சுடச்சுட

  

  கடந்த வாரம் கேட்கப்பட்ட "அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது நல்ல யோசனையா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 02nd January 2019 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  யோசனை சரியே!
  நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் நியாயமாக இருக்குமானால் கண்காணிப்புக் கேமரா பற்றிய பேச்சுக்கே இடமிருக்காது. ஏழை மக்களின் உணவுத் தேவையை ஓரளவாவது நிறைவு செய்யும் நிலையில் அமைந்த கடைகளிலும் அளவுகள் குறைக்கப்படுதல், இருப்பு இருந்தும் இல்லையெனக் கூறுதல், வாங்காத பொருள்களை வாங்கியதாகப் பதிவு செய்தல் போன்ற குற்றங்களைத் தடுக்க கண்காணிப்புக் கேமரா கட்டாயம் தேவை. உயர் நீதிமன்றத்தின் யோசனை நல்லதுதான்.
  கவியழகன்,
  சென்னை.

  பலன் தராது
  இது நடைமுறைக்குச் சரிப்பட்டு வரும் யோசனையாகத் தெரியவில்லை. முறைகேடுகளையும், ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவதையும் தடுக்கப் பல வழிகள் உண்டு. எந்த நேரமும், அமைச்சரோ, அதிகாரிகளோ, நிலைமையைப் பார்வையிட வருவார்கள் என்ற அச்சமே முறைகேடுகளைத் தடுக்க உதவும். அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். திடீர் திடீரென சத்துணவுக் கூடங்களுக்குச் சென்றதும், ரேஷன் கடைக்கு அமைச்சர்கள் சென்று சரி பார்த்ததும் நடந்திருக்கிறது. கண்காணிப்புக் கேமரா அதிக பலன் தராது.
  கி.சந்தானம்,
  மதுரை.

  பயம் ஏற்படும்
  நியாயவிலைக் கடைகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், அதை அசட்டையாகப் பராமரிக்காமல் விடுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. கள்ளச் சந்தையில் பொருள்களை விற்றல், பொதுமக்களிடம் மரியாதையின்றி நடந்து கொள்ளுதல், நினைத்த நேரத்தில் கடையைத் திறப்பது மற்றும் மூடுவது, சில நாள்களில் கடையைத் திறக்காமல் விடுவது போன்ற செயல்கள் கேமராவில் பதிவாகும். ஆனால், இவற்றை ஆராய்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது சந்தேகம்தான். எனினும், முறைகேடுகளில் ஈடுபட ஊழியர்களுக்கு பயமும் தயக்கமும் ஏற்படும் என்பது உண்மை.
  மா.தங்கமாரியப்பன்,
  கோவில்பட்டி.

  கேமரா செயல்படாவிட்டால்...
  அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது என்பது தமிழக அரசுக்கு பெரும் செலவை ஏற்படுத்தும். இதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் நுகர்வோருக்கு அவ்வளவாக இருக்கப் போவதில்லை. மேலும், கண்காணிப்பு கேமரா பராமரிக்கப்படுவதற்குத் தனியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவர். கண்காணிப்புக் கேமரா சீராக இயங்கவில்லையெனில் ஏற்படுத்தியதற்கான நோக்கம் நிறைவேறாது. எனவே, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது நல்ல யோசனை அல்ல.
  என்.பி.எஸ். மணியன்,
  மணவாளநகர்.

  சேவையை உறுதி செய்ய...
  பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் அலுவலக நேரத்தில்கூட செயல்படுவதில்லை. காலம் தாழ்த்தி திறக்கப்பட்டு, முன்கூட்டியே மூடப்படுகின்றன. பெரும்பாலான கடைகளில் எடையில் அதிக தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றன. தரமான சேவை கடைகளில் உறுதிப்படுத்தப்படவும், ஊழியர்கள் பொறுப்போடு செயல்படவும் கண்காணிப்பு அவசியம். எனவே, கேமரா பொருத்தப்பட வேண்டும் என்பது சரியான யோசனை.
  அரிமதி இளம்பரிதி,
  புதுச்சேரி.

  நடைமுறைக்கு சாத்தியமா?
  நியாயவிலைக் கடைகளில் கேமரா பொருத்தும் யோசனை நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. கேமராவுக்கு தங்கு தடையின்றி மின்சார வசதி தேவைப்படும். பழுது ஏற்பட்டால் அதைச் சரி செய்ய அதற்குரிய நபர்கள் குறித்த நேரத்துக்குள் சென்று சரி செய்யவேண்டும். கேமரா பொருத்துவதால் மட்டும் பதுக்கலைத் தடுக்க முடியும் என்று கருதுவது சரி அல்ல. இந்த யோசனையை தமிழக அரசு ஏற்பது சந்தேகமே.
  ப.சுவாமிநாதன்,
  சென்னை.

  அவசியம்தான்!
  நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறைபாடு உடையவைதான். பொருள்கள் வந்திறங்குவதிலிருந்து விநியோகம் வரை குறைகள் உள்ளன. எடை குறைவு பிரச்னையும் அதிகம். மேலும், கடைகள் பெரும்பாலும் குடியிருப்புகளைச் சாராமல் ஒதுக்குப்புறமாகத் தனியாகவே உள்ளன. எனவே, பொருள்கள் திருட்டுப் போகலாம். இவற்றை அறிய கண்காணிப்புக் கேமரா பொருத்துவது மிகவும் அவசியம்.
  கி. பாஷ்யம், சலுப்பை.

  உறுதுணை!
  அத்தியாவசியப் பொருள்கள் இருப்பில்லை என்று கூறுதல், பொருள்களைப் பதுக்குதல், கடத்துதல் போன்றவற்றைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். இந்தக் குழுவுக்கு கண்காணிப்புக் கேமரா உதவியாக இருக்கும். கடத்தல்காரர்களைக் கண்டறிய, அவர்களது குற்றங்களை நிரூபித்துத் தண்டனை பெற்றுத்தர கண்காணிப்புக் கேமரா பதிவு சாட்சியாக இருக்கும்.
  ப.தாணப்பன்,
  தச்சநல்லூர்.

  தீர்வாகாது!
  அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது அனைத்து முறைகேடுகளுக்கும் தீர்வாகாது. நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு பணியாளர்கள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் முதலானோருக்கும் பங்கு உண்டு. கடைகளுக்கு பொருள்கள் வராமலேயே இடையிலேயே கை மாறுகிறது. எனினும், தொடர்பில்லாத நபர்கள் நியாயவிலைக் கடைகளுக்கு வரும்போது கேமராவில் கண்காணிக்கலாம். கண்காணிப்புக் கேமரா பொருத்தபடுமானால், அவற்றைப் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  டி.ஆர்.ராசேந்திரன்,
  திருநாகேஸ்வரம்.

  ஊழல் குறையும்!
  கேமரா பொருத்துவது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது நல்லதுதான். இதனால், நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் ஊழல் குறையும். அரிசி உள்ளிட்ட பொருள்களைக் கடத்துவது தடுக்கப்படும். கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது அவசியம்.
  எழில் சோம. பொன்னுசாமி, சென்னை.

  பலன் தராது என்றாலும்...
  கண்காணிப்புக் கேமராவை மறைத்து அத்தியாவசியப் பொருள்களை சட்டவிரோதமாக விற்க முடியும். எடை குறைவாக பொருள்கள் விநியோகிக்கப்படுவதை கேமராவில் பார்க்க முடியாது. கடைக்கு வரும்போதே மூட்டைகள் எடை குறைவாக வருவதால், அதை ஈடு கட்ட வேண்டிய நிலையில் எடை குறைவாக பொருள்களை விநியோகிப்பதாக ஊழியர்கள் ஏற்கெனவே கூறி வருகின்றனர். எனினும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது குறித்து அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது நல்ல யோசனைதான்.
  மு.அ.ஆ.செல்வராசு, வல்லம்.

  நியாயம்தான்!
  அத்தியாவசியப் பொருள்களை மானிய விலையில் வழங்கும் முக்கியப் பணியைச் செய்வது நியாயவிலைக் கடைகள். உரிய பொருள்களை உரியவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டிருப்பது நியாயம்தான். பணப் பரிமாற்றம் நடைபெறும் இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுவதைப் போன்று நியாயவிலைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டியது அவசியம்.
  அ.கருப்பையா, பொன்னமராவதி.

  படிப்படியாக...
  ஏழை மக்களின் உணவுப் பிரச்னையைத் தீர்க்கும் இடமாக நியாயவிலைக் கடைகள் உள்ளன. புகார்கள் அதிகமாக வரும் கடைகள், பிரச்னைகள் உருவாகும் எனக் கண்டறியப்பட்ட கடைகளுக்கு மட்டும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தலாம். இவ்வாறு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் கடைகள், மற்ற கடைகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் அமையும். எனவே, கண்காணிப்புக் கேமராக்களை படிப்படியாகப் பொருத்தலாம். இதனால், மக்களின் வரிப் பணம் குறைவாகச் செலவிடப்படும்.
  வி.சரவணன், சிவகங்கை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai