செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமர் மோடியின் கருத்தை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமர் மோடியின் கருத்தை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றிருப்பது குறித்து

திருவள்ளுவர் கூறியதை....
செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமரின் கருத்து சிறந்த, வள்ளுவர் காலம் தொட்டு வாழ்ந்து வரும் பொருளாதார மேதைகள் கூறியிருப்பதுதான். நல்லரசின் கடமைகள் நான்கு என்பார் திருவள்ளுவர். 1. இயற்றல் - செல்வம் வரும் வழிகளை உருவாக்குதல்; 2. ஈட்டல்-அவற்றிலிருந்து செல்வங்களை ஈட்டுதல்; 3. காத்தல் - ஈட்டிய செல்வங்களை அழிந்து போகாமல் காத்தல்; 4. காத்த வகுத்தல் - காத்தவற்றை மேலும் புதிய திட்டங்களை வகுத்து அவற்றுக்குச் செலவிடுதல். இந்த நான்கிலும் முதலாவதாக இயற்றல் என்பதையே பிரதமர் மோடி கூறியுள்ளார். அதைத்தான் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். 
செ.சத்தியசீலன், 
திருநெல்வேலி.

சந்தேகம் எழுகிறது!
செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை. தொழில்கள் பெருகினால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். வேலைவாய்ப்புகள்தான் நாட்டின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். அதைத் தான் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், பிரதமர் மோடியின் கருத்தை சிதம்பரம் ஆதரிப்பதுதான் சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. வழக்கு மேல் வழக்குகளை ப.சிதம்பரம் குடும்பத்தினர் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் கருத்துக்கு ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்திருப்பதால் சந்தேகம் வலுக்கிறது. வழக்குகளிலிருந்து தப்பிக்க இந்த வழியை ப.சிதம்பரம் எடுத்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது. 
பி.கே.ஜீவன், கும்பகோணம்.

அரசியல் வேண்டாம்!
செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமர் மோடியின் கருத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றிருப்பது ஆரோக்கியமான அரசியலாகும். மத்திய அரசின் நிதியமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றிய ப.சிதம்பரம் வரவேற்றிருப்பது பிரதமர் மோடிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். ப.சிதம்பரம் மீது வழக்குகள் உள்ளதால், பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்கிறார் என்ற இரண்டாம் தர அரசியலுக்கு நாம் போக வேண்டாம். 
என்.எஸ்.முத்து, 
இராஜபாளையம்.

அரசியல்தான்!
செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்று பிரதமர் மோடி கூறிய கருத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். அவர் என்ன நோக்கத்தில் வரவேற்றிருந்தாலும் வரவேற்போம்; ஆனால், வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்க மனமின்றிக் கடுமையாக எதிர்த்ததுடன் பிரதமரை விமர்சித்தாரே, ஏன்? எல்லாம் அரசியல்தான்! 
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

ஆரோக்கியமான அரசியல்!
செல்வம் என்று குறிப்பிட்டால் அது பணத்தை மட்டும் குறிக்கும் வார்த்தை இல்லை. அது தொழிற்சாலை, சொத்து மற்றும் நாட்டுக்கு நன்மை தரும் கல்வி நிலையங்கள் ஆகியவற்றைக் குறிப்பதாகும். இவற்றை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்று பிரதமர் மோடி கூறியதை சிதம்பரம் ஏற்றுக்கொண்டது சரிதான். 
எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒருவராக இருந்தாலும் ஆளும்கட்சியின் செயல்களின் தன்மையைப் பொருத்து வரவேற்பது ஆரோக்கியமான அரசியல்தான். மேலும், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில், தொழில்கள் வளர்ந்தால்தான் வேலைவாய்ப்புகள் உருவாகும். மக்கள் அனைவரும் வளமாக வாழ வழி ஏற்படும். 
மா.தங்கமாரியப்பன்,
கோவில்பட்டி.

சரிதான்!
செல்வத்தை உருவாக்குபவர் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமரின் கருத்தை அனைவருமே வரவேற்க வேண்டும்.  உருவாக்கப்பட்ட சொத்தைக் காக்கவும், பயன்படுத்தவும் அறிவும் தொடர் முயற்சியும் அவசியம். ஒரு நாடு வளமாக இருந்தால்தான், அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்; நம்முடைய வளத்துக்கும் நலத்துக்கும் பாதுகாப்பு தரும் உத்தரவாதம் சொத்து. எனவே, பிரதமரின் கருத்து ஏற்புடையதே. எனவே, பிரதமரின் கருத்தை நிதியமைச்சராக அனுபவம் பெற்ற ப.சிதம்பரம்  வரவேற்பது இயல்பு.
ஜி.நடராஜன், சென்னை.

மாற்றான் தோட்டத்து...
பிரதமர் நரேந்திர மோடியும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவரும் எதிர் அணியில் இரு துருவங்களாக உள்ளனர்.  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா கூறியதைப் போன்று எதிர் முகாமில் உள்ள ப.சிதம்பரம், பிரதமர் மோடியின் நியாயமான கருத்தை வரவேற்றுள்ளார். இதற்கு நாம் உள் அர்த்தம் ஏதும் கொள்ளக் கூடாது. 
ரா.ராஜதுரை, சீர்காழி.

பெருந்தன்மை!
செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் நமது பிரதமரது கருத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பதில் அவரது பெருந்தன்மை மிளிர்கிறது. செல்வத்தை உருவாக்கிச் சொந்த உடைமையாகக் கருதுவதுடன் தொழிலாளர் நலம் பேண மறுப்பவர்கள் பலர்தாம் இன்று கோடிகளுக்கு அதிபதிகளாக உள்ளனர். தொழிலாளர் போராட்டம், தொழில் நிறுவனம் நலிவு ஆகியவை அடிக்கடி வரும் செய்திகள். செல்வத்தைத் தேடுவதுடன் புதைத்து வைப்பதால் நன்மை என்ன? பாடுபட்டுத் தேடிப் புதைத்து வைக்கும் கேடு கெட்ட மானுடர்கள். இவர்களால் அந்தச் செல்வம் அவர்களுக்கும் பயன்படாமல், நாட்டுக்கும் பயன்படாமல் போவது நல்லதா? இவர்கள் நாட்டின் சொத்துகள் அல்ல. செல்வச் சுரண்டல்வாதிகள்.
ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

செல்வத்தின் பாதை எங்கே?
செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமர் மோடியின் கருத்தை சிதம்பரம் வழிமொழிந்திருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி உருவாக்கப்பட்ட செல்வம் எந்த வழியில் உருவாக்கப்பட்டது, அது அரசுக்குச் செல்கிறதா அல்லது தனியாருக்குச் செல்கிறதா என்பதுதான் முக்கிய கேள்வி. தனியார் ஈட்டிய செல்வம் உள்நாட்டு வங்கிகளுக்குச் செல்லாமல் சுவிஸ் வங்கிக்குச் சென்றால் அதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் செல்வம் ஈட்டட்டும். அப்படி ஈட்டப்படும் செல்வம் இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் எந்த வகையில்லாவது பயன் படுகிறதா என்பதுதான் மிக முக்கியமாக நாம் ஆய்வு செய்ய வேண்டிய பிரச்னை.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

பாராட்டுக்குரியது!
ஒரு நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்கள் தொழிலாளர்களா, முதலாளிகளா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். தொழிலாளியும், முதலாளியும் அவசியம். செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமர் மோடியின் கருத்தை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றிருப்பது பாராட்டுக்குரியது. அரசியல் வேறுபாடு இருந்தாலும் கருத்தால் ஒன்றிணைவது நல்லது. நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் ஒரே நோக்கத்தில் இருப்பது பாராட்டுக்குரியது.
தி.ரெ.ராசேந்திரன், 
திருநாகேஸ்வரம்.

நாட்டின் கடமை
செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமர் மோடியின் கருத்து சரியானது. நாட்டின் பொருளாதாரம் வளர செல்வம் அதிகரிக்கப்பட வேண்டும். இதனை செய்யும் நபர்கள் செல்வந்தர்களாகவும், தொழிலதிபர்களாகவும் இருப்பர். அவர்கள் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பர். இதனால், அவர்களது குடும்பம் நல்வாழ்வு வாழும். இத்தகையோர் செல்வத்தை உருவாக்குவதால் நாட்டின் மதிப்பு உயரும். சமுதாயமும் உயரும். இத்தகையோரை ஆதரிப்பது நாட்டின் கடமை. 
கே.அனந்தநாராயணன், 
கன்னியாகுமரி.

நல்ல அறிகுறி!
செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமர் மோடியின் கருத்து நல்லதுதான். எதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சிகள் என எண்ணாமல், அவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை வரவேற்கும் மனப்பக்குவம் வந்துள்ளது நல்ல அறிகுறியே. தொடரட்டும்.
கோ.ராஜேஷ் கோபால், 
அரவங்காடு.

அரசியல் முதிர்ச்சி!
செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் சொத்துகள் என்ற பிரதமர் மோடியின் கருத்து வரவேற்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம். ஆனால், அரசியல்வாதிகளில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பவர்கள், ஆளும் கட்சியின் எந்தச் செயலானாலும் எதிர்மறை கருத்தைச் சொல்வார்கள். ஆனால், இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் கருத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளது, அவரது அரசியல் முதிர்ச்சியையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் எல்லாவற்றையும் எதிர்க்காமல் நல்லதை வரவேற்றும் எதிர்க்க வேண்டியவற்றை மட்டும் எதிர்க்க வேண்டும் என்பதை ப.சிதம்பரத்தின் கருத்து சுட்டிக் காட்டுகிறது.
பி.துரை, காட்பாடி.


'காஷ்மீரில் அந்நியத் தலையீட்டை ஏற்பதில்லை' என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com