நாடும் மக்களும் வாழ...
   வாக்காளர்கள் கவனிக்க வேண்டியது, தனிமனிதத் தகுதியே. பொதுவாழ்க்கைக்கு தனிமனித ஒழுக்கம் முக்கியம். சொந்த வாழ்க்கையில் நேர்மையாளராக, பண்பாளராக, பிறருக்கு உதவி செய்யும் ஈகை குணம் கொண்டவராக இருப்பவரைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் சார்ந்த கட்சியும், நாடும், மக்களும் வளமாக வாழ முடியும்.
   செ. இராசேந்திரன், பாடாலூர்.

  திடீர்த் தலைவர்களை நம்பி...
   தமிழகத்தில் பெருகியுள்ள கட்சிகளை சீர்தூக்கிப் பார்த்தால் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு உள்பட்டே கட்சிகளைத் துவக்கியுள்ளனர். இதுபோன்ற திடீர்த் தலைவர்களை நம்பி வாக்களிப்பது நியாயமல்ல. மூத்தத் தலைவர்கள் வரிசையிலும் மக்கள் நலனை முன்வைத்து தளராமல் உழைக்கும் தலைவர்கள் உள்ள கட்சிக்கு வாக்களிப்பதுதான் சரியானதாக இருக்கும். தனிமனிதத் தகுதியில்லாத தலைவர்களைப் புறந்தள்ளி வைப்பதுதான் உண்மையான வாக்காளரின் கடமையாகும்.
   சு. மணிமொழி, சென்னை.

  முரண்பட்ட கொள்கை!
   கட்சிகள் தம் கொள்கைகளைப் பற்றிக் கவலைப்படாமல், முரண்பட்ட கொள்கை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்கின்றனர், அடிக்கடி கூட்டணியை மாற்றவும் செய்கின்றனர். தமக்குப் பதவி கிடைக்காதவர்கள் அடிக்கடி கட்சித் தாவலிலும் ஈடுபடுகின்றனர். மக்கள் நலனில் அக்கறை, பொது வாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்கினற வேட்பாளரைத் தேர்வு செய்ய வாக்களிக்க வேண்டும். எனவே, தனிமனிதத் தன்மையையே தகுதியாகக் கருத வேண்டும்.
   வெ. காந்தி, நெடுவாசல்.

  அறிமுகமானவரை...
   நம்முடைய தொகுதியில் கட்சியைச் சார்ந்த, நிர்வாகத் திறமை உடைய, மக்களுக்கு நன்கு அறிமுகமான, மிகுந்த கல்வித் தகுதி பெற்றவராக உள்ள வேட்பாளரை வாக்காளர்கள் தேர்வு செய்து சட்டப் பேரவை உறுப்பினராக்க வேண்டும்.
   அ. சுவாமிநாதன், சென்னை.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai