சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் முடிவு எடுத்திருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 27th February 2019 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முற்றிலும் சரியே!
  திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்த், அரசியலில் இன்னும் அரிச்சுவடி கற்க வேண்டிய நிலையிலேயே உள்ளார். ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு களம் காணும் முனைப்பில் உள்ள நிலையில், ரஜினி மக்கள் மன்றம் ஓர் அரசியல் கட்சியாகக்கூட உருவெடுக்காததால்,மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்ற ரஜினியின் முடிவு முற்றிலும் சரியே!
  பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

  ஏழைக்கு உதவட்டும்
  ரஜினியின்  முடிவு மிக நேர்த்தியான, நல்ல சந்தர்ப்பதில் எடுத்துரைத்த நல்ல கருத்து. சினிமாவில் சம்பாதித்த பணத்தைத் தேர்தலில் செலவு பண்ணக்கூடாது. கல்லூரி, பள்ளிகள், ரியல் எஸ்டேட், ஆன்மிகம், வர்த்தகம், பங்குச் சந்தை, சில வகையான முதலீடுகள் போன்றவற்றில் செயல்பட்டு லாபம் பெறலாம். ஏழை மக்களுக்கு நல்வழியில் உதவுங்கள்; பேரும் புகழும் கிட்டும்.
  ஜி. தியாகராஜன், கீவளூர்.

  இலக்கு சட்டப்பேரவை
  சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்ற ரஜினி கருத்தோடு இணைத்துப் பார்க்கும்போது சரி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், அந்த அறிவிப்பை நீண்ட காலத் தயாரிப்பில் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால்,  சட்டப் பேரவை தேர்தல் நேரத்திலும் தயக்கம் காட்டினால் அது சரியல்ல, தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
  சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.

  துணிவில்லை
  ரஜினிகாந்த் சினிமா வசனங்களைத்தான் அரசியலிலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசிவருகிறார். எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல வந்துடுவேன்,என்று வசனம் பேசி எவ்வளவு காலம் ஆகிவிட்டது? அவர் அரசியலுக்கு வரப்போவதே இல்லை; வந்தாலும் தேர்தலில் நிற்கப் போவதில்லை. அவரது திரைப்படம் ஒன்று வெளிவரவிருக்கையில் அவரது பேச்சு ஒரு மாதிரி இருக்கும். திரைப்படம் வெளிவந்து ஓடினால் ஒரு பேச்சும்; ஓடாவிட்டால் வேறு பேச்சாகவும் இருக்கும். மொத்தத்தில் சிஸ்டம் சரியில்லை என்பார். அரசியலுக்கு வர அவருக்குத் துணிவில்லை.
  அ. கருப்பையா, 
  பொன்னமராவதி.

  மக்களைச் சந்திக்கட்டும்
  ரஜினி தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பு மக்களைச் சந்திக்க வேண்டும். அதற்கு அவர் தயாரில்லை. அவரின் திரைப்படம் வெளி
  யிடும் போதெல்லாம் தடாலடியான அறிவிப்புகள் செய்வது ரஜினியின் வாடிக்கையான செயல். இன்றல்ல என்றும் தேர்தலை சந்திக்கும் துணிவு ரஜினிக்கு இல்லை என்பதே உண்மை.
  எஸ்.எம்.ஏ.செய்யது முகம்மது, 
  திருநெல்வேலி.

  உறுதிப்படுத்தியுள்ளார்
  நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என இருந்து வரும் அரசியல் வழக்கத்தை மாற்றும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கும் ரஜினி பாராட்டுக்குரியவர். ஏற்கெனவே எடுத்த முடிவை அவர் உறுதி செய்துள்ளார்.
  சாய் ஜயந்த், சென்னை.

  ராஜதந்திரம்
  உள்ளூரில் விலை போகாதது வெளியூர் சந்தையில் விலை போகாது என்பார்கள். அதுபோல, முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் சில இடத்திலாவது ஜெயிக்க வாய்ப்பு 
  உள்ளதா? பிறகு பார்த்துக் கொள்வோம். மக்களவைத் தேர்தலில் என்று சிந்தித்துக் கூறிய பதில் மிகவும் சரியே. ராஜ தந்திர பதில்.
  பி.எல்.குமார், திருமயம்.

  ரசிகர்களைத் தடுக்க...
  அறிக்கையே தவறு. கட்சி என்று ஆரம்பிக்கப்படவே இல்லை. இந்நிலையில் இந்த அறிக்கையே தேவை இல்லை. கட்சி ஆரம்பிப்பதாக கூறிக் கொண்டேதான் இருக்கிறார். தன் படம் வெளியாகும் போது மட்டுமே எப்போதும் அறிக்கை வெளிவருவது வழக்கம். அறிக்கையைப் படித்து, படித்து வெறுத்துப் போன ரசிகர்கள், வேறு கட்சிகளுக்குச் சென்று விடாமல் தடுக்கவே கட்சி ஆரம்பிப்பதாக அறிக்கை விட்டாரே தவிர, கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் எள்ளவும் கிடையாது.
  டி. சேகரன், மதுரை.

  மறுபரிசீலனை 
  தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்ததை  ரஜினிகாந்த், மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரஜினி  தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
  எஸ். நாகராஜன், அஸ்தினாபுரம்.

  சரியில்லை
  போட்டி இருந்தால்தான் வாக்களித்தவர்களுக்கு முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும். மக்களவைத் தேர்தலிலும் பலர் போட்டியிடும்போது, போட்டியில்லை என்று சொல்வது எப்படிச் சரியாகும்? வகுப்பில் பலபேர் போட்டித் தேர்வு எழுத அதில் பங்கு பெற்று வெற்றி பெறுவது எப்படிப் பெருமையோ அதுபோல போட்டி இருந்து வெற்றி பெற்று பெரும்பான்மையினை நிரூபித்து ஆட்சி அமைப்பதுதான் மணிமகுடமாகத் தெரியும்.
  உஷா முத்துராமன், மதுரை.

  சரிதான்
  இன்னும் கட்சிப் பேரைப் பதிவு செய்து அறிவிக்கவில்லை; கட்சியின் நிர்வாகிகள் யார் யாரெனத் தெரிவிக்கவில்லை; தெளிவானக் கட்சியின் கொள்கை இதுதான் என வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆகவே போட்டியில்லை என்பது அவர் வழி!
  எழில் சோம. பொன்னுசாமி, 
  ஆவடி.

  திரைத்துறை மூலம்...
  அரசியலுக்கு அவர் வருவது நல்லதன்று. உள்ள பெயரும் போய் விடும். மக்களை எந்த வகையிலும் எப்பேர்பட்ட அரசியல்வாதியாலும் திருப்திப்படுத்த முடியவே முடியாது. இதில் ரஜினி வந்து வருந்துவதை விடத் தமது திரைத்துறை மூலம் மக்களுக்கு ஏதேனும் செய்வதுதான் அவருக்கு நல்லது. 
  தெ. முருகசாமி, 
  புதுச்சேரி.

  சினிமா வேறு, அரசியல் வேறு!
  தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சி என்று ஆங்கீகாரம் பெறவில்லை. இப்படியிருக்கும் போது மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கூறுவது தவறு. சரியான கொள்கை - சரியான முடிவு எடுக்காமல் மக்களிடம் செல்வது அரசியலில் கால் பதிக்க முடியாது.
  சினிமா வேறு, அரசியல் வேறு. நிலையான முடிவுதான் நிலைத்து நிற்கும். குழப்பங்கள் நிறைந்த முடிவு மக்களை மேலும் குழப்பும். நேரத்துக்கு ஒரு முடிவு பேச்சு குழம்பிய நிலையில் உள்ளவர்கள்தான் செய்வர். அதனால் ரஜினி பேச்சை பெரிதாக எடுக்கத் தேவையில்லை.
  தொ.எழில் நிலவன், 
  களமருதூர்.

  சரியே...
  கட்சி இல்லை - அங்கீகாரம் இல்லை? 
  மக்களவைத் தேர்தலில் எவ்வாறு எதனடிப்படையில் போட்டியிட இயலும்? யாருடனாவது கூட்டணி வைத்து அவர்களது சின்னத்தில் போட்டியிடவேண்டியிருக்கும். தமது கொள்கைகளை விடுத்து கிட்டத்தட்ட அவர்களாகப் போட்டியிடுவதற்கு அது சமமானது. குறுகியகால அவகாசத்திற்குள் கட்சி துவங்கி மக்களைச் சென்றடைந்து ஓட்டு கேட்பது என்பது தம்மால் இயலாத காரியம் என்ற மலைப்பாகக் கூட இருந்திருக்கலாம். எனவே, அவர் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருப்பது அவருக்கும் சரியே... மக்களை குழப்பாமல் விட்டது சரியே.
  ப. தாணப்பன், 
  தச்சநல்லூர் 

  வியப்பு இல்லை
  மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற ரஜினிகாந்த்  முடிவில் வியப்பதற்கோ, சிந்திப்பதற்கோ ஏதுமில்லை. அவ்வப்பொழுது ஏதாவது பரபரப்பான அறிக்கைகளை அரசியல் தொடர்பாக தந்துவிட்டு படப்பதிவிற்கோ, ஓய்விற்கோ, ஆன்மிகப் பயணங்களுக்கோ சென்றுவிடுவதையே  வழக்கமாகக் கொண்டிருக்கும் அவர் இதுவரை கட்சித் தொடங்கியதாகவோ கொடி, சின்னம் அமைத்ததாகவோ, மாநாடு நடத்தியதாகவோ, தேர்தல்களில் போட்டியிட்டதாகவோ தெரியவில்லை.தனது ரசிகர்கள் கூட்டத்தைக் கூட்டி அடிக்கடி பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு அமைதியாகி விடுவதையே நாம் பார்க்க முடிந்திருக்கிறது.
  கவியழகன், 
  திருவொற்றியூர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai