Enable Javscript for better performance
நேர்மையானவர்கள் என்னை நம்புகின்றனர்; ஊழல்வாதிகள் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர் என்று பிரதமர் மோடி கூறி- Dinamani

சுடச்சுட

  

  நேர்மையானவர்கள் என்னை நம்புகின்றனர்; ஊழல்வாதிகள் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளது சரியா  என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 20th February 2019 01:20 AM  |   அ+அ அ-   |    |  

  உண்மை!
  பிரதமர் மோடியைப் பார்த்து ஊழல்வாதிகள் அஞ்சுகின்றனர் என்பது உண்மை. பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரச்னைகள், விசாரணைகள், நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதனால்தான் பல்வேறு வகைகளில் பாதிப்படைந்துள்ள ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். முதலில் கூட்டணியில் சேராமல், தனித்து நின்று பிரதமராக நினைத்தவர், தனக்கு பிரச்னை ஏற்பட்டு போராடிய பின் தற்போது சுயநலத்துக்காக கூட்டணியில் சேர்ந்துள்ளார். இந்தியா ஏற்கெனவே பல்வேறு மகா கூட்டணிகளைச் சந்தித்து விட்டது. தற்போதைய ஊழல் கூட்டணியும் உடைந்து வலுவிழக்கும்.
  டி.சேகரன், மதுரை.

  நேர்மையே வெல்லும்!
  உண்மைதானே! சுயநலம் இன்றி நாட்டின் மீதும் நாட்டின் வளர்ச்சி மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் எல்லாரும் பிரதமர் மோடியை நம்புகிறார்கள். குறுக்கு வழியில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றி ஊழல் புரிந்தவர்கள், ஊழல் புரிய துணை நின்றவர்கள் எல்லாம் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் தமது உண்மையான பிம்பம் வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சி, மகா கூட்டணி என்ற மாயையை ஏற்படுத்துகின்றனர். நேர்மையே வெல்லும்.
  ரா. பாலமுருகன், திருச்சி.

  அச்சுறுத்த அல்ல!
  தவறு செய்பவர்கள் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று மோடி பேசியது யதார்த்தமான மேடைப் பேச்சு. யாரையும் அச்சுறுத்துவதற்காகச் சொல்லப்பட்டதல்ல. ஊழல் செய்தவர்களோ, முறைகேடாக நடப்பவர்களோ விசாரணை, நீதிமன்ற வழக்குகளைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கும்போது, பிரதமர் மோடியைப் பார்த்து எதற்காகப் பயப்பட வேண்டும்?
  ப.அடைக்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

  நிரூபிக்க வழி என்ன?
  ஊழலற்ற ஆட்சியையே மக்கள் விரும்புவர். ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காகவே ஓர் அரசை வாக்கின் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஊழல்வாதிகளுக்குச் சரியான தண்டனை வழங்கினால் மட்டுமே ஊழலற்ற ஆட்சி நடத்துவதாக மக்களிடம்  கூறிக் கொள்ள முடியும். அரசின் வெளிப்படைத்தன்மையை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலமே, பிரதமரைப் பார்த்து ஊழல்வாதிகள் அஞ்சுகிறார்கள் என்பதை நிரூபிக்க முடியும்.
  எம். ஜோசப் லாரன்ஸ், துறையூர்.

  கற்பனை!
  நேர்மையானவர்கள் என்னை நம்புகின்றனர்; ஊழல்வாதிகள் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளது அவரது கற்பனைத் திறனையே காட்டுகிறது. மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் அப்படி என்ன அவர் சாதனை செய்து விட்டார்? நேர்மையானவர்களுக்கு இவரால் பலனும் இல்லை; ஊழல்வாதிகளின் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  நன்னிலம் இளங்கோவன், 
  மயிலாடுதுறை.

  தேர்தல் முடிவில்...
  பொதுக்கூட்டங்களில் பேசும்போது மக்களைக் கவர்ந்து இழுக்க வேண்டுமானால் பிரதமருடைய பேச்சு சரியானதாக இருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சிகளிடம் இவர்தான் அஞ்ச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய கூட்டணியைக் கண்டு அவர் தான் பயந்து, தம்மிடமுள்ள பயத்தை மறைப்பதற்கு இப்படி பேசி சரி செய்துகொள்கிறார் என்பதுதான் நிதர்சனம். மக்கள் யாரைக் கண்டு அஞ்சினர் என்பது தேர்தல் முடிவில் தெரியும்.
  ப. சுவாமிநாதன், சென்னை.

  அழகல்ல...
  ஆட்சி அதிகாரத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளவர் தன்னைப் பற்றியே எல்லா இடங்களிலும் இப்படி பெருமை பேசுவது நல்லதல்ல. மிகைப்படுத்தாத ஆட்சியின் உண்மையான சாதனைகளைக் கூறட்டும். எண்ணங்களை அப்படியே மேடைகளில் கொட்டுவது பிரதமருக்கு அழகல்ல. ஊழல்வாதிகள் இவரை (பிரதமரை) கண்டு அஞ்சுகிறார்கள் என்றால், அந்தக் ட்சி பரிசுத்தமானதாக அல்லவா இருக்க வேண்டும்? அப்படி இல்லையே?
  ச.கந்தசாமி, தூத்துக்குடி.

  ஏற்புடையதன்று
  தனக்குத் தானே நற்சான்றிதழ் கொடுத்துக் கொள்வது ஏற்புடையதன்று. ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பது அடுத்தவர்களின் சொல்லைக் கொண்டுதான் முடிவு செய்யப்படும். எவ்வளவு கெட்டவராக இருந்தாலும் எவரும் தான் கெட்டவர் என ஏற்றுக் கொள்ள மாட்டார். இதே போன்றுதான் ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தன்னைத் தானே நல்லவர் என்று தானே தன்னை சிலாகித்துக் கொள்வதும் இதுபோன்றதுதான்.
  க. சுல்தான் ஸலாஹீத்தின், 
  காயல்பட்டினம்.

  அவசரப் பேச்சு
  பிரதமர் மோடி கூறியுள்ளது ஒரு சாதாரண அரசியல்வாதியின் அறிக்கை போல்தான் உள்ளது. அவரது கட்சிக்காரர்களை வேண்டுமானால் அது மகிழ்ச்சி அடையச் செய்யும். ஊழல் என்பது எல்லாக்  கட்சிகளிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. ஆளும் கட்சியும் இதில் அடக்கம். ஊழல்வாதிகள் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர் எனில், பிரதமர் மோடியின் கட்சியைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்களுக்கு அது பொருந்தாதா? நேர்மையானவர்கள் என்னை நம்புகின்றனர் என்பதும் அது போன்றதுதான். அவரை நம்பாதவர்கள் அனைவரும் நேர்மையற்றவர்கள் என்பது எதிராக வாக்களித்தவர்களை அவமதிக்கும், அவசரப் பேச்சு.
  கி.சந்தானம், மதுரை.

  ஊழலின் வேகம்...
  பிரதமர் மோடி கூறியது இது சரியல்ல. ஆனால், நல்ல அரசியல்வாதியின் பேச்சாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பின் ஊழலின் வேகம் மட்டும்தான் குறைந்துள்ளது. ஆனால், ஊழல் குறையவில்லை என்பதுதான் உண்மை.
  அரசின் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை காக்கப்படுவதால், அமைச்சர்கள் நேரடியாக ஊழலில் ஈடுபட முடியாது. ஆனால், பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக முடிவுகள் எடுக்கப்படும்போது , கட்சி நிதிக்கு நன்கொடைகள் மிக அதிகமாகப் பெறப்பட்டுள்ளது. இது மறைமுக ஊழல் ஆகும். இது ஒரு பணிக்கு நேரடியாகப் பணம் வாங்காமல், பணி முடிந்த பின் பொருள்களை அன்பளிப்பாகப் பெறுவதற்கு ஒப்பாகும். அந்த மாதிரியான செயல்கள்தான் பா.ஜ.க. அரசில் நடைபெறுகிறது. ஊழல்வாதிகள் தன்னைப் பார்த்து அஞ்சுகின்றனர்  என்பது சிறந்த நகைச்சுவை.
  பி.கே.ஜீவன், கும்பகோணம்.

  நம்பிக்கையை...
  குஜராத்தின் முதல்வராக பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்தபோதும், நம் நாட்டின் பிரதமராக பதவியேற்றபோதும் நேர்மையானவர்கள் அவரை நம்பினர். ஆனால், ரஃபேல் விவகாரத்தில் எச்.ஏ.எல்.-க்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் உரிமையை வழங்கமால், அம்பானி குழுமத்துக்கு வழங்கியுள்ளது குறித்து இன்று வரை அவர் சரியான விளக்கம் அளிக்கவில்லை. நெருப்பு இல்லாமல் புகையுமா என்ற பழமொழிக்கேற்ப இந்த விவகாரத்தில் நேர்மையானவர்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்து விட்டார்.
  ச.கிருஷ்ணசாமி, மதுரை.

  சரியானதல்ல!
  மக்களுக்கு நன்மை செய்ய, மக்களால் தேர்ந்தெடுக்கபடுபவர்கள் பொதுநல சேவை செய்யாமல் சுய நலத்தைத் தேடுகிறார்கள். ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள். அரசியல்வாதிகள் யாரும் இன்றைய கால கட்டத்தில் ஊழல்வாதிகள்தான். மக்கள்தான் இவரைக் கண்டு அஞ்சுகின்றனர். இவருடைய (பிரதமர் மோடி) செயல்பாடுகள் மக்களை அச்சம் கொள்ள வைக்கிறது.  பிரதமர் மோடியை பலரும் நம்பவில்லை.
  தொ.எழில்நிலவன், 
  களமருதூர்.

  விளக்குவாரா?
  ஊழல்வாதிகள் என்பதற்கு பிரதமர் என்ன அளவுகோல் வைத்துள்ளார் எனத் தெரியவில்லை. பா.ஜ.க.வின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல்கள் என்னென்ன? ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? இது குறித்து பிரதமர் மோடி விளக்குவாரா? தமிழகத்தில் ஊழல் கட்சி என்று பாஜக தலைவர் அமித்ஷா குறிப்பிட்ட கட்சியுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. இதே போன்று பல மாநிலங்களில் ஊழல்வாதிகள் என பிரதமர் குறிப்பிட்டவர்களோடு பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சி செய்வது சந்தர்ப்பவாத அரசியல் ஆகாதா?
  பொன்.கருணாநிதி, 
  கோட்டூர்.
   

  kattana sevai