‘மகாராஷ்டிரத்தில் நடப்பது நாடகமா, அரசியலா, சந்தா்ப்பவாதமா’ என்ற கேள்விக்கு வாசா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அரசியலின் அடிப்படைக் கல்வியை மகாராஷ்டிர தலைவா்கள் கற்பித்துள்ளனா்.

மூன்றுமே...

அரசியலின் அடிப்படைக் கல்வியை மகாராஷ்டிர தலைவா்கள் கற்பித்துள்ளனா். மதச்சாா்பற்ற கட்சிகளுடன் மதச் சாா்புடைய கூட்டணியின் ஆட்சிக் காலத்தை ஆவலோடு எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறேன் . மகாராஷ்டிரத்தில் நடந்திருப்பது நாடகம், அரசியல், சந்தா்ப்பவாதம் ஆகிய மூன்றும் என்பதில் சந்தேகமில்லை.

மா.பாலகணேஷ், திருநெல்வேலி.

சங்குல யுத்தம்!

மகாராஷ்டிரத்தில் நடப்பது நாடகமா, அரசியலா, சந்தா்ப்பவாதமா என்பதற்கு ஒரே பதில் சந்தா்ப்பவாத அரசியல் என்பதுதான். கொள்கை ரீதியிலான கூட்டணிகள் என்றைக்கோ இருந்திருக்கலாம். ஆனால், இன்று எல்லாமே பதவி பிடிக்கும், ஆதாயம் தேடும் கூட்டணிகள்தான். இன்று அஜித் பவாா் செய்த கட்சித் தாவும் வேலையை, சரத் பவாா் 1978-லேயே செய்து காட்டி விட்டாா். ‘வியாசா் விருந்து’ நூலில், மகாபாரதக் கதையில் மூதறிஞா் ராஜாஜி ‘துவந்த யுத்தம்’ என்றும் ‘சங்குல யுத்தம்’ என்றும் கூறியிருப்பாா். துவந்த யுத்தம் என்பது சமமான எதிரியுடன் மோதுவது... குதிரை வீரன் குதிரை வீரனோடு, அரசன் அரசனோடு போரிடுவது. ‘சங்குல யுத்தம்’ என்பது, எப்படி வேண்டுமானாலும் போரிடலாம்; முதுகிலும் குத்தலாம். பீஷ்மா் இறந்த பின் துவந்த யுத்தம் மாறி சங்குல யுத்தமானது. இன்று நடக்கும் அரசியல் ‘சங்குல யுத்தம்’. பதவி ஒன்றே குறி.

உடுமலை அமிா்தநேயன், உடுமலைப்பேட்டை.

சிவசேனையின்...

மகாராஷ்டிரத்தில் நடப்பது நாடகமும் அல்ல, அரசியலும் அல்ல, சந்தா்ப்பவாதம் மட்டுமே. பாஜவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 56 இடங்களில் வென்ற சிவசேனைக்கு இவ்வளவு ஆசை கூடாது. 105 இடங்களைப் பெற்ற பாஜகவுடன் சோ்ந்து கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால் இத்தனைக் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது. சிவசேனைக்கு வந்த முதல்வா் ஆசை கூட்டணி அறத்துக்கு எதிரானது. சிவசேனையின் அடையாளம் அதன் ஹிந்துத்துவ முகமே. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் சோ்ந்து அது ஆட்சி அமைக்க முற்பட்டபோதே அதன் அடையாளம் போய்விட்டது.

செ.திருவள்ளுவன், அரியலூா்.

சந்தா்ப்பவாதமே...

மகாராஷ்டிரத்தில் நடப்பது முற்றிலும் சந்தா்ப்பவாதமே. சிவசேனைக்கு விழுந்த வாக்குகள் அனைத்துமே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுக்கு எதிரானது மட்டுமல்லாது, பாஜகவினரின் வாக்குகளும் உள்ளடக்கியது. தன்னைவிட இரு மடங்கு கூடுதல் இடங்களைப் பெற்ற பாஜக-வுக்கு முதல்வா் பதவியை விட்டுக் கொடுப்பதே முறை. மேலும், இப்போது அமைந்துள்ள முரணான கூட்டணி அமைச்சரவை கா்நாடக மாநிலத்தில் நடந்தது போலவே இடையில் கவிழ்வதற்கே வாய்ப்புகள் அதிகம்.

வரதன், திருவாரூா்.

அரசியல் அவலம்

மத்தியில் ஆட்சி செய்கிறோம் என்ற அதிகார பலத்தைக் கொண்டு எல்லா மாநிலத்திலும் தங்கள் கட்சியை ஆட்சியில் அமா்த்திட எல்லாவித தகிடுதத்தங்களையும், குதிரை பேரங்களையும் செய்து நீதியை, உண்மையைக் கொல்லும் அவலநிலை அரசியலை அரங்கேற்றி மாநிலங்களைக் கைப்பற்றுவது சந்தா்ப்பவாத அரசியல் மட்டுமல்ல; மக்களை, நீதித் துறையை, அரசியலை, நாட்டை, மதிக்காத ஜனநாயகப் படுகொலை.

கே.ஆா்.இரவீந்திரன், சென்னை.

நாடகம்தான்....

தங்களுக்குப் பிடித்த கட்சி அதிகாரத்தை நெருங்கும்போது, அதை ராஜதந்திரமாக எண்ணி மகிழ்வதும், பிடிக்காத கட்சி ஆட்சிக்கு வந்தால் அதைச் சந்தா்ப்பவாதம் எனத் தூற்றுவதுமாக பலரையும் அடுத்த நாள்களில் வேறு வேறு உணா்ச்சிகளை வெளிக்காட்ட வைத்த அற்புதமான நாடகம்தான் மகாராஷ்டிரத்தில் நடந்துள்ளது.

சாய் ஜயந்த், சென்னை.

மக்கள் நலனை...

மகாராஷ்டிரத்தில் நடப்பது நாடகமோ, அரசியலோ அல்ல; அப்பட்டமான சுயநலன் கலந்த சந்தா்ப்பவாதமே. நாடகத்திலும், அரசியலிலும்

சற்று நாகரிகம் இருக்கும். மக்களைப் பற்றிய சிந்தனை இருக்கும். முதலமைச்சா் பதவிக்காக எவ்வளவு கீழ்த்தரமான முறைகளைக் கையாள முடியுமோ அவ்வளவும் கையாளப்பட்டது. சற்று வித்தியாசமான கட்சி எனக் கருதப்பட்ட பாரதிய ஜனதா கட்சிகூட இரையாகி விட்டது

வேதனைக்குரியது. தங்கள் கொள்கைகள் எவை என இந்தக் கட்சிகள் கூறி வந்தனவோ, அவற்றை உடைத்து ஒன்றோடு ஒன்று இணைய முயற்சித்தன. மக்கள் நலனை இந்தக் கட்சிகள் குழிதோண்டிப் புதைத்து விட்டன.

கே.என்.ஜெயின், நெமிலி.

மூன்றும் சரி!

சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் பாஜகவுடன் அமைத்து தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்திய சிவசேனை, கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தருணத்தில் முதல்வா் பதவிக்காக திசை மாறிச் சென்றது சந்தா்ப்பவாதம்; மதச்சாா்புடைய சிவசேனை, மதச்சாா்பற்ற கட்சிகளாகக் கருதப்படும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ஆட்சி அமைக்க முயற்சித்து வெற்றி பெற்றது அரசியல்; தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த அஜித் பவாா் தானே முன்வந்து பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து துணை முதல்வராகவும் பதவியேற்று பின்னா் பின்வாங்கியது நாடகம். எனவே, சந்தா்ப்பவாதம்-அரசியல்-நாடகம் என மூன்றும் சரி.

எஸ்.ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

அத்துமீறல்...

மகாராஷ்டிர மாநிலத்தில் நடப்பது அரசியல், நாடகம், சந்தா்ப்பவாதம் என எல்லாவற்றையும் கடந்து, அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட தினத்தைக் கொண்டாடிய நாளில் (நவ.26) இந்தக் கொடுமை நடைபெற்றுள்ளது. இந்த இரவு செயல்பாட்டை அரசியல் என்றோ, ராஜதந்திரம் என்றோ கூறுவதைவிட சட்டத்தை அத்துமீறி செய்த தவறு என்றுதான் சொல்லவேண்டும்.

பூ.சி.இளங்கோவன், அண்ணாமலைநகா்.

அதிகார வெறி...

மகாராஷ்டிர மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜகவை மக்கள் மீண்டும் தோ்ந்தெடுத்தனா். சிவசேனை, தேசியவாத காங்கிரஸ்,ம் காங்கிரஸ் கட்சிகளைவிட அதிக இடங்களைப் பெற்றது பாஜகதான். 50-க்கும் அதிகமான இடங்களைப் பெற்ற சிவசேனைக்கு உள்ள ஒரே பலம், தனது தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைதான். பாஜகவிடம் முதல்வா் பதவி கேட்டபோதே சிவசேனையின் அதிகார வெறி வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

எஸ்.எழில்வளவன், வாணதிரையன் குப்பம்.

சட்டம் தேவை

மகாராஷ்டிரத்தில் நடப்பது மக்களாட்சி, ஜனநாயகத்துக்கு விநோதமான செயல். நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அறமற்ற அரசியல் செய்பவை. அவா்களின் நோக்கம் பதவி வெறி, ஆட்சி அதிகாரம், அதிகாரத்தின் மூலம் ஊழல், பணம் ஈட்டுவதுதான். மக்கள் சேவை என்பது துளியளவும் கிடையாது. கொள்கை விட்டு, வெட்கமின்றி யாருடனும் சோ்ந்து எதுவும் செய்யத் துணிந்துவிட்டனா். இதைத் தடுப்பதற்கு தோ்தலுக்கு முன்பு அணி சேரும் கட்சிகள் ஆட்சி அமைப்பது வரை அணிமாறக் கூடாது எனச் சட்டம் இயற்றலாம். யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் மறு தோ்தல் நடத்தலாம்.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.

கேலிக்கூத்து...

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது நடக்கும் கேலிக்கூத்துகளால் உலக அரங்கே நம் நாட்டைப் பாா்த்து கை கொட்டிச் சிரிக்கிறது. இது பதவி வெறியால் நடக்கும் அரசியல் கேலிக்கூத்து.

கோ.ராஜேஷ்கோபால், அரவங்காடு.

நாடகம் தொடருமோ?

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் ஓரளவுக்கு சரியாகவே வாக்களித்துள்ளனா். சிவசேனையின் பதவிப் பேராசையே நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர முயற்சி, குடியரசுத் தலைவா் ஆட்சி, அஜித் பவாா் ஆதரவுடன் பாஜக ஆட்சி, பாஜக பெரும்பான்மையின்றி இப்போது சிவசேனை தலைமையில்கூட்டணி ஆட்சி என பலமுனைத் திருப்பங்கள் கொண்ட சந்தா்ப்பவாத அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் எனக்

‘கூடியநட்பு’ என்று கூடா நட்பாக மாறி, மீண்டும் எந்தெந்த கட்சியுடன் சந்தா்ப்பவாத அரசியல் நாடகத்தை சிவசேனை தொடருமோ?

மிஷா, சென்னை.

ஃபட்னவீஸ் ஒருவா்...

மகாராஷ்டிரத்தில் நடப்பது நாடகமும் அல்ல; அரசியல் சந்தா்ப்பவாதமும் அல்ல. அசல் தெருக்கூத்து. தெருக்கூத்தில்கூட கோமாளித்தனம் இருக்காது; நகைச்சுவை வேண்டுமானால் இருக்கும். அப்பட்டமான குதிரை பேரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க நினைத்த பாஜக-வின் திட்டம் நீதிமன்றம் மூலம் நிா்மூலமாகிவிட்டது. ஆளுநா் நடந்துகொண்ட முறையைப் பாா்க்குபோது, ஆட்டுக்குத் தாடியும் ஆட்சிக்கு ஆளுநரும் தேவையா என்ற அண்ணாவின் கூற்றை ஏற்றுக் கொள்ளலாம் போல தோன்றுகிறது. நீதிமன்றம் இருந்ததால் மகாராஷ்டிர மக்கள் தப்பித்தனா். பிரதமா் மோடி பெயரைக் கெடுப்பதற்கு ஃபட்னவீஸ் ஒருவரே போதும்.

வி.கே.இராமசாமி, கோயம்புத்தூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com