அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 65-ஆக உயர்த்த வேண்டும் என்னும் கோரிக்கை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 65-ஆக உயர்த்த வேண்டும் என்னும் கோரிக்கை சரியா?

இழந்துவிடக் கூடாது
அரசு மருத்துவர்களின் வயதை 65-ஆக உயர்த்துவது சரிதான். மருத்துவத் துறையில் நீண்டகால அனுபவம் என்பது அவசியம். சிறந்த மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். தமிழ்நாட்டில் மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. திறமையும் அனுபவமும் மிக்க மருத்துவர்களை நாம் இழந்துவிடக் கூடாது. எனவே, அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 65-ஆக உயர்த்துவது சரியே.
க.கிருஷ்ணமூர்த்தி, பழனி.

தன்னம்பிக்கை தரும்
அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த வேண்டும் எனக் கோருவது சரியே. ஏனெனில், அவ்வயதில் எந்த மருத்துவரும் தளர்வடையவோ சோர்வடையவோ வாய்ப்பில்லை. மருத்துவ அனுபவம் என்பது, கிடைத்தற்கரிய அனுபவமாகும். ஏழைகள் பயன்பெறும் அரசு மருத்துவர்களின் முதிர்ந்த நிபுணத்துவம் மக்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நல்ல பயிற்சியையும், பலனையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை. 

ஊதியம் முக்கியமல்ல
இந்தியர்களின் சராசரி வயதே 68 தான். இதில் 65 வயது வரை வேலை செய்யச் சொல்வது நியாயமல்ல. மேலும், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியே சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். ஏழை மக்களின் தேவை அறிந்து சேவை செய்பவர்களும் குறைவு. அரசு தரும் ஊதியத்தை மட்டும் அவர்கள் நம்பி இருக்கவில்லை. எனவே அவர்கள் 58 வயதில் ஓய்வுபெறுவதே சிறந்தது. இதனால் நவீன தொழில்நுட்பத்தில் மருத்துவம் கற்ற இளம் மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும்.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

எட்டாத உயரம் 
இது காலத்தின் கட்டாயம். சாதாரணமாக ஒரு மருத்துவர் 1,000 பேருக்குத்தான் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நடைமுறையில் 20,000 பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். அதனால் பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ வசதி கிடைப்பதில்லை. அத்துடன் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் கட்டணம் ஏழைகளுக்கு எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. எனவே மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க இருக்கின்ற மருத்துவர்களின் வயதை உயர்த்தி ஏழை, எளியவர்க்கான அவர்களின் சேவையைத் தொடர அரசு அனுமதிக்க வேண்டும்.
மகிழ்நன், சென்னை.

ஏற்புடையது அல்ல
அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 65-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் ஏற்புடையது அல்ல. மருத்துவப் பயிற்சி முடித்து வரும் இளைய தலைமுறையினர் இதனால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், ஏழு ஆண்டுகள் என்றால் அது ஏற்கத்தக்க நல்ல முடிவு அல்ல. ஆனால் தேவைக்கு ஏற்ப மக்கள் நலன் கருதி 60 வயது வரை என்று வேண்டுமானால் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்கலாம். 65 வயது என்பது முற்றிலும் தவறான முடிவு ஆகும்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

நியாயமல்ல
மருத்துவப் படிப்பு முடித்து அரசு மருத்துவமனைகளில் பணியினை எதிர்பார்த்து காத்திருப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது. அரசுப்பணியில் சேர்வதற்கான வயது வரம்பிற்குள் அவர்கள் பணியில் சேராவிட்டால் அவர்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை. இந்த நிலையில், அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 65-ஆக உயர்த்துவது சற்றும் நியாயமல்ல.
என்.பி.எஸ்.மணியன், மணவாள நகர்.

வரவேற்கத்தக்கது
மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு வயதை 65-ஆக உயர்த்திய ஆணையில், தலைமை பொறுப்பு மருத்துவர்கள், தங்கள் 62 வயது வரை பொறுப்பு மருத்துவராகவும், அதன் பின் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரின் கீழ் 65 வயது வரை பணியாற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல் இல்லாமல் ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் அது வரவேற்கத்தக்கதே.
கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

விபரீத முடிவு
அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது அர்த்தமற்ற செயல்.இதனால் மருத்துவத் துறையில் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகும். 58 வயதானவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். பொதுவாக எவருக்கும் வயதானால் ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இதனால் அறுவை சிகிச்சை போன்றவற்றை செய்வது கடினமாக இருக்லாம். மருத்துவர்களின் மறதியால் பாதிக்கப்படுவது நோயாளிகளே. எனவே வேண்டாம் இந்த விபரீத முடிவு.
என்.காளிதாஸ், சிதம்பரம்.

அனுபவமே ஆசான்
அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 58-இலிருந்து 65-ஆக உயர்த்த வேண்டும் என்னும் கோரிக்கை சரியானதே. அனுபவமே சிறந்த ஆசான் என்ற முதுமொழிக்கேற்ப, அனுபவம் அடைய அடையத்தான் தமது தொழிலில் நல்ல முதிர்ச்சி கிடைக்கும். அறுவை சிகிச்சை போன்ற முக்கியமான சிகிச்சை முறைகளில் ஈடுபடும் மருத்துவர் நன்கு தேர்ந்தவராக இருந்தால்தான் அது நேர்த்தியாக, வெற்றிகரமாக முடியும். வயதில் மூத்த மருத்துவர்கள் திறம்பட செயலாற்றுவதை நாம் பல இடங்களிலும் பார்க்கிறோம்.
செ.பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

பொறுமை இருக்காது
அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 65-ஆக உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் வயோதிகம் காரணமாக உடல் சோர்வும் உள்ளச் சோர்வும் ஏற்படுவது இயற்கையே. தற்பொழுது மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நோயாளிகளைச் சமாளிப்பதில் வயது முதிர்ந்த மருத்துவர்கள் பொறுமை காட்டுவார்களா? நிச்சயம் மாட்டார்கள். மருத்துவத் துறையில் இளம் தலைமுறையினரே தேவை. 
கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

என்ன பிரச்னை?
மூத்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்றியதால் பல்வேறுபட்ட மனிதர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த அனுபவம், எளிய சிகிச்சை முறை, நோய்களின் வீரியம், மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மை இவையெல்லாம் கிடைக்கின்றன. இந்த அனுபவ பாடம் பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக அவர்களின் பணிக் காலத்தை ஏழு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதில் என்ன பிரச்னை?
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

தவறில்லை
மருத்துவத் துறை, கல்வித்துறை, சட்டத்துறை, கலைத்துறை எனப் பல நிலைகளிலும் ஓய்வுக்குப் பிறகு பணி செய்வபவர்கள் உண்டு. திறமை, அனுபவம் மிக்கோர் சேவையுணர்வு கொண்டோர் விரும்பினல் அவர்களது ஓய்வு வயதை 58-இலிருந்து 65 என ஆக்கலாம். தவறில்லை. தனியார் நிறுவனங்கள் பல ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளை இக்காரணங்களாலேயே தம்மிடம் ஈர்க்கின்றன. அரசும் இவ்வழியைப் பின்பற்றினால் அதில் எவ்விதத் தவறும் இல்லை.
ச.கந்தசாமி, எட்டயபுரம்.

ஏற்கக்கூடியதே
அனுபவ அறிவு உயர்ந்தது. ஏட்டுக்கல்வியுடன் அனுபவ கல்வியும் இணைந்து மருத்துவப் பணி செய்வது சமுதாயத்திற்குப் பெரும் பயன் தரும். பொதுமக்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என செயல்படும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். தனியார் மருத்துவர்கள் தங்களின் இறுதி நாள் வரை மருத்துவப் பணி ஆற்றும்போது, அரசு மருத்துவர்களுக்கு 65 வயது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே!
என்.சண்முகம், திருவண்ணாமலை.

வழிவிட வேண்டும்
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் நகர்ப்புறங்களில் பணியாற்றியபடி, பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் அதிக பணம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். இவர்களுக்கு 58 வயதில் ஓய்வு கிடைத்தாலும், பெரிய மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெரிய அளவிலான ஊதியம் பெற்று பணியாற்றும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். எனவே இவர்களுக்கு 58-இல் ஓய்வு வழங்கி, புதிதாக வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளம் மருத்துவர்களுக்கு வழிவிடுவதே சிறந்தது.
கே.கோவிந்தராஜன், அல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com