Enable Javscript for better performance
கடந்த வாரம் கேட்கப்பட்ட \\\"நிகழாண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ஏற்கக்கூடியதா? மறுக்கக் கூடியதா?\\\' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...- Dinamani

சுடச்சுட

  

  கடந்த வாரம் கேட்கப்பட்ட "நிகழாண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ஏற்கக்கூடியதா? மறுக்கக் கூடியதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By dn  |   Published on : 11th May 2016 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாசகர் அரங்கம்
  சட்ட நடவடிக்கை!
   மருத்துவ நுழைவுத் தேர்வு நிகழாண்டிலேயே நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல. இதனால், முன்னேறிய மாணவர்களே தொடர்ச்சியாக வெற்றி பெறுவர். தவிர, கல்வி அறிவில் பின்தங்கியுள்ள மாணவர்கள், உடனடித் தேர்வில் கலந்து கொள்ள இயலாது. அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு, மருத்துவர் ஆக வேண்டிய லட்சியம் நிறைவேற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
   பொ.ஆ. இராமசாமி, திருச்சி.

  நன்மை பயக்கும்
   உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் சரியானதுதான் என்றாலும் இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்துவது என்பது அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்தது போலாகுமேயன்றி எதிர்நோக்கும் பயன்தராது; மாணவர்களும் சிரமங்களுக்கு ஆளாவர். மற்றபடி, மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது நாடு முழுமையிலும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நன்மை பயப்பதோடு ஒரே மாதிரியான தகுதிபடைத்த மருத்துவர்களை உருவாக்கி நாட்டிற்கு நன்மை தருவதோடு பணத்தால் இடம் பெற்று மருத்துவர்களாவதையும்
   தடுக்கும்.
   வே. சின்னத்தம்பி, கோயமுத்தூர்.

  மனநிலையைப் பாதிக்கும்!
   நிகழாண்டிலேயே மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது மறுக்கக்கூடியதே. ஆனால், மருத்துவ நுழைவுத் தேர்வு வரவேற்கக் கூடிய ஒன்றாக இருந்தாலும், எதிர்பாராதவிதமாக திடீரென அறிவித்தல் மாணவ - மாணவியரின் மனநிலையை உளரீதியாக பாதிக்கும். எனவே, கல்வியாண்டின் துவக்கத்திலேயே அறிவித்து, வரும் ஆண்டுகளில் செயல்படுத்துவதே சிறந்ததாகும்.
   எம்.ஆர். முத்து, தஞ்சாவூர்.

  விட்டுக்கொடுத்தல் கூடாது..
   எந்த ஆண்டிலும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மாநில அரசு ஒப்புக்கொள்ளக் கூடாது. நுழைவுத் தேர்வு எழுதுவதை மாணவர்கள் மறுக்க வேண்டும்; இதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும். எந்தக் கல்வியாக இருந்தாலும் மாநில அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். இதில் விட்டுக்கொடுத்தல், சமரசமாகப் போதல் என்ற பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது.
   வை. தமிழ்க்குமரன், கருப்பம்புலம்.

  ஏற்கக்கூடியதே!
   நல்ல காரியங்கள் என்றால் அதை அன்றே செய்துவிடுவது நல்லது. அதற்கு ஏற்ப நிகழாண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ஏற்கக்கூடியதே. அடுத்த ஆண்டும் இதேமாதிரி நிகழாண்டு என கூறி தள்ளிப்போட்டு என்ன பயன்? மருத்துவ பொது நுழைவுத் தேர்வு என்பது அவர்கள் படித்துள்ள திறமைகளை சோதித்துப் பார்ப்பதுதானே! தேர்வு பெற்றவர்கள் படிக்கட்டும். தோல்வி அடைந்தவர்கள் நன்றாகப் படித்து அடுத்த ஆண்டுகளில் தேர்வு எழுதி வெற்ற பெறட்டுமே.
   என்.கே. திவாகரன், கோயமுத்தூர்.

  ஒழுங்கீனங்கள் குறையும்
   நிகழாண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ஏற்கக்கூடியதுதான். இதற்கெல்லாம் நேரம், காலம் பார்த்து பிறகு தள்ளிவைத்து நடத்துவது சரியான முடிவாக இருக்காது. எந்த நுழைவுத் தேர்வுமே உடனுக்குடன் நடத்திவிடுவதால் பல்வேறு யூகங்கள், ஒழுங்கீனங்கள், அரசு தலையீடுகள் இன்றியும் நடத்தி முடித்திவிடலாம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செய்துவிடுவதே சிறந்தது.
   சிவ. ராம்கோபால், மதுரை.

  யாருக்குப் பயன்?
   அரசு நடத்திய கல்வித் தகுதித் தேர்வுகள் (பிளஸ் 2) மீது நம்பிக்கை இல்லையா? இது அரசை அவமானப்படுத்துவதாகாதா? மருத்துவ பொது நுழைவுத் தேர்வால் யாருக்குப் பயன்? நுழைவுத் தேர்வுக்காகப் புத்தகம் வெளியிடுவோர், பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே இதனால் பயனடைவர். பெற்றோருக்குப் பண விரயம், பிள்ளைகளுக்கு கால விரயம் மட்டுமே மிச்சம். பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்தால் போதுமே.
   ப. குருநாதன், மேல்நல்லாத்தூர்.

