நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நாளைக்கு ஐந்து கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது என்று மக்களவைத் தலைவர் உத்தரவிட்டிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நாளைக்கு ஐந்து கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது என்று மக்களவைத் தலைவர் உத்தரவிட்டிருப்பது சரியா?'

வரவேற்கத்தக்கது
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருநாளைக்கு ஐந்து கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது என்று மக்களவைத் தலைவர் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்கள் தொகுதி மேம்பாடு, அடிப்படைத் தேவை போன்றவற்றைப் பற்றி கேள்வி கேட்காமல் மெளனமாக இருந்தே தங்களின் பதவிகாலத்தை நிறைவு செய்து விடுகின்றனர். சிலசமயம் நாடாளுமன்றத்தில் வீண் விவாதங்களால் நேரம் வீணாகி விடுகிறது. எனவே, இந்தக் கட்டுப்பாடு தேவையே. 
எம்.எஸ்.இப்ராஹிம், சென்னை.

வரம்பு தேவை
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டிருப்பது சரிதான். கேள்வியில் கருத்து இருக்கிறதோ, இல்லையோ சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். கேள்விக்கு தக்க பதில் கூறப்பட்டாலும், அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். ஏற்கெனவே அடிக்கடி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே, ஐந்து கேள்விகளுக்குத்தான் நேரம் ஒதுக்க முடியும் என்பது சரியே. எதிலும் ஒரு வரம்பு தேவை.
கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

வரையறை கூடாது
நடாளுமன்றம் முன்னர்போல் அதிக நாட்கள் நடைபெறுவதில்லை. குறைந்த நாட்களே நடைபெறுகிறது. அதிலும், அண்மைக் காலமாக விவாதமே நடைபெறாமல் கூச்சல், குழப்பத்துடன் மக்களவை பெரும்பாலும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து வினாக்களுக்கு மேல் கேட்கக்கூடாது என்று அவைத் தலைவர் உத்தரவிட்டிருப்பது சரியல்ல. ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளுக்கு கேள்வி கேட்க வரையறை கூடாது.
டி.ஆர்.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

எல்லாருக்கும் வாய்ப்பு
ஒருசில உறுப்பினர்களே அடிக்கடி கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதைத் தடுக்கவே சுமித்ரா மகாஜன் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சரியானதே. ஒவ்வொரு எம்.பி.க்கும் தனது தொகுதி பற்றி பேசவும், நாட்டு நலன் சார்ந்த பிரச்னைகளைப் பேசவும் இதனால் வாய்ப்பு கிடைக்கும். தவிர, நாடாளுமன்றத்தில் எதுவுமே பேசாமல் அரசு சலுகைகளை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் எம்.பி.க்கள் பற்றிய விவரங்களும் நாட்டு மக்களுக்குத் தெரிய வரும்.
உ.இராசமாணிக்கம், கடலூர்.

பொன்னான நேரம்
மக்களவைத் தலைவர் உத்தரவிட்டிருப்பது மிகச்சரியே. ஒருவரே பல கேள்விகள் கேட்டால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. கேள்விகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கேட்க வேண்டும். மக்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அடிக்கடி எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கப்படுவதால் பொன்னான நேரம் வீணாவதோடு, மக்களின் வரிப் பணமும் பாழாகிறது. இதனைத் தவிர்க்க, உறுப்பினர்கள் இனியாவது பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
என்.காளிதாஸ், சிதம்பரம்.

என்ன நியாயம்?
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளே கேட்காதபோது, கேள்வி கேட்பவர்களை தடை செய்வது என்ன நியாயம்? பிரச்னைகள் தொடர்பான கேள்விகள் எழும்போது, பிரச்னைகளின் தன்மையை ஆராய்ந்து கேள்விகளை எழுப்புவார்கள். அதனைத் தடை செய்து கட்டுப்படுத்துவது கூடாது. தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பது கேள்விகளின் எண்ணிக்கையில் அல்ல; உறுப்பினரின் வாதத்திறமையில்தான் உள்ளது. எனவே இத்தனை கேள்விகள்தான் என்று தடை விதிப்பது கூடாது.
ஆறு.கணேசன், திருச்செந்தூர்.

உறுதிமொழி
மக்களவைத் தலைவர் உத்தரவிட்டிருப்பது சரியே. இதனால் எல்லா உறுப்பினர்களும் கேள்வி கேட்கும் வாய்ப்பு ஏற்படும். மேலும், ஐந்து கேள்விகளுக்கு மேல் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மறுநாள் வாய்ப்பு வழங்கப்படும் என்ற மக்களவைத் தலைவரின் உறுதிமொழி ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
எஸ்.முத்துகிருஷ்ணராஜா, 
இராஜபாளையம்.

அடிப்படை உரிமை
நாட்டு நலன் கருதி கேள்வி கேட்பதும், அமைச்சர் தந்த பதில் திருப்தியில்லை என்றால் துணைக் கேள்வி எழுப்புவதும் உறுப்பினரின் அடிப்படை உரிமை. அதற்குத் தடை போட முடியாது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் ஆறு அல்லது ஏழு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. உறுப்பினர் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளம். இந்த நிலையில், இவ்வளவு கேள்விகள் தான் கேட்க வேண்டும் என்று வரைமுறைப் படுத்துவது சரியல்ல.
குரு.பழனிசாமி, கோவை.

மக்களாட்சி
இந்த உத்தரவு மிகவும் சரிதான். இந்தியா மிகப் பெரிய மக்களாட்சி நாடாகும். 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒருசிலர் மட்டுமே பேசுகிறார்கள். அனைவரும் பேசுவதற்கு இந்த உத்தரவு அடிகோலும். அண்மைக் காலத்தில் கூச்சல், குழப்பங்களால் பல நாட்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது வேதனை தருவதாகும். இனி இந்த நடைமுறை பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

தேவையற்றது
மக்களால் தேர்வு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றுபவர்கள். அவர்கள் பேசுபவை அனைத்தும் தேச நலனை முன்னிட்டுதான். தொகுதி மக்கள் உணர்வுகளை பிரதிபலிப்பது கேள்விகள் வாயிலாகத்தான். அவற்றிற்கெல்லாம் கட்டுப்பாடு விதிப்பது ஜனநாயக நாட்டில் தேவையற்றது. அரசின் இக்கருத்து ஜனநாயகத்தை நீர்த்து போகச் செய்துவிடும்.
ச.சந்திரசேகர், சின்னமனூர்.

சரியான நிலைப்பாடு
ஐநூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற அவையில் எல்லா உறுப்பினர்களும் பேசுவதற்கும், கேள்விகள் கேட்பதற்கும் சம வாய்ப்புகள் வழங்க வேண்டியது மக்களவைத் தலைவரின் கடமையாகும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஒருநாளுக்கு ஐந்து கேள்விகளுக்கு மேல் கேட்கக் கூடாது என்று மக்களவைத் தலைவர் உத்தரவிட்டிருப்பது சரியான நிலைப்பாடுதான்.
கே.வேலுச்சாமி, திருப்பூர்.

பள்ளிக்கூடம் அல்ல
அவைக்கே வராமல், கேள்வியும் கேட்காமல் இருப்போர் மத்தியில் ஒருசில மக்கள் பிரதிநிதிகள் கேள்விக்கணை தொடுக்கின்றனர். இவர்கள் இத்தனை கேள்விதான் கேட்க வேண்டும் என்று வரைமுறைக்கு உட்படுத்துவது தவறு. மேலும், மக்களவை என்பது ஒன்றும் பள்ளிக்கூடம் அல்ல, குறிப்பிட்ட வரைமுறைக்குட்பட்டு கேள்விகள் எழுப்ப. எனவே, ஒருநாளைக்கு ஐந்து கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பது தவறு.
ப.தானப்பன், தச்சநல்லூர்.

ஜனநாயகக் கடமை
நாடாளுமன்ற நடவடிக்கைகள் கூச்சல், குழப்பங்களால் பெரும்பாலும் தள்ளியே வைக்கப்படுகின்றன. எனினும், ஜனநாயகக் கடமையாற்ற விரும்புவோருக்கு, அவை விவாதங்களில் பங்கு பெற விரும்புவோருக்கு, ஆர்வமுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த முறையால் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மதிப்பு மிக்க நேரமும் மிச்சமாகும்.
கி.பாஷ்யம், சலுப்பை.

கட்டுப்பாடு கூடாது
எத்தனை கேள்விகள் கேட்க வேண்டும் என்று அரசியல் சாசனம் வரையறுக்கவில்லை. உறுப்பினர்கள் எந்தவித தயக்கமுமின்றி சுதந்திரமாக தங்கள் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும். தகுதியற்ற கேள்விகளை நிராகரிக்க வேண்டுமே தவிர, கேள்விகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. ஐந்தாண்டு காலத்தில் ஒரு கேள்வி கூட கேட்காத உறுப்பினருக்கு எந்தவித பிரச்னையும் இல்லாதபோது, கேள்வி கேட்கக்கூடிய சிலரை இப்படிக் கட்டுப்படுத்தக் கூடாது.
ரெ.பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

கூச்சலும் குழப்பமும்
அண்மைக்காலமாக மக்களவை பெரும்பாலும் கூச்சலிலும் குழப்பத்திலுமே செல்கிறது. பல மசோதாக்கள் விவாதமின்றியே நிறைவேற்றப்படுகின்றன. இந்த லட்சணத்தில் கேள்வி நேரமும் குறைக்கப்பட்டால், வாக்களித்த மக்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள முடியாது. மக்களின் பிரச்னைகள் கூட விவாதமின்றி சென்றுவிடும். இந்த உத்தரவு திரும்ப பெறப்பட வேண்டும்.
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com