உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பது சரியா

சரிதான்
ரஜினிகாந்தின் அறிவிப்பு சரியானதுதான். இன்னும் அரசியல் கட்சி தொடங்காத நிலையில் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பதைச் சோதித்துப் பார்க்க ரஜினி விரும்ப மாட்டார். அரசியல் நுழைவு அனைவரும் பிரமிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆதரவளித்து அது வெற்றி பெறாமல் போனால், அது தனது அரசியல்வாதி எனும் "இமேஜை' பெரிதும் பாதிக்கும் என்பதை ரஜினிகாந்த் நன்கறிவார்.
ப.சோமசுந்தரம், ஆவடி.

எந்தப் பலனும்...
கட்சி தொடங்குவதாக பல காலமாக சொல்லிக்கொண்டே,  இன்றுவரை கட்சி தொடங்காமல் தன்னுடைய ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்தான் ரஜினிகாந்த் செயல்படுகிறார். எனவே, அரசியலில் ரஜினிகாந்துக்கு எந்த அளவு செல்வாக்கு இருக்கிறது என்பது அவர் கட்சி தொடங்கி ஒரு தேர்தலைச் சந்தித்த பிறகுதான்  தெரியும். எனவே, அவர் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தந்தாலும் தராவிட்டாலும் அதனால் எந்தப் பலனும் இல்லை. 
கவியழகன், திருவொற்றியூர். 

காரணம் என்ன?
பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த், 2017-இல்தான் அதற்கான அறிவிப்பை நேரடியாகத் தெரிவித்தார். அவரின் ரசிகர்கள் பலர் பல கட்சிகளில் உள்ளனர். மேலும் பலர் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி வெற்றி காணவும் தயாராக இருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரின் பெயரைப் பயன்படுத்தி பல கட்சிகள் ஆதாயம் காண வாய்ப்பு உண்டு. இதனால்தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்ற முடிவை ரஜினிகாந்த் எடுத்திருக்கிறார்.
ஸாதியா அம்ரீன், 
குடியாத்தம். 

பாதுகாக்க...
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக ரஜினிகாந்த் தேர்தலில் தனித்தோ அல்லது திமுக, அதிமுக தவிர்த்து மற்ற ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி வைத்தோ தேர்தலைச் சந்திப்பார். ரஜினிகாந்த் முகத்தைக் காட்டி வாக்கு வாங்க வேண்டும் எனத் திட்டமிடுபவர்களிடமிருந்து ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் பாதுகாக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த 
ஆதரவில்லை என்ற முடிவை ரஜினிகாந்த் எடுத்தது சரியானது. 
கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம். 

சுயநலம்...
உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது அவரின் சயநலத்தையே காட்டுகிறது. கட்சி ஆரம்பிப்பதிலேயே இன்றுவரை அவர் குழப்பத்தில் இருக்கிறார்; அவருக்கு பொதுநலத்தில் அக்கறை இல்லையென்பது தெளிவாகிறது. 
நன்னிலம் இளங்கோவன், 
மயிலாடுதுறை.

கட்சி தொடங்காததால்...
 ரஜினியைப் பொருத்தவரை அனைவரிடமும்  எல்லோரிடமும் சுமுக உறவை விரும்புபவர். உள்ளாட்சித் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சிக்கு  அவர் ஆதரவளித்தால் பிற கட்சியினரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டி வரும்.  இன்னமும் அவர் திரைப்படத்தில் நடித்து வருவதால், உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்பது சரியான முடிவுதான். ஏனெனில், அவர் இன்னமும் கட்சி  தொடங்கவில்லை.
எம்.ஆர். லட்சுமிநாராயணன், 
நாமக்கல். 
 
பொறுத்திருந்து...
"2021 பேரவைத் தேர்தலின்போது கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவேன். அதுவரை சினிமாவில் நடிப்பேன்' என்பது ரஜினிகாந் தீர்மானமாக அறிவித்த முடிவு. சொன்னதைச் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
அ.யாழினி பர்வதம், சென்னை.

இலக்கு காரணமாக...
உள்ளாட்சித்  தேர்தலில்  எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என ரஜினி கூறி யிருப்பது, மிகச் சரியான அறிவிப்பு. கட்சிப் பெயரை அறிவித்து பின்னர் தங்கள் கட்சியினருக்கு தமது நிலையை தெளிவுபடுத்தலாம். நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித்  தேர்தல் என தேர்தல்கள் வந்தாலும், அவர் இலக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தல்தான். இதை முன்பே  கூறியிருக்கிறார். 
ரா.கீர்த்திப்ரியன்,  
துடியலூர்.

கட்சி தொடங்கட்டும்
மற்ற நடிகர்களைப்போல  எந்தக் கட்சி அமைப்பும் இல்லாதபோது ஆதரவு, எதிர்ப்பு என்று ரஜினிகாந்த் அறிக்கை விடுவது வெறும் வார்த்தை ஜாலம்தான். எப்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறார், எப்போது தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்பது அவரின் ரசிகர்களுக்கும் தெரியாது, ஏன் அவருக்கும் தெரியாது. முதலில் அவர் கட்சி தொடங்கட்டும். ஆதரவு,  எதிர்ப்பெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.
அ.கருப்பையா, பொன்னமராவதி. 

பயமா?
நடிகர் ரஜினிகாந்த்தான் அரசியலுக்கு வருவதற்கு நாள் பார்க்கிறாரா இல்லை, பயமா என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும், அவருக்கு மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தலை உரைகல்லாகப் பயன்படுத்திப் பார்ப்பதை விட்டு விட்டு, தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்பது சும்மா கிடக்கிற சங்கை ஊதுவது போலாகும். 
கோதைமாறன், திருநெல்வேலி.

நீண்டகாலத் திட்டம்?
எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்பதற்கான காரணத்தையும் சேர்த்தே சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒவ்வொரு முறையும் தேர்தலைச் சந்திப்பதைத் தவிர்ப்பதைப் பார்க்கும்போது பயப்படுகிறாரோ, தயங்குகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், பொதுப் பிரச்னைகளில் அவர் துணிச்சலாக, நியாயமான கருத்துகளைத் தெரிவிப்பதைப் பார்த்தால் நல்ல அரசியல்வாதியாகத் தெரிகிறார். மொத்தத்தில் மனிதர் மனதில் ஏதோ நீண்ட காலத் திட்டம் இருக்கும்போல்தான் தெரிகிறது. 
சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

கவனிக்கிறார்!
உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என நடிகர் ரஜினிகாந்த்  அறிவித்துள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், தமிழகத்தில் உள்ள இரு பெரும் கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய இரண்டுக்கும் எதிராகத்தான் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட வேண்டும் ரஜினி. ஏற்கெனவே ஒருமுறை 1996-ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு 
எதிராக திமுகவுக்கு ஆதரவுக் குரல்  கொடுத்தார் ரஜினி. இன்றைய சூழ்நிலையில் இரண்டு கட்சிகளுமே எந்த நிலையில் உள்ளன என்பதை அமைதியாகக் கூர்ந்து கவனித்துவரும் அவர், உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என முடிவு செய்திருப்பது சரியே.
பி.துரை, காட்பாடி.

மதிப்பு அதிகரிக்கும்
உள்ளாட்சித்  தேர்தலில் எந்தக்    கட்சிக்கும்  ஆதரவில்லை  என நடிகர் ரஜினிகாந்த் நேர்மையாகச் சொல்லியிருப்பதால்,   அவர் மீது  மக்களுக்கு மதிப்பும் மரியாதையும்  அதிகரிக்கும். கடவுள் மீது அதிக நம்பிக்கையுள்ள  ரஜினிகாந்த்  ஒரு முடிவு செய்தால்  அது அவர் கடவுளிடம்  வேண்டி செய்த முடிவாகத்தான் இருக்கும்.    எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று  தெரிவிப்பது  மிகச் சிறந்தது என்று எண்ணியிருக்கலாம்.  அதனால் அவருடைய  இந்த முடிவு மிகச் சரியானதே.   
உஷா முத்துராமன்,  மதுரை.

ஆதரிப்பதால்...
உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பது சரியான முடிவுதான். ஏனெனில், தற்போதைய தமிழகக் கட்சிகளில் எந்தக் கட்சியும் சரியான கட்சிகளாகத் தெரியவில்லை. எனவே, ரஜினி-கமல்-சீமான் போன்றவர்கள் சேர்ந்து சிறந்த அணியை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இருக்கும் கட்சிகளை ஆதரிப்பதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. ஒரு புதிய அணிதான் ஊழலில்லாத, நேர்மையான, உண்மையான ஆட்சியை தர முடியும். எனவே, எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்ற ரஜினி எடுத்த முடிவு நூற்றுக்கு நூறு சரி.
ந.கண்ணையன், கிருஷ்ணகிரி.

கறை தவிர்க்க...
ரஜினி தன் எதிர்காலத்தில், அரசியல் களத்தில் குதித்து மக்களுக்குத் தொண்டாற்ற நினைப்பவர். இரு திராவிடக் கட்சிகள் நடத்தும் அரசியலை நன்கு அறிந்தவர். ஆன்மிகத்தில் பற்றுள்ள இவர், மக்களின் தேவையை அறிந்து சேவை புரிய வருபவர். எனவே, தமது பெயரைக் கூறி களங்கப்படுத்திவிட்டால், அரசியல் களம் புகுவதில் சிரமம். கறைபடாத கரங்களோடு ஆட்சியை நடத்த முனைப்பவர். எனவே, யாருக்கும் ஆதரவில்லை என்ற ரஜினிகாந்தின் முடிவு சரிதான்.
சு.இலக்குமணசுவாமி, மதுரை.


"நிர்பயா' நிதியில் ஒரு ரூபாயைக்கூட சில மாநிலங்கள் செலவழிக்கவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியது குறித்து என்ன கருதுகிறீர்கள்?


இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் 
எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com