  தரமான சிகிச்சைக்கு...
   மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ஏற்கக்கூடியதுதான். தேர்வுக்கு முன் குறைந்தது ஒருமாதமாவது மாணவர்கள் படிக்க அவகாசம் கொடுக்க வேண்டும். மருத்துவ பொது நுழைவுத் தேர்வின் நோக்கமே இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வி ஒரே சீரான, நல்ல தரமானதாக இருக்க வேண்டும் என்பதே. இதனால், மாணவர்களின் தரமும், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் தரமும் இதன்மூலம் மருத்துவமனைகளும், நோயாளிகளுக்கு சிறப்பான, தரமான சிகிச்சைக்கும் வழிவகுக்கும்.
   சி.கா. சிதம்பரம், கோவில்பட்டி.

  அனைவரும் சமமே!
   அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நடக்கக் கடமைப்பட்டது. நீதிமன்றங்களும் அதை பாதுகாக்க வேண்டும். சட்டத்தின்முன் அனைவரும் சமம்; சமூகத்தில் எல்லோரும் நல்ல முறையில் வாழ வேண்டும் என்கிறது சட்டம். நகர்ப்புறத்தில் படிக்கும் மாணவனும், ஆசிரியரே இல்லாத அரசுப் பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவனுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு எதிரானது. எனவே, மருத்துவ பொது நுழைவுத் தேர்வு கூடாது. பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது.
   டி. சேகரன், மதுரை.

  உரைத்துப்பார்க்க...
   நிகழாண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். மருத்துவக் கல்வியின் தரம் உயர்வதற்கு இதுதான் சிறந்த வழி. கற்றலில் ஆழ்ந்த ஈடுபாடுடைய எந்த ஒரு மாணவனும் தனது ஆற்றலை உரைத்துப் பார்ப்பதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி, மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளச் சித்தமாய் இருப்பான்.
   ஐ. ரபீக், திருச்சி.

  கட்டாயப்படுத்தலாமா?
   மருத்துவ பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டிலேயே எழுத வேண்டும் என்பது மிகவும் தவறானது. மாணவர்களை கட்டாயப்படுத்தித் தேர்வு எழுத வைப்பது நல்லதல்ல. மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விஷயத்தில் மாநில அரசுகளின் கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். மாணவர்களின் எதிர்காலம் கருதி மருத்துவ பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டில் நடத்தக் கூடாது என்பதே அனைவரின் எண்ணமும், விருப்பமும் ஆகும்.
   என். சண்முகம், திருவண்ணாமலை.

  சிறந்த வழி!
   மருத்துவ பொது நுழைவுத் தேர்வு மூலம் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முன்னுரிமை, முக்கியத்துவம் தரலாம். மேலும், இதுபோன்ற நுழைவுத் தேர்வு வைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வித் திறன் தகுதிக்கு உகந்ததா என்பதை அறிந்திடவும் இதுவே வழி வகுக்கும். மேலும், மதிப்பெண் வயது, கல்வி, ஜாதி அடிப்படையில் பார்க்கும்போது, எல்லோருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு தான் சிறந்தது. இதை கட்டாயம் செயல்படுத்த
   வேண்டும்.
   எம். சண்முகம், கொங்கணாபுரம்.

  மாநில மொழியில்...
   மத்திய கல்வித் திட்டத்தில் படித்தவர்களும், மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களும் ஒரே தேர்வை எழுதுவதென்பது எந்தவிதத்திலும் நியாயமானதாக இருக்காது. அப்படியே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டுமென்றால், அந்தந்த கல்வித் திட்டத்திற்கு ஏற்ற வினாத்தாள்களைத் தயார் செய்து தேர்வு நடத்தப்பட வேண்டும். நிச்சயம் தேர்வு மாநில மொழியில் எழுதவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லாதபோது இந்தத் தேர்வை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
   ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,
   வேம்பார்.

  நுழைவுத் தேர்வுக்கு பயமா?
   இந்த ஆண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ஏற்கக் கூடியதுதான். எதற்கு நுழைவுத் தேர்வு நடந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. நுழைவுத் தேர்வுக்கே பயப்படும் மாணவன் மருத்துவராகி என்ன சாதிக்கப்போகிறார்? மிகுந்த போட்டியுள்ள கல்வியில் மாணவர் தகுதி மிகவும் முக்கியம்.
   மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

  கடினம்!
   தமிழக அரசின் சமச்சீர் பாடத்திற்கும், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கும் வேறுபாடு நிறைய உள்ளன. கிராமப்புற மாணவர்கள் சமச்சீர் கல்வி பெறுவதால் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது மிகவும் கடினம். எனவே இதை ஏற்கக் கூடாது; மறுக்க வேண்டும்.
   கே. கோவிந்தராஜன், அல்லூர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai