தேர்தலில் வாக்களிக்க மின்னணு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தேர்தலில் வாக்களிக்க மின்னணு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்கிற கருத்து சரியா?

மாற்றம் தேவை
தேர்தலில் வாக்களிக்க மின்னணு இயந்திரத்திற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கருத்து சரியானதல்ல. எல்லாத் துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நம் நாட்டில் தேர்தல் முறைகளிலும் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியமே. மின்னணு இயந்திரத்தால் காலமும் செலவும் பெருமளவு குறையும். மின்னணு இயந்திரத்தில் உள்ள குறைகளை நீக்கிவிட்டு பயன்படுத்துவதே நன்மை பயக்கும்.
டி.ஆர்.பாஸ்கரன், திண்டிவனம்.

அறிவுடைமையல்ல
வாக்குப்பதிவு விரைவாகவும், சுலபமாகவும் நடைபெற வாக்கு இயந்திரங்கள் பெரிதும் உதவுகின்றன. வாக்கு எண்ணிக்கையும் சுலபமாக முடியும். எனவே, பல வசதிகள் உள்ள இயந்திரத்தைக் விட்டுவிட்டு வாக்குச்சீட்டு நடைமுறைதான் தேவை என்பது அறிவுடைமையல்ல. மேலும் வாக்குச்சீட்டு அச்சிடுதல், வாக்குப் பெட்டிகளை வாக்குச்சாவடிக்குக் கொண்டு வருதல், வாக்குச் சீட்டுகளை தேர்தலுக்குப் பிறகு பாதுகாத்து வைப்பது. இவை அனைத்துமே கஷ்டமான செயல்கள்.
மா.தங்கமாரியப்பன், 
கோவில்பட்டி.

வாக்குரிமை
தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்பது முற்றிலும் சரிதான். இந்த நடைமுறையை உடனடியாகப் பின்பற்றிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். இதனால் வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படும். மின்னணு இயந்திரத்தால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி, பாமர மக்களுக்கும், முதியோருக்கும், இளைஞருக்கும் நம்பிக்கை தரக்கூடிய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும். இது எளிமையான நம்பகமான முறையாகும்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.
மனிதத் தவறுகள்
இயந்திரங்கள் தவறு செய்வதில்லை. மனிதர்கள்தான் இயந்திரங்களைத் தவறாக இயக்குகிறார்கள். இந்த மனிதத் தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொண்டாலே மின்னணு வாக்குப்பதிவை யாரும் எதிர்க்க மாட்டார்கள். பெருகிவரும் மக்கள்தொகையால் அதிகரித்து வரும் வாக்குப்பதிவைச் சுலபமாக செய்திடவும், வாக்கு எண்ணிக்கையை சுலபமாக நடத்திடவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் சரியானவை. எனவே, மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டாம்.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

சிறப்பான முறை
வாக்கு இயந்திரங்களால் முறைகேடு செய்ய நிறைய வாய்ப்பு இருப்பதாக, பொதுவாக மக்களின் மனத்தில் எண்ணம் உள்ளது. நாம் போடும் வாக்கு சரியாக அந்தச் சின்னத்திலேயே பதிவாகிவிட்டதா என்ற சந்தேகமும் பலருக்கு வருகிறது. எனவே, வாக்குச்சீட்டு முறை பழைய முறையாக இருந்தாலும், வாக்குகளை எண்ணி முடிவு தெரிவிப்பதில் சிறிது தாமதமானாலும் அதுதான் தெளிவான, சிறப்பான முறை. எனவே, வாக்குச்சீட்டு முறையே மீண்டும் வரவேண்டும். வாக்கு இயந்திரம் தேவையில்லை.
எம்.எஸ்.ஏ. காதர், காயல்பட்டினம்.

முறைகேடுகள்
தேர்தலில் வாக்களிக்க மின்னணு இயந்திர வாக்குப்பதிவே சரியானது. மின்னணு இயந்திர வாக்குப்பதிவால் பெருமளவு செலவு குறையும். வாக்களிப்பதும், வாக்கு எண்ணிக்கையும் விரைந்து முடிவு பெறும். இந்நடைமுறையில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புண்டு என்று கூறுபவர்களுக்கு, தேர்தல் ஆணையம் காலக்கெடு விதித்து நிரூபிக்க வாய்ப்பு தந்தும் அதனை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. வாக்குச்சீட்டு நடைமுறையில்தான் முறைகேடுகள் அதிக அளவில் நடக்க வாய்ப்பு உள்ளது.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

பொய்யான வாதம்
மின்னணு இயந்திரத்தில் வேகமாக பலர் வாக்களிக்க முடியும். மின்னணு இயந்திர முறையில் தவறு ஏற்பட வாய்ப்பே கிடையாது. இதில் தவறு நடக்கிறது என்பது பொய்யான வாதம். இதை நிரூபிக்கச் சொல்லி தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தும் எந்தக் கட்சியும் நிரூபிக்க முன்வரவில்லை. மேலும், வாக்குச்சீட்டு முறை பிற்போக்கானது. கடந்த பல தேர்தல்களில் நாம் மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்க பழகிய பின், திரும்பவும் பழைய நிலைக்கு கீழ் இயங்கக் கூடாது.
ப.ராஜசேகர், சென்னை.

பொருளாதார விரயம்
இக்கருத்து சரியல்ல. தேர்தல் சீர்திருத்தங்களுள் ஒன்றான மின்னணு இயந்திர முறை, விரைவு மற்றும் துல்லியமான வாக்குப்பதிவுக்கு வழி வகுக்கிறது. வாக்குச்சீட்டுக்கு மாற முனைவது பொருளாதார விரயத்தை ஏற்படும். மின்னணு இயந்திரத்தைக் கையாளுவோர் மற்றும் மேற்பார்வையிடுவோர் நடுநிலையாகச் செயல்படும் தேர்தல் ஆணையப் பிரதிநிதிகள். இவர்கள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மின்னணு இயந்திரத்தை ஐயப்படுவது, இவர்களை ஐயப்படுவதற்குச் சமமாகும். 
ச.சுப்புரெத்தினம், 
மயிலாடுதுறை.

தவறுகள்
வாக்குப்பதிவு முறையில் குளறுபடிகள் ஏற்பட சந்தர்ப்பம் இருக்கிறது என்பதால் மின்னணு முறைக்கு தேர்தல் நடைமுறை மாறியது. ஆனல் இப்போதோ, தவறுகள் வெளியில் தெரியாத நிலையில் சாமர்த்தியமாக நடப்பதாக, பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் கூறுகிறார்கள். நம்மைக் காட்டிலும் முன்னேற்றமடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் பழைய முறையையே பின்பற்றுவதால், நாமும் பழைய முறையான வாக்குச்சீட்டு முறையையே பின்பற்றலாம்.
டி.வி.கிருஷ்ணசாமி, சென்னை.

சுற்றுச்சூழல் பாதிப்பு
தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு முறை நமது நாட்டிற்கு தேவையற்றது. வாக்குச்சீட்டுக்காக மேலும் பல மரங்கள் வெட்டப்படலாம். ஏற்கெனவே காடுகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில்,அது மேலும் சுற்றுச்சூழலை பாதிக்கும். கட்சி பேதமின்றி, தோற்றால் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்பதும், வெற்றி பெற்ற பின் மெளனம் சாதிப்பதும்தான் வழக்கமாக நடக்கிறது. எனவே, வாக்காளர்களுக்கு வசதியான மின்னணு இயந்திர முறையே சிறந்தது.
கி.சந்தானம், மதுரை.

வாடிக்கை
வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரக் கூடாது. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் அளித்த ஆதரவு என்று மார்தட்டிக் கொள்வதும், தோல்வியடைந்துவிட்டால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி என குறை கூறுவதும் அரசியல் கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. பலகட்ட சோதனைகளுக்குப் பின்னரே மின்னணு இயந்திர முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. அரசியல் கட்சிகளின் விருப்பங்களுக்காக பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற நினைப்பது தவறு.
செ.திருவள்ளுவன், 
வாணதிரையங்குப்பம்.

பழைய முறையே நல்லது
நேரம், செலவினங்களைக் குறைத்தல், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் துல்லியம் என்று தேர்தல் ஆணையம் கூறினாலும், அதில் முறைகேடுகள் நடக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை அலட்சியப்படுத்த முடியாது. எல்லா எதிர்க்கட்சிகளும் வாக்குச்சீட்டு முறையே தேவை என்று கோரிக்கை வைப்பதாலும், தொழில்நுட்பம் வளர்ந்த மேலை நாடுகளிலெல்லாம் வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படுவதாலும் பழைய முறையே சிறந்தது.
அ.கருப்பையா, 
பொன்னமராவதி.

பிற்போக்குத்தனம்
கடந்த பல தேர்தல்களில் மின்னணு வாக்குமுறையினை நடைமுறைப்படுத்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குப் போக எண்ணுவது பிற்போக்குத்தனமானது. புதிய மின்னணு முறையினால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது பெருமளவில் தவிர்க்கப்பட்டிருப்பதோடு, அலைச்சலும் நேர விரயமும் கூட கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் வாக்குச்சீட்டு முறை என்பது அர்த்தமற்றது.
என்.பி.எஸ்.மணியன், 
மணவாள நகர்.

தவறு நிகழ வாய்ப்பு
அறிவியல் கருவிகளில் குற்றங்கள் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து பணம் சிலரால் களவாடப்படுகிறது. இயந்திரத்தைப் பயன்படுத்தி கள்ளப்பணம் சிலரால் தயாரிக்கப்படுகிறது. அதுபோல, மின்னணு இயந்திரத்தில் தவறு நிகழ வாய்ப்பு இருக்கலாம். எனவே, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது சரியே.
இரா.இராசேந்திரன், நிரவி.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு
மின்னணு இயந்திரத்தில் குறைபாடு உள்ளதாகக் கூறும் கட்சிகள், அதை நிரூபிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு தந்தபோது புறக்கணித்தன. மேலும், அதே இயந்திரத்தில் வெற்றிபெறும்போது அதை கொண்டாடுகின்றன. இதிலிருந்தே இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிரூபணம் செய்யப்படாத ஒரு குற்றச்சாட்டிற்கு சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் மாற்று வழியைத் தேடுவது தவறு.
பா.அருள்ஜோதி, மன்னார்குடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com