Enable Javscript for better performance
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களை தள்ளிப்போடக் காரணம், ஆளுங்கட்சியின் தோல்வி பயமே என்கிற- Dinamani

சுடச்சுட

  

  திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களை தள்ளிப்போடக் காரணம், ஆளுங்கட்சியின் தோல்வி பயமே என்கிற குற்றச்சாட்டு சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 17th October 2018 01:36 AM  |   அ+அ அ-   |    |  

  ஐயமில்லை
  தமிழக இடைத்தேர்தல்களை தள்ளிப் போடக் காரணம் ஆளும் கட்சியின் தோல்வி பயமே என்கிற குற்றச்சாட்டு சரியானதே. மழைக் காலங்களில் பலமுறை தமிழ் நாட்டில் தேர்தல் நடந்துள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் மழை என்கிற காரணம் ஏற்கதக்கதல்ல. இரண்டு தொகுதி இடைத்தேர்தல் மழையினால் பாதிக்கப்படப் போவதும் இல்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தச் சொல்லி பலமுறை நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தும் இன்னும் நடத்தப்படவில்லை. கன மழையே காணாத தமிழகத்தில் அதைக் காரணம் காட்டித் தேர்தலைத் தள்ளிப்போடுவது தோல்வி பயத்தினால் என்பதில் ஐயமில்லை.
  க. அருச்சுனன், செங்கல்பட்டு.

  வானிலை மாற்றம்
  வானிலை என்பது காலங்காலமாய் மாறி வருவதுதான். இந்த கணிப்புகளில் ஒரு சில நேரங்களில் வேண்டுமானால் சிறிய மாற்றங்கள் இருக்கலாமே தவிர முழுவதுமாய் மாறிவிடாது. இடைத் தேர்தல் நிறுத்தப்பட்ட பகுதிகள் இரண்டும் சமதளப் பகுதிகள். மலைப் பங்கான பகுதியோ, கடும் மழைப் பொழிவு பகுதியோ அல்ல. எனவே, மழை வரும் என்பது உண்மைக் காரணம் அல்ல. மாநில அரசின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து தேர்தலை தள்ளி வைத்து விட்டது தேர்தல் ஆணையம். மாநில அரசு தன்னிலை உணர்ந்து விரைவில் தேர்தலை நடத்திட முன்வர வேண்டும்.
  ஆர். விஜயலட்சுமி, சிவகங்கை

  அச்ச உணர்வு
  மழையைக் காரணம் காட்டுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இதற்கு முன் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளன. தினசரி துப்பாக்கி சத்தமும், பனிப்பொழிவும் உள்ள காஷ்மீர் மாநிலத்திலேயே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றபோது, தமிழகத்தில் ஏன் நடத்தப்படவில்லை? தமிழக அரசுக்கு ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு போல், ஆகிவிட்டால் என்ன செய்வது? அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முடிவு பிரதிபலிக்கும் என்ற அச்ச உணர்வே காரணமாகும்.
  பூ. சி. இளங்கோவன், அண்ணாமலை நகர்.

  கட்டாய சூழ்நிலை
  எந்தவொரு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றாலும் ஆளுங்கட்சியினரே வெல்வர் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால், தற்போது பலவித அரசியல் சூழ்நிலைகளால் நிலைமை மாறியுள்ளது.திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் என்பதால், ஒரு தொகுதியிலாவது வென்று விட வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.
  எஸ்.எஸ். ஏ. காதர், காயல்பட்டினம்.

  வேடிக்கை
  மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மறைமுகமாக கொடுத்த ரெட் அலர்ட் டின் காரணமாக அ.இ.அ.தி.மு.க அரசு விழித்துக் கொண்டு விட்டது. விலைவாசி ஏற்றத்தால் ஆளுங்கட்சி மீது மக்களுக்குள்ள கோபம், தி.மு.க வின் கூட்டணி பலம், தினகரனின் தேர்தல் வியூகம் ஆகிய விஷயங்களை கணக்கில் கொண்டே ஆளுங்கட்சி தேர்தலை தள்ளிப் போட்டுள்ளது. தேர்தலைத் தள்ளிப்போட மழையைக் காரணம் காட்டுவதை விட வேடிக்கை வேறு எதுவும் இல்லை.
  பொன். கருணாநிதி, கோட்டூர்.

  எல்லாம் அரசியல்
  ஏதோ தற்போதைய ஆளுங்கட்சிதான் தேர்தல் தோல்வி பயத்தால் இடைத்தேர்தலைத் தள்ளி வைக்க முயற்சித்தது போல், எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இதற்கு முன்னரும் பல இடைத்தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன என்பது எதிர்கட்சிகளுக்குத் தெரியாதா? அப்படியே தள்ளி வைத்தாலும் எவ்வளவு நாள்களுக்கு தள்ளி வைக்க முடியும்? ஆறுமாத காலத்திற்குள் இடைத்தேர்தலை நடத்தி முடித்துத்தானே ஆக வேண்டும்? அதற்குள் ஆளுங்கட்சிக்குப் பயம் நீங்கி விடுமா? எல்லாம் வெறும் அரசியல்.
  கே. வேலுச்சாமி, தாராபுரம்

  தயக்கம் ஏன்?
  திருவாரூர் - திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்களை தள்ளிப்போடக் காரணம் ஆளும் கட்சியின் தோல்வி பயமே என்பதில் சந்தேகமேயில்லை. நொண்டிக் குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்கு என்பது போல், மழையைக் காரணமாகக் காட்டி தேர்தலைத் தள்ளி வைத்துள்ளார்கள். அம்மாவின் ஆட்சிதான் நடக்கிறது... செம்மையான ஆட்சிதான் நடைபெறுகிறது என்று வாய்வீரம் பேசுபவார்கள் தேர்தலை சந்திக்கிற தயங்குவது ஏன்?
  எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

  குற்றச்சாட்டு தவறு
  இந்தக் குற்றச்சாட்டு தவறு. ஏனெனில், திருப்பரங்குன்றத்தின் தொகுதி தொடர்பான வழக்கு உள்ளது என்பதும், திருவாரூர் தொகுதியடங்கியுள்ள காவிரி டெல்டா பகுதி நவம்பர் மாத வடகிழக்குப் பருவமழைக்கு ஆட்படும் பகுதி என்பதும் அனைவரும் அறிந்ததுதான். அ.இ.அ.தி.மு.க விற்கு தோல்வி பயம் இருக்க வாய்ப்பிருக்க முடியாது. விமர்சனம் என்பது அரசியலில் தவிர்க்கவியலாததாகவே தற்காலத்தில் உள்ளது. இவை சிந்தையைத் தூண்டுவன மட்டுமே.
  ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

  பொறுத்திருந்து பார்ப்போம்
  இந்தக் குற்றச்சாட்டு மிகவும் சரிதான். ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் இருந்தது போல் இன்று கட்டுக் கோப்புடன் இல்லை. இது பொதுவாக அனைவரும் அறிந்த சூழ்நிலை. மேலும், உள்கட்சிக் குழப்பங்கள் வேறு. தி.மு.க., உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்தால் தேர்தல் களம் சூடு பிடிக்கும். தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் எனத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
  ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

  செயலற்ற அரசு
  தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்குப் பல வகையிலும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. குட்கா ஊழல், கோயில் சிலைகள் கடத்தல், துணைவேந்தர் நியமனத்தில் லஞ்சம், அரசு அலுவலங்களில், குறிப்பாக, வருவாய்த் துறை அலுவலர்கள் மேல் பல அடுக்குகளிலும் லஞ்சக் குற்றச் சாட்டு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து, பெட்ரோல் விலைகளில் கட்டுப்படுத்த இயலாமை - இப்படி செயலற்ற அரசாக இருக்கும் பலவீனம். இவற்றோடு தோல்வியடைவோம் என்ற பயமும் ஆளுங்கட்சியினரிடம் இருக்கிறது என்பது வெளியே தெரிந்து விட்டது.
  சோம. பொன்னுசாமி, சென்னை.

  வியப்பில்லை
  திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப் பாட்டினையும் மீறி பண விநியோகம் நடைபெற்றால் அதில் வியப்படைய ஒன்றும் இல்லை. மேலும், வடகிழக்குப் பருவ மழையின் வீச்சினைச் சமாளித்திட வேண்டிய தார்மிகக் கடமையில் அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இயங்கிட வேண்டிய சூழலில் தேர்தலில் அவர்களால் முழுமனதோடு ஈடுபட முடியாது. இவையெல்லாம்தான் இடைத்தேர்தல்களைத் தள்ளிப்போட காரணங்களேயன்றி, ஆளும் கட்சியின் தோல்வி பயம் காரணமல்ல.
  என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

  சிக்கல் வரும்
  ஆளும் கட்சியின் தோல்வி பயமே என்கிற குற்றச்சாட்டு உண்மைதான். இதற்கு முன்னால் சில இடைத்தேர்தல்கள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டுள்ளன. உண்மையான காரணம் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் கிடைத்த தோல்விதான். தங்கள் சின்னம் கிடைத்தும், ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில், மீண்டும் இந்த இரு தொகுதிகளிலும் ஏதாவது நடந்தால் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் பொழுது சிக்கல் ஏற்படும். ஆகையால் தேர்தலை தள்ளி வைத்து விட்டனர்.
  ப. சுவாமிநாதன், சென்னை.

  செல்வாக்கு
  இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர் தோற்றுவிட்டால் கட்சியின் செல்வாக்கு குறைந்து விட்டதாக அரசியல்வாதிகள் கருதுகின்றனர். சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் நின்றும் ஆளும் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்தார். இனியும் அப்படி விட்டு விடக் கூடாது என்பதற்காக இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கவனம் செலுத்துகிறார்கள். மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்தால் மிகுந்த பலவீனமாத் தெரியும். எனவே, இடைத்தேர்தலை முடிந்த அளவு தள்ளிப் போட முயற்சி செய்கிறார்கள். 
  மா. தங்கமாரியப்பன், 
  கோவில்பட்டி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai