"மேற்கு வங்கக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் பெயரை  பிரதமர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் முன்மொழியாதது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நேரத்திற்கொரு பேச்சு, நிமிஷத்துக்கு ஒரு கொள்கை; நாளுக்கொரு கூட்டணி. இதுவே அரசியல்வாதிகளின் தாரக மந்திரம். இதற்கு ஸ்டாலின் மட்டும் விதிவிலக்கா என்ன?

ராஜதந்திரம்!

நேரத்திற்கொரு பேச்சு, நிமிஷத்துக்கு ஒரு கொள்கை; நாளுக்கொரு கூட்டணி. இதுவே அரசியல்வாதிகளின் தாரக மந்திரம். இதற்கு ஸ்டாலின் மட்டும் விதிவிலக்கா என்ன? தமிழகத்தில் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்ததற்கு எழுந்த முணுமுணுப்புகளை மீண்டும் எதிர்கொள்ளாதிருக்க ஸ்டாலின் செய்தது சரியான ராஜதந்திரமே.

கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

சரி அல்ல!

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிய காங்கிரஸ் தலைவர்களே தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மு.க.ஸ்டாலின் அவரது பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்து தேசிய அளவில் பெயர் வாங்கிக் கொண்டவர். ஆனால், அதன்பின் மேற்கு வங்கத்தில் தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஸ்டாலின் அவரது பெயரை முன்மொழிய முன்வராதது அவரது அரசியல் நிலைப்பாட்டின் தடுமாற்றத்தைத்தான் காண்பிக்கிறது. இது முற்றிலும் சரியல்ல.

எஸ். ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

சரிதான்!

சென்னை அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு வந்த ராகுல் காந்திக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த அரசியல் ரீதியாக ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன் மொழிந்தார் ஸ்டாலின். திமுக தலைவரின் சொந்த விழா - சொந்த முன்மொழிவுக் கருத்து. கொல்கத்தாவில் நடந்தது எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டணி மாநாடு. அதில், ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் பதவிக்கு ஸ்டாலின் முன்மொழிந்திருந்தால் திமுகவுக்கு சங்கடம் உருவாகியிருக்கும். எனவே, ஸ்டாலினின் செயல் சரியே.

ராஜு நரசிம்மன், சென்னை.

தவறுதான்!

மேற்கு வங்கக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் பெயரைப் பிரதமர் பதவிக்கு ஸ்டாலின் முன்மொழிந்திருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் ராகுலைத் தொடர்ந்து வரும் அகில இந்தியத் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னும் நிலை உறுதிப்பட்டிருக்கும். தமிழகத்தின் செல்வாக்கு மத்தியில் மேலும் உயர்ந்திருக்கும். ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் பதவிக்கு ஸ்டாலின் முன்மொழியாததால், சிறப்பு நிலையை இழந்திருக்கிறார். தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய செல்வாக்கும் குறைந்து விட்டது. எனவே, ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழியாதது மிகப் பெரும் தவறு.

செ.சத்தியசீலன், திருநெல்வேலி.

அதிமுகவை வெல்வதற்காக...

கூட்டணி பலம் இல்லாவிட்டால், அதிமுகவை வெல்ல முடியாது என்பதை ஆர்.கே.நகர் தோல்வியில் உணர்ந்த ஸ்டாலின், பா.ஜ.க. எதிர்ப்பு என்ற முகமூடி அணிந்து கூட்டணி அமைக்கிறார். மற்றபடி மோடி, ராகுல் என யார் பிரதமரானாலும் அவருக்குக் கவலையில்லை. எனவேதான், ராகுல் காந்தியின் பெயரை ஸ்டாலின் முன்மொழியவில்லை. இது சரியானது மட்டுமல்ல, நேர்மையானதும்கூட.

சாய் ஜயந்த், சென்னை.

பாஜகவுக்கே சாதகம்

ராகுல் காந்தியின் பெயரைப் பிரதமர் பதவிக்கு ஸ்டாலின் முன்மொழியாததது தவறு. பாஜக, அதிமுக தவிர பிற மாநிலங்களின் எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஒருங்கிணைப்பின்மை, கசப்பு மனப்பான்மை உள்ளது. அவற்றின் வெளிப்பாடே மேற்கு வங்கக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் பெயர் பிரதமர் பதவிக்கு அறிவிக்கப்படவில்லை. "ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்' என எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் கூறாதவரை மக்களவைத் தேர்தலில் பலன் அடையப் போவது பா.ஜ.க.தான்.

எஸ்.நாகராஜன், அஸ்தினாபுரம்.

பிரச்னையைத் தவிர்க்க...

பா.ஜ.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் பிரதமர் யார் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் மற்ற கட்சிகள் வேலை செய்யாது. இந்தச் சூழ்நிலையில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியின் பெயரை ஸ்டாலின் முன்மொழிந்திருந்தால், கூட்டணிக் கட்சிக்களுக்குள் பிரச்னையைத்தான் உண்டாக்கும்.

சு. ஆறுமுகம், கழுகுமலை.

மறந்திருக்க மாட்டார்!

கூட்டணிக்கான முதல் கட்ட கூட்டம்; தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலை; எனவே, யாருடன் யார் கூட்டணி என்பது உறுதியான பின்னரே தன்னுடைய நிலைப்பாட்டினை தெரிவிக்கவே ஸ்டாலின்  அமைதி காத்திருக்கலாம். சென்னையில் பேசிய  பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பை அவர் மறந்திருக்க மாட்டார்.

ஆர்.விஜயலட்சுமி, சிவகங்கை.

மாறுபட்ட கூட்டம்

தமிழகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை அழைத்தார் ஸ்டாலின். அந்த நிகழ்ச்சியில், தனது ஆசையை சாதுர்யமாக வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்துப் பெருமை தேடிக் கொண்டார் ஸ்டாலின். ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த கூட்டம் முற்றிலும்  மாறுபட்டதாகும். எனவே, ஸ்டாலின் அங்கு அமைதி காத்தது சரியே!

கே. வேலுச்சாமி, தாராபுரம்.

ஒருங்கிணைந்து செயல்பட...

சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தியை முன்னிலைப்படுத்தியதை எதிர்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, பலமான கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. எனவே, மேற்கு வங்கக் கூட்டத்தில் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தாமல் மற்ற அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக தவிர்த்துப் பேசியிருக்கிறார். முன்மொழியாதது சரியானதுதான்.

மு. செந்தமிழ்செல்வி, சென்னை.

மம்தாவுக்குச் சாதகமாக...

இடத்துக்கும் நேரத்துக்கும் தகுந்தபடி அரசியல்வாதிகள்  பேச்சை அமைத்துக் கொள்வார்கள். அதைத்தான் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்தியாவின் பிரதமராக வரலாம் என்ற யூகம் உள்ளது. எனவே, முதல்வர் மம்தா பானர்ஜியிடம் நற்பெயர் பெறவே மேற்கு வங்கக் கூட்டத்தில் ராகுல்காந்தியின் பெயரை பிரதமர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் முன்மொழியவில்லை.

உ. இராசாமணி, மானாமதுரை.

அரசியல் மந்திரம்!

ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் முன்மொழியாதது சரியே. முன்மொழி என்றால் அது தெரியாத ஒன்றை அனைவருக்கும் சொல்வது; ராகுல் காந்திக்கு எதற்கு முன்மொழி? ஊர் அறிந்த மயிலை, அங்குள்ள  அனைவருக்கும் "இது மயில்' என்று சொல்ல வேண்டியதில்லை. அமைதியே வெற்றியின் படி என்ற அரசியல் மந்திரம் அறிந்த ஸ்டாலின், ராகுல் பெயரை முன்மொழியாதது சரிதான்.

உஷாமுத்துராமன், மதுரை.

நோக்கம் என்ன?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராக வரக் கூடாது என்பதே ஸ்டாலினின் முக்கிய நோக்கம்.  பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்பது இரண்டாம் பட்சம். மேலும், சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் பதவிக்கு ஏற்கெனவே ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தக் கருத்து எதிர்கட்சித் தலைவர்களிடையே பல்வேறு விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரதமர் பதவிக்கான மூன்றாவது நபர் குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்படாத நிலையில் தேவையற்ற சலசலப்புகளைத் தவிர்க்கவே ராகுல் காந்தியின் பெயரை மீண்டும் ஒருமுறை ஸ்டாலின் முன்மொழியவில்லை.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

முடிச்சுப் போட வேண்டாம்!

மேற்கு வங்கக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் முன்மொழியாதது சரியே. அரசியல் வேறு, நட்பு வேறு எனப் பகுத்துப் பார்த்து சொன்ன வார்த்தை அது. கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்ததற்கும், பிரதமர் மோடியை எதிர்க்கும் 23 கட்சிகள் அடங்கிய, அதாவது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த அரசியல் கூட்ட மேடைக்கும் முடிச்சுப் போடுவது அழகல்ல. எனவே, ராகுல் காந்தியின் பெயரை ஸ்டாலின் முன்மொழியாததில் தவறு இல்லை.

தாரா ரமேஷ், புதுச்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com