சுடச்சுட

  

  மன்மோகன் சிங்குக்கு மாநிலங்களவை வாய்ப்பை திமுக அளித்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

  By DIN  |   Published on : 10th July 2019 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அளித்திருக்கலாம்!
  பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து காங்கிரஸ் கட்சி நெருக்கடி நிலையில் சிக்கித் தவிக்கிறது. முன்னாள் பிரதமரும் தலைசிறந்த பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், தற்போதைய சூழ்நிலையில் தன் சொந்தக் கட்சியின் மூலம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது. தனக்குக் கிடைக்க இருக்கும் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களில் ஒன்றை, மன்மோகன் சிங்குக்கு கூட்டணிக் கட்சியான தி.மு.க. அளித்திருக்கலாம். அது உண்மையான கூட்டணி தர்மமாக இருந்திருக்கும்.
  ரா.ராஜதுரை, சீர்காழி.

  ஏன் அளிக்க வேண்டும்?
  மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங்குக்கு திமுக ஏன் வாய்ப்பு அளிக்க வேண்டும்? கேரள மாநிலத்தில் அதிக அளவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது ஏன் தமிழகத்தை காங்கிரஸ் நாட வேண்டும்? மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி வைகோவுக்கு திமுக வாய்ப்பு அளித்துள்ளது. மேலும், மாநிலங்களவை உறுப்பினராகச் செல்ல வைகோ முற்றிலும் தகுதி உடையவர். சொல்லப்போனால் மன்மோகன் சிங்கைவிட அதிகமாக வைகோ குரல் கொடுப்பார்.
  எஸ்.சொக்கலிங்கம், 
  கொட்டாரம். 

  தேச நலன் இல்லை!
  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூட்டணி என்ற கணக்கில் மாநில உறுப்பினராகும் வாய்ப்பை கட்டாயம் திமுக அளித்திருக்க வேண்டும். ஆனால், அண்மைக் காலங்களில் திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் தனித் தனியாகப் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டில் இரு கட்சிகளும் இருப்பதால் வாய்ப்பு தவிர்க்கப்பட்டது என்றே தோன்றுகிறது. தந்தையின் பாதையில் ஸ்டாலின் செயல்படுகிறார் என்றாலும், இதன் விளைவு என்னவாகும் என்று தெரியவில்லை. ஆனால், திமுக அணுகுமுறையில் தேச நலன்இல்லை.
  மகிழ்நன், கடலூர்.

  நியாயமற்ற பேச்சு...
  மன்மோகன் சிங்கை மாநிலங்களவை உறுப்பினராக்க திமுக முன்வந்திருக்க வேண்டும் என்பது நியாயமற்றது. ஏற்கெனவே கூட்டணி அமைக்கும்போது ஒப்பந்தம் செய்யப்படாத நிலையில், தற்போது அப்படி ஒரு பேச்சு உருவாவது சிறிதும் தொடர்பில்லாத விஷயமாகும். திமுக கூட்டணியில் மதிமுக (வைகோ), பாமக (அன்புமணி ராமதாஸ்) ஆகியோருக்கு மாநிலங்களவை இடங்களை அளிப்பதாக மக்களவைத் தேர்தலின்போதே உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற மன்மோகன் சிங்குக்கு திமுக உதவியிருக்க வேண்டும் என்பது நியாயமற்ற பேச்சு.
  பி. துரை, காட்பாடி.

  இழப்பு திமுகவுக்கே...
  புத்திசாலித்தனம், சாதுர்யம் உள்ள தலைமையை திமுக பெறாததுதான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விஷயத்தில் சரியான முடிவு எடுக்க முடியாததற்குக் காரணம். பொருளாதார நிபுணர் என்று அறியப்பட்டவர் மன்மோகன் சிங். நிர்வாகத் திறமை, நேர்மை, ஊழலுடன் தொடர்பில்லாதவர். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர். அவரது கட்சியின் (காங்கிரஸ்) கூட்டணியில்தான் மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக பெற்றது. அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பளித்து, திறமைசாலியின் ஆலோசனை வழிகாட்டுதல் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தும் வாய்ப்பை திமுக இழந்துள்ளது. எனவே, இழப்பு மன்மோகன் சிங்குக்கு அல்ல; திமுக, காங்கிரஸுக்குத்தான்.
  ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

  தேவையற்ற விவாதம்!
  மன்மோகன் சிங்குக்கு திமுக வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கருத்தே விவாதத்துக்கு ஏற்றதல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 10 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்டு விட்டன. அவற்றில் ஒன்பது இடங்கள் காங்கிரசுக்கு  கிடைத்துவிட்டன. நாடாளுமன்றத்திலுள்ள காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கையில், இது கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகும். மேலும், இன்றைய சூழலில் வைகோவைப் போன்று பேச்சாற்றல் உள்ளோர்தான் மாநிலங்களவைக்குச் செல்ல வேண்டும். 
  பூ.சி.இளங்கோவன், அண்ணாமலைநகர்.

  கறிவேப்பிலைதான்!
  தேர்தல் கூட்டணி என்பது அரசியல்வாதிகளுக்கு சமையலுக்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலை போன்றது. பின், அதைத் தூக்கி எறிந்து விடுவார்கள். அதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவகாரத்திலும் திமுக செய்துள்ளது. அரசியல் கொள்கைப்படி காரியம்தான் முடிந்துவிட்டதே. பின் கழட்டிவிட வேண்டியதுதானே. வாய்ப்பளித்திருக்க வேண்டியதில்லை.
  கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

  எதிர்பார்ப்பு தவறு!
  மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக வாய்ப்பு கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கவலை கொள்ளக் கூடாது. ஏனெனில், கட்சிக்காக உழைத்தவர்களுக்குக் கொடுப்பார்களா எனக் கருதும் திமுகவினருக்குக் கொடுப்பதுதான் சரி. மக்களவையில் போதிய எண்ணிக்கையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாத நிலையில், மன்மோகன் சிங்குக்கு வாய்ப்பை எதிர்பார்ப்பது தவறு.
  ஜோசப், வேலூர்.

  வலு சேர்க்கவாவது...
  2009-2014 தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தபோது திமுகவும் அதில் முக்கியப் பங்கு வகித்தது. திமுக தலைமை கோரியதன் பேரில்  சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் திமுக கேட்ட எண்ணிக்கையில் அமைச்சர் பதவிகளைத் தந்து வளமான இலாகாக்களையும் ஒதுக்கீடு செய்தனர். 2006-2011-களில் தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத திமுக அமைச்சரவைக்கு, காங்கிரஸ் உறுதுணையாக இருந்த காரணத்தால்தான் ஐந்து ஆண்டுகள் ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது. இவற்றுக்கும் மேலாக 2019 மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த ஒரே கட்சி திமுகதான். தேர்தல் தீர்ப்பு மாறுபட்ட காரணத்தினால் அது கனவாகிப் போனது. மக்களவையில் வலுவிழந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, மாநிலங்களவையில் வலு சேர்க்கும் வகையிலாவது பொருளாதார நிபுணரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்குக்கு திமுக வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.
  எஸ்.நரசிம்மன், கிருஷ்ணகிரி.

  அவசியமில்லை!
  பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங், 10 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்தவர். அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒரு மாநிலக் கட்சி  (திமுக)  அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. மேலும் 80 வயதை அடைந்தவர் இனிமேல் ஓய்வுபெறும் எண்ணத்தோடு செயல்படவேண்டும். எனவே, மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை திமுக அளிக்க வேண்டிய அவசியமில்லை.
  மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

  பலன் கருதியா?
  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உலகப் பொருளாதார மேதைகளில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்து மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தவர். பதவிகள் அவரைத் தேடி வந்தவையே. அவரது பொருளாதார நிபுணத்துவத்துக்காகவும் உயர்ந்த பண்புகளுக்காகவும் மாநிலங்களவை வாய்ப்பை திமுக அளித்திருக்க வேண்டும். அதனால் கட்சிக்கும் தலைமைக்கும் கெளரவமாக இருந்திருக்கும். மன்மோகன் சிங்குக்கு வாய்ப்பு கொடுப்பதால் திமுகவுக்கு என்ன பயன் என்று கட்சியின் தலைமை கருதியிருக்கலாம்.
  ச. கிருஷ்ணசாமி, மதுரை.

  தவறு இல்லை!
  மக்களவைத் தேர்தலுக்கு முன் மாநிலங்களவை வாய்ப்பு மதிமுகவுக்கு அளிக்கப்படும் என வாக்கு அளிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாய்ப்பளிக்க திமுகவால் முடியவில்லை என்பதே உண்மை. ஏற்கெனவே,  மக்களவைத் தேர்தலில் நான்கில் ஒரு பங்கு இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டன;  மேலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தத்தில்  மாநிலங்களவை இடம் குறித்து எதுவும் இடம்பெறாத நிலையில்,  மாநிலங்களைவை வாய்ப்பை மன்மோகன் சிங்குக்கு திமுக அளிக்காதது தவறில்லை. மேலும், திமுகவின் துணை அமைப்புகளான தொழிலாளர் அணி, வழக்குரைஞர் அணியில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றவர்களுக்கு மாநிலங்களவையில் இடம் தர வேண்டிய நிலையில், மன்மோகன் சிங்குக்கு திமுக வாய்ப்பு அளிக்காததில் தவறேதும் இல்லை.
  உ.இராசமாணிக்கம், கடலூர்.

  நன்றிக் கடனாக...
  மிகப் பெரிய பதவியில் இருந்த மன்மோகன் சிங் போன்றவர்கள், திமுகவை நாடி வந்திருந்தால் கட்டாயம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தயவால் பல  முக்கிய அமைச்சர்  பதவிகளை மத்திய அரசில் வகித்த திமுக, நன்றிக் கடனுக்கு இதைச் செய்திருக்கலாம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செய்யக் கூடிய இந்த உதவி எதிர்காலத்தில் திமுகவுக்கு பல வகைகளிலும் பயன்பெற உதவியாக இருந்திருக்கும். மன்மோகன் சிங் போன்ற சிறந்த பொருளாதார மேதைகள், மாநிலங்களவையில் இடம்பெறவேண்டியது அவசியமானதும்கூட.
  பொன்.கருணாநிதி, கோட்டூர்.

  பதவி தேவையில்லை!
  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மாநிலங்களவை வாய்ப்பை திமுக அளித்திருக்க வேண்டும் என்று கருதவில்லை. பொதுத் தேர்தலைச் சந்திக்காமல், அவர் மாநிலங்களவை உறுப்பினராகவே 10 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்தவர். இனி  அரசுக்கும் கட்சிக்கும் (காங்கிரஸ்) அவர் நல்வழி காட்டினால் போதும். பதவி அவருக்குத் தேவையில்லை. 
  ச.கண்ணபிரான், திருநெல்வேலி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai