தீபாவளி அன்று இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தீபாவளி அன்று இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பது சரியா?

விழிப்புணர்வு
தீபாவளியன்று இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது சரியல்ல. மகிழ்ச்சியை அட்டவணைப் படுத்தி அனுபவிக்க இயலாது. பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு இயன்ற நேரத்தில்தான் பட்டாசு வெடித்து மகிழ முடியும். குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கிறார்களா என்பதை நகர்ப்புறங்களிலேயே கண்காணிக்க முடியாத பொழுது கிராமப் புறங்களில் கண்காணிக்கவே முடியாது. விழிப்புணர்வு மட்டுமே சரியான
தீர்வாக இருக்கும்.
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

யாருக்கு லாபம்?
இந்த உத்தரவு சரியல்ல. சுற்றுச்சூழல் மாசுபடும் என்ற காரணத்தால் பட்டாசுக்கு நேரக் கட்டுப்பாடு விதிப்பது மிகவும் விசித்திரம். சீனப் பட்டாசுகளை இந்தியா இறக்குமதி செய்யும்போது, அதற்கு தடைவிதிக்காமல், விற்பனையை மட்டும் தடை செய்வதில் யாருக்கு லாபம்? சுற்றுச்சூழல் பாதிப்பும் மாசு ஏற்படுவதும் பட்டாசு வெடிப்பதனால் மட்டும்தானா? தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையை நீதிமன்ற உத்தரவுகள் கட்டுப்படுத்த முடியுமா? பழைய வாகனங்கள், ஆலைகளின் நச்சு நீர் கழிவை விடவா இந்த பட்டாசு மூலம் சுற்றுச்சூழல் மாசுப்படப்போகிறது? 
பி.கே. ஜீவன், கும்பகோணம்.

வரவேற்கத்தக்கது
தீபாவளி அன்று இரவு பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீதிமன்றம் வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், தீபாவளிக்கு முந்தைய நாள்களில் பட்டாசு வெடிக்கும் நேரத்தைப் பற்றி குறிப்பிடாமலிருப்பதால் அந்த நாள்களில் இந்த உத்தரவு பொருந்தாது என்பதாகவே மக்கள் எடுத்துக் கொள்வர். எனவே, தீபாவளிக்கு முந்தைய நாள்களிலும் திருவிழாக் காலங்களிலும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை வரையறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டால் குழந்தைகளும், முதியவர்களும், நோய் வாய்பட்டவர்களும் அந்த நாள்களில் நிம்மதியாக உறங்க முடியும்.
எம். ஜோசப் லாரன்ஸ், 
சிக்கத்தம்பூர் பாளையம்.

தேவையற்றது
உத்தரவு சரியல்ல. பல ஆண்டுகளாகவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தாக்கத்தால், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறைந்து கொண்டேதான் வருகிறது. தொலைக்காட்சியில் விளம்பரங்கள் வரும்போதுதான் பட்டாசு சத்தத்தை நாம் கேட்க முடிகிறது. இந்தச் சூழலில் இரவு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவு தேவையற்றது. வருடத்தில் ஒரு நாள் வரும் தீபாவளியன்று பகல் நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க சிறுவர்கள் விரும்புவர். மேலும்இரவில் பாதுகாப்பும் இருக்காது.
கி. சந்தானம், மதுரை.

ஏற்க வேண்டும்
ஆன்லைன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சீனப்பட்டாசுகள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. மேலும் நம் நாட்டு பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் நலனும் பாதுகாக்கப்படுகின்றது. குறைந்தளவு மாசு தரும் பசுமை பட்டாசுகளுக்கு வரவேற்பு தந்திருப்பதும், அதிக சத்தம், குப்பை மற்றும் காற்றை மாசுபடுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதித்திருப்பதும் தீர்ப்பின் நல்ல அம்சங்கள். பட்டாசுகளே வெடிக்காத ஊர்களும் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் நலன் பேணல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீர்ப்பை ஏற்று கொள்ள வேண்டும்.
ஆர். விஜயலட்சுமி, சிவகங்கை.

நெருடல்
இந்த உத்தரவு சரியல்ல. நாம் இதுவரை தீபாவளி அன்று விடியற்காலையில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வுடன் தீபாவளியைக் கொண்டாடி வந்து இருக்கிறோம். இப்போது தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவு மனதை நெருடுகிறது. காலங்காலமாய் நடைமுறையில் இருக்கும் வழக்கத்தை மாற்றவது ஏற்புடையது அல்ல. இதே இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிப்பதை காலை நேரத்தில் அனுமதிக்கலாம்.
என். சண்முகம், திருவண்ணாமலை.


ஈடு இணைஏதுமில்லை
நீதிமன்ற ஆணை ஏற்புடையதல்ல. தீபாவளிப் பண்டிகையில் மட்டுமே பட்டாசு வெடிக்கும் நிகழ்வு உண்டு. இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது. பட்டாசு வெடித்து சிறியவர்கள் அடையும் உற்சாகத்துக்கு ஈடுஇணை ஏதுமில்லை. நீதிமன்ற ஆணை, காற்று மாசு பட்டாசு வெடிப்பதால் அதிகமாகிறது என்கிறது. வருடத்தில் ஒருநாள் மட்டுமே பட்டாசு வெடிப்பதால் எந்த தீமையும் ஏற்பட்டு விடப் போவதில்லை. இதை விட வாகனங்கள் வெளியிடும் புகையாலும், ஆலைக்கழிவு புகையாலும் காற்று மிகவும் மாசடைகிறது. பட்டாசுத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் பிழைக்கின்றன. எனவே, எந்த விதத்தில் பார்த்தாலும் பட்டாசு வெடிக்க கால வரம்பு ஏற்புடையதல்ல.
மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

அவலம் மாறும்
நேரம் குறைப்பால் பட்டாசு விற்பனை குறையும் என்பது முக்கியமன்று. மனித நலன் உறுதிச் செய்யப்படுவதே முக்கியம். வட இந்தியாவில், புகை மாசு காரணமாக, முகமூடி அணிந்தே குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இந்த அவலம் இனி மாறும். பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நிம்மதி கிடைத்துள்ளது. அதோடு, தீயணைப்பு வீரர்களும், காவல் துறையினரும் குறிப்பிட்ட அந்த நேரத்தில் சிறப்பாகக் கடமையாற்ற முடியும். அதனால் உத்தரவு மிகச் சரி!
அரிமதி இளம்பரிதி, 
புதுச்சேரி.

ஏன் வரையறை?
தீபாவளி அன்று இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவு சரியல்ல. ஆண்டுக்கு ஒருமுறை வரும் கேளிக்கைக்கு ஏன் வரையறை? மனித உயிர்களுக்கு ஆபத்தும், சுற்றுச்சூழல் பாதிப்பும் எதில்தான் இல்லை? ஆபத்தில்லாத வகையில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பதால் என்ன தவறு? இந்த உத்தரவால் பட்டாசுத் தொழில் பாதிக்கும். பணியாளர்கள், முதலீடு செய்பவர்களின் குடும்பத்தை மனதில் கொண்டு கால எல்லை வகுத்தல் நல்லது.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

சாத்தியமல்ல
இந்த உத்தரவு சரி அல்ல. மக்கள் இதனை கடைப்பிடிக்க மாட்டார்கள். இதனால் காவல் துறைக்கும் மக்களுக்கும் பல இடங்ககளில் மோதல் ஏற்படும். ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி பண்டிகை. அதில் பட்டாசுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரியவர்கள் மட்டுமின்றி சிறார்களும் பட்டாசு மத்தாப்பு கொளுத்தி மகிழ்ச்சி அடைவதுதான் தீபாவளி பண்டிகை. இதில் இரண்டு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்மென்பது நடைமுறைக்கு சாத்தியமாகாது.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

காற்று மாசு குறையும்
தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது சரியே. மகிழ்ச்சியை வெளிப்படுத்த விழாக்காலங்களில் வெடி வெடிக்கிறோம். இம்மகிழ்ச்சி துயரமாகி விடக் கூடாது. இதனால் வரும் தீமைகளை இளைஞர்களும் சிறுபிள்ளைகளும் உணர்வதில்லை. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் பிற இடங்களில் வெடிக்கப்படும் சத்தத்தை விடத் தங்கள் வெடியே அதிக சத்தமாக இருக்க வேண்டும் என்பதே. குறிப்பிட்ட நேரம் நிர்ணயிப்பதால் அனைத்து வகைப் போக்குவரத்தையும் அந்நேரத்தில் குறைந்துக் கொள்ளலாம். இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். காற்று மாசு ஒலிமாசு, குப்பை சேருதல் ஆகியவனவும் குறையும்.
கி. பாஷ்யம், சலுப்பை.

நியாயம்
மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க பட்டாசுத் தொழிலும் வளர்ச்சியடைந்து, எதற்கெடுத்தாலும் பட்டாசு என்றாகி விட்டது. ஆனாலும் தீபாவளியன்று காலையிலிருந்து இரவு வரை வெடிக்கலாம் என்று நமது பழங்கால பழக்க வழக்கங்களையொட்டி உத்தரவு இருந்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். மற்ற கொண்டாடங்களில் பட்டாசுகளில் பயன்பாடுகளை குறைக்க ஆவன செய்தாலே, சுற்றுச்சூழலுக்கு பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
கே. ராஜேந்திரன், முடிகண்டநல்லூர்.

கசப்பான உண்மை
இது அவசரகதியில் வழங்கப்பட்ட உத்தரவாகத் தெரிகிறது. இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை பட்டாசு வெடித்தால் விபத்து எதுவும் ஏற்படாதா? அந்த நேரத்தில் நோயாளிகள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் இருக்க மாட்டார்களா? அண்மைக்காலமாக அளிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை குற்றமல்ல, முறையற்ற உறவு கிரிமினல் குற்றமல்ல, சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாம் போன்ற தீர்ப்புகளோடு இந்த தீர்ப்பும் சேர்ந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை குறைந்து வருகிறது என்பது கசப்பான உண்மை.
இப்னுகலந்தர் மழாஹிரி, காயல்பட்டினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com