Enable Javscript for better performance
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம்-என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கரு- Dinamani

சுடச்சுட

  

  உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம்-என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 03rd July 2019 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசியல் தேவையில்லை!
  உதயநிதி ஸ்டாலின் இன்னும் திரைத் துறையிலேயே பிரகாசிக்கவில்லை. நடிப்புலகில் பிரபலமடைந்து அரசியலுக்கு வருவதே அவருக்கு நல்லது. அதில் ஒரு கால், இதில் ஒரு கால் என்று வைக்கும்போது தடுமாற்றம் ஏற்படும். எந்தத் துறையிலும் வளர்ச்சி அடைய முடியாது. மேலும், அவர் இன்னும் அரசியலில் முதிர்ச்சி பெறவில்லை. கட்சி அவரை அழைத்தாலும், அரசியலுக்கு அவர் வராமல் இருந்தால்தான்  தற்போதுள்ள திரைத் துறையில் அவர் பிரபலமாக முடியும். எனவே, இப்போதைக்கு அவருக்கு அரசியல் தேவையில்லை.
  நன்னிலம் இளங்கோவன், 
  மயிலாடுதுறை.

  சாதிக்க முடியும்!
  வரவேற்கலாம். அரசியல் பின்புலம் உலகம் அறியும். தாத்தா சாதனைகள் ஊரறியும். தந்தையின் சமீபத்திய வெற்றி நிகரில்லாதது. மீன் குஞ்சுக்கு நீந்தவா தெரியாது? 70 வயதை நெருங்கும் நடிகர்களால் என்ன சாதிக்க முடியும்? உதயநிதி என்ற இளைஞரால் முடியும். 
  மு.அப்துல்லா, திருச்சி.

  தனித்துவம் அவசியம்!
  ஒருவரது அரசியல் பிரவேசம் என்பது அவரது உரிமையும், சுதந்திரமும் ஆகும். இதில் மற்றவரின் கருத்துக்கு இடமில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அவ்வாறு அரசியலில் ஈடுபடுவோர், தாங்கள் பெயரும் புகழும் பெற்றவர்களின் வாரிசுகள் என்ற முறையில் இல்லாமல் தமக்கே உரிய தனித்துவத்தில் அரசியல் பிரவேசம் செய்வதாக உணர வேண்டும். மேலும், வெளிப்படுத்த வேண்டிய கருத்துகளை அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்காமல், நிதானமாக யோசித்து அரசியல் நாகரிகத்தோடு செல்வார்களேயானால், அவர்களின் அரசியல் பிரவேசத்தில் தலையிட முடியாது.
  எம்.ஜோசப் லாரன்ஸ், 
  சிக்கத்தம்பூர்பாளையம்.

  வரவேற்போம்!
  ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம். உதயநிதியும் அதற்கு விதிவிலக்கல்ல. அவரது தாத்தா எவ்விதப் பின்னணியும் இன்றி சொந்த முயற்சியால் அரசியலுக்கு வந்து முன்னணி இடம் பிடித்தவர். ஸ்டாலினுக்கு அவர் தந்தை கருணாநிதி அரசியல் ஆசானாய் இருந்தார். உதயநிதிக்கு அரசியல் ஆசானாய் ஸ்டாலின் இருக்கிறார். நல்ல அரசியல் செல்வாக்கும் பின்னணியும் உள்ள குடும்பத்தில் இருந்து வருபவர் உதயநிதி. வரட்டுமே. 
  கோ.ராஜேஷ் கோபால்,
  அரவங்காடு.

  விமர்சிக்கப்பட்டாலும்கூட...
  கருணாநிதியின் பெயரன்,  வெற்றி வாகை சூடியிருக்கும் ஸ்டாலினின் மகன்; திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர், கதாநாயக நடிகர் -இவற்றில் படிப்படியான முன்னேற்றம். இப்போது அரசியல்வாதி, கட்சிக்கு நம்பிக்கையான நபர். தோற்றப் பொலிவு உள்ளது.  அறிவும், திறமையும் வேண்டும்; வளர்த்துக் கொள்வார். ரஜினி, விஜய் வருவதற்குள் வந்துவிட்டார். இதற்கு மேல் என்ன வேண்டும்? மக்களாட்சியில் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கப்பட்டாலும் அவர் கட்சியினராலும் மக்களாலும்  ஏற்கப்படுகிறாரே!
  கு.இராசாராமன், சீர்காழி.

  ஸ்டாலினின் கவனத்துக்கு...
  உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்தில் தவறில்லை. ஆனால், அவர் கட்சியில் இணைந்தவுடனேயே பல்வேறு மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டு, அவருக்கு முக்கியப் பதவி வழங்கினால் அது தவறான செயலாக மாறிவிடும். பொதுவாகவே வாரிசு அரசியலை  மக்கள் அதிகம் விரும்புவதில்லை. இந்தியாவில் குடும்ப அரசியல் காரணமாக இன்று பல கட்சிகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்த விஷயங்களை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்து பார்த்த பிறகுதான் உதயநிதிக்குப் பதவி வழங்குவது குறித்துப் பரிசீலிப்பார் என்று நம்புகிறேன். 
  பொன்.கருணாநிதி, கோட்டூர்.

  வாரிசு அரசியல் வேண்டாம்!
  தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் இருந்து பெரும்போலோர் அரசியலுக்கு வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் வருவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. தந்தைக்குப் பின் மகன் நாட்டை ஆள்வான் என்பது எல்லாம் ராஜாகாலத்து அரசாங்கம் . இந்தியாவில் தற்போது ஜனநாயக முறையில் மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம் நாட்டில் வாரிசுகளுக்கு இடமளிக்காத வகையில், இளம் சமூக ஆர்வலர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
  செ.சுரேந்தர், விழுப்புரம்.

  மேன்மை அடைய...
  உதயநிதியின் அரசியல் பிரவேசம் சரி. ஆனால், ஆவேசமும் அவசரமும்தான் சரியாகாது. ஆக்கப் பொறுத்தோர் ஆறவும் பொறுத்தலே முறை. தந்தைக்கு உதவுவதாகக் கருதி தொல்லை தராமலிருப்பதே சிறந்தது. தவிர, கட்சியின் தொண்டராகவே இருப்பதில் ஆர்வம் காட்டுவதால், ஆரம்பத்திலிருந்தே பக்குவத்தை வளர்த்துக் கொண்டால் உதயநிதியால் மேன்மை நிலையை அடைய முடியும்.
  எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

  தற்போது வேண்டாமே!
  அரசியல் பிரவேசத்தை தற்சமயம் உதயநிதி ஸ்டாலின் தள்ளிவைத்து, கட்சியிலும், மக்களிடமும் நல்ல பெயர் பெற்ற பின் (தன் தந்தை போன்று எல்லோரிடமும் நற்பெயர் பெற்ற பிறகு) முழு நேரமும் தொண்டு செய்ய வரலாம்.
  டபுள்யூ.பி.ஜோசப், வேலூர்.

  பரம்பரை அரசியல்!
  உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம், பரம்பரை அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை. ஆங்கிலேயரிடமிருந்து சிரமப்பட்டு சுதந்திரம் பெற்றோம். ஆனால், அந்தச் சிரமங்களை எல்லாம் மறந்துவிட்டோம். கருணாநிதி, ஸ்டாலின், இப்போது அந்த வரிசையில்  எந்தத் தனித்திறனும் இல்லாமல் , தாத்தாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியல் பிரவேசம் செய்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
  எல்.சதானந்தம், கரூர்.

  பிரவேசம் சரிதான்!
  உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் குறித்து நினைப்பதற்கு என்ன இருக்கிறது?  தங்களது வாரிசுகள் தம் பணிகளையே தொடர வேண்டும் என பெற்றோர் நினைப்பது தவறாகாது. தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதற்கு விதிவிலக்கல்ல. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கான சொத்துகளை உள்ளடக்கிய தனியார் நிறுவனம் போன்று திமுக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற குடும்பச் சொத்து வழி வழியாக நிறுவனத் தந்தையும், தந்தைக்குப் பிறகு பெயரனும் நிறுவனத் தலைமைக்கு வருவதுதானே சரி?  எனவே,உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் அவசியம்.
  ச.கந்தசாமி, 
  தூத்துக்குடி.

  மன்னராட்சி...
  திமுக என்ற கட்சி குறுகிய வட்டத்துக்குள் குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின்...இதுதான் தற்போதைய திமுகவின் கொள்கை. இது என்றுமே மாறாது. திமுக என்பது ஜனநாயக அமைப்பு இல்லை என்று இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. மன்னராட்சி போன்று திமுகவில் வாரிசுரிமை தலைதூக்கியுள்ளது.
  ரா.ராஜதுரை, சீர்காழி.

  இளைஞர்களிடம்...
  உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. நடிக்கும்போதே அரசியலில் ஈடுபடுவது அவரின் தன்னம்பிக்கை. சில நடிகர்கள் முதுமை அடைந்தவுடன் நடிக்க வாய்ப்பில்லை என்று அரசியலில் ஈடுபடுகிறார்கள். தன் தந்தை அரசியலில் ஈடுபடுவதால், மகனும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று இந்திய அரசியல் அமைப்பில் சட்டம் கிடையாது. தமிழ்நாட்டில் நிழல்களை நிஜம் என்று நினைக்கும் மக்கள் மனநிலை இன்னும் மாறவில்லை. அதனால், இளைஞர்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  எஸ்.பரமசிவம், மதுரை.

  தகுதியைப் பெற...
  உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் மன்னர் ஆட்சிக்கால அரசியலை நினைவூட்டுகிறது. மக்களாட்சி காலத்திலும் அரசியலிலும் வாரிசுகளைப் புகுத்துவது ஏற்புடையதல்ல. அரசியலில் தகுதியைப் பெற அனுபவம், முதிர்ச்சி, பக்குவம் முதலிய தகுதிகள் வேண்டும். ஓர் அரசியல்வாதியின் குடும்பத்திலிருந்து வருவதால் மட்டும் அந்தத் தகுதியை அடைந்துவிட முடியாது.
  எம்.எஸ்.இப்ராகிம், சென்னை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai