Enable Javscript for better performance
ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று அறிவிக்கப்பட்டிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்கள- Dinamani

சுடச்சுட

  

  ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று அறிவிக்கப்பட்டிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 19th September 2018 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரும்புள்ளி
  ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று அறிவிக்கப்பட்டிருப்பது நம் இந்தியப் பண்பாட்டையே சிதைக்கும் செயல். இது போன்ற அறிவிப்புகள் பல கலாசாரச் சீர்கேடுகளை ஊக்குவிக்கவும், நாளடைவில் அவற்றை அங்கீகரிக்கவும் காரணமாகி விடும். ஒருவனுக்கு ஒருத்தி' எனும் உயர்ந்த பண்பாட்டால் ஆண், பெண் இருவரும் தலைநிமிர்ந்த வாழ்க்கை முறையில் ஒரு கரும்புள்ளி விழுந்தது போல் உள்ளது. மேலை நாட்டுக் காலாசாரத்தை நம் நாட்டோடு ஒப்பிட்டு அறிவித்திருப்பது சரியானதன்று.
  அ. கருப்பையா, பொன்னமராவதி.

  சரியல்ல
  ஐந்தறிவுடைய பறவை, விலங்குகளிடம் கூட இல்லாத இத்தகைய செயலை ஆறறிவுடைய மனித இனம் ஏற்பது இயற்கைக்கு முரணானது. பல பிறவிகளைக் கடந்து அடையப் பெற்றதே மேலான மனிதப் பிறப்பு. அதே சமயம், பிற பிராணிகளிடம் இல்லாத கீழான இச்சைகளுக்கு அடிமையாவதும் இதே மனிதப் பிறப்பே என்பது விந்தையாக இருப்பதோடு வேதனையாகவும் உள்ளது. மனித இனத்தின் மாண்பைக் குலைக்கும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதும், அது குற்றமல்ல என அறிவித்து அதை ஊக்கப்படுத்துவதும் சரியல்ல.
  வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.

  இயல்பூக்கம்
  இந்த அறிவிப்பு சரியானதுதான். பாலுணர்வு என்பது உயிர்களின் தோற்றமான மூலாதாரச் செயலுக்கான இயல்பூக்கமாகும். அது, மனிதர்கள், விலங்குகள், ஊர்வன, பறப்பன அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள உணர்வாகும். இச்செயலுக்காண இயற்கை செயல்பாடுகளை உணர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் ஒரினச்சேர்கையை அங்கீகரித்துள்ளன. இது குற்றச் செயலானதல்ல என்ற நிலையில் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று அறிவிக்கப்பட்டிருப்பது சரியே.
  மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

  நியாயமல்ல
  இது பாரதத்தின் பண்பாட்டிற்கு எந்த வகையிலும் ஒவ்வாத அறிவிப்பு. மேலை நாடுகளில் வேண்டுமானால் ஓரினச் சேர்க்கை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். அந்நாட்டினரின் பண்பாடு நம்மிலிருந்து வேறுபட்டது. அதன் அடிப்படையில் இந்தியப் பண்பாட்டை கேவலப்படுத்துவது எந்த வகையிலும் நியாமல்ல; ஏற்புடையதும் அல்ல. இந்த அறிவிப்பு மேலும் பல அவலங்கள் நிகழ வழிகோலுவதுடன் நம் புனிதமான பண்பாட்டையும் அடியோடு சிதைத்துவிடும்.
  டி.ஆர். பாஸ்கரன், திண்டிவனம்.

  விழுமியங்கள்
  பாலுணர்வு என்பது குறிப்பிட்ட பருவத்தில் தவிர்க்க முடியாத உணர்வு. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடாது. பால்வினை நோயைக் கருதியே ஒருவனுக்கு ஒருத்தி' என்ற பண்பாட்டை நாம் கடைப்பிடிக்கிறோம். உறவு முறையில் மட்டுமே பெண் எடுப்பது, கொடுப்பது என்பது நமது முறை. இவையெல்லாம் சில ஒழுக்க விழுமியங்களின் அடிப்டையில் ஆனவை. ஆணும் -பெண்ணும் இணைவதே வாழ்க்கை. இந்த அறிவிப்பை எவ்விதத்திலும் ஏற்க முடியாது.
  கி. பாஷ்யம், சலுப்பை.

  தீய ஒழுக்கம்
  இது இயற்கைக்கு முரணானது. உயிரினங்கள் அனைத்திலுமே ஆணோடு பெண் சேர்வதால்தான் உலகம் நல்ல முறையில் இயங்குகின்றது. விலங்குகளுக்கு இருக்கக் கூடிய இல்லற ஒழுக்கம் கூட மனித இனத்திற்கு வேண்டாம் என்று கூறுவது தீய ஒழுக்கத்தையே உருவாக்கும். மக்களில் யாரோ ஒரு சாராருக்கு இருக்கக் கூடிய விரும்பத்தகாத செயலை மக்கள் இனத்திற்கே பொதுவாக்குவது வருங்காலத்தில் பெருந்தீமையை விளைவிக்கும்.
  அரு. சுந்தரேசன், வேலூர்.

  கால மாற்றம்
  இந்த அறிவிப்பு சரியே. வரலாற்றை படிக்கின்ற போது தன் பாலின காதலர்களாக பலர் இருந்திருப்பதை அறிய முடிகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளில் தன்பாலின காதலர்களுக்கு அங்கீகாரமும் திருமணம் செய்து கொள்ளும் உரிமையும் அளித்து இருக்கின்றன. தற்போது நம் நாட்டிலும் அங்கீகாரம் கிட்டியிருப்பது வரவேற்றதக்கது. தனது விருப்பபடி வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இதனால் நாம் பண்பாடு சீரழிவு அடைந்து விடாது. கால மாற்றத்திற்கு ஏற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டும்.
  என். சண்முகம், திருவண்ணாமலை.

  ஏற்க இயலாது
  இந்தியப் பண்பாட்டின் உயர்வு கண்டு பிற நாட்டவர் நம்மை மதிக்கத் தொடங்கியிருக்கும் கால கட்டத்தில் இந்தியர்களாகிய நாமோ நாகரிகம் என்ற போர்வையில் அவர்களது பண்பாட்டை ஏற்கத் தொடங்கியுள்ளோம். ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் உன்னத வாழ்வியலுக்கு ஓரினச் சேர்க்கை எதிரானது. தீராத நோயாகக் கருதப்படும் எய்ட்ஸ் நோய் பரவுவதில் ஓரினச் சேர்க்கைக்குக் கணிசமான பங்குண்டு. இந்த மருத்துவ அறிக்கைக்குப் புறம்பானதாக அறிவிப்பு அமைந்துள்ளது. தனி மனித ஒழுக்கச் சிதைவிற்கு வழிவகுக்கும் இந்த அறிவிப்பை மனித நேயவாதிகளால் ஏற்க இயலாது.
  எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

  இயற்கை முரண்
  இது பாரத பண்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் அறிவிப்பாகும். ஆண்- பெண் என்பது பகல்- இரவு போன்று எதிரெதிர் தன்மை கொண்டதாகும். ஆணும், பெண்ணும்தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்பதை உணர்த்துவதற்காகத்தான் மாதொருபாகனா நின்று இறைவன் காட்சியளிக்கிறான். இயற்கை முரணாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல. இது மறு பரிசீலனைக்குரியது.
  உ. இராசமாணிக்கம், கடலூர்.

  பண்பாட்டுச் சிதைவு
  ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று அறிவிக்கப்பட்டிருப்பது சரியல்ல; தவறானதாகும். பறவைகள், விலங்குகள் கூட ஆண்-பெண் என்ற இன உணர்வுடன்தான் சேர்கையில் ஈடுபடுகின்றன. ஆனால், மானுட இனம்தான் சீர்கேடு அடைந்துள்ளது. ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரினச் சேர்க்கை என்பது ஒழுக்கக் கேடு ஆகும். தமிழினமே மானுட இனத்துக்கு எடுத்துக்காட்டான இனம் ஆகும். இந்த அறிவிப்பு ஒரு பண்பாண்டுச் சிதைவு ஆகும். 
  ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

  அவசியமில்லை
  ஓரினச் சேர்க்கையாளர்கள் மொத்த ஜனத்தொகையில் மிக மிக குறைவானவர்கள். இவர்கள் உரிமையை மதிக்கிறோம் என்று சட்டத்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சட்ட அங்கீகாரம் கிடைத்துவிட்டால் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மதுக் கடைகளை திறந்து மது குடிப்பவர்களின் எண்ணிக்கையை மிகவும் உயர்த்தியது போல இதுவும் ஆகிவிடும். எங்கோ ஒளிவு மறைவாக இருந்தது வெளிப்படையாக ஆகிவிடும். இந்த அறிவிப்பு தவறு.
  த. யாபேத் தாசன், பேய்க்குளம்.

  இந்தியப் பண்பாடு
  இந்த அறிவிப்பு மறுபரிசிலனை செய்ய வேண்டிய ஒன்று. விலங்குகளுக்கு உறவுமுறை கிடையாது. ஆனால், மனித இனத்திற்கு உறவு முறை உண்டு. விலங்குகளுக்கு ஒழுக்கம் கிடையாது. ஆனால், மனித இனத்திற்குத்தான் நீதி நூல்களும், அறநூல்களும் உள்ளன. இந்தியப் பண்பாடு அயல் நாட்டின் பண்பாட்டினை விட, மேம்பட்டது. மனித இனத்தில் ஒழுக்கம் இல்லை எனில், சமுதாயம் கெட்டுவிடும்.
  கே. ஆனந்த நாராயணன், கன்னியாகுமரி.

  தவறான கோட்பாடு
  இந்த அறிவிப்பு வருங்காலத்தில் மறைமுகமான பல்வேறு ஒழுக்கக் கேடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் போக்குகளுக்குச் சாதகமாக அமைந்து விடக் கூடும். திரைமறைவிலும், மறைவிடங்களிலும் நடக்கும் பல அசிங்கங்கள் தனிமனித உரிமைகளே என வாதிடும் தவறான கோட்பாட்டுக்கு பச்சைக் கொட்டி காட்டி விடக் கூடாது. இயற்கைக்கும் சமூகக் கட்டுக்கோப்புக்கும் முரணான பல நடத்தைப் பிறழ்வுகளைத் தனிமனித உரிமை என அங்கீகரிப்பது நல்லதல்ல.
  ச. கந்தசாமி, இராசாப்பட்டி.

  ஆன்மிக மரபு
  ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பண்பாட்டுக்கு வேண்டுமானால் ஓரினச் சேர்க்கை சரியானதாகும். இந்தியப் பண்பாடு ஆண்-பெண் சேர்க்கையையே தாம்பத்ய உறவென்று அர்த்தப்படுத்துகிறது. பாலுணர்வுக் கவர்ச்சியினால் உந்தப்பட்டு ஆண்,பெண் மீதும் பெண்,ஆண் மீதும் ஈர்க்கப்படுதலே காதலாகும். இந்திய அறநூல்கள் காட்டும் வாழ்க்கை விழுமியங்கள்படி பார்த்தால், ஓரினச் சேர்க்கை சமூகத்தால் ஏற்கத் தக்கதன்று. எனவே அதை நியாயப்படுத்துவது இந்திய ஆன்மிக மரபுச் 
  சூழலில் தவறானதாகும். 
  செ. எழில்வளவன், அரியலூர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai