"வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வேலூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரும் திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை

சரிதான்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரும் திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.11.48 கோடி ரொக்கத்தைக் கைப்பற்றினர்.

பணப் பட்டுவாடா என்பது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரி கட்சி என எல்லோரும் செய்வது கண்கூடாகத் தெரிகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு 15 நாள்கள் கடந்த நிலையில், கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து என்பது ஆணையம் சற்றே ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறதோ என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி  தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை எனத் துரைமுருகன் கூறியது சரியே.

பி.துரை, காட்பாடி.


ஏற்க முடியாது!

துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில், வாக்குப்பதிவின்போது பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை  வருமான வரித் துறை கைப்பற்றியதன் அடிப்படையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதில் ஜனநாயகப் படுகொலை எங்கிருந்து வந்தது? தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கலாம். ஆனால் தவறு, சரியான செயலாக மாறிவிடாது.

ச.கருணாகரன், தூத்துக்குடி.


திமுகவை மட்டும்...

தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் போட்டியிடும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமான இடங்களிலெல்லாம் பணம் பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்பது உண்மையே. இது தேர்தல் ஆணையத்துக்கும் தெரியும். எதிர்க்கட்சியான திமுகவிடமே இவ்வளவு பணம் என்றால், ஆளுங்கட்சிக்காரர்களிடம் எவ்வளவு இருக்கும்? திமுகவைப் பற்றி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை. மத்திய அரசின் வழிகாட்டலில் தேர்தல் ஆணையம் நடைபெறுகிறது என்பது உண்மையாகி விட்டது. இது போன்ற நடவடிக்கை எடுக்க சூழ்நிலை பல இருந்தும் தி.மு.க.வை மட்டும் குறிவைக்கக் காரணம் என்ன? இதைத்தான் ஜனநாயகப் படுகொலை என்று அரசியல் சாயம் பூசியிருக்கிறார் துரைமுருகன்.

அ.கருப்பையா,பொன்னமராவதி. 

விலைக்கு வாங்க...

வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருப்பது அர்த்தமற்றது. தேர்தல் ஆணையம் முறைப்படி விசாரணை அறிக்கைகளையும், ஆதாரங்களையும் வருமான வரித் துறையினரிடமிருந்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவரின் ஒப்புதலுடன்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டதுதான்.தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களுடன் கட்டுக் கட்டாக விநியோகிக்க இருந்த பணத்தை, அவரது கட்சிப் பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து கைப்பற்றியது நிரூபிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் இந்தச் செயல்பாடுதான் உண்மையிலேயே ஜனநாயகப் படுகொலை.

ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.


எது படுகொலை?

பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெறும் சீர்கெட்ட கலாசாரத்தை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தியதுதான் உண்மையில் ஜனநாயகப் படுகொலை ஆகும். வாக்காளர் கையில் பணத்தைத் திணித்து, "தேர்தல் என்றால் வாக்கு; வாக்கு என்றால் பணம்' என்ற எண்ணத்தை விஷச் செடியாய் மக்கள் மனதில் வளர்த்துவிட்டனர் அரசியல்வாதிகள். மக்களின் மனதிலிருந்து அந்த விஷச் செடி வேருடன் பிடுங்கி எறியப்பட்டால்தான் ஜனநாயகம் மீண்டும் தழைக்கும். அனைத்துத் தொகுதியிலும் பணப் பட்டுவாடா நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து என்பது வியப்பை அளித்தாலும், மீண்டும் அங்கு தேர்தல் நடத்தப்படும் போதாவது, பணப் பட்டுவாடா இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியே.

வே.வரதராஜன், மகாஜனம்பாக்கம்.


நல்லதல்ல!

வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்ற துரைமுருகன் சொல்வது சரியானதே. மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஆவலுடன் இருந்த நேரத்தில், தேர்தலை ரத்து செய்தது திருமண மேடையில் அமர்ந்த மணப் பெண்ணிடம் "உன் திருமணம் நின்று விட்டது' என்று கூறும் ஏமாற்றம் போன்றது.  மறு தேதி அறிவிப்பதற்குள் எத்தனையோ மாற்றங்கள் வரலாம். தேர்தலில் நிற்பவர்கள் மக்களைக் கவர ஏதேனும் திட்டங்களைச் செயல்படுத்த நேரம் கொடுத்ததுபோல ஆகிவிடும். அறிவித்த நேரத்தில் தேர்தல் நடப்பது பல விதத்தில் சிறந்தது. இப்படி ரத்து செய்வது நல்லதல்ல.

உஷாமுத்துராமன், மதுரை.


முடிவு சரியல்ல!

வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேர்தல் ஊழல் எல்லா மக்களவைத் தொகுதிகளிலும் பகிரங்கமாகவே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் வேலூர் மக்களவைத் தொகுதி மட்டும் விதிவிலக்கல்ல. அப்படி இருக்கும்போது, வேலூர் மக்களவைத் தொகுதி மட்டும் ஊழல் மலிந்த தொகுதி என்று முடிவு எடுத்திருப்பது சரியில்லை. வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் ரூ.11.48 கோடி பறிமுதல் செய்தது தொடர்பாக எந்தத் தீர்க்கமான முடிவும் எடுக்காமல், வாக்குப்பதிவு தினத்துக்கு (ஏப்.18) முந்தைய தினம் (ஏப்.17) ரத்து முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தது சரியில்லை. 

எஸ்.பி.தசரதன், வேலூர்.


தவறுதான்!

திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக திமுக அறிவித்ததில் தவறில்லை. கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துவிட்டனர். தவறு செய்தவர், தான் தவறு செய்யவில்லை என்று உண்மையை மக்கள் முன்பு நிரூபித்து விட்டால் கவலை இல்லை. ஆனால், பெரிய ஜனநாயகப் படுகொலை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். மக்கள் கருத்து அவர் கூறியது தவறு என்பதாகும்.

கணபதி சுப்ரமணியன், 


கொடுமுடி.வெட்கம்!

திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளது வெட்கப்படக் கூடியது ஆகும். எல்லா அரசியல் கட்சிகளும் அவரவர் பங்குக்கு இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்களே. நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். குழந்தையையும் வலுவாகக் கிள்ளி அழச் செய்து, தொட்டிலையும் ஆட்டிப் பாசாங்கு செய்கிறார்கள்.தற்போதைய தேர்தலை ரத்து செய்ததால், அடுத்து நடத்தும் தேர்தல் பரிசுத்தமானதாகிவிடும் என்பது வெறும் கனவே.

ச.கந்தசாமி, தூத்துக்குடி.



விளையாட்டு!

தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகளை மறைக்கவும், தாங்கள் ஊழலற்றவர்கள் எனும் தோற்றப் பிழையை  உருவாக்கவும் ஆட்சியிலிருப்போர் அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு எதிர்க்கட்சிகளின் பணப் பதுக்கலைக் கண்டுபிடித்து தேர்தலை நிறுத்துவது "ஜனநாயகப் படுகொலை அல்ல'.  இது ஆள்பவர்களின் ஒருதலைப்பட்சமான வேடிக்கை விளையாட்டு. ஆட்சி மாறினாலும் இந்த வேடிக்கை காட்சிகள் மாறாதிருக்கும். ஆள்வோரும், ஆளத் துடிப்போரும் நடத்தும் பரமபத விளையாட்டு இது.

ஆதிலெமு, மதுரை.


சாமானியர்களுக்கும்...

வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பட்டியலிட்டுப் பதுக்கி வைத்திருந்த பணத்தைப் பறிமுதல் செய்தபின், தேர்தலை ரத்து செய்து நடவடிக்கை எடுப்பதை ஜனநாயகப் படுகொலை என்றால் பணத்தை விநியோகித்து அப்பாவி மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றால் மட்டும் ஜனநாயகம் பூத்துக் குலுங்குமா என்பதை ஜனநாயகப் படுகொலை என்று கூறுவோர்தான் விளக்க வேண்டும். எனவே, பிடிபடுபவர்கள் விடும் அறிக்கை அப்படித்தான் இருக்கும் என்பது சாமானியர்களுக்கும் தெரியும்.

கே.வேலுச்சாமி, தாராபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com