வாக்குக்குப் பணம். தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வாக்குக்குப் பணம். தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

திருடராய் பார்த்து...
நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல், தேர்தல் திருடர்கள் இரண்டு பக்கமும் இருக்கிறார்கள். ஒன்று, வாக்குக்குப் பணம் கொடுப்பவர்; இன்னொன்று, வாக்குக்காக அந்தப் பணத்தைப் பெறுபவர் ஆவார். பட்டுக் கோட்டையார் பாடல் வரிகள் சொல்வதுபோல், திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுதான் தீர்வாகும்.
கோதை மாறன், திருநெல்வேலி.

கண்காணிப்பு தேவை
வாக்காளர்கள் தங்கள் மனசாட்சிப்படி பணம் வாங்காமல் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். அதுதான், உண்மையான ஜனநாயகம். பணத்தை வாக்காளர்கள் மறுக்க வேண்டும். பணம் கொடுக்க வருபவரைப் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை தேர்தல் அதிகாரிகளும் இரவு, பகலாக அரசியல்வாதிகளைக் கண்காணிக்க வேண்டும்.
எஸ்.பரமசிவம், மதுரை.

எப்போது மாறும்?
வாக்குக்கு பணம் கொடுப்பதையோ அதை வாங்கும் மக்களையோ அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. ஆட்சிக்காலத்தில் அரசியல்வாதிகள் நேர்மைக்குப் புறம்பாக சம்பாதிக்கக் கூடிய பணத்தை தேர்தல் காலத்தில்தான் பெற்றுக் கொள்ள முடியும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைப் பெறுவதும் தவறில்லை என்று அதை ஆமோதிக்கும் நிலைதான் 
உள்ளது. வாக்குக்குப் பணம் பெறுவது தவறு என்ற நிலை எப்போது மாறும் என்றால், மக்களின்  பொருளாதார நிலை உயர்ந்தால் அவர்களே தவிர்ப்பார்கள் என்று நம்பலாம்.
ப.சுவாமிநாதன், சென்னை.

தீர்வு என்ன?
வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றியை உறுதியாக்கிய திருமங்கலம் ஃபார்முலா, பின்னாளில் பல தேர்தல்களின் வெற்றிக்கான வித்தாக அமைந்தது. தேர்தல் ஆணையம் எத்தகைய கட்டுப்பாடுகளை விதித்தாலும் புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி, பணத்தைத் தாராளமாக விநியோகித்து விடுகின்றனர். கட்சியினர் பணம் கொடுப்பதை நிறுத்தி, வாக்காளர்கள் பணம் வாங்குவதை நிறுத்தி, மனம் திருந்துவது ஒன்றுதான் இதற்கான தீர்வாகும்.
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

தேவை பறிமுதல்!
2019 தேர்தல் காலகட்டத்தில் அரசியல் என்பது முதலீடு, வியாபாரம். வேட்பாளர்களின் பார்வையில் வாக்காளர்கள் அனைவருமே விற்பனைப் பொருளாகத் தெரிகின்றனர். வாக்காளர்களை வேட்பாளர் விலை பேசுவது ஆதாரதத்துடன் தெரிந்ததுமே வேட்பாளரின் அசையும், அசையா சொத்துகளை தேர்தல் ஆணையமே அதிரடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். அப்படியிருந்தால், ஜனநாயகத்தை விலை பேசும் நிலை நிற்கும்; கொடுப்பவர் இருப்பதால் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.
இ.ராஜூ நரசிம்மன், சென்னை.

இளம் தலைமுறையினரே...
வாக்குக்குப் பணம் அளித்து, தூண்டில் புழு போல மக்களை மயக்குகின்றனர். இவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவர்கள் வென்றால் பணநாயகம்தான் வெல்லுமே தவிர, ஜனநாயகம் வெல்லாது. இன்று இளம் தலைமுறையினரின் வாக்கு வங்கிகள் அதிகம். ஆக, இளம் தலைமுறையினர் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரை, தேர்தல் குறித்த விழிப்புணர்வு பாடம் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.
ஆச்சி மணிகண்டன், 

சாம்பவர் வடகரை.
தேவை கடுமை...
எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கி விடும் என ஒரு பழமொழி உண்டு. இது கிராமப்புறங்களில் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தையும்கூட. அதுபோன்று வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதியை முதலில் தடுக்க நீதிமன்றம் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.  வாக்குக்குப் பணம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை பொதுமக்கள் பார்வையில் வைக்க வேண்டும்.
கீதா முருகானந்தம், 
கும்பகோணம்.

தேவை சட்டம்!
 வாக்குக்குப் பணம் தரும் வேட்பாளர் பிடிபட்டால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் வாக்காளர் பணம் பெறுவது தெரிந்தால் அந்த வாக்காளரின் குடும்பத்தினரின் வாக்குரிமை 10 ஆண்டுகளுக்கு பறிக்கப்படும் என்றும் கடுமையான சட்டம் நிறைவேற்ற வேண்டும். இதுதான் தீர்வு!
த.சத்தியநாராயணன், சென்னை.

நிபந்தனை தேவை!
அரசியல் பொது வாழ்க்கைக்கு வருபவர்களுக்கு, முதலில் கல்வித் தகுதி வயது வரம்பு கால அளவு, அதாவது கட்சிப் பதவியானாலும் ஆட்சிப் பதவியானாலும் ஐந்தாண்டுகளுக்கு மேல் அனுமதியில்லை என்ற சட்டம் இயற்றப்பட்டு அது செயல்பட்டால்  வாக்குக்குப் பணம் என்ற ஏமாற்று வித்தை நிச்சயம் மறையும்.
இ.சேசுதனசாமி, திருநெல்வேலி.

தவிர்ப்பதுதான்...
ஆளத் தகுதியான தரமான நபரை, தான் தேர்வு செய்ய உள்ள அற்புதமான வாய்ப்பே வாக்குரிமை. அதற்குப் போய் பணம் பெறுவது  என்பதை அசிங்கமாக நினைத்து ஒவ்வொரு நபரும் அதைத் தவிர்ப்பது ஒன்றே தீர்வாகும். தன் வாக்குக்குப் பணம் பெறுவது தன்னையே விற்பதற்கு நிகர். எனவே, வாக்குக்குப் பணம் பெற மாட்டேன் என மக்கள் மனதில் ஒரு புரட்சி வெடித்தால்தான் பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் திருந்துவார்கள்.
வே.வரதராஜன், மகாஜனம்பாக்கம்.

நிராகரித்தால்...
தங்கள் வாக்கின் மதிப்பு தெரியாதவர்கள் பணம் என்ற மாயையில்  சிக்கி விடுகின்றனர். நாம் அச்சடித்த பணம் நம்மை அச்சமடையச் செய்யும் அளவுக்கு உயர்ந்துவிட்டது வேதனையான விஷயம். வரம் கொடுத்தவன் தலை மீதே கை வைத்து வரம் பயனளிக்கிறதா என்று சோதிப்பது போன்று, நாம் படைத்த பணம் நம் மீதுள்ள நம்பிக்கையினை உடைத்துவிட்டது. பணம் கொடுத்தால் நான் உங்களுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று சொல்லி நிராகரிக்க வேண்டும். இதை ஒருவர் செய்தால் அடுத்தவரும் நிச்சயம் நிராகரிப்பார். 
வாக்குக்குப் பணமா, அந்தக் கட்சியையே ஒதுக்குவேன் என உறுதியாகச் சொன்னால் நிச்சயம்  நல்ல தீர்வு கிடைக்கும்.
உஷா முத்துராமன், மதுரை.

தகுதியிழப்பு செய்தால்...
எந்தத் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதோ அதற்கு அந்தத் தொகுதி வேட்பாளரே முழுப் பொறுப்பு; எனவே, அவர் அந்தத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியை இழந்து விடுவார் என்று தேர்தல் ஆணையம் கடும் விதியை அமல்படுத்தினால் இந்த நிலை மாற வாய்ப்புண்டு. அதுதான் நிரந்தரத் தீர்வு.
நூ.அப்துல் ஹாதிபாகவி, சென்னை.

பணம் பெறாமல்...
வாக்குச் சீட்டு என்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமானது. பணத்துக்காக வாக்குகளை விற்கக் கூடாது. ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். பணம் பெறாமல் வாக்குகளைச் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் பணம் பெறாமல் வாக்குகளைச் செலுத்தினால் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும்.
த.சேரன், கொளப்பாடு.

நல்லவர்களுக்கு...
வாக்களிப்பது நமது உரிமை. அந்த உரிமையை பணத்துக்காக நாம் விற்கக் கூடாது. நல்லவர்களுக்கு வாக்களிப்போம். படித்தவர்கள் வாக்களிக்க வர வேண்டும். வாக்குக்காக பணம் அளிக்கப்படுகிறது என்றால் தயவு தாட்சண்யமின்றி வேட்பாளரை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடக்கும்.
வி.கண்ணகி செயவேலன், 
அரக்கோணம்.

எச்சரித்தால்...
 பணம் வாங்குவது ஒரு குற்றம் என்று நன்கு தெரிந்தே  செய்வது மாபெரும் தவறே. வாக்குக்குப் பணம் வாங்கக் கூடாது என்ற மனக்கட்டுப்பாடு இருந்தால் எவ்வாறு அவர்கள் பணம் கொடுப்பார்கள். பணம் கொடுத்தால் நோட்டாவுக்கு வாக்களிப்பேன் என்று தைரியமாகச் சொன்னால் தானாகத் திருந்துவார்கள்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com