Enable Javscript for better performance
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட்' அணிய வேண்டியது கட்டாயம் என்று உத்தரவிட்டி- Dinamani

சுடச்சுட

  

  இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட்' அணிய வேண்டியது கட்டாயம் என்று உத்தரவிட்டிருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 05th September 2018 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மிகவும் சரி
  இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட்' அணிய வேண்டியது கட்டாயம் என உத்திரவிட்டிருப்பது மிகவும் சரியே. பின்னால் அமர்ந்திருப்பவரும் மனிதர்தானே! அவர் கீழே விழுந்தாலும் அடிபடுமே! அதுவும் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவருக்கு கூட விபத்து நேரிடப் போவது தெரிந்து, தன்னைக் காப்பாற்றி கொள்ள முயல்வார். பின்னால் அமர்ந்திருப்பவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அவரை காப்பாற்ற இது போன்ற ஹெல்மெட்' தான் உதவும். தலை கவசம் உயிர் கவசம்' என்பது உண்மை என்றால் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட்' அணிய வேண்டியது கட்டாயம்!
  உஷா முத்துராமன், மதுரை.

  தவிர்க்க இயலாதது
  இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும்போது அமர்ந்திருக்கும் இருவருமே பாதிக்கப்படுகின்றார்கள். கீழே விழும்போது முதலில் அடிபடுவது தலைப்பகுதியாகத் தான் இருக்கும். உடற்பகுதிகள் பாதிக்கப்பட்டாலும் குணமாக்க வசதிகள் உண்டு. தலைப்பகுதி பாதிக்கப்பட்டால் உடனடியாக உயிரிழப்பும், குறிப்பிட்ட நேரத்திற்குள் முதலுதவி கிடைக்கவிட்டால் அதனால் உயிர் இழப்பும் ஏற்படுவது தவிர்க்க இயலாது. விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்று அடிபட்டு இறந்தவர்களே அதிகம். எனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மிகமிகச் சரியே.
  அ. கருப்பையா, பொன்னமராவதி.

  விற்பனை கூடும்
  ஹெல்மெட் அணிந்தால் மட்டும் உயிர் சேதம் ஆகாது என்பது கூற முடியாது. அவசரத்தில் வழியில் நிற்கும் நண்பர்களை ஏற்றி செல்ல முடியாது. அவர்களுக்கும் ஹெல்மெட் ஒன்று தனியாக வைத்திருக்க வேண்டிய கட்டாயமாகும் சட்டம் போடலாம். அதனை நடைமுறைப்படுத்துவதுதான் சிக்கல். கண்காணிப்பது மிக கஷ்டம். ஹெல்மெட் வியாபாரிகளுக்கு இந்த உத்தரவால் விற்பனை கூடும். காவல்துறை பணியாளர்களுக்கு வருமானம் கூடும். வேறு பயன் எதுவும் விளையப் போவதில்லை.
  பத்மபிரபா, திருநின்றவூர்.

  விபத்து குறையும்
  இந்த உத்தரவு சரியே. பின்னால் அமர்ந்திருப்பவரின் உயிரும் ஓட்டுநரின் உயிருக்கு நிகரானதுதான். விபத்து என்பது இருவருக்குமே பொருத்தக் கூடியதுதான். இது கட்டாயமாக்கப்பட்டால் லிப்ட்' கேட்பதும், அதனால், எழும் விபத்துச் சாத்தியக் கூறுகளும் குறையும். ஒரே இருசக்கர வாகன்த்தில் மூவரோ நால்வரோ பயணம் செய்வது குறையும். மொத்தத்தில் விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.
  ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

  காட்டில் மழை
  தலைக்கவசம் பாதுகாப்புத் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வாகனம் செல்லும் சாலைக்குத் தலைக்கவசம் உள்ளதா? குண்டும், குழியுமான பல்லாங்குழி ஆகிப்போன சாலைகள்தான் எங்கும் இருக்கின்றன. சாலைகளைச் செப்பனிடாதவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்? தலைக்கவசம் அணிவது பயணிப்பவருக்குப் பாதுகாப்போ இல்லையோ அதன் பேரைச் சொல்லி போக்குவரத்துப் போலீசாரின் காட்டில் மழை. தலைக்கவசம் போடாமல் வருபவர்களுக்குத் தண்டனைக்குப் பதில் பணம் பெற்று தரமான தலைக்கவசம் வழங்கலாமே. எல்லாம் இலவசமாகிப் போன காலத்தில் தலைக்கவசத்தையும் இலவசமாகக் கொடுக்க அரசு முன் வரலாமே.
  எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

  நடைமுறை சாத்தியமல்ல
  இந்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள பலரும் குறைந்த தூரம் பின்னால் அமர்ந்து பயணிக்க ஹெல்மெட் வாங்க வேண்டுமென்பது நடைமுறை சாத்தியமற்றது. அதிக தூரப் பயணங்களுக்கு யாரும் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை. குறைந்த தூரம் அவசர வேலை காரணமாக, லிப்ட்' கேட்டு செல்பவர்கள் கையில் ஹெல்மெட்டோடு காத்திருக்க முடியுமா? மேலும், சாலை விபத்துகளுக்கு காரணமாக உள்ள தரமற்ற சாலைகளை சீரமைப்பது, சாலை விதிகளை கடுமையாக்குவது போன்றவற்றை முறையாக செய்தாலே விபத்துக்கள் குறையும்.
  பொன். கருணாநிதி, கோட்டூர்.

  பேதமில்லை
  இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது சரியே. விபத்தின் போது அதிக காயங்களோ, சேதமோ இல்லாமல் காப்பாற்றப்படவே ஹெல்மெட் கட்டாயமாகிறது. விபத்திற்கு முன் இருக்கை, பின் இருக்கை என்கிற பேதமில்லை. விபத்தில் இருவருமே பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். சில நேரங்களில் வாகன ஓட்டிகளைவிடப் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கே பாதிப்புகள் அதிகம். வாகனம் தூக்கி எறியப்படும் சமயங்களில் பின்னால் இருப்போர் மரணமடையவும் நேரிடுகிறது.
  கி. பாஷ்யம், சலுப்பை.

  அவசியம்
  இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் மிகவும் சிறப்பிற்குரியது. ஏனெனில், விபத்து ஏற்படும் போது அதிகமாக முதலில் தாக்கப்படுவது தலைப்பகுதிதான். இருவருக்குமே அந்த ஆபத்து உள்ளது. தலைப்பகுதி பாதிக்கப்படும்போது உடலின் அனைத்து இயக்கங்களும் நின்று விட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே இரு உயிர்களும் பாதுகாப்புப் பெற, இச்சட்டம் அவசியமே.
  எஸ்.எஸ். ஏ.காதர், காயல்பட்டினம்.

  பாதுகாப்பு
  சாலைகளில் செல்லும் நான்கு சக்கர வண்டிகள், வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி அங்குமிங்குமாக ஓடி, வாகனத்தில் பயணிப்போரும், எதிரே வாகனங்களில் பயணிப்போரும் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பான பயணத்திற்கு இரு சக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் ' அணிந்து செல்ல வேண்டும் என்பது சரியே.
  ச. கிருஷ்ணசாமி, மதுரை.

  கடமை
  விபத்துகளின்போது ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் இருவருமே சமயங்களில் பலமாகப் பாதிக்கப்பட்டு உயிர்ச் சேதம் அடையவும் வாய்ப்புண்டு. எனவே யாவும் நம் பாதுகாப்பிற்கே என்ற உணர்வில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட்' அணிய வேண்டியது கட்டாயம் என்ற உத்தரவினை மதித்து நடப்பதே நம் கடமையாகும்.
  என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

  அபத்தம்
  அபத்தமான உத்தரவு அவசர, அவசியத்திற்கு முதியோர், பெண்கள் ஆகியோரை பின்னால் அமர வைக்கக் கூடிய சூழ்நிலையில் ஹெல்மெட்' அணிவதில் பல சிரமங்கள் உள்ளன. நோயின் கடுமையால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு பின்னால் அமர்த்தி அழைத்துச் செல்லும் போது ஹெல்மெட் அணிவிக்க இயலாது. இந்த உத்தரவினால் பயனடையப் போவது போக்குவரத்து காவல்துறையும், ஹெல்மெட் நிறுவனங்களும்தான்.
  உ.இராசமாணிக்கம், கடலூர்.

  முறையற்ற பயிற்சி
  வாகன விபத்துகளில் ஏற்படும் அதிகமான உயிர் இழப்பிற்குக் காரணம் ஹெல்மெட் அணியாததே. மேலும், அதிகரித்துள்ள இரு சக்கர வாகனங்களும், ஓட்டுபவரின் முறையற்ற பயிற்சியும், எதிரே வரும் வாகன ஓட்டியின் அதிக வேகமும், அலட்சிய போக்கும்தான் விபத்துக்குக் காரணமாகின்றன. மனித உயிர் இழப்புக்கு ஹெல்மெட் அணியாததே முதன்மை காரணமாய் இருக்கிறது. வாகனத்தை ஓட்டுபவர், பின்னால் இருப்பவர் இருவரும் ஹெல்மெட் அணிவதன் மூலம், எதிர்பாராத விபத்தால் ஏற்படும் அதிக உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.
  ஆர். விஜயலட்சுமி, சிவகங்கை.

  இலவசம்
  இது நடைமுறையில் சாத்தியமே இல்லை. அடிக்கடி ஏன் சாலை விபத்துகள் நடக்கின்றன, அதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை முதலில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மக்கள் செல்லும் சாலைகள் பயணிக்கும் வண்ணம் இருக்க வேண்டுமென உத்திரவிட்டிருந்தால் பாராட்டலாம். அதை விட்டு விட்டு தனிநபர் மீதே சட்டம் பாய்ந்தால் நகைப்புத்தான் வருகிறது. ஹெல்மெட் இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசே தரலாமே! 
  சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

  கட்டாயம் கூடாது
  இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என்று உத்தரவிட்டிருப்பது சரியல்ல. ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டியது அவசியம்தான். ஆனால், பின்னால் அமர்ந்து செல்பவரைக் கட்டாயப்படுத்த வேண்டாம். பாதுகாப்புக் குறித்து இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவர் இருபக்கமும் கால்களைக் போட்டு அமர்ந்தாலே பாதுகாப்பானது. மேலும், பின்னால் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். 
  ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai