சுடச்சுட

  

  தகுதி அடிப்படையில் தங்களது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 14th August 2019 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுயநலம் இல்லாதவர்களை...
  குடியரசு துணைத் தலைவரின் கருத்து அனைவராலும் ஏற்கக்கூடியதுதான். ஆனாலும், இதில் இரண்டு அடிப்படை விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, படிப்பு என்ற அடிப்படையிலா அல்லது மக்கள் தொண்டு என்ற அடிப்படையிலா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. படிப்பு இல்லையென்றாலும் மக்கள் சேவை, உதவி மனப்பான்மை, சுயநலத்துக்கு முன்னுரிமை கொடுக்காத தைரியம் என்ற அளவீடுகளில்  தங்களது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கலாம். படிப்பு மட்டுமே தகுதி என்றால் இன்றைக்கும் படித்த உறுப்பினர்களில் பலர் ஊழலில், சுயநலத்தில் ஈடுபட்டு பதவிகளின் மாண்பையே கெடுத்துவிட்டதைப் பார்க்க முடிகிறது. எனவே, தகுதி அடிப்படையில் என்று பார்த்தால், படிக்காவிட்டாலும் மக்கள் சேவையை முன்னிறுத்தி, சுயநலக் கலப்பில்லாமல் பணியாற்றுபவர்களை நாம் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.
  மகிழ்நன், கடலூர்.

  வாய்ப்பில்லை
  பொதுவாகவே அரசியல் கட்சிகள் கைகாட்டியவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதே வழக்கமாக இருக்கிறது. கட்சியின் வேட்பாளர்கள் தகுதியற்றவராக இருந்தாலும், கட்சியில் செல்வாக்குள்ள, பணபலமுள்ளவர்களே வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். அவர்களே வெற்றி பெற்று சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றம் செல்வார்கள். 
  இந்த நிலையில் சுயேச்சையாக மிகவும் தகுதியுள்ள நபர் போட்டியிட்டாலும் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். 
  தற்போது மக்கள் வாக்களிக்கும் முறை மிகவும் மோசமாகிப் போய்விட்டது. பணம் பெற்றுக் கொண்டு, அதன்பின்னர் அதிக பணம் தந்த வேட்பாளருக்கே வாக்களிக்கிறார்கள். மக்கள் நலன் முக்கியம் என்று அரசியல் கட்சிகள் கருதும்போதுதான் நல்ல வேட்பாளர்களை நிறுத்த முற்படுவார்கள்; அது நடக்க வாய்ப்பே இல்லை. எனவேதான், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இவ்வாறு கூறியிருக்கிறார். 
  மா.தங்கமாரியப்பன், 
  கோவில்பட்டி.

  தகுதியுடன்...
  சரிதான். மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் நிற்பதற்கு அடிப்படைத் தகுதியுடையவராக இருக்கவேண்டும் என்ற கருத்தையும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்க வேண்டும். அரசியலில் முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் இந்தக் காலத்தில் தகுதியுடையவர் பதவிக்கு வந்தவுடன் சுய உருவத்தைக் காட்டுகிறார். ஊழலில் ஈடுபடுகிறார். மிகச் சரியான தகுதியுடைய அரசு அதிகாரிகளை தனக்கு இணக்கமாக இல்லை எனக் கூறி இடமாற்றம் செய்கிறார்கள். தகுதி அடிப்படை மட்டுமல்லாமல் நேர்மைப் பண்பும், தொண்டுள்ளமும் கொண்டவர்களைத்தான் மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதையும் வெங்கய்ய நாயுடு கூறியிருக்க வேண்டும்.
  எழில் சோம.பொன்னுசாமி, ஆவடி.

  சாத்தியமில்லை!
  தகுதி எது என குடியரசு துணைத் தலைவர் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. கல்வி, நிர்வாகத் திறன் ஆகியவைதான் தகுதி எனில் அப்படிப்பட்டவர்களில் பலரும் அரசியலுக்கு வரத் தயங்குகின்றனர். இலவசம் அதிகம் தருவதையே தகுதி என ஏராளமான வாக்காளர்கள் கருதுகின்றனர். உண்மை நிலை இவ்வாறு இருக்க, குடியரசு துணைத் தலைவர் கூறும் தகுதி அடிப்படை சாத்தியமில்லாத ஒன்று.
  கோ. ராஜேஷ்கோபால், 
  அரவங்காடு.

  சரிதான்!
  முற்றிலும் சரியான கருத்துதான்! ஆனால், ஒருபுறம் பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்குகிறார்கள்; மறுபுறம் பெரிய கட்சிகளே குற்றப் பின்னணியுடைய நபர்களை கூசாமல் வேட்பாளர்களாக நிறுத்துகின்றன. இந்த நிலையில் கட்சிகளின் அனுதாபிகள் என்ன செய்வார்கள்? வேறு வழியின்றி வாக்களிக்கும் நிலைதான் இன்றுள்ளது. காலம்தான் மாற்றத்துக்குத் துணை நிற்க வேண்டும்.
  கே.வேலுச்சாமி, தாராபுரம்.

  அகப்பை இல்லையே!
  கல்வித் தகுதி - செயல்திறன் - நல்ல பண்பு - ஒழுக்கம் நிறைந்தவர் என்ற அடிப்படையில் பிரதிநிதிகளை முதலில் மக்கள் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்; மதம், ஜாதி, பணம் ஆகியவற்றை வாக்காளர்கள் புறந்தள்ளி தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாட்டுக்கு நல்லதுதான். அரசியலில் நல்லவர்களை எங்கே தேடுவது? சட்டி இருக்க, அகப்பை இல்லையே?
  இ. ராஜு நரசிம்மன், தி.நகர்.

  தேர்வுக்கு தகுதி என்ன?
  கட்சி, ஜாதி அடிப்படை ஆகியவற்றைப் பார்க்காமல் தாங்கள் தேர்வு செய்யும் பிரதிநிதி, மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கக்கூடியவராகவும், பொது நலனில் அக்கறை உள்ளவராகவும், சமூக நோக்கம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படுவோர்தான் மக்களுக்கு தொண்டாற்றுபவர்களாக இருப்பவர்கள்.
  நன்னிலம் இளங்கோவன்,
  மயிலாடுதுறை.

  நாட்டின் வளர்ச்சிக்காக...
  சுதந்திர இந்தியாவில் அடிப்படைத் தேவைகளுக்காக ஏங்கும் மக்கள் இன்றளவும் உள்ளனர். உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அனைத்தும் இன்றும் கிடைக்க தொழில் அனுபவம், செல்வாக்கு, உயர்ந்த இலக்கு எனும் பன்முகத்தன்மையுடன், தகுதி என்பது மிகவும் இன்றியமையாததாகும். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது எதிர்கால இந்தியா, வளமான வளர்ச்சி அடைவதற்குரிய வழிமுறையைக் குறிப்பிட்டுள்ளார். 
  ஆ.ரேவதி, திருச்செங்கோடு.

  புரிகிறது, எனினும்...
  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் அங்கலாய்த்துக் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இப்போதெல்லாம் மக்களாகிய நாம் தகுதி என்று நினைத்து அனுப்பும் பிரதிநிதிகள் அவரவர் விருப்பம்போல் பதவியை ராஜிநாமா செய்வதையும், கட்சி மாறுவதையும் பார்க்கும்போது, தகுதியையும் தரத்தையும் நிரூபிக்க வேண்டிய நிலையில் மக்கள் பிரதிநிதிகள்தான் இருக்கிறார்கள் என்பது உண்மை.
  கோதைமாறன், திருநெல்வேலி.

  அரசியல் கட்சிக்கும்...
  கருத்து ஏற்புடையதுதான். இங்கு மக்களின் பங்கு மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளின் பங்கும் அடங்கியிருக்கிறது. அவர்களும் வேட்பாளர்களை அறிவிக்கும்போது பண பலத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவர்களுடைய நன்னடத்தையையும் கணக்கில் கொண்டு மக்களிடம் அறிமுகம் செய்யவேண்டும். ஒழுக்கமுள்ளவராகவும், சேவை மனப்பான்மையுடன் மக்களை அணுகுபவராகவும் இருப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும்,தகுதி உடையவர்களை ஊடகங்களும் கண்டறிந்து மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்தால் மக்கள் தானாக தகுதி உடையவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
  ப.சுவாமிநாதன், சென்னை.

  உறுதி பெற்றால்...
  அந்தந்தப் பகுதியின் மக்களுக்குத்தான் யார் தங்கள் குறைகளைத் தீர்க்க முடியும் என்று நிச்சயமாகத் தெரியும். எனவே, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முன், தங்கள் குறைகளைத் தீர்க்க எழுத்து மூலம் உறுதி பெற்றுவிட்டால், குறைகளைத் தீர்க்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும். 
  எம்.சம்பத்குமார், ஈரோடு.

  உண்மை கசக்கும்!
  குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ள கருத்து சரி. மதம், கட்சி, பணம் அடிப்படையில் தான் தற்போது மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்கிறார்கள். நல்லவர்கள், நேர்மையாளர்கள், தேர்தல் களத்தில் மக்களால் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஏனெனில், அவர்களிடம் ஜாதி, மதம், பணபலம் இல்லை. இந்தத் தகுதிகள் இருந்தால்தான் மக்களின் பிரதிநிதிகளாக முடியும். தற்போதைய சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களில்,  குற்றப் பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகியிருப்பதன் மூலமே இதை அறிந்து கொள்ளமுடியும். மக்களின் பாதுகாப்பை, நல்வாழ்க்கையை உறுதிசெய்ய வேண்டிய உறுப்பினர்களே குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்றால் ஜனநாயகம் எப்படி தழைக்க முடியும்?
  பி.கே.ஜீவன், கும்பகோணம்.

  விருப்பம் ஏற்புடையது
  மக்கள் தங்கள் திறமை, உழைப்பை மறந்து, இலவசங்களுக்காக ஏங்கித் தவிக்கும் சூழலை, அரசியல் கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்தி மக்களைச் சுரண்டி வாக்குகளைப் பெறத் துடிக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்ற விருப்பத்தால், தகுதி அடிப்படையில் தங்களது பிரதிநிதிகளை வாக்காளர்கள் தேர்வு செய்வது நல்லது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது ஏற்புடையதே.
  பவளவண்ணன்,
  நடுவின்கோட்டை.

  மக்களின் முடிவு!
  இந்தியாவை வளம் நிறைந்த வல்லரசாக மாற்ற வேண்டும் என அன்றைய பஞ்சாயத்து தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கருதினர்.  நியாயம், சுயநலமின்மை, பண்பாடு ஒழுக்கம், திறமை முதலிய நற்குணம் நிறைந்தவர்கள் முன்பு அரசியலில் ஈடுபட்டனர். அப்படிப்பட்டவர்களையே பிரதிநிதிகளாக மக்களும் தேர்ந்தெடுத்தனர். 
  ஆனால், இப்போது அந்தச் சூழ்நிலைக்கு ஆபத்து வந்திருக்கிறது. ஒரு தொகுதியில் தங்கள் ஜாதிக்காரர் நிற்கிறார் என்பதற்காகவும் பிற பொறுப்பற்ற காரணங்களாலும் குற்றப் பின்னணி உள்ளவர்களையும், தகுதி இல்லாதவர்களையும், அணுகுமுறை தெரியாதவர்களையும் தங்கள் பிரதிநிதிகளாக வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
   இதனால், சட்டப்பேரவைகள், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் தரம் குறைந்துள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என குடியரசு துணைத் தலைவர்  கருதுகிறார். மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
  என்.எஸ்.முத்து, இராஜபாளையம்.

   

   

   

  காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி. பலமா, பலவீனமா?

  இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை - 600 058 
  என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  இமெயில்: edit.dinamani@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai