பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரியா?'

எந்திரமயம்
பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சரியே. தற்போது, மூன்று வயதான மழலைப் பருவத்திலேயே பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுகின்றனர். பாதி நாள் வரை பள்ளிக்கூடத்தில் இருந்துவிட்டு, துள்ளி விளையாடும் மழலைப் பருவ வயதில், வீட்டுப்பாடம் என்ற சுமையை அந்தப் பிஞ்சு நெஞ்சுகளில் ஏற்றிவிடக்கூடாது. அவர்களின் இளம் பருவத்தை எந்திரமயமாக மாற்றிவிடக்கூடாது.
எம்.எஸ்.இப்ராஹிம், சென்னை.

எழுத்துப் பயிற்சி
பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரியே. பள்ளிகளில் விளையாட்டு வழிக் கல்வியே தொடக்கத்தில் சரி. பள்ளியில் கற்றதை நினைவிலிருத்தவும், எழுத்துப் பயிற்சியை வேகப்படுத்தவும் வீட்டுப்பாடம் தரப்படுகிறது. இரண்டாம் வகுப்பு வரை உள்ளோர், பிஞ்சு மழலையர். அவர்களை வளைத்தால் ஒடிந்துவிடுவர். கசக்கினால் தாங்க மாட்டார்கள். வீட்டுப்பாடத்தால் அவர்களைக் கிழித்துவிடக்கூடாது.
கி.பாஷ்யம், சலுப்பை.

மன நெருக்கடி
நீதிமன்ற உத்தரவு சரியே. பள்ளிகளிலேயே பாடங்கள் முடிக்கப்பட வேண்டும். சிறு வயதில் வீட்டுப்பாடங்கள் தருவது குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் மன நெருக்கடியை உருவாக்கும். மேலும், ஓடி விளையாடுவது குறைவதால், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். வேண்டுமானால், ஒரு மணி நேரம் பள்ளி நேரத்தை அதிகரிக்கலாம். ஆனால், வீட்டுப்பாடம் நிச்சயம் கூடாது.
கி.சந்தானம், மதுரை.

குழந்தைப் பருவம்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது என்பது சரியான முடிவு. குழந்தைகளின் கைகளில் பென்சில், பேனா, நோட்டு போன்றவற்றைக் கொடுத்து வீட்டிலும் அவர்களை தொழிலாளர்கள் போல வேலை வாங்குவது அவர்களின் குழந்தைப் பருவத்தைச் அழிப்பது போலாகும். ஓடி விளையாடு பாப்பா' என்ற கருத்தை விதைத்து, அவர்கள் விருப்பம் போல் மாலைப் பொழுதை பயனுள்ளதாக்க வேண்டும் சிறு வயதில் விதைக்கப்படும் விதை வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஆறு.கணேசன், திருச்செந்தூர்.

கல்மேல் எழுத்து
இக்கருத்து தவறானது. சிறுவயது முதலே குழந்தைகள் எழுதிப் பழகும்போது கையெழுத்து சிறப்பாகவும் அழகாகவும் அமையும். பாடத்தை படிப்பதைவிட எழுதும்போது மனதில் நன்கு பரியும். ஆகையால், மாணவர் உள்ளத்தில் அப்பாடக் கருத்துகள் கல்மேல் எழுத்தைப் போல் பதிந்து வாழ்க்கையை நன்னெறிப்படுத்தும். அதனால் ஒழுக்கம், கடமை தவறாமை, நேரத்தோடு செயல்படுதல் போன்ற நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபடவும் நல்ல மாணவனாக வளரவும் வீட்டுப்பாடம் எழுதும் முறை பயனளிக்கும்.
மு.கண்ணன், திருவண்ணாமலை.

மறக்க முடியாது
மிகமிக சரியே. குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்து அவர்களை ஒரே இடத்தில் அமரச் செய்வது, அவர்களுக்குக் கல்வியின் மீதே வெறுப்பை வரவழைத்துவிடும். சிறு குழந்தைகள் எழுதி தெரிந்து கொள்வதை விட, கேட்கும்போது அவர்கள் மனதில் எளிதில் பதிந்துவிடும். அதனால் செய்யுள்கள், பாட்டுகள், வாய்ப்பாடு அனைத்தையும் வீட்டுப்பாடமாகக் கொடுத்து எழுத சொல்வதை விட, அவர்கள் காதில் விழும்படி சொல்லிக் கொண்டே இருந்தால் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். பிறகு அந்தப் பாடங்கள் மறக்கவே மறக்காது.எனவே, இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வேண்டாம்.
உஷா முத்துராமன், திருநகர்.

தேவையற்றது
சிறு குழந்தைகள் பள்ளிகளில் மட்டும் படித்தால் போதுமானது. பள்ளிகளில் பாடங்களைப் புரியும்படி சொல்லிக் கொடுத்து புரிந்துவிட்டதைச் சோதிக்க சிறு பயிற்சிகள் வைக்கலாம். இது பள்ளிகளிலே முடிந்துவிட வேண்டும். மாறாக, வீட்டுப்பாடம் என்று சொல்லி, சிறு குழந்தைகளை நோகடிப்பது தேவையற்றது. வீட்டில் குழந்தைகள் சந்தோஷமாக இருக்க அனுமதிக்க வேண்டும். வீட்டுப்பாடம் செய்வதிலேயே அதிக நேரம் செலவழிந்துவிடக்கூடாது. எனவே, நீதிமன்ற உத்தரவு சரியானதுதான்.
த.யாபேத்தாசன், பேய்க்குளம்.

சுமையாகக் கூடாது
பள்ளியில் ஆசிரியர்கள் பெற்றோர்களாக மாறி அன்புடனும் பாசத்துடனும் பாடம் நடத்த வேண்டும். பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்தவுடன், கொஞ்ச நேரம் விளையாட அனுமதிக்க வேண்டும். பின் பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறி கொஞ்ச நேரம் பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். வாசிப்பை சுமையாகக் கருதும்படி விட்டுவிடக் கூடாது. வீட்டுப்பாடம் குழந்தைகளுக்கு ஒரு சுமையாகும். அது வேண்டாம்.
எம்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா, 
ராஜபாளையம்.

கடமை
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது சரிதான். சின்ன குழந்தைகள் வகுப்பில் பாடம் கேட்கிறார்கள்; எழுதுகிறார்கள். ஆசிரியர்கள் வகுப்பில் நல்ல பயிற்சியைக் கொடுத்து உற்சாகப்படுத்தலாம். பள்ளியில் படித்ததை வீட்டில் படித்துப் பார்க்கும் பயிற்சியை பெற்றோர்கள் பழக்க வேண்டும். பிள்ளைகளுக்கு உடலும், மனமும் தளராமல் பாதுகாப்பது நம் கடமையாகும்.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

ஒருமைப்பாடு
நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரியல்ல. மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுப்பாடங்களைச் செய்யச் சொல்லி, பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு எழுத்துப் பயிற்சி, மனப்பாடம் செய்யும் திறன், கணிதம் தொடர்பான பயிற்சி, மன ஒருமைப்பாட்டுத் திறன் ஆகியவை மேம்படும். இந்தப் பயிற்சி சரியான முறையில் அமையாவிட்டால் பிற்காலத்தில் அவர்கள் திறமை குறைந்தவர்களாக மாற வாய்ப்புள்ளது.
கோ.மோகன மணி, குளித்தலை.

மன உளைச்சல்
துள்ளி விளையாட வேண்டிய பருவத்தில் புத்தகச்சுமையை வீட்டுப்பாடம் என்ற பெயரில் தருவது ஏற்புடையதல்ல. வீட்டுப்பாடத்திற்குப் பதிலாக கற்கும் திறனை மேம்படுத்த பள்ளியிலேயே முயல வேண்டும். மேலும், இரண்டாம் வகுப்பு வரை மதிய இடைவேளையைக் குறைத்து மாணாக்கர்களை எழுதவும், படிக்கவும் வைத்தால் வீட்டுப்பாடம் தேவை இருக்காது. இதனால் பெற்றோரின் மன உளைச்சலும் குறையும்.
உ.இராசமாணிக்கம், கடலூர்.

ஊக்குவிப்பு
இது வரவேற்கத்தக்கது. சிறு அரும்புகள் பென்சில், பேனா, பலப்பம் உள்ளிட்டவற்றை உபயோகித்து எழுதுவது சரியல்ல. இந்த வயதில் பள்ளிக்குச் சென்று படிப்பது என்பதுதான் முக்கியம். மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது எழுதவும், வீட்டுப்பாடங்களை எழுதிப் பழகவும் அனுமதிக்கலாம். கல்வி என்பது சலித்துக்கொள்ளாமல் கற்கும் திறனை ஊக்குவித்து வளர்ப்பது. சிறுவர்களின் மனநலம் காத்து கற்பிக்க வேண்டும்.
டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

மீள் பார்வை
பள்ளியில் கற்றதை மீண்டும் ஒருமுறை மீள் பார்வை செய்வதற்கு வீட்டுப்பாடம் உறுதுணையாகும். பெற்றோரும் தங்கள் குழந்தைகள் என்ன கற்றுக்கொண்டனர் என்பதை அறியவும், அன்றாட பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து தெளிவுபடுத்தவும் வீட்டுப்பாடங்கள் மிகவும் அவசியம். தவிர, குழந்தைகள் பள்ளியில் கற்றதை அன்றைய தினமே எழுதிப் பார்க்க பழக்கவில்லை என்றால் அவர்கள் அதை மறந்து போகவும் வாய்ப்புண்டு.
டி.ஆர்.பாஸ்கரன், திண்டிவனம்.

தொடர்ந்த பயிற்சி
வீட்டுப்பாடம் என்பது தேவையான ஒன்றுதான். படிப்புக்கு ஒரு வகையான தொடர்ந்த பயிற்சி தேவைப்படுகிறது. இத்தகைய தொடர்புக்கு வீட்டுப்பாடம் பயனுள்ளதாக அமையும். படிப்பு என்னும் நிகழ்வு வீட்டிலும் நிகழ வேண்டும் என்பதனை வீட்டுப்பாடம் நடைமுறைப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு படிப்பு, படிப்பு சார்ந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் வீட்டுப்பாடம் என்ற பயிற்சி தேவையாகிறது. 
வீ.வேணுகுமார், வெள்ளிச்சந்தை.

ஆர்வமும் விருப்பமும்
விளையாட்டு வழிக் கல்வியே ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஏற்றது. அவர்களுக்கு கதை, பாடல் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். அதனால் குழந்தைகளுக்கு கற்றலில் ஆர்வமும், விருப்பமும் ஏற்படும். இரண்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்கும்பொழுது மனச் சோர்வு ஏற்பட்டு, படிப்பில் ஆர்வம் குறைந்துவிடும்.
எம்.ஜோசப் லாரன்ஸ், 
சிக்கத்தம்பூர்பாளையம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com