Enable Javscript for better performance
காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி. பலமா, பலவீனமா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத- Dinamani

சுடச்சுட

  

  காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி. பலமா, பலவீனமா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 21st August 2019 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புத்துணர்வை ஊட்டும்...
  நேருவின் பரம்பரை நாட்டிற்காகச் செய்திருக்கும் தியாகம் ஈடு இணையற்றது. விடுதலைப் போரில் அண்ணல் காந்திக்கு அடுத்த நிலையை வகித்தவர் நேரு. பிரதமராக அவரது காலம் பொற்காலம். இந்திரா காந்தி நாட்டுப் பணியாற்றும்போது குண்டுக்கு இரையானார். அவரது மகன் ராஜீவ் காந்தியும் தற்கொலை தாக்குதலுக்குப் பலியானார்.  அவரது மறைவுக்குப் பிறகு, சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகி அமைச்சரவையை வழி நடத்தினார். அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்றிருப்பது காங்கிரஸுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களிடமும் புத்துணர்வை ஊட்டும்.
  செ.சத்தியசீலன்,  திருநெல்வேலி.

  நல்லதல்ல..!
  இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. சோனியாவை மீண்டும் தலைவராக்கியதால், குடும்பக் கட்சிதான் என்று உறுதியாகிறது. குடும்பக் கட்சி என்று ஆகிவிட்டால் இரண்டாம் நிலைத் தலைவர்களின் வளர்ச்சி கட்சியில் இருக்காது. இரண்டாம் நிலைத் தலைவர்கள் என்னதான் கட்சிக்காக உழைத்தாலும் முன்னேற்றம் இருக்காது என்ற நிலையில் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட மாட்டார்கள். நாளடைவில் கட்சி காணாமல் போய்விடும். நேரு குடும்பத்தினர் மட்டுமே காங்கிரஸ் தலைவராவதை சரி என்று ஏற்றுக் கொண்டாலும், நேரு குடும்பத்தின் மருமகள்தான் சோனியா காந்தி; அவர் நேரடி வாரிசு இல்லை. மேலும், அவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார். எனவே, சோனியாவைத் தலைவராக்கியது காங்கிரஸுக்கு நல்லதல்ல. 
  மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

  தகுதியானவர்தான்...
  மீண்டும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா என்பது அந்தக் கட்சிக்குப் பலமே. காங்கிரஸைப் பொருத்தவரை பாரம்பரிய அரசியல்  நடக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் நேரு குடும்பத்தினர் ஈடுபட்டு பல தியாகங்கள் செய்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய குடும்பத்தைச் சேர்ந்தவர் சோனியா. வெளிநாட்டவராக இருந்தாலும் நாட்டுப் பற்று அவரிடம் உள்ளது. எந்தக் கட்சியையும் அவர் எதிர்கட்சியாக நினைக்கவில்லை. அர்த்தமற்ற பேச்சுகள் பேசியதில்லை. 
  எந்த அரசியல்வாதிகளையும் தனிப்பட்ட முறையில் பழித்துப் பேசியதில்லை. 
  எல்லோரையும் நன்கு மதிக்கக்கூடியவர். தேர்தலில் வெற்றி, தோல்விகள் இயல்புதான். மனம் தளராதவர். அவரை விஞ்சும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தற்போது ஒரு தலைவரும் இல்லை. எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி தகுதியானவர். 
  கே.அனந்தநாராயணன்,  
  கன்னியாகுமரி.

  வேறு வழியில்லை...
  காங்கிரஸில் நிலவும் கட்சி உட்பூசல் காரணமாக பல காலமாக உறுப்பினர்களாக இருக்கும் மூத்த தலைவர்களில் யாரையாவது தலைவராகத் தேர்ந்தெடுத்தால் கட்சி சிதைந்து போகும் என்ற அச்சம் பல காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளது. எனவேதான் நேரு குடும்ப உறுப்பினர்களை நாடுகின்றனர். அவர்களுக்கு வேறு வழியில்லை. இது அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது.
  கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

  சுய பரிசீலனை அவசியம்
  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பது ஒரு தவறான நடவடிக்கை. நேரு குடும்பத்தின் கைப்பிடியில்  காங்கிரஸ் கட்சி  உள்ளது என்ற அவப்பெயர் தொடர இது ஒரு வாய்ப்பாக மாறிவிட்டது. சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா போன்ற எத்தனையோ இளைஞர்கள் தலைவர் பதவிக்குப் பொருத்தமாக இருக்கும்போது, பொறுப்பை ஏற்க சோனியா காந்தி மறுத்திருக்க வேண்டும். கூட்டணி விஷயங்களில் குழப்பமான முடிவுகளை மேற்கொண்டு இன்று பலவீனமாக இருக்கும் காங்கிரஸை பலப்படுத்த இன்னும் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பாஜக-வுக்கு மாற்றாக தேசிய அளவில் காங்கிரஸை தவிர வேறு பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. எனவே, நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் சுய பரிசீலனை செய்வது அவசியம்.
  பொன்.கருணாநிதி, கோட்டூர்.

  சோனியாவைவிட...
  மகாத்மா காந்தி மற்றும் நேரு காலத்தில் உருவான காங்கிரஸ் கட்சி தற்போது மிகவும் வலுவிழந்துள்ளது. அந்தக் கட்சியை வலுப்படுத்த நல்ல அரசியல் மற்றும் முற்போக்குவாதியாகச் செயல்படும் சோனியா காந்தி மீண்டும் காங்கிரஸின் நிரந்தரத் தலைவராகப் பொறுப்பேற்றால், கட்சிக்கு அது வலு சேர்க்கும். ஏனெனில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகவும் சோனியா இருப்பதால், அவரைவிட அந்தப் பதவிக்கு யாரும் உகந்தவர்கள் அல்ல.
  சுரேந்தர் செல்வம்,  
  திருவெண்ணைய்நல்லூர்.

  எவருமே இல்லையா?
  ஒரு நிறுவனம் குறிப்பிட்ட ஒரு பெயரில் பிரபலமாகிவிட்டால், அந்தப் பெயரையே தொடர்ந்து வைப்பதுபோல் நேருவின் பரம்பரையை காங்கிரஸ் கட்சியினர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். ஏன், காங்கிரஸ் கட்சியில் திறமையாகச் செயல்படவும், அகில இந்திய அளவில் சுற்றுப் பயணம் செய்து கட்சியைக் கட்டிக் காக்க எவருமே இல்லையா? சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருப்பதால், காங்கிரஸ் கட்சிக்குப் பலமோ, பலவீனமோ ஏற்படாது. 
  கே. வேலுச்சாமி, தாராபுரம்.

  அனுபவம் மிக்கவர்!
  காங்கிரஸ் கட்சிக்கு சோனியாதான் பலம் என்பதை உறுதியாக உணரலாம். தன் கட்சியினரையும்,  பிற கட்சியினரையும் அரவணைத்துச் செல்வதில் அனுபவம் வாய்ந்தவர். அவரது நற்பண்பை அனைவரும் மதிப்பர். எதிர்கட்சியினருக்கும் ஏற்புடையவர்.  உடல் நலக் குறைவு என்ற ஒரே காரணத்துக்காக அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் அவரது அனுபவ முதிர்ச்சி காங்கிரஸ் கட்சிக்கும், நாட்டுக்கும் அத்தியாவசியமான ஒன்று. 
  எஸ்.வேணுகோபால், சென்னை.

  பாஜக-வுக்கு பலம்!
  அரசியல்வாதிகளுக்கே அவசியமான, தந்திரங்கள் நிறைந்த சுறுசுறுப்பு சோனியா காந்தியின் பலம், பலவீனம். அவர் குடும்பத்தை விட்டால், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆளே இல்லை என்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது. இந்தப் பலம், பலவீனம் இரண்டும் இனி வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஓங்கி ஒலிக்கும். இந்தியாவின் எதிர்கால ஜனநாயகத்துக்கு இது நல்லதில்லையே. இந்த முடிவு, பாஜக-வுக்கு பலம் என்பதில் சந்தேகமில்லை.
  சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

  பலம் சேர்க்கும்!
  தலைவர் பதவியை சோனியா மீண்டும் ஏற்றிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்பது கண்கூடு. 17 ஆண்டுகளுக்கு முன் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்றவுடன் 15-க்கும் மேலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. தற்போது காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கலாம். ஆனால், வருங்காலங்களில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. தமிழகம், கேரள மாநிலங்களில் காங்கிரஸ் வென்றதுபோல், வட மாநிலங்களில் மீண்டும் வெற்றி பெறும்.
  கே. சிங்காரம், வெண்ணந்தூர். 

  சவால்தான்...
  மீண்டும் சோனியா காந்தி பதவி ஏற்றிருப்பது இடைக்காலத் தலைவராக மட்டும்தான். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு பலவீனம்தான். மேலும் பலமா என்பதை அறிய வேண்டுமெனில் அவருடைய செயல்பாடுகளை வைத்துதான் உறுதியாகக் கூற முடியும். மீண்டும் கட்சி உறுப்பினர்கள் யாரும் தலைவராக முன்வராமல் போனால், கட்சியை நடத்துவது சோனியா காந்திக்கு மிகப் பெரிய சவால்தான். 
  மு.செந்தமிழ் செல்வி, சென்னை.

  பின்னடைவு...
  காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பது நிச்சயம் பலவீனம்தான். காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நேரு குடும்பத்தினர் மட்டும்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எழுதப்படாத விதி, அந்தக் கட்சிக்குள் இருப்பது நல்லதல்ல. காங்கிரஸ் கட்சிதான் முதன்முதலில் இதுபோன்று வாரிசு அரசியலையும் குடும்ப அரசியலையும் உருவாக்கியது. மன்னராட்சியின் மறுவடிவமான இந்த வாரிசு, குடும்ப அரசியல், தற்போதைய இந்திய ஜனநாயகச் சூழலுக்கு ஏற்ற தல்ல. இதனை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புரிந்துகொள்ளாதது வியப்புதான். இளைய தலைமுறை வாக்காளர்களைக் கவரும் இளைய தலைமுறைத் தலைமை இல்லாதது, காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு.
  பி.கே.ஜீவன், கும்பகோணம்.

  ராகுல் காந்தியை...
  காங்கிரஸ் என்னும் பேரியக்கம் எதிர்பாராத தோல்வி அடைந்ததால் பலவீனமடைந்தது என்று கூற முடியாது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றதில் நேருவிலிருந்து சோனியா காந்தி வரை பங்களிப்பு உண்டு. எனவே, அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. உடல் நலன் கருதி சோனியா ஓய்வு கொள்வது நல்லது. ராகுல் காந்திக்கு சோனியா ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி மீண்டும் அவரைத் தலைவராக ஏற்கச் செய்ய வேண்டும். 
  டி.வி.சங்கரன், தருமபுரி.

   

   

  "செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள்' என்ற பிரதமர் மோடியின் கருத்தை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 
  வரவேற்றிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

  இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
  விவாத மேடை பகுதி, தினமணி, 
  29, இரண்டாவது பிரதான சாலை, 
  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
  சென்னை - 600 058 
  என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  இமெயில்: edit.dinamani@gmail.com 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai