சுடச்சுட

  

  கடந்த வாரம் கேட்கப்பட்ட "ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By டாக்டர் வெங்கடாசலம்  |   Published on : 29th July 2016 01:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாசகர் அரங்கம்
  தேவையற்ற குழப்பம்!
   ஜாதி மறுப்பு என்பதே தவறு. ஜாதியை மறுத்து யாரும் காதல் செய்வதில்லை; திருமணம் செய்வதும் இல்லை. ஒருவருக்கொருவர் விரும்பினால் திருமண பந்தம் ஏற்படுகிறது. இந்தியாவில் தொழில்முறை அமைப்புதான் ஜாதிமுறை தோன்றக் காரணமாயிற்று. அவரவர் பண்பாட்டை ஒத்த திருமணம் நடந்தால் குழப்பம் ஏற்படாது. வெவ்வேறு கலாசாரம் உடையவர்கள் திருமண பந்தத்தில் கூடினால் குழப்பங்களே வருகின்றன.
   ரா. செல்லன், மதுரை.

  இவர்களும் மனிதர்களே...
   ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அவசியம். பாரதியார் கூறிய, "ஜாதிகள் இல்லையடி பாப்பா' எனும் சீர்மிகு சிந்தனைக்கு உண்மையில் உயிர் கொடுத்து மதிப்பவர் என்றால், ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மனிதர்கள் என்பதை ஏற்றுக் கொண்டால், மனசாட்சிப்படி தனி பாதுகாப்புச் சட்டம் தருவது சரியானதே.
   அர. தாரணி ரங்கநாதன், கோயமுத்தூர்.

  ஆழ்மனதில் உள்ள...
   இது பரந்துபட்ட உலகம். ஆண் - பெண் என்று எந்த பாகுபாடும் இல்லாமல், ஏழை - பணக்காரன் என்ற எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் எல்லோரும் எல்லாத் துறையிலும் வேலை செய்து கொண்டு இருக்கும் நிலை இருக்கிறது. இந்த நிலையில், "காதல்' இயல்பாக உற்பத்தி ஆகிவிடுகிறது. இதை பெரிய மனதுடன் இருதரப்பு பெற்றோரும், சமூக சிந்தனை உள்ளவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், ஆழ்மனதில் உள்ள "ஜாதி மிருகம்' உந்தி எழுந்து கொலைவரை சென்றுவிடுகிறது. இதைத் தடுப்பதற்கு அவசியம் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும்.
   ஞானமகன், ஆரப்பள்ளம்.

  உதவாது
   தனிச் சட்டம் இயற்றுவதாலோ, அதை அமல்படுத்துவதாலோ சமுதாயம் அவர்களுக்கு அங்கீகாரம் அளித்துவிடுமென்று சொல்ல முடியாது. ஜாதிய உணர்வு மனிதனின் பகுத்தறிவினால் வெல்லப்பட்டாலொழிய ஆணவக் கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். கருவறை முதல் கல்லறை வரை தொடரும் ஜாதி அரக்கனை அரசியல் மற்றும் சமுதாய அளவில் வெல்வதற்கு சமூகம் முழு முயற்சி எடுத்தாலொழிய, ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரை சட்டங்கள் இயற்றுவதால் மட்டும் பாதுகாத்துவிட முடியாது. ஜாதி மறுப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
   எம். ஜோசப் லாரன்ஸ், 
   சிக்கத்தம்பூர்பாளையம்.

  ஜனநாயகக் கடமை
   ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாள் தோறும் நடைபெற்று வருகின்றன. திருமணம் முடிந்து இன்பமாக வாழ்க்கையைத் தொடங்க நினைக்கும் காதலர்களுக்கு திருமணம் செய்த அடுத்த கணமே துன்பம் ஆரம்பிக்கத் தொடங்குகிறது. மனம் ஒத்த திருமணங்கள் பெற்றோரின் மன வேறுபாட்டால், பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்யும் அளவிற்கு ஜாதி வெறி இருக்கிறது என்றால், அதைத் தடுக்கக் கடுமையான சட்டம் இயற்றுவது காலத்தின் கட்டாயமாகும். அதுமட்டுமல்ல, இது ஜனநாயகக் கடமையுமாகும்.
   ஆ. இலட்சுமிபதி, சங்கராபுரம்.

  மனித நேயத்துடன்...
   குடும்பச் சூழல், தன்னுடைய சுதந்திரமான விருப்பத்துக்கு ஏற்ப, ஜாதி மறுப்புத் திருமணம் நடக்கிறது. இதனை பெற்றோர்கள் அவர்களைச் சார்ந்த சமூகங்கள் தடை செய்யவோ, வாழ்க்கையில் குறுக்கீடு செய்யவோ என்ன அதிகாரம உள்ளது? ஜாதி மறுப்புத் திருமணம் (கலப்புத் திருமணம்) செய்து கொள்பவர்களுக்காக தனி பாதுகாப்புச் சட்டம் அவசியமில்லை. மனிதநேயத்துடன் இளைய சமுதாயத்தை அவர்கள் விருப்பம்போல் வாழ அனுமதிக்க வேண்டும். சமூகத்தை சட்டம் போட்டுத் திருத்த முடியாது.
   அ. சுவாமிநாதன், சென்னை.

  தகுந்த பாதுகாப்பு
   ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் கட்டாயமாக இயற்ற வேண்டும். அதேநேரத்தில், அவர்களை துன்புறுத்துவோருக்கும், கொலை செய்வோருக்கும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பு கேட்டு முறையிடும்போது, காவல் துறை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
   கா. முகமது அசாருதீன், காரைக்குடி.

  இது தொடர்கதை
   தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறும் கருத்து குறித்து சற்று சிந்திக்க வேண்டும். ஏனெனில், அவரவர் ஜாதியில் ஆண்கள் - பெண்கள் இருக்கிறார்களே. ஆகவே, அவரவர் ஜாதியில் காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான் நன்மை பயக்கும். இல்லையெனில், இதுபோன்ற ஆணவக் கொலைகள் நடைபெறுவது தொடர்கதையாக நிகழும்.
   எம். சண்முகம், கொங்கணாபுரம்.

  சட்டத்தின் ஓட்டைகள்
   "திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்ற திரைப்படப் பாடல் வரிகளுக்கேற்ப, பிள்ளைகளின் பெற்றோரும், அவர்களிடம் ஜாதி வெறியைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகளும் திருந்தாதவரை, ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்குத் தக்க பாதுகாப்பு கிடைப்பது என்பது இயலாத காரியம். எத்தகு சட்டங்கள் இயற்றப்பட்டாலும், ஜாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் வெறிபிடித்தவர்கள் அச்சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
   தனலட்சுமி ஈஸ்வரன், சென்னை.

  வேறுபாடு இல்லை
   நான்கு வர்ணங்களில் வேற்றுமை அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில்தான், நம்மை எண்ணற்ற வகையில் கூறுபோட்டு, நம்மில் மோதிக் கொள்ளவே எண்ணற்ற குழுக்களாக, ஜாதிகளாகப் பிரித்து மோதவிட்டனர். அறிவியல் வளர்ச்சியில் பல வகை ரத்தப் பிரிவுகள் தவிர, வேறு அறிவியல் சமூக வேறுபாடுகள் இல்லை. ஆகவே, இந்தக் காலத்திற்கேற்ப ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கருத்து சரியே.
   ஆ. கோவிந்தராஜுலு, புதுச்சேரி.

  தேவையற்றது!
   இது தேவையற்றது. சமூகத்தில் இப்பொழுது ஆணுக்கு பெண் வரன் கிடைப்பது அரிதாகவும், குதிரைக் கொம்பாகவும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஐதீகமாக உள்ள குடும்பங்களே வேற்று ஜாதியில் வரன் தேட, பெண் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், இந்தத் தனிச் சட்டம் தேவையில்லை.
   சரஸ்வதி, செந்தில், பொறையார்.

  கொள்கைகளாக...
   முதலில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணமும், பொருளாதார வாழ்க்கைத் தர மேம்பாட்டில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். அடுத்து, அரசியல் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதோடு, கட்சித் தொண்டர்களிடம் அதை ஒரு கொள்கையாகக் கொண்டு சேர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
   மா. பால்ராஜ், தேவதானப்பட்டி.

  மனப் பொருத்தம்!
   மதச்சார்பற்ற நம் நாட்டில் கணக்கில் அடங்காத ஜாதிகள் இருக்கின்றன. இதில் உயர்ந்த, தாழ்ந்த ஜாதி என்ற வேற்றுமை ஆதிகாலம் தொட்டே இருக்கிறது. ஆண், பெண் திருமணத்திற்கு மனப் பொருத்தம் ஒன்றே அவசியம். ஜாதிச் சங்கங்கள் நாட்டை விட்டே ஒழிய வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு சமுதாயம் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதற்கு ஆதரவாக அரசு தனிச் சட்டம் இயற்றுவது சரியானதே.
   கே. கோவிந்தராஜன், அல்லூர்.

  வற்புறுத்தலின்றி...
   காதல் திருமணம் செய்து கொள்வோர் யாருடைய வற்புறுத்தலோ, தூண்டுதலோ இன்றி தாங்களே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்ட பின்னர்தான் திருமண முடிவுக்கே வருகின்றனர். பின்னர், அவர்களை குடும்பத்தினரோ, உறவினரோ கெளரவம் என்ற போர்வையில் பழி தீர்த்துக் கொள்ளுதல் முறையானதன்று. ஆதலின், பாதுகாக்கத் தனிச் சட்டம் அவசியமே.
   டி.ஆர். பாஸ்கரன், திண்டிவனம்.

  கட்டுக்குள் கொண்டுவர...
   இது அவசியமே. ஜாதி பற்றி பேசிப்பேசியே பழகிவிட்ட இவர்களிடம் இத்தகைய விழிப்புணர்வைக் காண்பது அரிதான விஷயமே. சமீபத்தில் ஜாதியக் கொலைகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இத்தகைய பாதுகாப்பு சட்டத்தினால் மட்டுமே ஓரளவு இவ்வாறான கெளரவரக் கொலைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
   எஸ். அர்ஷத் ஃபயாஸ், 
   குடியாத்தம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai