ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துவது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து கருத்துகளில் சில...

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துவது சரியா 

காரணம் என்ன?
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக அரசு மருத்துவர்கள் திடீரென ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதில்லை. முறையாக கோரிக்கை விண்ணப்பம்  சமர்ப்பித்தும் அரசிடமிருந்து உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லையெனில் அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஒருநாள் தற்செயல் விடுப்பு எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, தீர்வு கிடைக்காமல் இருந்தால் மட்டுமே கடைசியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்துகின்றனர். பிரச்னைகளை அரசு  சுமுகமாகப் பேசி தீர்க்காததே இதற்கு முக்கியக் காரணம். ஊதிய முரண்பாடுகள் எப்படி யாரால் ஏன் உருவாக்கப்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

உயிர் முக்கியம்
மருத்துவத் தொழில் என்பது காரணமான கிளார்க் வேலை போன்றதல்ல. உயிர் காக்கும் பணி. அரசு மருத்துவமனையின் பணிபுரியும் மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நிமிஷத்திலும் ஏதாவது ஓரிடத்தில் ஓர் உயிர் மருத்துவமனையில் கவனிப்பின்றி, அழிந்து போகும். எனவே, உயிர் காக்கும் பணி செய்யும் மருத்துவர்களை போராடும் நிலைக்கு விடாமல் ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் மூலம் அரசு நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். 
மேலும், ஒத்துழையாமை, வேலைநிறுத்தம் என்று மருத்துவர்களும் போராடாமல், கருப்பு பேட்ஜ் அணிதல், சிறிது நேரம் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தல் போன்ற நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாத வழியில் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கலாம். மொத்தத்தில் ஏழைகளின் உயிர் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
மா.தங்கமாரியப்பன், 
கோவில்பட்டி.

சரிதான்!
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துவது ஒருவிதத்தில் சரிதான். ஏனென்றால், இன்றைய அரசியல் சூழலில் எதுவுமே போராட்டம் நடத்தினால்தான் அவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன என்ற நிலைமை உருவாகிவிட்டதால், அரசு மருத்துவர்களில் போராட்டம் சரிதான் எனத் தோன்றுகிறது.
ரேவதி சம்பத்குமார், ஈரோடு.

தவிர்க்க வேண்டும்
வேறு எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தினாலும் மக்களின் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், புனிதமான மருத்துவத் தொழிலை மேற்கொண்டுள்ள மருத்துவர்கள் போராடத் தொடங்கினால் நோயாளிகளின் உயிரை யார் காப்பாற்ற முடியும்? எனவே, அவர்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவிக்க வேண்டும். அரசும் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும். எனவே மருத்துவர்கள் போராட்டம் தவிர்க்க வேண்டும்.
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

மருத்துவர்களும்...
அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துவது மிகவும் சரிதான். இது போராட்டம் அல்ல; தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக மருத்துவர்கள் குரல் கொடுப்பது தவறா? மத்திய அரசு ஆகட்டும், மாநில அரசு ஆகட்டும் அரசு மருத்துவர்களில் தேவைகளை அறிந்து சரிதான்  என்றால், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி முடிந்த அளவுசமரசம் செய்துகொண்டு நியாயமான தீர்வு காண்பதே நியதியாகும். மருத்துவர்களும் மனிதர்கள்தானே!
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

அரசின் கடமை!
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துவது சரியே. ஊதிய உயர்வு ஏன் கேட்கிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு எம்.எல்.ஏ., எம்.பி.க்கு ஊதிய உயர்வை மலையளவு உயர்த்திக் கொள்ள எவ்வளவு அவசர அவசரமாக சட்டம் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. 
ஆனால், உயிர் காக்கும் மருத்துவரின் கோரிக்கைகளை, ஊதிய உயர்வினை நிறைவேற்ற பலவித போராட்டங்கள் நடத்திய பிறகும் அரசு கவனத்தில் கொள்ளவில்லையெனில் அவர்களின் பணியினில் முழுமையான ஈடுபாட்டைக் காணமுடியாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உயிர் காப்பவர்களின் தேவைகளை உடனடியாக நிறைவு செய்யவேண்டியது அரசின் கடமையாகும்.
எழில் சோம.பொன்னுசாமி, 
ஆவடி.

நியாயம் அல்ல!
மருத்துவப் பணி என்பதே மனிதநேயத்தோடு மக்களுக்குச் செய்யும் மிக உன்னத சேவையாகும். அரசு மருத்துவர்கள் தங்களது ஊதிய உயர்வு கோரிக்கைகளுக்காக நியாயமான முறையில் அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதே மிகச் சரியானதாகும். அரசுப் பணியில் இருந்துகொண்டு, தனிப்பட்ட முறையில் கிளினிக் நடத்திக்கொண்டு, ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்துவது முறையானதல்ல என்பதை மருத்துவர்கள் உணரவேண்டும்.
நன்னிலம் இளங்கோவன், 
மயிலாடுதுறை.

உரிமை என்றாலும்...
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அரசின் கவனத்தைத் திருப்ப, அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துவது அவர்கள் உரிமை. 
அதே நேரத்தில், அவர்களது ஒத்துழையாமையை அரசுடன் மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் காட்ட வேண்டாம். ஏனெனில், அரசு மருத்துவமனையையும், மருத்துவர்களையும் அதிகம் நம்பி இருப்பவர்கள், பண வசதி இல்லாத ஏழை மக்கள்தான். அரசு மருத்துவர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் ஏழை மக்களின் உயிரோடு விளையாடுவதாக இல்லாதவரை சரி.
சொ.முத்துசாமி, 
பாளையங்கோட்டை.

இடையூறு இல்லாமல்...
மருத்துவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே. அவர்களுக்கும் தேவைகள், குடும்பம், சுக துக்கம் என அனைத்தும் உள்ளது. அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராட உரிமை உள்ளது. அதை நாம் விமர்சிக்க முடியாது. அவர்களின் நியாயத்தை அவர்களில் ஒருவரால் மட்டுமே சரியாக உள்ளது உள்ளபடி  உணர முடியும். ஆக, மருத்துவர்களின் போராட்டம் முறையானதுதான். ஆனால், அவர்கள் தங்கள் அத்தனை ஆர்ப்பாட்டங்களையும் நோயாளிகளுக்கு இடையூறு இல்லாமல் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் கருத்தாகும்.
இப்னு கலந்தர், காயல்பட்டினம்.

சரியல்ல...
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்துவது சரியில்லை. அரசு மருத்துவர்களில் 95 சதவீதத்தினர் அரசு அளிக்கும் ஊதியத்தில் மட்டும் பிழைப்பு நடத்துபவர்கள் இல்லை;  நேரம் ஒதுக்கி தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்கின்றனர். அரசுத் துறையில் பணியாற்றும் அனைவரும் ஊதியத்துக்குமேல் ஏதாவது வருமானம் தேடுபவர்களாகவே தமிழகத்தில் உள்ளனர். பொதுமக்கள் நம்பத் தகுந்த வகையில் கோரிக்கைகளும், போராட்ட முறைகளும் இல்லை.
ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

மாற்று வழியை...
ஊதிய உயர்வு என்பது அரசின் வருவாயுடன் தொடர்புடையது. அரசு ஊழியர்களுக்காக வருவாயின் பெரும் பங்கு செலவிடப்படுவதால் மக்கள் சார்ந்த பணி மற்றும் உள்கட்டமைப்புக்கான செலவினங்களுக்காக கடன் பெறும் நிலை தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். அரசின் கடன் தொகையும் மூன்று லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. இதைச் சரி செய்ய அரசு பலவித கோணங்களில் செயல்பட வேண்டியுள்ளது. மற்ற கோரிக்கைகளைப் பொருத்தவரை கோரிக்கைகளின் தன்மைக்கேற்ப சரி செய்யப்பட வேண்டியது அவசியம். மருத்துவர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் என்பது, நோயாளிகளின் உயிர்களோடு விளையாடுவது ஆகும். எனவே, மாற்று வழியையே மருத்துவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ச. கருணாகரன், தூத்துக்குடி.

மாணவர் சேர்க்கையே...
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தத்தான் செய்வார்கள். மருத்துவ மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையிலும் திறமையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படாதுதான் இதற்கெல்லாம் காரணம். பரிந்துரை என்ற பின்பக்க வழியால் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாலும் இவர்கள் இழந்த பணத்தை பெற ஊதிய உயர்வு என்பது அடக்கம் பெருகிறது. மருத்துவப் பணி என்பது புனிதமானது என்பது இன்றைய காலகட்டத்தில் மாறிவருகிறது. 
டி.வி. கிருஷ்ணசாமி, சென்னை.

சேவை, தர்மம்
நோயாளிகளைக் குணப்படுத்தும் மருத்துவ அறிவும், பயிற்சியும் பெற்ற மருத்துவர்கள் சரியான நேரத்தில் உரிய சிகிச்சையையோ மருத்துவமோ செய்யாமலிருந்தால் நோயாளியின் உயிருக்கு உத்தரவாதமில்லை. மருத்துவம் என்பது சேவை, தர்மம். அதன் புனிதம், அறிந்தவர்களுக்குத் தெரியும். நோயில்லா சமூகத்தை அளிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.
இ.ராஜு நரசிம்மன், சென்னை.

ஊதியத்தை...
ஊதிய உயர்வுக்கு அரசு மருத்துவர்கள் போராடுவது நியாயமற்ற செயலாகும். மக்கள் நலனில் மருத்துவர்கள் முழு கவனத்துடன் செயல்படவேண்டுமே தவிர, ஊதிய உயர்வுக்காகப் போராடுவது ஜனநாயகப் படுகொலையாகும். பட்டினியாலும் நோயினாலும் ஏழை மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். பெருகி வரும் நோய்களை வராமல் தடுக்க வேண்டுமே தவிர, ஊதியத்தை பொருட்படுத்தாமல் சேவை செய்ய வேண்டும்.
தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com