Enable Javscript for better performance
கடந்த வாரம் கேட்கப்பட்ட "விவசாய கடன்கள் மீதான ஜப்தி நடவடிக்கை தொடர்பாக சட்டத் திருத்தம் தேவையா?' என்- Dinamani

சுடச்சுட

  

  கடந்த வாரம் கேட்கப்பட்ட "விவசாய கடன்கள் மீதான ஜப்தி நடவடிக்கை தொடர்பாக சட்டத் திருத்தம் தேவையா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By டாக்டர் வெங்கடாசலம்  |   Published on : 29th July 2016 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாசகர் அரங்கம்
  தவணை செலுத்தி...
   விவசாயக் கடனோ அல்லது வாகனக் கடனோ எதுவாக இருந்தாலும் முறைப்படி தவணை தவறாமல் செலுத்தி மீண்டு வருவதே புத்திசாலித்தனம். கடன் பெற்றவர்கள் கடனை திருப்பிச் செலுத்த மிகுந்த அக்கறை காட்டுவதும், கடன் பெற்றவர் மீது பணம் தந்தவர் கொஞ்சம் கருணையோடு நடந்து கொள்வதும் இருவருக்குமே நன்மை தரும்.
   மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

  சட்டத் திருத்தம் தேவை!
   விவசாயக் கடன்கள் மீதான ஜப்தி நடவடிக்கை தொடர்பாக சட்டத் திருத்தம் அவசியம் தேவை. ஒரு விவசாயி, வாங்கிய கடனைத் தாமதமாக செலுத்துகிறார் எனில், அவருடைய உண்மையான சூழலை நேரில் ஆய்வு செய்திட வேண்டும். தனியார் வங்கிகள் குண்டர்களை வைத்தும், காவல் துறையைக் கொண்டும், விவசாயியைத் தாக்குவது என்பது முறையற்ற செயல்.
   சு. இலக்குமண சுவாமி, மதுரை.

  சத்தியமாகத் தேவை!
   விவசாயிகளின் கடன்கள் மீதான ஜப்தி நடவடிக்கை தொடர்பாக தாமதமின்றி உடனடியாக மத்திய, மாநில அரசுகள் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஒரு காலத்தில் மின் கட்டணத்தைக் குறைக்கக் கூறிப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பல விவசாயிகள் இறந்த வரலாறு தமிழகத்திற்கு உண்டு. வங்கிக் கடன் ஒரு சில நிலுவைகளே உள்ள நிலையில்,விவசாயியைக் காவல் துறை அடித்து உதைத்து அவமானப்படுத்திய காட்சிகளும் தற்போது அரங்கேறியுள்ளன. விவசாயிகள் தன்மானத்துடன் வாழ, சட்டத் திருத்தம் - சத்தியமாகத் தேவை.
   இரா. துரைமுருகன், தியாகதுருகம்.

  ஆய்வு செய்ய வேண்டும்
   ஜப்தி நடவடிக்கை தொடர்பாக சட்டத் திருத்தம் கட்டாயம் தேவைதான். இரண்டு வகையான விவசாயக் கடன்கள் பழக்கத்தில் இருக்கின்றன. ஒன்று சிறு, குறு விவசாயிகள். இவர்கள் மூன்று ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்பவர்கள். இவர்கள் பெற்ற விவசாயக் கடனுக்கு ஜப்தி நடவடிக்கை தேவையே இல்லை. ஆனால், அவர்களுக்கு மீண்டும் விவசாயக் கடன் வழங்குவது பற்றி நேரில் உண்மை நிலையை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும். இரண்டாவது, பெரிய பண்ணைமார்கள். பல வழிகளிலும் விவசாயக் கடன் பெற்று, பெற்ற கடனை ஏமாற்ற நினைப்பவர்களுக்கு கட்டாயம் ஜப்தி நடவடிக்கை தேவை.
   மகிழ்நன், கடலூர்.

  கால அவகாசம்..
   இம்மாதிரி இக்கட்டான சூழ்நிலைகளில் விவசாயிக்கு, மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை, (கொஞ்சம் அபராதத்துடன்) தவணை செலுத்துவதற்கு ஏதுவாக, கால அவகாசத்தை நீட்டித்துக் கொடுக்கலாம். தனியார் நிதி நிறுவனங்கள் "தர்ம சாலைகள்' அல்ல என்பதைக் கடன் வாங்குபவர்களும் புரிந்துகொள்ளுதல் சாலச் சிறந்தது.
   எஸ். சுவாமிநாதன், மேல்மருவத்தூர்.

  இரண்டு வகை..
   விவசாயிகளிடையே இரண்டு வகை. ஒன்று சிறிதளவு நிலம் வைத்து விவசாயம் செய்பவர்கள். அடுத்து, ஏக்கர் கணக்கில் வைத்து விவசாயம் செய்பவர்கள். இதில் ஏழை விவசாயிகளுக்கு இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரலாம். கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றும் பெரு விவசாயிகளுக்கு இச் சட்டத் திருத்தம் தேவையில்லை.
   தீ. அசோகன், சென்னை.

  கண்டிப்பாக...
   விவசாய கடன்கள் மீதான ஜப்தி நடவடிக்கை தொடர்பான சட்டத் திருத்தம் கண்டிப்பாக தேவை. கடன் சுமை தாங்காமல் கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற தருணங்களில் வங்கிகள் கருணை உள்ளத்துடன் வட்டி தள்ளுபடி, கடன் காலம் நீட்டிப்பு செய்யலாம். ஆகவே, விவசாயிகளின் நலன் காக்கும் வண்ணம் சட்டத் திருத்தம் அவசியம் தேவை. 
   என். சண்முகம், திருவண்ணாமலை.

  திவாலாக விடாமல்...
   வாராக் கடன் வங்கிகளில் இருப்பது என்கிற நிலையிலே கோடிக் கணக்கில் கடனையும் வட்டியையும் செலுத்தாமல் வெளிநாட்டில் வசிக்கிறார்கள் பெரிய செல்வந்தர்கள். நடுத்தர வகுப்பு மக்களே வங்கிகளில் வாங்கிய பணத்தையும் அதற்குண்டான வட்டியையும் சரியாகச் செலுத்தி வங்கிகளைத் திவாலாக விடாமல் செய்கின்றனர். விவசாயிகள் கடனும் இதைப் போன்றதே. ஆகையால், ஜப்தி நடவடிக்கை நடுத்தர விவசாயிகள் மீது பாயாமல் இருக்க சட்டம் அவசியம் தேவை.
   டி.வி. கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

  பரிவுடன்...
   விவசாயக் கடன்கள் மீதான ஜப்தி நடவடிக்கை தொடர்பாக சட்டத் திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம். விவசாயிகள் கடன்களை அடைக்க முடியாததற்கான காரணங்களை அறியாமல் - ஆராயாமல் காவல் துறை மற்றும் குண்டர்களை வைத்து மிரட்டுவது - ஜப்தி செய்வது சரியான நடவடிக்கையல்ல. அரசு, விவசாயிகளைப் பரிவுடன் பார்க்க வேண்டும்.
   எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

  கண்டனத்துக்குரியது...
   விவசாயிகளின் மீதான ஜப்தி நடவடிக்கைகளுக்கு, வழிகாட்டுதல்களும், வரையறைகளும் போதிய அளவில் சட்டத்தில் உள்ளன. அவற்றை அலசி ஆராயாது காவலர் உதவியுடன் வன்முறைகளைக் கொண்டு ஒடுக்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. வயிற்றுக்கு உணவு அளிக்கும் தொண்டினை செவ்வனே செய்து வரும் விவசாயிகளை கிரிமினல் போல் நடத்துவது கண்டனத்துக்குரியது.
   த. நாகராஜன், சிவகாசி.

  யார் கொடுப்பார்கள்?
   கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். கையிலுள்ள பணத்திற்குச் சரியான கணக்குகளை வைத்துக் கொண்டு, செய்ய வேண்டிய செலவுகளை மட்டும் செய்து, விரயங்களைக் குறைத்துப் பணத்தைக் கையாளக் கற்றுக் கொண்டால், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வரும் நிலை ஏற்படாது. கொடுத்தால், வராது என்ற நிலை வந்துவிட்டால், யார் கடன் கொடுப்பார்கள்? கொடுப்பவர்களே இல்லையென்றால் எதைக் கொண்டு பிழைப்பது?
   மு. சிதம்பர வில்வநாதன், சென்னை.

  தொலைநோக்குடன்...
   சட்டத் திருத்தம் கட்டாயம் தேவை. சட்டம் மட்டும் இருந்தால் போதாது; செயல்பாட்டில் விவசாயியின் பாதுகாப்புக்கு உதவும்கரமாக இருக்க வேண்டும். தொலைநோக்குடன் புதிய விவசாயம் சார்ந்த பொருளாதார கொள்கையினை வகுக்க வேண்டும். அப்படி சீர்திருத்தப்பட்ட திட்டங்களினால்தான் விவசாயி வாழ்வு மேம்படும்.
   பைரவி, புதுச்சேரி.

  சிறிதாகிலும்...
   விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கும் விவசாயப் பெருமக்களின் வெளித் தோற்றம் புழுதி படிந்து அழுக்காக இருந்தாலும், அவர்களின் நாணயத்தைக் குறை கூற இயலாது. வங்கிகள் கடன் வழங்குவதில் விஜய் மல்லையா போன்றவர்களுக்குக் காட்டும் சலுகையில் சிறிதாகிலும் விவசாயிகளுக்கும் காட்டும் வகையில், அவற்றின் செயல்பாடுகளை மாற்றம் செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.
   தனலட்சுமி, சென்னை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai