கடந்த வாரம் கேட்கப்பட்ட "டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைத்திருப்பதால் போதிய பலன்கள் கிடைக்குமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

"டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் நேரம் குறைப்பு ஓரளவிற்குப் பலன் தரும். கடை திறப்பு நேரத்தை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை

வாசகர் அரங்கம்
 ஓரளவுக்குப் பலன்தரும்!
 "டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் நேரம் குறைப்பு ஓரளவிற்குப் பலன் தரும். கடை திறப்பு நேரத்தை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும். இதன்மூலம் காலையில் பணிக்குச் செல்பவர்களும், மாலையில் பணியிலிருந்து வருபவர்களும் மது அருந்துவது குறையும். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வெளியில் நடமாடுபவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் குறையும்.
 பா. அருள்ஜோதி, மன்னார்குடி.
 
 முற்றிலும் மூடினால்தான்...
 இதனால் போதிய பலன்கள் கிடைக்காது. ஏனெனில், மது அருந்துவோர் காலை எழுந்தவுடன் காபி, தேநீர் பருகுவது போன்று மதுபானக் கடைகளை நாடிச் செல்கிறார்கள். எனவே, இவர்கள் முந்தைய நாள் இரவே மறுநாள் தேவைக்கு மதுபானத்தை வாங்கி வைத்துக்கொள்வார்கள். மதுபானக் கடைகளை முற்றிலும் மூடினால்தான் பலன் கிடைக்கும்.
 ஜி. தண்டபாணி, சென்னை.
 
 சரிவு வராது!
 இதனால் பயன் இல்லை. மதுக் குடியர்களுக்கு அந்த இரண்டு மணி நேரம் கொஞ்சம் பதற்றத்தைக் கொடுக்கும். ஆனால், மது விற்பனையில் சரிவை ஏற்படுத்தாது. ஏனென்றால், மதுப்பிரியர்கள் கொஞ்சம் சேர்த்து வாங்கி அருந்தி விட்டு பரவசத்தில் எப்போதும் போல மிதப்பார்கள்.
 வீ. வீரப்பன், நாச்சியூர்.
 
 தீராத தலைவலி!
 மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைப்பதாலோ அல்லது அவற்றை முழுமையாக அடைத்து மூடிவிடுவதாலோ எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. மாறாக கள்ளச் சாராயம் பெருகி காவல் துறைக்கு தீராத தலைவலியே ஏற்படும்.
 மதியரசன், கடையநல்லூர்.
 
 இரவு 8 மணிக்கு மூட வேண்டும்!
 போதிய பலன்கள் கிடைக்காது. ஏனென்றால், தமிழக அரசு காலை நேரத்தை தான் குறைத்து இருக்கிறார்கள். இரவு நேரத்தைக் குறைத்தால் பலன் கிடைக்கும். ஆங்காங்கே விபத்துப் பிரச்னைகளும் இரவில்தான் வருகின்றன. இதனால், தமிழக அரசு இரவு 8 மணிக்குள் கடையை மூட உத்தரவிட்டால் விற்பனை குறையவும், விபத்துப் பிரச்னைகளைத் தவிர்க்கவும் முடியும்.
 ஆர். சங்கர் கணேஷ், ராஜபாளையம்.
 
 இலவச நீராகாரம்!
 இதனால் விற்பனை குறையாது. ஆனால், காலையிலேயே குடித்துவிட்டு வேலைக்கும், அலுவலகங்களுக்கும் செல்பவர்கள், பொது இடங்களில் மயங்கிக் கிடப்பவர்கள், பேருந்தில் மயக்கத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை குறையும். ஒரு பழைய திரைப்படத்தில் நீராகாரத்தின் பெருமையைக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கூறியுள்ளார். அத்தகைய நீராகாரத்தை, மதுக்கடைகளில் நண்பகல் 12 மணி வரை 100 மில்லி இலவசமாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 வை. தமிழ்க்குமரன், கருப்பம்புலம்.
 
 பலன்கள் கிடைக்கும்!
 இதனால் நிச்சயம் பலன்கள் கிடைக்கும். 25 விழுக்காடு மதுப்பிரியர்கள் குடிப்பழக்கத்தை மறந்திட, அதனை வெறுத்திட இதுவொரு அடித்தளமாக, ஆணிவேராக அமையும். அரசு மேலும் இதுபோன்று அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால், குடிப் பழக்கத்திலிருந்து மீட்பதோடல்லாது, எதிர்கால சந்ததியரையும் காப்பாற்றிட முடியும்.
 ச. இலக்குமணசுவாமி, மதுரை.
 
 விற்பனை குறையாது!
 பலன்கள் கிடைக்காது. குடிப்பவர்கள் நேரம் தவறிகூட குடிப்பார்கள். அந்த நேரத்தில் குடிக்காவிட்டால் கை, கால்கள் நடுங்கும் என்றால் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு குடிப்பார்கள். நேரத்தைக் குறைப்பதால் மட்டும் விற்பனை குறையாது.
 ஜெயந்திசேகர், சென்னை.
 
 சொல்லியா தர வேண்டும்?
 மதுக்கடைகளை கொஞ்சநேரம் மூடிவிடுவதாலோ, சில கடைகளை மூடிவிடுவதாலோ எந்தத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், அதற்கு தகுந்தபடி "அட்ஜெஸ்ட்' செய்து கொண்டு வாங்கிக் கொள்வதற்கு "குடி' மக்களுக்குச் சொல்லியா தர வேண்டும்?
 எஸ். மோகன், கோவில்பட்டி.
 
 கட்டுப்பாடு தேவை!
 விற்பனை அளவு இல்லாதபோது, இவ்வளவுதான் என்ற கட்டுப்பாடு இல்லாதபோது, அதேபோல வாங்குவதில் இவ்வளவுதான் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாதபோது வாடிக்கையாளர்களுக்கு எவ்விதக் குறைபாடும் ஏற்படப்போவதில்லை. இதனால், மது குறைவதற்கு எந்த வழியும் ஏற்படப்போவதில்லை.
 சிவபாக்யா கண்மணியப்பா, கருப்பம்புலம்.
 
 சரியான விதத்தில் நேரத்தை...
 இது மதுவிலக்கிற்கான ஒரு புதிய முயற்சி என்று முழுவதுமாக சொல்லிவிட முடியாது. பொதுவாக குடிக்கிற மக்கள் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் கடைக்கு வந்து விடுவார்கள். இதனால் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடாது. "டாஸ்மாக்' கடைகளின் விற்பனை நேரத்தை சரியான விதத்தில் மாற்றி அமைக்கும்போது, மதுவிலக்கு என்ற நிலைப்பாட்டிற்கு அது தொடக்கமாக அமையும். எவ்வாறெனில், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை "டாஸ்மாக்' கடைகளை திறந்து வைக்கும்போது, தேவையற்ற சமூக மற்றும் நாகரிக சீரழிவைத் தடுப்பதற்கு, இது முதல்கட்ட முயற்சியாக அமையும்.
 ர. சந்தியாகு, புன்னைக்காயல்.
 
 ஆதார் அட்டை அடிப்படையில்...
 முன்பு 10 மணிக்கு திறக்கும்போதே இடைத்தரகர்கள் பயன் பெற்று வந்தனர். இப்பொழுது 12 மணி என்றால் "குடி'மகன்களால் பயன் பெறப்போவது மேலும் இடைத்தரகர்களே! நேரத்தையும் கடைகளின் எண்ணிக்கையையும் குறைத்து பயனில்லை. ஆதார் அட்டை அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளுக்கு ஒரு அளவு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
 ஆர். புனிதவதி, வெள்ளக்கோயில்.
 
 சிறிய அளவிலான முயற்சி
 இது மது அருந்துபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் சிறிய அளவிலான முயற்சி. ஆனால், பலன் கிடைக்காது. ஏனெனில், விடுமுறை தினங்களுக்கு முந்தைய தினமே நிரம்ப வாங்கி வைத்து, பதுக்கி கள்ளச் சந்தையில் விற்கிறார்கள். அதையும் விலையைப் பொருள்படுத்தாது வாங்கி குடிக்கிறார்கள்.
 இ. ராஜுநரசிம்மன், சென்னை.
 
 கண் துடைப்பு!
 இது ஒரு வேடிக்கையான கேள்வி. மொத்தத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மது அருந்துவது கேடு என்று எழுதினால் மட்டும் போதாது. மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இது ஒரு கண் துடைப்பு வேலை. பயன்கள் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 
 களிம்பு வேண்டாம்
 தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளில் இரண்டு மணி நேரம் குறைப்பினால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சீழ்பிடித்த கட்டிக்கு களிம்பு தேய்ப்பது போன்றதுதான் இந்த நேரக் குறைப்பு நடவடிக்கை. இந்த பாதிப்பை முழுமையாக நீக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 இ. சேசுதனசாமி, அகரக்கட்டு.
 
 சற்றே ஆறுதல்!
 மதுபானக் கடைகளை சற்று தாமதமாக திறப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. ஏனென்றால், காலையில் வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி, பொதுவாழ்வியலுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் போய்விடுகிறது. ஆகவே, மது விற்பனை நேரம் குறைப்பு வரவேற்கத்தக்க ஒன்றே.
 எம். சண்முகம், கொங்கணாபுரம்.
 
 திருத்த வேண்டும்
 மதுபானக் கடைகளில் விற்பனை நேரத்தைக் குறைப்பதால் மட்டும் குடிகாரர்கள் மாறப்போவது இல்லை. வேறு நேரத்தில் வாங்கி இருப்பு வைத்துக் குடிப்பார்கள். மது குடிப்பவர்கள் தானாக திருந்தமாட்டார்கள். அவர்களைத் திருத்த வேண்டும். முற்றிலும் மதுபானக் கடைகளை மூடுவதே சாலச் சிறந்தது.
 செ. டேவிட் கோவிப்பிள்ளை, தென்காசி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com