'வங்கிக் கடன்களை வசூல் செய்யும் உரிமையை, வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

'வங்கிக் கடன்களை வசூல் செய்யும் உரிமையை, வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது சரியா?'

சரியே!
'கேட்டுக் கெட்டது காது, கேளாமல் கெட்டது கடன்' என்ற பழமொழிக்கேற்ப வங்கிகள் கொடுத்த கடனைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் கடன் வசூல் ஆகாது. கொடுத்த கடன்களைப் பெறமுடியாத நிலையில், வங்கிகள் தனியார் மூலம் கடனை வசூல் செய்வது சரிதான். ஆனால், கடன் வசூல் வேலையாகச் செல்பவர்கள் கடன் பெற்றவர்களைத் துன்புறுத்தாமல் வசூல் செய்ய வேண்டும் என்பதை முறைப்படுத்தலாம்.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தவறில்லை
வங்கிக் கடனை வசூலிக்கத் தனியாரிடம் பொறுப்பை விடுவதில் தவறில்லை. முறையாக செலுத்தாத கடன் பாக்கிகளை வசூல் செய்ய தனியாரை நாடவேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு உருவாகிறது. கடன்தர வேண்டியவர்களின் நிலைமையை உணராமல் அத்து
மீறுகையில் அவப்பெயருக்கு ஆளாகின்றனர். கடன் வசூல் செய்ய அனுமதிக்கும் வங்கிகள் பழைய ஈட்டிக்காரனைப்போல் செயல்படுவதைத் தடுக்க வேண்டும்.
வீ. வீராங்கன், சென்னை.

வழங்கக்கூடாது
சரியில்லை. ஏனெனில், வங்கிக் கடன்களை வசூல் செய்யும் உரிமையைத் தனியார் நிறுவனங்கள் தவறாகவும், கந்துவட்டிகாரர்களின் பாணியில் மிரட்டல், தற்கொலையைத் தூண்டும்விதமாகத் தாக்குதல் போன்ற செயல்பாடுகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் வசூல் செய்யும் உரிமையை வழங்கக் கூடாது.
எஸ். நாகராஜன், அஸ்தினாபுரம்.

வங்கிகளே வசூல் செய்யலாம்
சரியில்லை. தனியார் வங்கிகளை தேசியமயமாக்கிவிட்டு, மறுபடியும் தனியாருக்கு இடமளிப்பது எப்படி நியாயமாகும்? கடன் கொடுத்தவர்களே கடனைக் கேட்க வேண்டும். வங்கிகளின் வேலைப்பளு அதிகமாக உள்ளது என்ற நிலை வந்தால், புதிதாக ஊழியர்களை நியமிக்கலாம்.
என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா, 
இராஜபாளையம்.

தவிர்க்கலாம்
தனியாரிடம் ஒப்படைப்பதால், அவர்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டுவதும், தகாத வார்த்தைகள் பேசி வதைப்பதும், தாக்குவதும் நடப்பதாக அறிய முடிகிறது. எனவே இவை தவிர்க்கப்பட வேண்டும். வங்கிகளே வசூலிப்பதுதான் சிறந்தது.
காஹிர்ஷேக், கடலூர்.

உறவு பாதிக்கும்
வங்கிக் கடன்களை வசூல் செய்யும் உரிமையை, வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது சரியல்ல. வங்கிகள் ஏதேனும் ஒரு பாதுகாப்பு மூலதனத்தைக் கொடுக்கிறது; வசூல் செய்தவுடன் திருப்பி அளிக்கிறது. இது வங்கிக்கும் வங்கியின் வாடிக்கையாளருக்குமான கொடுக்கல் வாங்கல். இதில் தனியாரை உட்புகுத்தினால் வங்கிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு அறுந்து போகும். கடனை வசூலிக்க வங்கிகளே நேரடியாக முனைய வேண்டுமே தவிர தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. 
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

ஒப்படைக்கலாம்
தற்போது வங்கிக் கடன் பெறும் பெரும்பாலோர், கடனைத் திரும்பச் செலுத்தும் எண்ணம் இல்லாதவர்களாக உள்ளனர். வாராக்கடன் என்பது துண்டுக்குத் துண்டு, அனைத்து வங்கிகளிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. கடன் வாங்கியவர் அதை முறையாகச் செலுத்திவிட்டால், வங்கிகள் ஏன் தனியார் நிறுவனங்களிடம் அளிக்கப் போகின்றன? கடன் வாங்குபவர்கள், வங்கி அதிகாரிகளிடம் முறைதவறி நடந்துகொள்வதினால்தான், வங்கிகள் தனியார் நிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. எனவே, தனியார் நிறுவனங்கள் கடன் வசூலிப்பதில் தவறில்லை.
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

அச்சுறுத்தக்கூடாது
தவறொன்றுமில்லை. தனியார் நிறுவனங்கள் அக்கறையோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றி வாராக் கடன்களை வசூல் செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால், வாடிக்கையாளர்களை அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் கூடாது. எனவே, கல்விக்கடன், தொழில்கடன், விவசாயக்கடன் பெறும் அனைவருமே காலாகாலத்தில் கடன் தொகையைக் கட்டிவிட்டால், வாராக்கடன் வங்கிகளில் அதிகரிக்காது. தனியார் நிறுவனங்களிடம் வாராக் கடன் வசூல் பணியை ஒப்படைப்பதன் மூலம் வங்கிப் பணியாளர்களின் பணிச்சுமையும் குறையும். கடன் தொகையும் விரைந்து கூடுதலாக வசூலாகும்.
இராம. கோவிந்தன், தென்னிலை.

தவறான முடிவு
கடன் வாங்கித் திருப்பிக் கட்ட முடியாத சாதாரண குடிமக்களிடம் கடன் வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வங்கிகள், இதே பொறுப்பை கடன் வாங்கி ஏமாற்றும் வி.ஐ.பி.களிடம் காட்டுமா? இது தவறான முடிவு.
கோ. ராஜேஷ்கோபால், 
அரவங்காடு.

முறையானது
வங்கிகள் தமது பிரதிநிதிகள் மூலம் வசூலிப்பதே முறை. கடன் கொடுத்தவருக்கும் - கொண்டவருக்குமான தன்நிலைத் தன்மை புரிந்து செயல்பட ஏதுவாகும். தேவை எனில் நீதிமன்றங்கள் மூலம் இருதரப்பாரும் தீர்வைக் காண்பதே முறை. இந்த நிலையில் தனியார் நிறுவனம் மூலம் வங்கிகள் வசூல் செயலாக்கம் சரியாகாது.
எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

சரியில்லை!
நமது நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டே இயங்கும். கடன் கட்டத் தவறுபவர்களின் அசையா சொத்து மற்றும் அசையும் வாகனங்களை ஜப்தி செய்து, ஏலம் விட்டு வசூலிக்கலாம். தவிர நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து வசூல் செய்யலாம். மேலும், தவணை முறையிலும் வசூல் செய்யலாம். ஆனால், தனியார் நிறுவனங்கள் இலவசமாக வசூல் செய்வதில்லை. அதற்கு உண்டான செலவுத் தொகையைக் கறந்து விடுவார்கள். மேற்படி செலவும் கடன்தாரரையே சாரும். வட்டிக் குறைப்பு, தவணை காலம் நீடிப்பு போன்ற சலுகை மூலம் வசூல் செய்ய வழியுள்ளது.
கே. பிச்சாண்டி, செங்கம்.

ஒப்படைக்கக் கூடாது
சரியல்ல. வசூல் செய்யும் திறமை இல்லாத வங்கிகள் ஏன் கடன் கொடுக்க வேண்டும்? அப்படிக் கடன் கொடுப்பவர்கள் கடன் பெறும் நபர்களிடம் இருந்து சரியான உத்தரவாதம் பெற்றுக்கொடுக்க வேண்டியதுதானே? பொதுமக்களின் பணத்தை எடுத்து எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் ஏனோதானோ எனக் கொடுத்துவிட்டு, அதை வசூல் செய்ய முடியாமல் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டால் அவர்கள் கடன் பெற்றவர்களை மிரட்டி, அடித்து, வசைபாடி வசூல் செய்ய முயல்வார்கள். அப்பொழுது அவர்கள் கடன் இம்சையால் தற்கொலை செய்ய நேரிடலாம். ஆகவே, வங்கிக் கடன்களை வசூல் செய்யும் உரிமையை வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது சரியல்ல.
என்.கே.திவாகரன், 
கோவை.

சட்டத்திற்கு எதிரானது
சரியல்ல. இத்தகைய முறை சட்டத்திற்கு எதிரானது. வங்கிகள் ஒழுங்காற்று சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு வசூல் செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் வசூல் பணி என்பது கடன்தாரர்களை இழிவுபடுத்தும் செயலாகும். கடன் வசூல் தொடர்பான வழக்குகளைக் கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதிலும் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
வே. இராசேந்திரன், பரமக்குடி.

தவறான அணுகுமுறை
தரக்கூடாது. இத்தகைய அணுகுமுறை சீரான பலன்களைத் தராது. வங்கிகள் தமது வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களைப் பாதுகாப்பாக, ரகசியமாக, வைக்கக் கடமைப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்களைக் கூடுமானவரை தனியார் நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. எனவே, குறுகியகால சிறு கடன்களை வசூல் செய்ய, வங்கி ஊழியர்களையே நியமிக்க வேண்டும்.
வி.எஸ்.கணேசன், சென்னை.

வருந்தத்தக்கது
மிகமிகத் தவறு. கல்விக்கடன், விவசாயக்
கடன் இரண்டிலும் வங்கிகள் அத்துமீறிச் செயல்படுவது தவறு, வருந்தத்தக்கது. வங்கிகளில் திட்டமிட்டுக் கடன் வாங்கி ஏமாற்றும் கோடீஸ்வரர்களிடம் வங்கிகள் சென்றால் பாராட்டலாம். வங்கிகளின் செயல்பாட்டில் தனியார் ஆட்கள் வங்கிகளின் பெருமையைக் கெடுத்துவிட வாய்ப்புள்ளது. 
முத்துக்கருப்பன், காரைக்குடி.

முற்றிலும் தவறு
தனியார் நிறுவனங்களின் கடுமையான வன்முறை அணுகுமுறையால் விவசாயிகளும், சிறுதொழில் புரிவோரும் அவமானம் மற்றும் உயிரிழப்புகளையும் அனுபவித்துள்ள சூழ்நிலையில், வசூல் செய்யும் உரிமையை வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது முற்றிலும் தவறு.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

அணுகுமுறை
வங்கிக் கடன்களை வசூலிக்கச் செய்யும் உரிமையை வங்கிகள் தனியார் நிறுவ
னங்களிடம் ஒப்படைப்பது சரியான அணுகுமுறை அல்ல. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த போதிய அவகாசம் தரப்பட வேண்டும். தாமதத்திற்குக் காரணம் அறிய வேண்டும். வசூலிப்போர்கள் அடியாட்கள் போல் நடந்துகொள்வது சரியானதல்ல.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com